மூன்று பிரிவுகளாய் பிரிந்து செயல்பட்டு வந்தவர்கள் ஒன்றாக இணைந்தனர். இப்போது, மறுபடியும் மூன்று பிரிவுகளாகவே பிரிந்து போய்விட்டனர். மற்ற கட்சியாக இருந்தால் சகுனம் சரியில்லை என்று சொல்லலாம். ஆனால்இது, பெரியார் திராவிடர் கழகம். கொள்கை ரீதியாக ஒன்று சேர்ந்தவர்களை ஈகோ உடைத்துவிட்டது!
இதுவரை, பெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட்டு வந்த கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் ஓர் அணியாகவும், கோவை ராமகிருஷ்ணன் இன்னோர் அணியாகவும், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் மற்றோர் அணியாகவும் மாறிவிட்டனர். ஆகஸ்ட் மாதம் முழுக்க இவர்களது ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கப்போகின்றன. செப்டம்பரில் வரப்போகும் பெரியார் பிறந்த நாளை பிரிந்து பிரிந்து கொண்டாடப் போகிறார்கள் இந்தக் கருப்புச் சட்டைகள்!
கோவை ராமகிருஷ்ணனுடன் முரண்பட்டதற்கான காரணத்தை கொளத்தூர் மணியிடம் கேட்டோம்...
''கோவை ராமகிருஷ்ணன் 1987-ல் திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து 'தமிழ்நாடு திராவிடர் கழகம்’ நடத்தி வந்தார். 96-ல் ஆனூர் ஜெகதீசன் பிரிந்து வந்தார். நான் 2001-ல் தி.க.வை விட்டு வந்தேன். இப்படிப் பிரிந்து வந்த பெரி யாரிஸ்டுகள் எல்லோரும் தனித்தனியாக செயல்படாமல் இணைந்து செயல்படவேண்டும் என்ற நோக்கில் 'பெரியார் திராவிடர் கழகம்’ உருவானது.
ராமகிருஷ்ணன், கோவையில் கடை வைத்து இருக்கிறார். அவரால் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே வெளியூருக்கு வர முடியும். இதுபோல, கட்சி வேலைகளிலும் அவர் சுணக்கம் காண்பித்தார். 'முடிவுகளை எடுத்துவிட்டு என்னிடம் சொல்கிறீர்கள்’ என்று தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். 'குடியரசு’ தொகுப்பு வெளியீட்டுப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. இயக்கத் தோழர்களுக்கு பெரியாரியல் வகுப்புகள் நடத்தப்படுவது உண்டு. எந்த வகுப்புக்கும் அவரது பிரிவைச் சேர்ந்தவர்கள் வர மாட்டார்கள். எட்டு முறை மட்டுமே தலைமை செயற்குழு கூட்டப்பட்டது என்று குற்றம்சாட்டுகிறார் ராமகிருஷ்ணன். எப்போது வேண்டுமானாலும் எந்தப் பிரச்னை குறித்தும் விவாதிக்க கூட்டத்தைக் கூட்டச்சொல்லும் உரிமை ராமகிருஷ்ணனுக்கு உண்டு. பொதுச்செயலாளர் என்ற முறையில் அவ்வப்போது அவரல்லவா அப்போதே இதை முன்மொழிந்து இருக்க வேண்டும்?
சாதிஒழிப்பு, பெண்ணுரிமை ஆகி யவையே பெரியாரியலின் முக்கிய அம்சங்கள். தமிழர்நலன்கூட இவற்றின் மூலமாக வரும் தமிழர் நலன்தானே தவிர, வெறும் தமிழர் நலன் என்பது பெரியாரியலின் அஜெண்டாவில் இல்லை. அப்படி இருக்கையில் ஈழத்தமிழர் நலன் என்பது இன்னமும் குறைந்த சதவிகிதமே. தமிழர் நலனுக்கு 20% இடம் என்றால் ஈழத் தமிழர் நலனுக்கு 5% இடம் தரலாம். முழுமையான இடத்தை அதற்குத் தர இயலாது. இதில் எங்களுக்குள் கருத்து மாறுபாடு இருக்கிறது. ஈழத் தமிழர் விஷயத்தில் அக்கறை காட்டும் ராம கிருஷ்ணன், சாதி குறித்த பிரச்னைகளில் ஆர்வம் காட்டுவது இல்லை. மேற்கு மாவட்டங்களில்தான் தீண்டாமை, இரட்டைக் குவளை முறை உட்பட சாதியக் கொடூரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. ஆனால், இரட்டைக் குவளை முறை எதிர்ப்புப் போராட்டத்தில் ராமகிருஷ்ணன் தரப்பு கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு முறை சென்னையில் நடந்த பரப்புரைப் பயணத் தொடக்க விழாவில் மட்டும் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தவரையும் குற்றம்சாட்டப்பட்டவரையும் அழைத்து கட்சி அலுவலகத்தில் வைத்து சமாதானம் பேசி வழக்கை வாபஸ் பெற வைக்கிறார். ஒரு பெரியாரிஸ்ட் இப்படிச் செய் யலாமா? இவை அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் இருந்தேன். பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இனி இணைந்து பணியாற்ற முடியாது என்ற நிலையில்தான் இந்த முடிவுக்கு வரவேண்டி இருந்தது. எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தாலும் நாங்கள் பெரியார் தி.க. என்கிற பெயரை பயன்படுத்த விரும்பவில்லை. 'நான் உன்னை நீக்குகிறேன். நீ என்னை நீக்குகிறாய், நாங்கள்தான் உண்மையான பெரியார் தி.க.’ என்று ஆளாளுக்குச் சண்டைபோடும் ஒரு நிலைமை பெரியார் இயக்கத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித்துச் சென்று ஓர் இயக்கம் தொடங்குவது என்று நினைத்தோம். ஆகஸ்ட் 12-ம் தேதி ஈரோட்டில் கூடப்போகிறோம்' என்கிறார் கொளத்தூர் மணி.
இதற்கு கோவை ராமகிருஷ்ணன் பதில் என்ன?
''நாங்கள்தான் பெரும்பான்மை என்று கொளத்தூர் மணி எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. இவர்கள் செயற்குழுவில் முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். 82 பேர் செயற்குழு உறுப்பினர்கள் என்றால், அவர்கள் யார் யார் என்று தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் அரங்கத்தில் பலரையும் கூட்டிவைத்து, வந்தவர்கள் எல்லாம் செயற்குழு உறுப்பினர்கள் என்றால், அது கட்டுப்பாடான இயக்கத்துக்கு அழகு அல்ல. இவர்களது நாணயத்துக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்... கொலை செய்யப்பட்ட கிருஷ்ணகிரி பெரியார். தி.க. தொண்டர் பழனிக்கு, ஜூலை 7 அன்று நடந்த செயற்குழுவில் இரங்கல் தெரிவித்ததாக பத்திரிகைக்குச் செய்தி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி ஓர் அஞ்சலி செலுத்தப்படவே இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்டவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எப்படி உண்மையாக இருக்கும்?
'குடியரசு’ இதழ் தொகுப்புக்கு நான் பங்களிக்கவில்லை என்கிறார்கள். அந்த முயற்சிகள் எதுவும் வெளிப்படையாக கொளத்தூர் மணியால் அறிவிக்கப்படவில்லை. முத்துக்குமாருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினால் 'அவர் என்ன பெரியாரிஸ்ட்டா? அவருக்கு எதற்குக் கூட்டம்?’ என்கிறார்கள். முத்துக்குமார் என்பது கொள்கையைத் தூண்டுவதற்கான ஓர் அடையாளம். அத்தகைய அடையாளங்கள்தான் ஒவ்வோர் இயக்கத்தையும் வளர்க்கும். அது வேண்டாம் என்றால், யாரை இளைஞர்களுக்கு அடையாளம் காட்டப்போகிறீர்கள்?
சாதி ஒழிப்புப் பணிகளில் நாங்கள் ஈடுபடவில்லை என்று கூறுவதும் தவறானது. பி.சி.ஆர். வழக்குகளில் 6 ஆதிக்கச் சாதிக்காரர்களுக்கு சிறைத் தண்டனை வாங்கித்தந்து இருக் கிறோம். சாதிமத பேதமற்ற 1,200 திருமணங்களை இதுவரை நடத்தி இருக்கிறோம். தபால் நிலையத்தில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்காதது, குடிநீர்க் குழாய்களில் அருந்ததியர் தண்ணீர் பிடிக்க முடியாதது, பொது இடங்களில் அருந்ததியர் அமருவதற்கு ஆதிக்க சாதியினர் தடுத்தது, கோயிலுக்குள் நுழைந்த அருந்ததிய மாணவரை அர்ச்சகர் தாக்கியது, அங்கன்வாடியில் அருந்ததியக் குழந்தைகளை அனுமதிக்காதது போன்ற சம்பவங்களில் நாங்கள் நேரடியாகத் தலையிட்டுப் போராடி உரிமையைப் பெற்றுக் கொடுத்தோம்.
ஈழத் தமிழர் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்கிறேன் என்பது என் மீதான குற்றச்சாட்டு. 2009-ல் முள்ளிவாய்க்கால் படுகொலை நேரத்தில் அதுதானே முக்கியமாக இருக்க வேண்டும். நானும் இந்த இயக்கத்தில் பிளவு வேண்டாம் என்றுதான் கடைசி வரை போராடினேன். ஆனால், என்னைத் துரத்துவதில் ஏனோ குறியாக இருந்தனர். பாதியில் வந்தவர்கள் பாதியில் போனார்கள் என்ற எண்ணத்தில் பெரியார் பாதையில் எங்களது பணிகள் தொடரும்'' என்கிறார்.
இரண்டு தரப்புமே பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தப்போவது இல்லை என்று அறிவித்து இருக்கின்றன. ஆனூர் ஜெகதீசன் எந்தத் தரப்பையும் சாராமல் இதில் நடுநிலை வகிக்கிறார். ஆனால், பெரியார் தி.க-வுக்குள்ளேயே ஒரு பிரிவினர் இந்த இரண்டு அணிகளும் ஒன்றாகச் செயல்படவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரான தஞ்சை மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பனிடம் பேசியபோது ''இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் சூழல் நிலவுகையில், பெரியாரிஸ்ட்டுகள் இணைந்து நின்று போராட வேண்டும். ஆகவே, யாருடைய அணிக்கும் நாங்கள் செல்லப்போவது இல்லை. அதனால், இந்த எண்ணத்துடன் இருப்பவர்களை இணைத்துக்கொண்டு, பின்னாளில் இரு தரப்பையும் இணையவைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்'' என்கிறார்.
பெரியார் தி.க-வுக்குள் நிகழும் இந்தப் பிரச்னை பெரியாரிஸ்ட்டுகளின் எதிரிகளை இரண்டு அல்ல... மூன்று லட்டு தின்ன வைத்துள்ளது. அது மட்டும்தான் மிச்சம்!
No comments:
Post a Comment