Wednesday, August 8, 2012

ஆசிரியர்களே திருடர்களானால்...? ஆதிதிராவிட நிதியில் அதிர்ச்சிக் கொள்



பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது’ என்று, மாணவர்களுக்கு நேர்மையைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள், முகத்தில் கறுப்பு மையுடன் அகப்பட்டு உள்ளார்கள். ஆதிதிராவிட ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதியில் 81 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்த குற்றத்துக்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 78 தலைமை ஆசிரியர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட, அதிர்ந்து நிற்கிறது தமிழகம். இதுவரை இப்படி ஒரு கேவலம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை! 
இந்த விவகாரம் பற்றி பேசினார் தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளர் செந்தமிழன். ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிறையவே சலுகைகள் வழங்குகின்றன. சிலேட்டுகள், பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மிதி வண்டிகள், கல்வி உதவித்தொகை, விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து உணவு, உடை, பாய், போர்வை, சோப்பு, எண்ணெய் என்று எண்ணற்ற சலுகைகள் உண்டு. ஆனால், ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள சில அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், கல்லூரி முதல்வர்களும், விடுதி வார்டன்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு, அந்தச் சலுகைகளை முழுமையாக ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்குத் தராமல் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதில் ஒன்றுதான் சுகாதாரமற்ற தொழில் செய்வோர் குழந்தைகளுக்கான உதவித் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றியது. தோல் பதனிடுதல், துப்புரவுப் பணி செய்பவர்களை இந்தப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழில் செய்யும்குடும்பங்களைச் சேர்ந்த 1,016 குழந்தைகள் படிக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வருடந்தோறும் 1,850 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், பல பள்ளிகளில் பல வருடங்களாகவே ஒரு நயா பைசாகூட கொடுக்கப்படவில்லை. அத்துடன் 1,016 குழந்தைகளின் எண்ணிக்கையை 2,774 என அதிகமாக எழுதியும் கையாடல் செய்து இருக்கிறார்கள்.
இந்த ஊழல் சின்னத் துரும்புதான். ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரை உள்ள விடுதிகளிலும் பெரும்கொள்ளை நடைபெறுகிறது. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவோரின் குழந்தைகளின் கல்வி உதவித் தொகையில் கை வைக்கும் அனைவரையும் உடனே பணிநீக்கம் செய்து வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். இதுசம்பந்தமாக, நாமக்கல்லில் பெரும்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்'' என்றார்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கண்ணன், ''நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் மட்டுமே இந்த ஊழல் நிரூபிக்கப்பட்டு 78 தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அப்படி என்றால், தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் எத்தனை கோடி ரூபாய் சுருட்டி இருப்பார்கள்? ஆதிதிராவிட, பழங்குடி இன மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், கல்வித் துறையில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்றே தெரியாது. அதனால்தான் அவர்களுக்குத் தெரியாமலே ஆதிதிராவிட நலத் துறை அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் கையாடல் செய்து இருக்கிறார்கள்.
தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்திருப்பவர்கள் இன்னும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. தவறு செய்த அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். மோசடிவழக்கு பதிவுசெய்து, அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் விழிப்பு உணர்வுப் பிரசாரம் மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்டவர்களை பணிநீக்கம் செய்யச்சொல்லி ஆர்ப்பாட்டத்துக்கும் தயாராகி வருகிறோம்'' என்றார்.
ஆதிதிராவிடர் நலத் துறையில் வேலை பார்க்கும் நேர்மையான அதிகாரி ஒருவர், ''நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் எங்கள் துறையின் மூலம் உண்டு உறைவிடப் பள்ளிகள், ஆதிதிராவிடர் விடுதிகளில் மொத்தம் 4,500 குழந்தைகள் படிக்கிறார்கள். இதில், ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு மாத உணவுப்படி 650 ரூபாய் அரசு கொடுக்கிறது. இதில் எங்கள் அலுவலகத்துக்கு ஒரு குழந்தைக்கு 80 ரூபாய் கமிஷன் வீதம் 4,500 குழந்தைகளுக்கு மாதத்துக்கு 3,60,000 ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி விடுதிகளில் கிட்டத்தட்ட 500 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மாத உணவுப்படி 750 ரூபாய். அதில் எங்கள் துறையினர் ஒருவருக்கு 100 ரூபாய் என மாதம் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். லஞ்சம் சரியாகக் கொடுத்து விட்டால், அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் கண்டுகொள்ளாது. அதனால், உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், விடுதி வார்டன்களும் தங்கள் பங்குக்கு கொள்ளை அடிக்கிறார்கள். ஒருவர் ஆதிதிராவிட நலத் துறை அல்லது ஆதிதிராவிட நலத் துறை மூலம் இயங்கும் விடுதிகளில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தால் போதும்... கோடிக்கணக்கில் சம்பாதித்து விடலாம்'' என்றார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரகுருபரனிடம் பேசினோம். ''இரண்டு வாரங்களுக்கு முன், எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை, செல்லிப்பாளையம், காரைக்குறிச்சி, ஆர்.சி.பேட்டப்பாளையம், பள்ளம்பாளையம் தொடக்கப் பள்ளிகளில் கொடுக்கவில்லை. இதை நீங்கள் விசாரிக்க வேண்டும்’ என்று எழுதி இருந்தது. உடனே, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவியை அனுப்பி ஆய்வுசெய்ய சொன்னேன். நான்கு பள்ளிகளில் உதவித்தொகை முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சார்லஸ், பூபதி, தேன்மொழி, சரவணன் (பொறுப்பு) ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவல்துறை மூலமாக எஃப்.ஐ.ஆரும் போடப்பட்டது. அதன்பிறகு, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து 78 தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆதிதிராவிடர் நலத் துறையிலும் தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. முழுமையாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவியிடம் பேசியபோது, ''முறைப்படி பார்த்தால் எங்கள் கவனத்துக்கு வந்துதான் பள்ளிகளுக்கு உதவித்தொகை போயிருக்க வேண்டும். ஆனால், விஷயத்தை எங்கள் கவனத்துக்கே கொண்டு வராமல் ஆதிதிராவிடர் நலத் துறையும், தலைமை ஆசிரியர்களும் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு இந்த கையாடல்களைச் செய்து இருக்கிறார்கள். ஆதிதிராவிட நலத் துறையில் பணிபுரியும் அலுவலர்களும் புரோக்கர்களும் இந்தக் கையாடலில் ஈடுபட் டிருப்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆண்டவனுக்கு முன்னால் ஆசிரியர்களை வைத்து மரியாதை செலுத்தும் சமூகம் இது.  அவமானம்!

No comments:

Post a Comment