Monday, August 13, 2012

கியூரியாசிடி பயணம் கைவீசம்மா கைவீசு... செவ்வாய்க்குப் போகலாம் கைவீசு!



அமெரிக்கா, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய ஆளில்லா விண்கலம் வான்வெளியில் எட்டு மாதகாலம் பயணம் செய்து, செவ்வாய் கிரகத்தில் கடந்த திங்களன்று தரை இறங்கியது. ஆறு கால்கள், ஒரு டன் எடை கொண்ட அதன் பெயர் கியூரியாசிடி. இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவியல் சாதனையிது. கியூரியாசிடியுடன் நாம் கேட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் தேசிய விருது பெற்ற தமிழ் அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை.

செவ்வாய் கிரகம் - சிறுகுறிப்பு?

செவ்வாய் ஒரு பொட்டல் வெளி. அங்கே எந்த உயிரினமும் கிடையாது. எப்போதோ அங்கே ஆறுகள் ஓடியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இப்போது பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். செவ்வாயின் கற்று மண்டலம், பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பூமியின் காற்றுமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 21 சதவிகிதம். ஆனால் செவ்வாயில் 0.1 சதவிதம்தான். கார்பன்-டை-ஆக்சைடு தான் மிக அதிகம். ஆனால், உருவத்தில் பூமியின் பாதி அளவுதான் செவ்வாய்."

செவ்வாய் ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு ஏன் இத்தனை ஆர்வம்?

ஒன்பது கோள்களில் புதன், வெள்ளி இரண்டும் மிக வெப்பமானவை. அந்த வெப்பத்தில் உயிரினங்கள் வாழ முடியாது. வியாழன், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்றவை மிக குளிர்ச்சியானவை. அங்கே விழும் சூரிய வெளிச்சத்தில் வெப்பம் இருக்காது. எனவே மனிதன் வாழ முடியாது. மனிதன் காலடி வைக்க முடியுமென்றால் அது செவ்வாயில் மட்டுமே. அதனால்தான் செவ்வாய் மீது அமெரிக்காவுக்கு அத்தனை அக்கறை." 

வேறு எந்தெந்த நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன?

இதை முதலில் முயற்சித்தது ருஷ்யாதான். ஆனால் அதன் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ருஷ்ய விண்கலமான மார்ஸ்-3, செவ்வாயில் தரை இறங்கிய சில வினாடிகளிலேயே செயலிழந்துவிட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பினர் அனுப்பிய விண்கலம், செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சீனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஜப்பான் அனுப்பிய விண்கலம், விண்வெளிக்குச் சென்ற பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. வைகிங் 1, வைகிங் 2, பாத் ஃபைண்டர், ஆபர்சூனிடி, ஸ்பிரிட், ஃபீனிக்ஸ் என்று ஆறு அமெரிக்க விண்கலங்கள் செவ்வாயில் ஏற்கெனவே தரை இறங்கி உள்ளன. இப்போது கியூரியாசிடியும் வெற்றி கரமாகத் தரை இறங்கி இருக்கிறது. இந்தியா, செவ்வாக்கு ஒரு விண்கலத்தை அனுப்பப் போகிறது. அது அந்த கிரகத்தைச் சுற்றி வருமே தவிர, அங்கே தரை இறங்காது."

என்னென்ன சவால்கள்?

முதலில், விண்கலம் செலுத்தப்படும் ராக்கெட், பூமியிலிருந்து மணிக்கு 40 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும். இவை நேர்கோடு பாதையில் சென்று செவ்வாயை அடைவது இயலாது. வளைந்த பாதையில்தான் செல்ல இயலும். அப்படிப் பாதையில் மாற்றம் செய்ய பூமியிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்க வேண்டும். செவ்வாயை நெருங்கும்போது, செவ்வாயின் பாதையும், விண்கலத்தின் பாதையும் இசைவாக இருக்க வேண்டும். விண்வெளியில் மணிக்கு 21 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் விண்கலம், செவ்வாயை நெருங்கும்போது வேகத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும். இறுதியாக செவ்வாயின் தரையில் இறங்கும் போதுதான் பெரும் சவால். அப்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 3 கி.மீ. ஆக இருக்க வேண்டும். அதிவேகத்தில் இறங்கினால், அதீத வெப்பம் காரணமாக விண்கலமே வெடித்துச் சிதறிவிடும். பூமியிலிருந்து பிறப்பிக்கப்படும் ஒரு கட்டளை, செவ்வாயில் உள்ள விண்கலத்தைச் சென்றடைய சுமார் 14 நிமிடங்கள் பிடிக்கும்."

கியூரியாசிடி - பெயர் காரணம்?

வழக்கமாக அமெரிக்காவில் இது போலத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என மாணவ - மாணவிகளுக்குப் போட்டி வைப்பார்கள். அப்படி இதற்கும் ஒரு போட்டியில், ஒரு சிறுமி சூட்டிய பெயர் தான் கியூரியாசிடி."

கியூரியாசிடி வேலை?

கியூரியாசிடியின் எல்லா பகுதிகளிலுமாக ஏராளமான கேமராக்கள் உள்ளன. அவற்றின் மூலமாக கறுப்பு-வெள்ளை, கலர், முப்பரிமாணப் புகைப்படங்களை எடுத்து, பூமிக்கு அனுப்பி வைக்கும். செவ்வாயின் மண்ணில் இருக்கும் தாதுப் பொருட்கள், நீர்வளம், மண்வளம் போன்றவற்றைப் பரிசோதனைகள் செய்து, பூமிக்கு உடனுக்குடன் அனுப்பும்."

சாமானிய மக்களுக்கு என்ன பயன்?

இதுபோன்ற உயர் தொழில்நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சிகளால் உடனடியாக என்ன பயன் என்று கண்டறிய முடியாது. எதிர்காலத்தில் உலகம் முழுமைக்கும் இவை நிச்சயம் பயன்படும்."

செவ்வாயில் மனிதன் இறங்குவது எப்போது?

சூரிய மண்டலப் பயணம் மாபெரும் ஆபத்துகள் நிறைந்தது. சவால்கள் அதிகம். அதன்பின் அங்கே இறங்குவது, தங்கி ஆராவது, உணவு மற்றும் தண்ணீர் பிரச்னைகள் என அனைத்தையும் சமாளிக்க வழிகண்டு விட்டால், மனிதன் செவ்வாயில் இறங்கிவிட முடியும்."

வெறும் கண்களால் செவ்வாயைப் பார்க்க முடியுமா?

கொஞ்சம் கியூரியாசிடியோடு, சூரியன் மறைந்த பிறகு மேற்கு நோக்கிப் பார்த்தால், சிவந்த நிறத்தில் சிறிய உருவில் செவ்வாய் கிரகத்தைப் பார்க்கலாம்."

No comments:

Post a Comment