Wednesday, August 8, 2012

கண்மாயைக் காணோம்... குவாரியைக் காணோம்! கிரானைட் சோதனையில் கிறுகிறு


ன்சுல் மிஸ்ராவால் கிரானைட் தேசத்துக்கு அனுப்பப்பட்ட அதி​காரி​கள் படை, கிண்டிக் கிழங்கெடுத்துக்கொண்டு இருப்ப​தால் கிலி பிடித்துக் கிடக்கிறார்கள் கிரானைட்  அதிபர்கள்! 
கிரானைட் கொள்ளையைக் கணக்கெடுக்க மதுரை கலெக்டர் அனுப்பிய 18 குழுக்களுமே ஆடிப்பெருக்கு அன்று ஆக்ஷனில் இறங்கியது. தினமும் அதிகபட்சம் இரண்டு குவாரிகள் வீதம் ஒரு குழு 10 குவாரிகளை 10 நாட்களுக்குள் சோதனை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்பது கலெக்டரின் உத்தரவு.
காணாமல் போன குவாரி
கீழையூர் - அட்டபட்டி ரோட்டில் சி.சி.கண்மாய் ஏரியாவில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமான பட்டா குவாரி இருக்கிறது. சகாயம் கலெக்டராக இருந்த​​போது இங்கே மூன்று முறை விசிட் அடித்து முறைகேடுகளைக் கண்டுபிடித்தார். அப்போது, சகாயத்துடன் வந்திருந்த துணைதாசில்தார் மாரிமுத்துவும் இப்போது அந்த ஏரியாவுக்கான சோதனை அதிகாரிகளில் ஒருவர். ஸ்பாட்டுக்கு வந்ததுமே மிரண்டுபோன மாரிமுத்து, ''ஏப்ரல் மாசம் விசிட் வந்தப்ப இதே இடத்துல அதள பாதாளமா ஒரு குவாரி இருந்துச்சு. இப்ப அதைக் காணலையேப்பா...'' என்று அலறினார். விசாரணை நிச்சயம் என்று தெரிந்ததால், வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை குவாரிக்​குள் போட்டு மூடி சமதளமாக்கி இருக்​கிறார்கள். முக்கால்வாசிக்கு மேல் மூடிவிட்ட நிலையில், அதிகாரிகள் வந்துவிட்டதால் கொஞ்சூண்டு ஏரியாவை மட்டும் மூட முடிய​வில்லை. அங்கு குவாரி இருந்ததற்கான அடை​யாளத்தையும் அதற்குள் கிரானைட் கற்கள் பதுக்கி வைக்கப்பட்ட விஷயத்தையும் குறித்துக்கொண்டார்கள் அதிகாரிகள்.
கண்மாய் எங்கேப்பா?
கலால்துறை துணை ஆணையர் ரவீந்திரன் தலைமையில் சென்ற இன்னொரு குழுவுக்கு வேறு மாதிரியான பகீர் அனுபவம். கீழவளவு ஏரியாவில் பிள்ளையார் குளம் கண்மாய் இருப்பதாக வருவாய்த் துறை ஆவணங்களில் இருக்கிறது. அங்கே கண்மாயைத் தேடிய ரவீந்திரன் குழம்பிப்போனார். 'இந்த ஏரியாவில் கண்மாயைக் காணோமேப்பா...’ என்று அவர் புலம்பியபோது, ஒரு வழியாக சர்வே கல்லைக் கண்டுபிடித்துவிட்ட ஆர்.ஐ., 'சார், இப்ப நம்ம நிக்கிற ஏரியாதான் கண்மாய்’ என்று காட்டினார். 'பக்கத்தில் இருக்கும் 'டாமின்’ குவாரியை ஒரு தனியார் அதிபர்தான் ஓட்டிக்கிட்டு இருக்கார். இந்தக் கண்மாயை 99 வருடங்கள் குத்தகைக்குக் கேட்டாங்க. 'குடுக்க முடியாது’னு சொன்னதும் அவங்களே ஆக்கிரமிச்சு இருக்காங்க’ என்றார்கள் லோக்கல் அதிகாரிகள். சுமார் இரண்டே கால் ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பே படிப்படியாக தூர்த்து ஆக்கிரமித்து விட்டார்கள்.  
காட்டிக்கொடுத்த வி.ஏ.ஓ-க்கள்
கிரானைட் குவாரிகளில் முதல்நாள் நடந்த சோதனைகள் தொடர்பாக அன்று இரவே அனைத்துக் குழுக்களையும் அழைத்து மீட்டிங் போட்டார் கலெக்டர். கீழவளவு கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கேள்விப்பட்டு டென்ஷன் ஆனவர், இந்தத் தகவலைத் தெரிவிக்காத கீழவளவு வி.ஏ.ஓ. சுப்புராஜை காத்திருப்போர் பட்டியலில் வைக்கச்சொல்லி உத்தரவிட்டார். அதனால், சருகுவலையபட்டி வி.ஏ.ஓ-வான செல்வராஜிடம் பொறுப்பு ஒப்படைக்கப்​பட்டது. ஆனால், அவரும் கிரானைட் புள்ளிகளோடு செல்போன் தொடர்பில் இருந்ததாகச் சொல்லி, அடுத்த நாளே காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார். அவருடைய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்கு வந்த அதிகாரிகளின் செல்போன் நம்பர்களையும் உடனடியாக கலெக்ட் பண்ணிவிட்ட கிரானைட் புள்ளிகள், அவர்களில் சிலருக்குத் தூதும் விட்டிருக்கிறார்கள். எந்த அதிகாரி எங்கே செல்கிறார் என்று வி.ஏ.ஓ-க்கள் காட்டிக்கொடுத்து, பேச்சுவார்த்தைகளும் நடந்ததாம்.
ஐஸ் மோர் கொடுத்து அசத்திய பி.ஆர்.பி.!
'பிள்ளையார் குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பு​களை அவர்களாகவே அகற்றினால் பாருங்கள், இல்லாவிட்டால் அந்த வளாகத்தைப் பூட்டி சீல் வைத்து விடுங்கள்’ என்று கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து, 3-ம் தேதி காலையில் மேலூர் தாசில்தார் வசந்தா ஜூலியட்டுடன் வந்தார் ரவீந்திரன். ஆனால், அதற்கு முன்னதாகவே தகவல் கசிந்து, 'நாங்களே எல்லாத்தையும் எடுத்துடுறோம் சார்’ என்று சொன்னார் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் மேனேஜர் சண்முகநாதன். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் களத்தில் இறங்கி மளமளவென ஆக்கிரமிப்​பில் இருந்த கட்டுமானங்களைப் பிரித்து அடுக்கினர். ஒரே நாளில் மூன்று இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த அதிரடிகளால் தாங்கள் கொதிப்பில் இருந்தாலும்... ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகளுக்கும் நிருபர்களுக்கும் தங்களது விருந்தோம்பல் வழக்கப்படி ஐஸ் மோர் கொடுத்துக் குளிர வைத்ததாம், பி.ஆர்.பி. நிறுவனம்!
சிறப்பு அதிகாரியாக வருகிறாரா சகாயம்?
இரண்டாம் நாள் சோதனையில் மேலப்பட்டி ஏரியாவில் பி.ஆர்.பி-க்குச் சொந்தமான கிரானைட் குவாரி ஒன்றிலும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை மீண்டும் பூமிக்குள் போட்டுப் புதைத்து இருந்ததைக் கண்டுபிடித்துக் கணக்கு எடுத்தார்கள். இ.மலம்பட்டி ஏரியாவில் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டி குவாரியை மூடுவதாக வந்த தகவலை அடுத்து அங்கே விரைந்த அதிகாரிகள், மூடுவதற்குத் தடை விதித்தார்கள். பல இடங்களில் சர்வே கற்களையே காணடித்து விட்டதால் அசல் குவாரியையும் ஆக்கிர​மிப்புக் குவாரிகளையும் கண்டுபிடிக்க ரொம்பவே சிரமப்பட்டனர் அதிகாரிகள். 3-ம் தேதி மாலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா குவாரிகளைச் சுற்றிப்பார்த்தார். ரெங்கசாமி​புரத்தில் அவரைச் சூழ்ந்துகொண்ட மக்கள், ''இந்த குவாரிகளால் எங்களுக்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கள். நாங்கள் ஆபத்தான சூழலில் வசிக்கிறோம்'' என்று கண்ணைக் கசக்கினர். இதனிடையே, கிரானைட் ஊழலை முழுமையாக வெளிக்கொண்டு ​வர, சகாயத்தையே சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்​​போகிறார்கள் என்ற தகவல் திங்கள் காலையிலேயே கிரானைட் தேசத்தில் கிசுகிசுக்கப்​பட்டது.
பாய்ந்தது வழக்கு!
மூன்றாம் நாள் சோதனையின்போது ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் மேற்பார்வைப் பொறியாளர் பானுமதி தலைமையில் இன்ஜினீயர்கள், ஓவர்சீயர்கள் எனக் கூடுதலாக 54 பேரையும் இந்தப் பணிக்காகக் களத்துக்கு அனுப்பினார் கலெக்டர். அதேநேரம், சி.சி.கண்மாய் ஏரியாவில் உள்ள கிரானைட் குவாரியில் பட்டா நிலத்தைத் தாண்டி அத்துமீறிச் செயல்பட்டு கண்மாய் மற்றும் களத்துப் பகுதிகளிலும் சுமார் 2.70 ஏக்கரில் கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தி அரசு சொத்துக்கு சேதம் ஏற்படுத்தி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக 'பி.ஆர்.பி. கிரானைட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் மீது கீழையூர் வி.ஏ.ஓ-வான அக்பர்சேட் கொடுத்த புகாருக்கு, 4-ம் தேதி மாலை எஃப்.ஐ.ஆர். போட்டது போலீஸ். இதேபோல், ரெங்கசாமிபுரத்தில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சிந்து கிரானைட்ஸ் நிறுவனத்தின் மீது செக்ஷன் 133 கீழ் வழக்குப் பதிவு செய்த ஆர்.டி.ஓ., கிரானைட் குவாரியை ஓட்டாமல் நிறுத்தி வைக்கும்படி நோட்டீஸும் கொடுத்தார். இதையடுத்து, பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர்களான பழனிச்சாமி, அவரது மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் உறவினர் மகராஜன், சிந்து கிரானைட்ஸ் அதிபர் பி.கே.செல்வராஜ் ஆகியோர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் பேசினோம். ''நான்கு நாள் சோதனையில் 66 குவாரிகள் வரை பார்த்திருக்கிறோம். இதில் 50 சதவிகிதத்துக்கும் மேலாகவே முறைகேடுகள் நடந்திருப்பது ஊர்ஜிதமாகி உள்ளது. கீழையூரில் பி.ஆர்.பி. நிறுவனத்தின் சி.சி.கண்மாய் குவாரிக்கு அருகில் புறம்போக்கு நிலத்தில் ஒரு லட்சம் க்யூஃபிக் மீட்டர் கிரானைட் கற்களைத் திருட்டுத்தனமாக வெட்டி எடுத்து இருக்கிறார்கள். ஒரு க்யூஃபிக் மீட்டரின் மதிப்பு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் என்றால் மொத்த வருமானத்தை நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். சி.சி.கண்மாய் விவகாரம் தொடர்பாக, எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளார்கள். அதேபோல், ஒலிம்பஸ் குவாரி உள்ளிட்ட இன்னும் ஏழு குவாரிகள் மீது புகார் கொடுக்க இருக்கிறோம். ரெங்கசாமிபுரத்தில் உள்ள சிந்து கிரானைட்ஸ் கம்பெனியைப் பார்த்து, அதிர்ந்து விட்டேன். ஊருக்குக் கீழே கிரானைட் குவாரி தோண்டிட்டு இருக்காங்க. அதனால், அந்தக் குவாரியை உடனடியா நிறுத்தச் சொல்லியாச்சு. வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால் அந்தக் குவாரி இருக்கலாமா கூடாதானு கோர்ட் முடிவு செய்யும். எது தனியார் இடம் எது அரசு இடம் என்று தெரியாத அளவுக்குத் தடயங்களைத் திட்டம் போட்டு அழிச்சிட்டாங்க. நாளை முதல் ஜி.பி.எஸ். கருவி மற்றும் சாட்டிலைட் உதவியுடன் துல்லியமாகக் கணக்கு எடுக்கப்போறோம். யார் யார் எல்லாம் தவறு செய்திருக்கிறார்கள் என்பதையும் அரசுக்கு அறிக்கையாக அனுப்புவோம். அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.
அன்சுல் மிஸ்ரா சொன்னபடியே 6.8.12 அன்று துரை தயாநிதியின் ஒலிம்பஸ் குவாரி உள்ளிட்ட எட்டு குவாரிகள் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு விட்டது. அரசின் உறுதியான நடவடிக்கை தொடர்ந்தால், மிகப்பெரிய கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!
-

'கல்லை எடுத்ததும் மதிப்பு போட முடியாது!''
துரை தயாநிதி வக்கீல் விளக்கம்                                                
கிரானைட் தொழிலை இந்தப் பகுதியில் பார்க்கும் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மற்றும் பி.ஆர்.பி., சிந்து கிரானைட் நிறுவனங்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வீர.கதிரவன் விரிவாகவே பேசினார். ''தமிழ்நாட்டில் கிரானைட் பிசினஸ் பண்றதாச் சொல்லி பணத்தைப் போட்டவங்க 90 சதவிகிதம் பேர் போண்டி ஆகிட்டாங்க. வாங்குறவங்களுக்குப் பிடிச்சாத்தான் கிரானைட் கல்லுக்கு நல்ல மார்க்கெட். இல்லைன்னா, அது வெறும் கருங்கல்தான். பி.ஆர்.பி. எடுத்த கல் எல்லாம் நல்லா மார்க்கெட் ஆச்சு. அதனால் அவர் பெரிய ஆளாகிட்டார். வெட்டி எடுக்கிற கிரானைட் கற்களை அதே இடத்தில் வைக்க முடியாது. வேற இடத்தில்தான் வைக்கணும். அதுல 40 சதவிகிதம் மட்டும்தான் கிரானைட்டா ஏற்றுமதி செய்யப்படும். மத்தது வேஸ்ட்தான். இந்த வேஸ்ட்டை எல்லாம் கிரானைட் வெட்டிய குழிக்கு உள்ளேயே மறுபடியும் கொட்டி நடைபாதை மற்றும் பூங்காக்களை அமைக்கலாம்னு விதி இருக்கு. கல்லை மார்க்கெட்டிங் பண்ணலைன்னாலும் அதை பூமிக்குள் போட்டு மூடி வைக்கலாம்னும் விதி இருக்கு.
வெட்டி வச்சிருக்கிற கல்லைக் கணக்கு எடுத்​துட்டு இத்தனை ஆயிரம் கோடிக்கு கிரானைட் கற்கள் திருடு போயிட்டதா அறிக்கை குடுக்குறாங்க. கல்லை வெட்டி எடுத்ததுமே அதுக்கு மதிப்புப் போட முடியாது. வாங்குபவர் வந்து விலை மதிப்பீடு செய்து என்றைக்கு சேல்ஸ் ஆகுதோ, அப்பத்தான் அரசுக்கு பணம் செலுத்தணும். அப்படி இருக்கும்போது, இதை எப்படி திருட்டுன்னு சொல்றாங்க? ஒலிம்பஸ் கிரானைட்ஸைப் பொறுத்தவரை, எவ்வளவு கல் வெட்டி எடுக்கப்பட்டது, அதற்கான ஏற்றுமதி வரவு செலவுக் கணக்கு என்னன்னு எல்லாமே க்ளியரா இருக்கு.
'4,000 க்யூஃபிக் மீட்டருக்குக் கல் எடுத்ததாக அரசாங்கத்​துக்குக் கணக்குக் காட்டி இருக்கிறார்கள். ஆனால், 2,000 க்யூஃபிக் மீட்டர் வெட்டி எடுக்கப்பட்டதற்கான குழிதான் இருக்கிறது’ என்று ஒலிம்பஸ் மீது சகாயம் குற்றச்சாட்டு வைத்​தார். குழியின் அளவை வைத்து மட்டுமே கல்லின் அளவை மதிப்பீடு செய்வது எப்படி சரியாகும்? சமதளத்துக்கு மேலே இருந்த மலையை வெட்டி அதில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை எந்தக் கணக்கில் எழுதுவது? சகாயம் பார்வையிட்ட குழிக்குப் பக்கத்திலேயே இன்னும் ரெண்டு கிரானைட் குழிகள் மூடப்பட்டு இருக்கு. அதை எல்லாம் அவர் கணக்கில் எடுக்கலை'' என்று சொன்ன கதிரவன், ''கிரானைட் பிசினஸில் இத்தாலியும் சைனா​வும்தான் கொடி கட்டிப் பறக்குது. இந்தி​யாவில் இருந்து ஓரளவுக்கு ஏற்றுமதி ஆகுது. இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்​பை ஏற்படுத்த நினைக்கும் சில அன்னிய சக்திகள்தான், இந்தப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகின்றன. அதனால்தான், கம்யூனிஸ்ட்​காரர்கள் இந்த விவகாரத்தில் அதிகமாய் மூக்கை நுழைக்கிறார்கள். தொழில் வளர்ச்சியே இல்லாத தென்மாவட்டங்களில் கிரானைட் தொழில் மட்டும்தான் ஏதோ ஓரளவுக்கு பிரச்னை இல்லாமப் போயிட்டு இருக்கு. அந்தத் தொழிலை செம்மைப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்​யாமல் இப்படி ஒட்டுமொத்தமாக முடக்கிப் போடும் வேலைகளைச் செய்யலாமா? சகாயத்தின் நேர்மையை நாங்கள் சந்தேகிக்க​வில்லை. ஆனால், அவர் உண்மையான நிலவரத்தை விசாரித்து அறிக்கை எழுதாமல் தன்னிச்சையாக ஓர் முடிவு எடுத்து விட்டார் என்பதுதான் எங்களின் ஆதங்கம்.
சகாயம் கலெக்டராக இருந்தபோது மதுரை மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கிராவல் மண் எடுக்க, 120 பேருக்கு டெண்​டரே இல்லாமல் அனுமதி கொடுத்தாங்க. அவங்க இஷ்டத்துக்கு மண்ணை அள்ளிட்டு இருக்காங்க. கிரானைட் குவாரிகளை நெருக்குறவங்க அங்க ஏன் போக மாட்டேங்குறாங்க? தமிழகத்தில் மண் குவாரிகளை ஆள்வது ஆறுமுகசாமிங்கிறது அதிகாரிகளுக்குத் தெரியும் அதனால், அந்தப்பக்கம் போகப் பயப்படுகிறார்கள்'' என்று சொன்னார்!                    
 ''குவாரியை நாங்கள் மூடவில்லை!''
   அரசின்  இந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்க பி.ஆர்.பி. கிரானைட்ஸ் மேனேஜர் சண்முகநாதனைத் தொடர்பு கொண்டோம். ''பிள்ளையார் குளம் கண்மாயை நாங்கள் புதிதாக ஒன்றும் ஆக்கிரமிக்கவில்லை. ஏற்கெனவே அனுபவத்தில் இருந்தவர்களிடம் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினோம். 2000-ம் ஆண்டு முதல் அதற்கு 'பி மெமோ’வும் போட்டு இருக்கோம். இது ஆக்கிரமிப்புனு சொல்லி அதிகாரிகள் எடுக்க வந்தாங்க. நாங்களே எடுத்துட்டோம். அதிகாரிகள் சொல்ற மாதிரி நாங்க எந்தக் குவாரியையும் மூடவில்லை. இப்போது இருக்கிற சூழலில் நாங்க என்ன பேசுறதுன்னே தெரியலை... எல்லாப் பக்கமும் பிரச்னையா இருக்கு'' என்று முடித்துக்கொண்டார்!
 'பணம் கொடுக்காததால் பிரச்னை பண்றாங்க!’
நடவடிக்கைக்குள்ளான சிந்து கிரானைட்ஸ் அதிபர் பி.கே.செல்வராஜ், இதுபற்றி நம்மிடம் விளக்கம் அளித்தார். ''22 வருடங்களாக நாங்க தொழில் பண்றோம். ரெங்கசாமிபுரம் குவாரியை 2006-ல்  நாங்க லீஸுக்கு எடுக்கும்போது என்ன அளவு இருந்ததோ, அதே அளவுக்குள்தான் கிரானைட் வெட்டி எடுக்கிறோம். ஆனா, ஒரு சென்ட் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சு கிரானைட் வெட்டினதா நோட்டீஸ் குடுத்த சகாயம், அதுக்கு நாலு கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார். 'இந்த இடத்தில் குவாரி நடத்த எங்களுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை’னு கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானமே போட்டுக் கொடுத்துருக்காங்க. எங்களை நம்பி இந்த ஊரில் 100 குடும்பங்கள் பொழைக்குது. அதைக் கெடுக்க நினைக்கிறாங்க. அவங்கதான் எங்களை அப்பப்போ மிரட்டிப் பணம் பறிக்க முயற்சிக்கிறாங்க. போன மாசம் பணம் கேட்டாங்க. குடுக்கலை. அதுக்காக பிரச்னை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க'' என்றார்.

No comments:

Post a Comment