Wednesday, August 15, 2012

விஜயகாந்த் எடுத்திருக்கும், 'சமய நல்லிணக்க’ அவதாரம் லாபம் தருமா?


சினிமாவை மிஞ்சும் அளவுக்கு அதிரடியாக அரசியல் நடத்தும் விஜயகாந்த், இப்போது கையில் எடுத்திருக்கும் அஸ்திரம், சமய நல்லிணக்கம். அவர் பங்கேற்கும் அரசியல் மேடைகளில் நடக்கும் மத போதனை நிகழ்ச்சிகளைப் பார்த்து கட்சிக்காரர்கள் மெய்சிலிர்க்கின்றனர்! 
வறுமை ஒழிப்பு மற்றும் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது என இரண்டு அம்சத் திட்டத்துடன் 32 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் கிளம்பி விட்டார் விஜயகாந்த். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவ மனையை சுத்தப்படுத்தும் பணியை 6-ம் தேதி அவரது தொண்டர்கள் மேற்கொண்டனர்.
இதை, பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தபோது குறுக்கிட்ட போலீஸார், 'அரசு மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்யும். நீங்கள் இங்கே நோயாளிகளுக்கு இடையூறு செய்ய அனுமதிக்க முடியாது’ என்று கறார் காட்டவே, கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும், சுத்தப்படுத்தும் பணியைச் செய்து முடித்த பிறகே அந்த இடத்தைவிட்டு தே.மு.தி.க-வினர் வெளி யேறினர். பாளையங்கோட்டையில் உள்ள சந்தியாகு ஆலயம் நிதிவசதி இல்லாமல் பெயின்ட் கூட அடிக்கப்படாமல் கிடப்பதாக, அந்த தேவாலயத்துக்கு விஜயகாந்த்தை அழைத்துச் சென்றார் மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன். அதைச் சுற்றிப்பார்த்த விஜயகாந்த், ஆலயத்தை சுத்தப்படுத்தி பெயின்ட் அடிக்க உத்தரவு போட்டார். உடனடியாகக் களம் இறங்கிய கட்சியினர் பெயின்ட் அடித்து, ஆலயத்தைப் பளபளப்பாக்கினர். பின்னர், பிரேமலதா மட்டும் ராதாபுரம் பகுதியில் உள்ள அணைக்கரை தேவாலயத்துக்குச் சென்றார். அந்தப்பகுதியில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தை சுற்றிப்பார்த்து, தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தார்.
அன்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், நலிவடைந்த கிறிஸ்துவர்களுக்கும் தேவாலயங்களுக் கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வழக்கமாக, அரசியல் மேடைகளில் மதபோதகர்கள் அரிதாகக் காட்சி தருவார்கள். ஆனால், தே.மு.தி.க. மேடையில் நிறைய பாஸ்டர்கள் அமர்ந்து இருந்ததைக் கண்டு கட்சியினரே அதிசயித்தனர்.
சிறுபான்மை மக்கள் சார்பாக பெருமாள்புரம் பகுதியில் உள்ள 'ஜீவஒளி’ தேவ ஊழியத்தின் பாஸ்டர் ஜெகாவர் பேச அழைக்கப்பட்டார். கையில் பைபிளுடன் வந்த அவர் அதில் உள்ள வசனங்களை வாசித்துப் போதிக்க ஆரம்பித்தார். கூட்டத்தினர் ஒரு நிமிடம் திகைத்துப்போனாலும், விஜயகாந்த்தும் பிரேமலதாவும் அதைக் கவனமாகக் கேட்பதைப் பார்த்ததும் கட்சியினரும் அந்த போதனையில் மூழ்கினர்.
பின்னர், மேடையில் இசைக்கருவிகள் முழங்க பாஸ்டர் ஜெகாவர் குழுவினர் கிறிஸ்துவப் பாடல் ஒன்றைப் பாடினர். அந்தப் பாடலை விஜயகாந்த் கை தட்டி ரசித்ததால், கூட்டத்தினரும் கை தட்டிய தோடு நில்லாமல் பாடல் குழுவினருடன் சேர்ந்து பாடவும் செய்தனர். இடையிடையே, 'அல்லேலுயா...’ என்று குரல் எழுப்பிய பாஸ்டர், கூட்டத்தினரையும் திருப்பிச் சொல்லச் சொன்னார். அவரே எதிர்பார்க் காத அளவுக்கு செம ரெஸ்பான்ஸ்!
பின்னர் பேசிய பிரேமலதா, பாஸ்டரின் ஜெபத் தைப் பாராட்டித் தள்ளியதுடன் நில்லாமல், 'அல்லேலுயா.. அல்லேலுயா’ என உரக்கக் குரல் எழுப்பினார்.
அத்துடன், 'பாஸ்டர் போன்ற நல்ல உள்ளங்கள் இணைந்து செய்த ஜெபம் ஒருபோதும் வீண் போகாது. 2016-ல் கேப்டன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்’ என்ற பிட்டையும் போட்டு வைத்தார். ''கேப்டனைப் பொறுத்தவரை எந்தச் சூழ்நிலையிலும் இனம், மொழி, மத வித்தியாசம் பார்ப்பது இல்லை. நாடு மற்றும் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவது மட்டுமே தே.மு.தி.க-வின் பணி. அதைத் தொடர்ந்து செய்வோம். இங்கே, கிறிஸ்துவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கேப்டன், 9-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழை முஸ் லிம்களுக்கு உதவிகளை வழங்க இருக்கிறார். 28-ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கும் விழாவில் ஏழை பிராமணர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்'' என்று வரிசையாக அடுக்கினார்.
முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு போடப்பட்ட கடுப்பில் பேச்சைத் தொடங்கினார் விஜயகாந்த். ''வழக்குப் போட்டு என்னை மிரட்ட நினைத்தால், அது நடக்காது. நூறு வழக்கு வேணும்னாலும் போட்டுப் பாருங்க. சிறைக்கு நான் அஞ்ச மாட்டேன். பழைய சோறும் வெங்காயமும் இருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு இந்த இடத்தில்கூட படுத்துக் கொள்ளத் தயங்க மாட்டேன்''  என விளாசித் தள்ளினார்.  
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளராகக் களம் இறங்கிய ஜாஹீர் கணிசமான வாக்குகளுடன் பெபாசிட் வாங்கியதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக அளித்த வாக்குகளே காரணம் என்பதால், அந்த சமுதாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டாராம்.
அந்த நிகழ்ச்சியில், ''நான் அனைத்து மதங்களுக்கும் சொந்தக்காரன். அதனால்தான் எல்லா மதத்தின் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன். இடைத்தேர்தல் சமயத்தில் புதுக்கோட்டை தொகுதிக்கு 50 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கினார். ஆனால், ஒரு வேலையும் நடக்கவில்லை. அந்தப் பணத்துக்கான கமிஷனை மட்டும் ஆளாளுக்குப் பிரித்துக் கொண்டனர். இங்குள்ள பள்ளியைச் சுத்தம்செய்ய எங்கள் கட்சியினர் சென்றபோது, அதைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனால், எத்தனை இடையூறுகளை ஆளும் கட்சி செய்தாலும் எங்களின் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும்'' என்றார் சூடாக.
விஜயகாந்த் எடுத்திருக்கும், 'சமய நல்லிணக்க’ அவதாரம், அரசியலில் அவருக்கு முன்னேற்றம் தருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

No comments:

Post a Comment