Tuesday, August 28, 2012

லஷ்மண் ஓய்வு! என்ன காரணம்?



வங்கிபுரப்பு வெங்கட சாய் லஷ்மண் என்கிற பெயர் கொண்ட வி.வி.எஸ். லஷ்மணை, வெரி வெரி ஸ்பெஷல் லஷ்மண் என்று மாற்றினார்கள் ஆஸ்திரேலியர்கள். மற்ற யாரை விடவும் ஆஸ்திரேலியர்கள் அதிகம் பயந்தது லஷ்மணைக் கண்டு தான். சமகால இந்திய பேட்ஸ்மேன்களில், இரண்டாவது இன்னிங்ஸ்கில் அதிக ஆவரேஜ் கொண்டவர். எத்தனை விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசியில் வருகிற லஷ்மண், அனுமன் போல காப்பாற்றுவார். ஆனால், 134 டெஸ்டுகளில் ஆடியிருந்தாலும் லஷ்மணின் தலைக்கு மேலே எப்போதும் கத்தி தொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஒரு முறை மோசமாக ஆடினாலும் லஷ்மண்மீது உடனே அம்புகள் பாயும். அனைத்துக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இளம் வயதில் சச்சின், எப்படி மும்பை வட்டாரத்தில் புகழ்பெற்று இருந்தாரோ அதுபோல டீன்-ஏஜ் வயதில் லஷ்மண் என்றால் ஹைதராபாத்தில் அப்படியொரு பேர். ரஞ்சி மேட்சுகளிலும், இந்தியா ஏ மேட்சுகளிலும் ரன் மழை பொழிந்ததால் 1996ல், 22வது வயதில், இந்திய அணிக்குத் தேர்வானார் லஷ்மண். ஆனால், சச்சின், திராவிட் போல கௌரவமான தொடக்கம் அமையவில்லை. இதனால் பல சந்தர்ப்பங்களில் தொடக்க ஆட்டக்காரராகக்கூட ஆட நேர்ந்தது. 2001ல், கொல்கத்தாவில் நிகழ்த்திய அற்புதம், லஷ்மணுக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கே ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணி, அப்போது கிரிக்கெட்டின் தாதா. தொடர்ந்து 16 டெஸ்டுகளில் ஜெயித்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தது.

ஆனால், அத்தனை பெருமைகளையும் துவம்சம் செய்தது லஷ்மணின் ஆட்டம். அவர் அடித்த 281 ரன்கள், இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய மலர்ச்சியைக் கொடுத்தது. மெக்ராத், வார்னே போன்ற வீரர்கள் கொண்ட ஆஸி அணியை வேரோடு சாய்த்தார் லஷ்மண். புதிதாகப் பொறுப்பேற்ற கேப்டன் கங்குலியும் பயிற்சியாளர் ஜான் ரைட்டும் இந்திய கிரிக்கெட்டை மீட்டுக் கொண்டுவரமாட்டார்களா என்று ஏங்கிய தருணம் அது. கொல்கத்தா டெஸ்ட் வெற்றி இந்திய கிரிக்கெட்டையே திருப்பிப் போட்டது. 2003 உலகக்கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம்வரை சென்றது, 2011 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தைப் பிடித்தது... என்று எல்லாவற்றுக்கும் தொடக்கப் புள்ளி கொல்கத்தா டெஸ்ட் வெற்றிதான். லஷ்மணின் 281க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கே மாறிப்போனது. ஃபாலோ ஆன் செய்ய எல்லா அணிகளும் அதிதீவிரமாக யோசிக்க ஆரம்பித்தன.

சமீபத்திய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டூர்களில் லஷ்மண் சரியாக ஆடவில்லை. டிராவிட் இங்கிலாந்தில் மூன்று செஞ்சுரிகள் அடித்தார்; அவ்வளவுதான். இந்நிலையில் டிராவிட் ரிடையர் ஆனார். இதனாலேயே லஷ்மண் ரிடையர் ஆவதும் உறுதி என்றானது. ஆனால் நியூசிலாந்து தொடரில் லஷ்மண் இடம்பிடித்தார். இந்த நிலையில், முதல் டெஸ்ட் ஆரம்பிக்க நான்கு நாளே இருக்கும் சமயத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் லஷ்மண். லஷ்மணுக்கு பி.சி.சி.ஐ. தரப்பிலிருந்து நெருக்கடிகள் தரப்பட்டதாகச் சொல்லப்பட்டதை பி.சி.சி.ஐ. மறுத்தாலும் திரைமறைவில் ஏதோ நடந்திருக்கிறது.

134 டெஸ்டுகள் ஆடியும் லஷ்மணுக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் ஆறாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கியதால் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. 2003 உலகக்கோப்பையில் லஷ்மண் இடம் பெறவில்லை. இது தவறுதான் என்று இப்போது ஒப்புக்கொள்ளும் கங்குலி, அப்போது லஷ்மணுக்கு ஆதரவாக இருக்கவில்லை. இத்தனை வருடங்கள் ஆடியும் ஒருபோதும் கேப்டன் பதவிக்கு லஷ்மணின் பெயர் பரிந்துரைக்கப்பட வில்லை. ஒவ்வொரு டெஸ்டிலும் தம்மை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார் லஷ்மண். 2000லிருந்து ஆரம்பித்த ஒரு சகாப்தத்தில் லஷ்மணுக்கும் பங்கிருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் லஷ்மணின் 281க்கு ஓர் இடமுண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டம் என்கிற மகுடத்துடன். எந்தக் காலத்திலும் அவருடைய ஆட்டத்துக்கு ரசிகர்கள் இருப்பார்கள்.

No comments:

Post a Comment