Thursday, August 23, 2012

பூகம்ப அபாயத்தில் மதுரை! கிரானைட் கொள்ளையால் வரப்போகும் வினை!



கிரானைட் கற்களை அளவுக்கு அதிகமாக சுரண்டி எடுத்ததால், மிகவிரைவில் மதுரை சுற்று​வட்டாரம் பூகம்பத்தில் சிக்கி அழிய இருக்கிறது'' என்று பகீர் கிளப்புகிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்! 
சமீபத்தில், அந்தமான் நிகோபர் தீவுகளில் எரிமலை ஒன்று வெடித்து ஏகப்பட்ட நாசத்தைச் சந்தித்தது. அதற்குக் காரணம்... அந்தமான் தீவுகளில் முறைகேடாகச் சுரண்டப்பட்ட குவாரிகளால் பூமியின் உட்பகுதி பாதிக்கப்பட்டதுதான் என்று புவியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்ட... விழித்துக்கொண்டது சுப்ரீம் கோர்ட். 'தனி மனித சுயலாப நோக்கத்துக்காக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதன் விளை​வாக, நிலச்சரிவு, பூகம்பம், எரிமலைக் குழம்பு என்று ஏகப்பட்ட இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள்’ என்று சுட்டிக்காட்டி கிரானைட் மாஃபியா அதிபர்கள் மற்றும் குற்றவாளிகள் 13 பேருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து ​விட்டது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைகளை உடைப்பதையும், கனரக ஆயுதங்​கள்கொண்டு மண், கிரானைட் போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளை அடிப்பதையும் தடை செய்துள்ளது.
அந்தமான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி பேசும் புவியியல் ஆய்வாளரான அரியலூர் சந்திரசேகரன், ''உலகத்தில் மற்ற நாடுகள் எல்லாம் மலைகளைக் காப்பாற்றின. ஆனால், இந்தியா மட்டும்தான் அதிக அளவில் இரும்பு, தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து இயற்கையை சுரண்டிவிட்டது. மணலும் கிரானைட்டும் ஒரே இனம். அவற்றை அதிக அளவில் எடுப்பதால் நடக்கும் புவியியல் மாற்றத்தால் நிலச்சரிவு, நீரியல் மாற்றம், நிலநடுக்கம் போன்றவை ஏற்படும்.
மணலும் கிரானைட்டும் எடுக்கும் உரிமை தாசில்தார்கள் கைகளில் போய்ச்சேர்ந்ததால், 1980-க்குப் பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல்முக்கியத்துவம் ஏற்படும் வண்ணம் இவற்றுக்கு வரைமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். புவியியல் மற்றும் சுரங்கவியல் வல்லுனர்களை நியமித்து, தமிழகம் முழுவதும் கண்காணிக்க வேண்டும். புவியியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வது? அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க முடியாத சிறிய துறையாக இருக்கிறது. முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். சுரங்கச் சட்ட விதிகள், சிறு கனிம விதிகள் சட்டம் இனிமேலாவது கடுமையாகக் கையாளப்பட வேண்டும். அரசின் கவனம் தவறியதால் இன்று தமிழகத்தில் கனிமவளம் பாதிக்கப்பட்டு, மழைவரும் பருவங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய பேரழிவுகளைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று எச்சரித்தார்.  
மதுரையைச் சுற்றி பூகம்பம் ஏற்பட எந்த அளவு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை தலைவரான டாக்டர் அருணாசலத்திடம் கேட்டோம்.
''பூகம்பம், எரிமலை, நிலநடுக்கம் நடக்கும் முறைகள் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கையைச் சுரண்டுவதன் மூலம் அவற்றை வேகமாகத் தூண்டி இருக்கிறோம். மதுரைப் பகுதிகளில் இயங்கும் முறையற்ற குவாரிகளின் பேராசையால் மதுரையில் நீரியியல் பாதைகள் மூடிவிட்டன. இதனால் நிலத்தடி நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. மேலூர் பகுதிகளில் அணைக்கட்டு இருந்திருந்தால், அது எப்போதோ உடைந்து இருக்கும்.
மதுரை நிலப்பகுதி கடின வகைப் பாறைகளால் ஆனது என்பதால், இப்போது பாறைகளின் வடிவ அமைப்பு மாறி இருக்கிறது. பல மில்லியன் பழை மையான இயற்கை வளங்களை வெட்டி எடுத்ததன் விளைவு... ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு என்ற இடைவெளியில் முன்பு நடந்து வந்த இயற்கைப் பேரிட மாற்றம், இன்னமும் 100 ஆண்டுகளில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மதுரைப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கிரானைட் தோண்டியதன் விளைவு...  பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதுபோன்ற அச்சம் கர்நாடக மாநிலத்துக்கும் ஏற்பட்டுள்ளது. குதிரை முக் நேஷனல் பார்க்கில் இப்படி இயற்கை வளங்களை சுரண்டியதன் விளைவால் அங்கு எப்போதும் பூகம்பம் வர வாய்ப்பு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
உலக நாடுகள் இயற்கை வளங்களைக் குறைவாக எடுத்து, ஸ்டாக் முடிந்ததும்தான் மறுபடியும் எடுக்கிறார்கள். ஆனால், இந்தியா மட்டும்தான் ஓர் இயற்கை வளம் இருப்பதை கண்டறிந்தால் அது காலியாகும் வரை எடுத்து, அதன் சீற்றத்தை அனுபவிக்கத் தயாராகிறார்கள்'' என்று எச்சரித்தார்.
தூங்கா நகர மக்கள் இனி நிம்மதியாகத் தூங்க முடியாதா?

No comments:

Post a Comment