புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் மதுக்கடை இருப்பதுபோல், எங்கே திரும்பினாலும் சிவப்பு விளக்கு கார்கள் தட்டுப்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களும் வாரியத் தலைவர்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்கள் இஷ்டத்துக்குச் சிவப்பு விளக்குகளைச் சுழல விடுவதால், புதுவை சாலைகள் திணறுகின்றன. 'யாரு வி.ஐ.பி.ன்னே தெரியலே’ என்று, போலீஸாரின் புலம்பலும் அதிகமாகக் கேட்கிறது.
2004-ம் ஆண்டு புதுச்சேரி அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசு ஆணையில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், முதல்வரின் செயலர், எதிர்க் கட்சித் தலைவர், தலைமைச் செயலர், ஆட்சியர், தலைமை நீதிபதி, காவல்துறைத் தலைவர், மாநில நிர்வாகி ஆகியோர் மட்டுமே அரசுப் பணிகளின்போது காரில் சுழல் சிவப்பு விளக்குப் பயன்படுத்தலாம் என்றும், மற்றநேரங்களில் கறுப்புத் துணி போட்டு விளக்குகளை மறைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்தப் பட்டியலில் இல்லாத பலரும் கேட்பதற்கு ஆள் இல்லாமல் சிவப்பு விளக்குடன் சுற்றுகிறார்கள். இந்த முறைகேடு குறித்துப் பேசும் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், ''மத்திய அரசின் மோட்டார் வாகன விதி 108-ன் படி ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு விதிமுறை உண்டு. யாரெல்லாம் சுழலும் சிவப்பு விளக்கு, சுழலாத சிவப்பு விளக்குப் போடலாம் என்பதைத் தெளி வாகச் சொல்லும் அறிக்கை அது. ஆனால், புதுச்சேரியில் மட்டும் இந்தச் சட்டங்கள் காற்றில் பறக்கிறது. அதற்குக் காரணம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிதான். குற்றப் பின்னணி உள்ள சிலர்கூட இங்கு வாரியத் தலைவர்களாக வந்துவிட்டனர். கூடவே, சிவப்பு விளக்கைப் பயன்படுத்தும் உரிமையையும் வாங்கி விடுகின்றனர். கிட் டத்தட்ட 18 அரசு சார்பு நிறுவனங்களுக்கு வாரியத் தலைவர்களை நியமித்துள்ளார் ரங்கசாமி.
நெரிசல் மிக்க சாலைகளில் சிவப்பு விளக்கு சுழன்றபடி எந்த சிக்னலிலும் நிற்காமல் வாரியத் தலைவர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் செல்வதால், பெரும் போக்குவரத்து நெரிசலுக்குப் பொதுமக்கள் ஆளாகின்றனர். இவர் களுக்குக் காவல்துறை அதிகாரிகளும் சல்யூட் வைத்து வழி அனுப்புகின்றனர். ஆனால், உண்மையில் வண்டியின் உள்ளே பார்த்தால், அமைச்சர்களின் உறவினரோ, வாரியத் தலைவர்களின் உறவினர்களோதான் பயணம் செய்கிறார்கள். காவல் துறை தலைவர் தவிர வேறு யாரும் சிவப்பு விளக்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால், புதுச்சேரியில் பல எஸ்.பி-க்களின் வாகனங்களில் சிவப்பு விளக்குகள் சுழலுகின்றன. சட்டப்படிப் பார்த்தால் புதுச்சேரியில் சிவப்பு விளக்கு வைத்திருக்கும் தகுதி உடைய வண்டிகள் 15 மட்டும்தான். ஆனால், 150 வண்டிகளில் சட்ட விரோதமாக சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஆளுநரிடம் பலமுறை எங்கள்கட்சி சார்பில் மனு கொடுத்தும் பயன் இல்லை. புதுச்சேரிக்கு இந்த சாபம் எப்போது நீங்கப்போகிறதோ?'' என்று ஆவேசப்பட்டார் அன்பழகன்.
''வாரியத் தலைவர் ஒருவருக்கு சொந்தமாக பல பார்கள் இருக்கின்றன. அவர் தினமும் சிவப்பு விளக்கு வண்டியில்தான் அங்கே வருவார். கணக்கு வழக்கை முடிச்சிட்டு அதே சிவப்பு விளக்கு வண்டியில்தான் போவார். புதுச்சேரியில் மதுவிலை ரொம்பக் குறைவு. அதனால், மதுபாட்டில் பெட்டிகளை சிவப்பு விளக்கு வண்டியில் மொத்தமாக ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள ஊர்களுக்குப் போய் சப்ளை செய்து அநியாயத்துக்கு சம் பாதிக்கிறார்.
பொது மக்களின் காரில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் பாய்ந்து சென்று அதைக்கிழிக்கும் புதுச்சேரி காவல் துறை, இந்த அட்டூழியம் நடப்பது தெரிந்தும் கண்டுகொள்வதே இல்லை. புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்களைப் பார்த்தாலே வாகனத்தை நிறுத்தி லட்சம் கேள்வி கேட்டு பொது மக்களிடம் வசூல் செய்யும் தமிழ்நாடு போலீஸார், ஒரு நாளைக்குப் பத்து முறை தமிழ்நாட்டுக்குச் சென்று வரும் புதுச்சேரி சிவப்பு விளக்கு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினால், பல அதிர்ச்சிகள் வெளியாகும்'' என்று தகவல் கொடுக்கிறார்கள் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள்.
இந்தப் பிரச்னை குறித்து புதுச்சேரி மாநில போக்குவரத்துச் செயலர் சுந்தரவடிவேலுவிடம் கேட்டோம். ''எங்களுக்கும் இதுபற்றி நிறையப் புகார்கள் வருகின்றன. அதனால், சுழல் சிவப்பு விளக்குக் கட்டுப்பாடு குறித்து ஓர் உத்தரவை உடனே வெளியிட இருக்கிறோம். இதை, சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.
சொல்வது போதாது... செய்யுங்கள்!
No comments:
Post a Comment