Monday, August 6, 2012

''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தவில்லை என்றால்...''திருச்சியில் எச்சரித்த செல்வேந்திரன்


டெசோ என்று கருணாநிதி பேச ஆரம்பித்த நாளில் இருந்தே காங்கிரஸ்காரர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சி செல்வேந்திரன், காங்கிரஸ் கட்சியை திகிடுமுகுடாக விமர்சித்துப் பேசவே... கதர்ச்சட்டை வட்டாரத்தில் பற்றி எரிகிறது. 
ஜூலை 31-ம் தேதி. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற இருக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைப் பற்றி விவாதிப்பதற்கான கூட்டம் அது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. பிரபலங்கள், ஈழத் தமிழர்களைப் பற்றி பேசுவதை விடுத்து மாற்றுக் கட்சியினரைத்தான் சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளி னார்கள்.
மாவட்டச் செயலாளரான நேரு, விஜயகாந்த் மீது பாய்ந்தார். ''அ.தி.மு.க-வை விமர்சிக்க விஜயகாந்த்துக்குத் தைரியம் இல்லை. ஏனென்றால், கட்சியை உடைத்து விடுவார்கள் என்ற பயம். அந்தக் கட்சியில் 10 எம்.எல்.ஏ-க்களை வெளியே கொண்டுவந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோய்விடும் என்ற அச்சம். அதனால்தான் அவர் அ.தி.மு.க. விஷயத்தில் அடக்கி வாசிக்கிறார். எந்த ஓர் ஆட்சி என்றாலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் பொதுமக்களிடம் அதிருப்தி தோன்றும். ஆனால், ஒரே ஆண்டில் அ.தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர்'' என்று படபடத்தார்.
DMK Selvendran warned to EVKS Elangovan.
அடுத்து மைக் பிடித்த கழக வெளியீட்டுச் செயலாளர் செல்வேந்திரனின் பேச்சில் கேலி, கிண்டல், எச்சரிக்கை தெறித்தது.
''காந்தி, தென்ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக அங்கே போய் போராடினார். ஆனால் அதே சமயம், அண்டை நாடான இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்னை பற்றி இங்கே பேசக் கூடாது என்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் தொடர்பு இல்லை என்று என்னால் கூற முடியும். ராஜீவ் கொலை விவகாரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நளினிக்கு மன்னிப்பு வழங்குவதாக சோனியா தெரிவித்தார். சோனியாவுக்கு, 'இந்தக் கொலையில் நளினிக்குத் தொடர்பு இல்லை’ என்பது தெரிந்திருக்கிறது. அதனால்தான் மன்னிப்பதாகத் தெரிவித்து உள்ளார். தன் கணவரைக் கொன்ற கொலையாளிகளுக்கு எந்தப் பெண்ணும் மன்னிப்பு வழங்க மாட்டார். இதில் இருந்தே இந்தக் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆனா, காங்கிரஸ்காரனுக்கு தலை எது... கால் எதுன்னு மத்தவங்க சொன்னால்தான் தெரியும். அந்தக் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அந்த சண்டித்தனம் செய்யும் இளங்கோவன், கலைஞரை சாதியைச் சொல்லி விமர்சிக்கிறார். கூட்டணி தர்மம் என்பதற்காக நம் கட்சியினர் பதிலடி கொடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர். அவருக்கு உரிமை இருப்பதைப் போல் எனக்கும் பேச உரிமை இருக்கிறது. நான் பேச ஆரம்பித்தால்...' என்று எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பேச்சில் அழுத்தம் கொடுத்து நிறுத்த அரங்கத்தில் பலத்த கரகோஷம். மீண்டும் பேசத் தொடங்கியவர், ''தி.மு.க. தொண்டனுக்கு ஆகாதது போகாததை எல்லாம் தூக்கிச் சுமக்க வேண்டிய தலையெழுத்து இன்னமும் இருக்கிறது'' என்று காங்கிரஸை சாடிவிட்டு அமர, துள்ளிக் குதித்தார்கள் உடன்பிறப்புகள்.
திடீரென காங்கிரஸை சாடியது ஏன் என்று செல்வேந்திரனிடம் கேட்டோம்.
''ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் பற்றி விமர்சிப்பது என்றால் உங்கள் பத்திரிகையின் பக்கங்கள் போதாது. அவர் கலைஞரை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் 'தி.மு.க-வினர் ஆகாதது போகாததுகளை தூக்கிச் சுமக்க வேண்டி இருக்கிறது’ என்று விமர்சித்தது காங்கிரஸைக் கருத்தில்கொண்டு அல்ல. அவர்கள் தங்களைச் சொல்வதாக எடுத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பு இல்லை'' என்று சொன்னார்.
செல்வேந்திரன் பேச்சுக்கு என்ன பதில் சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?
''நான் கலைஞர் போன்ற பெரிய தலைவர்களின் விமர்சனத்துக்குப் பதில் அளிப்பதுதான் வழக்கம். செல்வேந்திரன் போன்றவர்களுக்கு எங்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பதிலடி கொடுப்பார்கள்'' என்றார்.
இனி, கலகலப்புதான்!

No comments:

Post a Comment