Monday, August 13, 2012

அறிவும் அழிவும்! - ஓ பக்கங்கள்,ஞாநி



அறிவு என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் உரியது; இருக்க வேண்டியது. அதே சமயம் ஒரு சமூகத்துக்கும் பொதுப்புத்தி என்று ஒன்று இருக்கிறது. இதை வடிவமைப்பதில் அரசு, தனியார் அமைப்புகள், மீடியா முதலியவை பங்கு வகிக்கின்றன. புத்திக்கு ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தாலும் உணர்ச்சி அடிப்படையில் அது செய்யும் தவறை தனி மனிதனும் செய்கிறான்; சமூகமும் செய்யும். நம் சமூகத்தின் பொதுப் புத்தியில் இல்லாத விஷயம் மனித உயிர் மீதான அக்கறை. நம்முடைய மிகப்பெரிய மக்கள் தொகை, உயிர் மீதான மதிப்பைக் குறைத்துவிட்டது.கடந்த வாரங்களை அழிவு வாரங்கள் என்றே டி.வி. அறிவிப்பு பாணியில் குறிப்பிடலாம். அடுத்தடுத்து மூன்று அழிவு நிகழ்ச்சிகள். ஒவ்வொன்றுக்கும் நம் எதிர்வினைகள் எப்படி இருந்தன?சென்னை தாம்பரத்தில் ஒரு பள்ளிக் குழந்தை பஸ் தரையில் இருந்த ஓட்டை வழியே விழுந்து இறந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த பஸ்ஸையே மக்கள் எரித்தார்கள். உயர் நீதிமன்றம், யாரும் வழக்குத் தொடுக்காமல் தானாகவே இதை வழக்காக எடுத்துக் கொண்டது. கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட பலருக்கு ஜாமீனே மறுக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர், நீதிபதி வழக்கை எடுக்கும் முன்பே தவறுக்குக் காரணமானோர் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தார்.அடுத்த சில நாட்களுக்குள் ஆம்பூரில் ஒரு பள்ளி மாணவி பள்ளி பஸ்சிலிருந்து இறங்கும்போதே பஸ் எடுக்கப்பட்டு விட்டதால் அதே பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். முதல் நிகழ்ச்சி அளவுக்கு இந்த நிகழ்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த பஸ்ஸை யாரும் எரிக்கவில்லை.தாம்பரம் பள்ளி பஸ்சின் தரை அன்றைய தினம் திடீரென்று ஓட்டையானதல்ல. பல நாட்களாகவே அது அப்படி இருந்து அதில் குழந்தைகள் பயணம் செய்தபடிதான் இருந்திருக்கிறார்கள். அந்த ஓட்டையைக் கவனித்துச் சரிசெயவேண்டிய முதல் பொறுப்பு பஸ்சின் பொறுப்பாளருக்கும் டிரைவருக்கும் இருக்கிறது. அந்த ஓட்டை மீது தடியான அட்டையை வைத்து மூடி ஆணி அடித்து வைத்திருந்ததாக ஒரு செய்தி சொல்கிறது. அது தீர்வு அல்ல. தகடுதான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அட்டையும் ஆணிகளும் நாளாவட்டத்தில் நெகிழ்ந்து பலவீனமாகியிருக்க வேண்டும்.இந்த நிலையில் இருந்த பஸ்ஸுக்கு எப்படி ஆர்.டி.ஓ. அலுவலகம் ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் எனப்படும் எஃப்.சியை அண்மையில் வழங்கியது என்பது இன்னொரு பிரச்னை. எப்படி வழங்கியது? இதில் எந்த மர்மமும் கிடையாது. எல்லா ஆர்.டி.ஓ. ஆபீஸ்களிலும் எப்படி ஒருவர் வீட்டில் இருந்துகொண்டே டிரைவிங் லைசன்ஸ் வாங்க முடியுமோ அதே போலத்தான்.

ஆனால், பிரச்னையைத் தீர்க்க நாம் என்ன செய்கிறோம்? அரசும் நீதிமன்றமும் பள்ளி பஸ்களுக்கான விதிமுறைகளை மேலும் விரிவாகவும் கடுமையாகவும் எடுக்க நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஏற்கெனவே இருந்த விதிமுறைகளில் என்ன பிரச்னை? மோட்டார் வாகன சட்டத்தின் எந்தப் பிரிவும் தரை ஓட்டையாகவோ, பிரேக் பிடிக்காமலோ இருக்கும் வண்டிகளை ஓட்டலாம் என்று அனுமதிக்கவில்லையே? பிரச்னையே, இருக்கும் விதிகளைப் பின்பற்றாமல் இருந்ததுதான். மேலும் புதிய விதிகள் போடப்பட்டுவிட்டால், அந்த விதிகளுக்கும் ஒரு லஞ்ச ரேட் நிர்ணயிக்கப்படாமல் தடுக்க எந்த அணுகுமுறையும் நம்மிடம் இல்லை.உடனடியாக இப்போது தமிழகமெங்கும் இருக்கும் எல்லாப் பள்ளி வாகனங்களையும் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நல்லதுதான். முன்னர் விதிகள் லஞ்சங்களால் வளைக்கப்படாமல் இருந்தால், இந்தச் சோதனையே தேவைப்படாதே. இன்னும் ஓராண்டு கழித்து இன்னொரு விபத்து இதுபோல நடக்காமல் இருப்பதற்கான ஒரே உத்தரவாதம் என்ன? விதிகள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படுவதுதான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? லஞ்சத்தால் எந்த விதியும் வளைக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை நம்மிடம் என்ன இருக்கிறது? எதுவும் இல்லையே. பள்ளிக் குழந்தைகளின் அகால மரணங்களின் பின்னணியில் இருப்பது மனித அலட்சியம்தான். குழந்தை இறங்குவதை உறுதி செய்து கொள்ளாமலே பஸ்சை எடுப்பது என்கிற நிலையில் அந்த பஸ்சில் பிரேக், சீட், தரை எல்லாம் ஒழுங்காக இருந்தாலும் பயனில்லையே. இந்த மனித அலட்சியத்துக்குத் தண்டனை நம்மிடம் இல்லை. அதை விட இந்த மனித அலட்சியத்துக்குப் பின்னால் இருக்கும் நம் மனநிலை என்ன என்பதுதான். அது ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது என்ற பார்வையே நமக்கு இல்லை.பள்ளிக்கூட பஸ் விபத்து என்ற பிரச்னையின் ஆழமான வேரை நாம் தொட்டுக் கூடப் பார்க்க முயற்சிக்கவில்லை. முதலில் ஏன் ஒரு குழந்தை பள்ளிக்கு பஸ்ஸில் அல்லது வேனில், அல்லது ஆட்டோவில் அல்லது காரில் வரவேண்டும்? மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்குள் படிக்க பள்ளி இல்லையா? நிச்சயம் இருக்கிறது. இல்லையென்றால் ஏற்படுத்த வேண்டும். நடந்தோ சைக்கிளிலோ அதிகபட்சம் வேனிலோ போக முடியவேண்டும். பல மேலை நாடுகளில் இந்த விதி அமலில் இருக்கிறது. நம்மால் ஏன் இதை யோசிக்கக் கூட முடிவதில்லை ?பள்ளியின் தரம் என்ற காரணமே முன் வைக்கப்படுகிறது. அப்படியானால் ஏன் எல்லா பள்ளிகளையும் ஒரே தரத்தில் நடத்த நடவடிக்கை இல்லை? அதற்கான மனம் நம் அரசியல்கட்சிகளுக்கும் பெற்றோருக்கும் இல்லை. அவரவர் வட்டாரப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற விதி உருவானால், அந்தந்த வட்டார மக்கள் அந்தப் பள்ளியின் தரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த முடியும். உண்மையான சமச்சீர் கல்வி அப்போதுதான் உருவாக முடியும். ஆனால் இதை நோக்கி நம் பொதுப்புத்தி செலுத்தப்படுவதில்லை. உணர்ச்சி அடிப்படையில் மட்டுமே நம் பொதுப்புத்தி வடிவமைக்கப்படுகிறது.

அண்மையில் நடந்த இன்னொரு அழிவு தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லூர் அருகே நடந்த தீவிபத்து. காரணம் சதி வேலையா, வெறும் மின்கசிவா என்ற ஆராய்ச்சியே பெரிதாக நடந்து வருகிறது. நான் படித்த வரையில் பல கேள்விகள் கேட்கப்படவும் இல்லை. பதில்களும் இல்லை. தீ தென்பட்டதுமே பயணிகள் ரயிலை நிறுத்த முயற்சித்தார்களா? அப்படி சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியிருந்தால், ரயில் நிற்க எவ்வளவு நேரமானது? ரயில் பெட்டிக்குள் தீ அணைப்புக்கான கருவிகள் வைக்கப்பட்டிருந்தனவா? பெரும்பாலும் கிடையாது என்பதே என் அனுபவம். ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறுவதற்காக, கண்ணாடியை உடைப்பதற்கான ஒரு சுத்தியலை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் பாத்ரூமுக்கருகே பெட்டிகளில் வைத்திருப்பார்கள். நான் பார்த்தவரையில் இது சுத்தியல் பெட்டி என்ற அறிவிப்புடன் அந்தப் பெட்டி பெரும்பாலும் காலியாகவே இருக்கும்.  என் நண்பர் வெங்கடேசன் ஒரு கேள்வி கேட்டார். பஸ் விபத்து ஏற்பட்டால், பஸ்சின் எல்லா ஜன்னல்கள் வழியாகவும் பயணிகள் தப்பித்து வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது. ஏன் ரயில் பெட்டியில் மட்டும் அவசர எக்சிட்டாக ஒரு ஜன்னல் மட்டும் இருக்கவேண்டும்? எல்லா ஜன்னல்களையுமே எமர்ஜென்சி எக்சிட்டாக வடிவமைப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே. பஸ்களைப் போலவே ரயில் பெட்டிகளிலும் முதலுதவிப் பெட்டிகள் கிடையாது. கார்டிடம் மட்டும் இருக்கும். தீ விபத்து போன்ற பெரிய பிரச்னைகள் இருக்கட்டும். ரயிலில் பயணம் செய்யும்போது ஒரு பயணிக்கு ஜன்னல் ஷட்டர் வெட்டி, ரத்தக் காயம் ஏற்பட்டால், முதலுதவிக்கு கார்டு பெட்டியைத் தேடிச் செல்ல வேண்டும். உள்ளுக்குள்ளேயே இருக்கும் நடைவழி ஏ.சி பெட்டி வந்தால் பூட்டப்பட்டிருக்கும் என்பதால் ரயில் அடுத்த நிலையத்தில் நிற்கும்போதுதான் கார்டை தேடிச் செல்ல முடியும். கார்டு பெட்டி வரை செல்லும்முன் ரயில் புறப்பட்டுவிடலாம். இந்த அளவுக்கு ரயில் பெட்டிக்குள் எந்த முதலுதவி வசதியும் கிடையாது.விபத்தில் இறந்தோரின் அடையாளம் தெரியாத உடல்கள் ரிசர்வ்ட் பெட்டியில் ரிசர்வேஷன் இல்லாமல் பயணம் செய்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெட்டியின் நடத்துனரை விசாரித்து வருகிறார்கள். இந்த நபர்கள் சதிவேலை செய்திருக்கலாம் என்கிறார் ஒரு விசாரணை அதிகாரி. சதிகாரர்கள் ரிசர்வ் செய்யாமல்தான் வருவார்களா என்ன, ரிசர்வ் செய்த பயணியாகவும் இருக்கலாம் அல்லவா. ரயில் பெட்டியில் தீயணைப்புக் கருவி முதலிய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்திருந்தால், ஒவ்வொரு ஜன்னலும் எமெர்ஜென்சி எக்சிட்டாக இருந்திருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாமே? ஆனால் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்ற பார்வை நம் பொதுப்புத்தியில் இல்லையே.பொதுப் புத்தியை அதை நோக்கி சிந்திக்க நாம் விடுவதில்லை. சதிவேலையா என்ற த்ரில்லர் உணர்வும் இறந்தவர்கள் பற்றிய நெகிழ்ச்சியான குடும்பக் கதைகளுமே நம் உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டு, பொதுப்புத்தியை திசை திருப்புகின்றன. மாறாக ஒரு தீவிபத்தில் சிக்கிய ரயில் பயணிகளை மீட்க முடியாத நாம் எப்படி அணுஉலை விபத்துகள் ஏற்பட்டால் சமாளிப்போம்?

அடுத்த நிகழ்ச்சி சுமார் 60 கோடி மக்கள் இரண்டு மூன்று தினங்களாக மின்சாரம் இல்லாமல் வடஇந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் அல்லல்பட்டதைப் பற்றியது! அளவுக்கு மேல் மின்சாரத்தை சில வட மாநிலங்கள் உறிஞ்சியதால், விநியோக அமைப்பே சீர்குலைந்து மின்தடை ஏற்பட்டு விட்டது. பழுதுகள் பிரம்மாண்டமானவை, சரிசெய நான்கைந்து தினம் எடுக்கக் கூடியவை. மின் விநியோக அமைப்புகளின் இயந்திரத்தரம், அவற்றில் இருக்கும் ஊழல்கள் தனியே ஆராயப்படவேண்டியவை.இந்தப் பிரச்னைக்கு பொதுப்புத்தியின் எதிர்வினைகள் என்ன? இது மாநில அரசுகளின் தவறா, மத்திய அரசின் தவறா என்ற சர்ச்சையிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. தேவையான அளவு மின்சார உற்பத்தி இல்லை என்பது அடிப்படைப் பிரச்னை. அதற்கு மத்திய அரசே பிரதான பொறுப்பாளி. இருக்கும் மின்சாரத்தை பகிர்ந்து கொண்டாக வேண்டும் என்பது யதார்த்த நிலைமை. இதை மதிக்காமல் சுயநலத்தோடு உறிஞ்சியது சில மாநில அரசுகளின் தவறு. இந்தத் தவறுகளினால் பாதிக்கப்பட்டிருக்கும் 60 கோடி மக்கள் அனுபவித்திருக்கக்கூடிய இன்னல்கள் பலப்பல. மருத்துவமனைகள் முதல் நீர் வழங்கல் வரை அடிப்படைகள் பாதிக்கப்பட்டுவிட்டன.பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய மனித தவறுகள் நடக்கும் விதமாக நம் சமூகம் இருப்பதற்குக் காரணம் என்ன? நம் கல்வி முறையா, சமூக ஒழுக்கமின்மையா? சுய நலமா? தனி நபர்களாக நம்மைச் சிறந்த மனிதர்களாக உருவாக்க முடியாமல் தடுக்கும் அம்சங்கள் என்ன? இவற்றைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

ஆனால் எதுவுமே நடக்காதது போல சில வாரங்களில் இவற்றைக் கடந்து போய் விடுவதுதான் இப்போதைக்கு நம் பொதுப்புத்தி!
 

No comments:

Post a Comment