Wednesday, August 8, 2012

அந்தப் பாவி ஜெயிலுக்குள்ளதான் சாவான்!'' நடுங்கவைத்த நரபலித் தீர்ப்


பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை ஒன்றைக் கடத்திச் சென்று, நரபலி கொடுத்து, ரத்தத்தைக் குடித்து, தலை வேறு உடல் வேறாகத் துண்டித்து வெவ்வேறு ஊர்களில் புதைத்த ரத்தவெறி பிடித்த கொடூரன் வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது மதுரை நீதிமன்றம். 
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த சிரின் பாத்திமா, நேர்த்திக்கடன் செலுத்து வதற்காக கடந்த 1.7.10 அன்று மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்குச் சென்றார். நேர்த்திக்கடன் செலுத்து பவர்கள், இரவில் அங்கேயே தங்க வேண்டும் என்பதால், அவர் தன் ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன் பள்ளிவாசலிலேயே தூங்கினார். அதி காலையில் எழுந்தபோது குழந்தையைக் காணவில்லை. இதுதொடர்பாக, மதுரை தல்லாகுளம் போலீஸார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்கபூர் என்பவர் குழந்தையைக் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.
தர்கா, மந்திரவாதி என்று சுற்றிக்கொண்டிருந்த அப்துல் கபூர், பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னுடைய குழந்தையை விற்றதால், முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பின்னர், ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் தன்னைப் போல் சுற்றிக்கொண்டிருந்த ரமீலா பீவியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக, வசதி வாய்ப்புடன் வாழ வேண்டுமானால், தலைப்பிள்ளை ஒன்றை நரபலி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் திரிந்து இருக்கிறார். அதற்காகத்தான் கோரிப் பாளையத்தில் இருந்து சிறுவன் காதர் யூசுப்பைக் கடத்தி இருக்கிறார்.
கடத்திய குழந்தையை தூத்துக்குடி மாவட்டம் ஏரலுக்குக் கொண்டு சென்றவர்கள், அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் குழந்தையை நரபலி கொடுத்து இருக்கிறார்கள். ரமீலா பீவி குழந்தையைப் பிடித்துக் கொள்ள, அப்துல் கபூர் தலையை அறுத்து ரத்தத்தை ஒரு தூக்குவாளியில் பிடித்தான். பிறகு, இருவரும் அந்த ரத்தத்தைக் குடித்து விட்டு, மீதி ரத்தத்தை அகர்பத்தி பாக்கெட்டில் ஊற்றிக்கொண்டனர்.
பின்னர், ஒரு தூக்குவாளியில் குழந்தையின் தலையையும், மற்றொரு வாளியில் குழந்தையின் உடலையும் கொண்டுபோன அவர்கள், உடலை ராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடியிலும், தலையை தூத்துக்குடி மாவட்டம் கல்லா மொழி கடற்கரையிலும் புதைத்தனர். பிறகு, ரத்தம் இருந்த பத்திக் கூட்டை வைத்து பூஜை செய்து அதை தலையைச் சுற்றி கடலுக்குள் வீசியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தென் மாவட்டங்களைக்  கதிகலக்கியது. குற்றவாளிகள் ஜாமீனில் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அப்போதைய கலெக்டர் உத்தர விட்டார்.
இந்தக் கொலை வழக்கு மீதான விசாரணை மதுரை 6-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் விஸ்வநாத், 'சிறுவன் காதர் யூசுப் கொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இருந்தாலும், கொலைக் குற்றத்துக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அதேபோல குழந்தையைக் கடத்திய குற்றத்துக்கு மற்றொரு ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்துக்காக தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனையை அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக (மொத்தம் 21 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தலா 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை செலுத்தத் தவறினால், மேலும் 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்று தீர்ப்புக் கூறினார். இதைத் தொடர்ந்து அப்துல் கபூர் மதுரை மத்தியச் சிறையிலும், ரமீலா பீவி திருச்சி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தண்டனையை அறிவிக்கும் முன், அப்துல் கபூரின் கருத்தைக் கேட்டார் நீதிபதி. அப்போது அவர், 'அய்யா எனக்கு மதுரை ஜெயில் வேண்டாம்யா. வர்றவன் போறவன் எல்லாம் திட்டுறாங்க. திருச்சிக்கு மாத்துங்கய்யா' என்று சொல்ல, 'அதுபற்றி சிறையில்தான் மனு கொடுக்கணும்'' என்றார் நீதிபதி. சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் தங்களைப் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களைக் கடுமையாகத் திட்டினார்அப்துல் கபூர். 'ஏய்.. என்ன போட்டா பிடிச்சிக்கிட்டே இருக்கீய? கோபம் மண்டைக்கு ஏறுச்சின்னா அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது’ என்று போலீஸார் முன்னிலையிலேயே பத்திரிகையாளர்களை மிரட்டினார்.
கொலை செய்யப்பட்ட சிறுவனின் பாட்டி பீவி நம்மிடம், 'எம்புள்ளை கவுகர் பாட்சா விபத்துல செத்ததும், அல்லா அவனுக்கு ஒரு வாரிசைக் கொடுத்திருக்காரே, அது போதும்னு மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனா, மகன் செத்த மறு வருஷமே, குழந்தையை அப்துல் கபூர்ங்கிற படுபாவி கடத்திக்கிட்டுப் போய்க் கொன்னுட்டான். அந்தப் பாவிக்கு நல்ல சாவு வரக்கூடாதுன்னுதான் நான் அல்லாகிட்ட வேண்டிக்கிட்டேன். அது நடந்திருக்கு. வேணுமின்னாப் பாருங்க, அந்த நாய் ஜெயிலுக்குள்ளேதான் சாவான். அவன் பொண்டாட்டிக்கும் நல்ல சாவு வராது' என்றார் கண்ணீர் மல்க.

No comments:

Post a Comment