Friday, August 3, 2012

எனது இந்தியா (செஞ்சியும் தேசிங்கும் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....




மிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் மன்​னர்கள் ஆட்சி செய்தபோதும் அவர்​களின் பிரமாண்டமான அரண்மனைகள், கோட்டைகள் எதுவும் இன்று நம்மிடம் இல்லை. படையெடுப்பின்போது எரிக்கப்பட்டும் சிதைக்கப்​பட்டும் அழிந்துபோயின என்கிறார்கள். மதுரை ஒரு காலத்தில் மாபெரும் சுற்றுக்கோட்டைகொண்ட நகரமாக இருந்து இருக்கிறது. அதை, 1840-களில் மாவட்டக் கலெக்டராக வந்த பிளாக்பெர்ன் இடித்துத் தரைமட்டமாக்கி புதிய மதுரையை உருவாக்கினார்.

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே மாளிகை மேடு என்ற இடத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக சில அடையாளங்கள் காணப்படுகின்றன. மற்றபடி, வட இந்தியாவில் காணப்படுவது போன்ற கோட்டை கொத்தளங்களை தமிழகத்தில் காண முடியாது. வேலூர் கோட்டையும் செஞ்சிக் கோட்டையும்தான் தமிழக அளவில் பெரிய கோட்டைகள். இவையன்றி திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மனோரா கோட்டை, ஆலம்பரக்கோட்டை, சங்ககிரி கோட்டை, வட்டக்கோட்டை போன்றவை அளவில் சிறிய, சிதைவுற்ற நிலையில் உள்ள கோட்டைகளாகும்.


செஞ்சியும் வேலூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகள். வேலூர் கோட்டையில்தான் சுதந்திரப் போரின் முதற்புள்ளியான சிப்பாய் எழுச்சி ஏற்பட்டது. செஞ்சி, மாவீரன் சிவாஜி காலத்​தில் இருந்தே வீர வரலாறுகொண்டது. புந்தேலர் இனத்தின் தலைவரான சரூப் சிங்கின் மகன் தேஜ் சிங் என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. அவர்தான் செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜா. தேஜ் சிங் என்ற பெயரைத்தான் தேசிங்கு என்று எளிமையாக மாற்றி​விட்டனர் மக்கள். ஒரு ராஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த மன்னர் தமிழ் மக்களின் மனதில் காவிய நாயகராக விளங்குவது வியக்கத்தக்க ஒன்று.
தேசிங்கு ராஜன் பராக்கிரமத்துடன் செஞ்சியை ஆண்ட கதையைப்பற்றி தேசிங்கு ராஜன் கதைப் பாடல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் பாதிக்கும் மேல் வரலாற்றோடு தொடர்பு இல்லாத கற்பனை. சுவாரஸ்யத்துக்காக உருவாக்கப்பட்டவை. அதில் ஒன்றுதான் தேசிங்கு ராஜன் டெல்லிக்குப் போய் முரட்டுக் குதிரையை அடக்கி வெற்றிகண்டது. வரலாற்றில் அப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

தேஜ்சிங் எப்படி செஞ்சியின் அரசன் ஆனார் என்பதை அறிந்துகொள்ள, புந்தேலர் இனத்தின் வரலாற்றை முதலில் தெரிந்துகொள்வோம். புத்தேல்கன்ட் என்பது இன்றுள்ள மத்தியப் பிரதேசம். இங்கு வாழ்ந்த ரஜபுத்ரர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நெடுங்காலமாகவே இணக்கமான உறவு இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள், கார்வார் ராஜபுத்ரக் குடியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் முதல் தலைநகரம் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊரிச்சா. இந்த  நகரம் 1531-ல் நிறுவப்பட்டது.

ஒளரங்கசீப் படையெடுப்பின்போது புத்தேலர் இனத்தைச் சேர்ந்த பலரும் படைப் பிரிவில் பணியாற்றினர். சிவாஜியின் மகன் ராஜாராம், மொகலாயர் படையிடம் இருந்து தப்பி செஞ்சியில் தஞ்சம் அடைந்தார். அவனைப் பிடிக்க சுல்பிகர் கானின் தலைமையில் ஒளரங்கசீப் ஒரு படையை அனுப்பி செஞ்சியை முற்றுகையிடச் செய்தார். எட்டு ஆண்டுகள் நடந்த முற்றுகைப் போருக்குப் பிறகு, 1698-ல் செஞ்சி பிடிபட்டது. அதன் பிறகு, செஞ்சிக் கோட்டையின் தலைவராக சரூப் சிங் நியமிக்கப்பட்டார்.

சரூப் சிங்கின் தந்தை நரசிங்க தேவ். இவர், அக்பரின் நண்பர். அரசியல் காரணங்களுக்காக, அக்பரின் ஆன்மிகக் குருவான அபுல்பாசலைக் கொன்றவர் நரசிங்க தேவ். ஒளரங்கசீப் 1707-ல் இறந்தபோது அடுத்து அதிகாரத்தில் யார் அமர்வது என்ற அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக்கொண்ட சரூப் சிங், அதுவரை கர்நாடக நவாபுக்குச் செலுத்திவந்த கப்பத் தொகையை நிறுத்திவிட்டார். வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதை உணர்ந்து, அவர்களையும் பகைத்துக்கொண்டார். ஆகவே, அவரது ஆட்சி நெருக்கடிக்கு உள்ளானது.


1714-ம் ஆண்டு சரூப் சிங் இறந்த பிறகு, அவருடையை மகன் தேஜ் சிங் செஞ்சிக் கோட்டையின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 22. தேஜ் சிங்குக்கு, ரூப் சிங் என்ற இன்னொரு பெயரும் உண்டு. தனது தந்தையின் காலத்தில் வாங்கிய கடனுக்கு அநியாய வட்டி போட்டு மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பித் தர வேண்டும் என்று, ஆற்காடு நவாப் ஆள் அனுப்பினார். தேஜ் சிங் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு அதுவரை ஆற்காடு நவாபுக்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையை இனிமேல் செலுத்த முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நவாப், லாலா தோடர்மால் தலைமையில் தனது படையை அனுப்பி செஞ்சியில் திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார். தேசிங்கு ராஜா, தானும் போருக்குத் தயாராகி சேத்துப்பட்டில் எதிரியைத் தாக்க முனைந்தார். ஆனால், ஆரணியோடு நவாப் சேர்ந்துகொண்டதால் நிலைமை மாறியது. 1714-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தேவனூர் என்ற இடத்தில் போர் தொடங்கியது. தேசிங்கு ராஜாவின் கை ஓங்கிய நேரத்தில், சுபாங்கி என்பவன் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு ராஜா வீர மரணம் அடைந்தார்.

தேசிங்கு இறந்தவுடன் அவனது மனைவியும் உடன்கட்டை ஏறிவிட்டார். அவரது நினைவாகவே இராணிப்பேட்டை என்ற ஊர் உருவாக்கப்பட்டது. தேசிங்கு ராஜனின் சமாதியும் அவனது படைத் தளபதி முகம்மது கானின் சமாதியும் நீலாம்பூண்டி கிராமத்தில் இருக்கின்றன என்கிறார்கள் செஞ்சிவாசிகள்.

கடந்த காலத்தின் நினைவுகளை தனக்குள் புதைத்துக்கொண்டு வலிமை வாய்ந்த செஞ்சிக் கோட்டை இன்றும் கம்பீரமாகவே நிற்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மூன்று மலைகளை ஒருங்கேகொண்டது. அவை, முக்கோண வடிவில் அமைந்து உள்ளன. இதில், ராஜகிரி என்ற மலையின் உயரம் 242 மீட்டர். இது அரண் போன்றது. வடக்கே காணப்படுவது கிருஷ்ணகிரி மலை. தெற்கே இருப்பது சந்திரகிரி மலை. இந்த மூன்று மலைகளையும் இணைத்து சுமார் 60 அடி அகலத்தில் உயரமாக சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதன் வெளிப் பக்கத்தில் 80 அடி அகலமான ஓர் அகழியும் அமைந்து இருக்கிறது. இந்தக் கோட்டையின் சுற்றளவு ஐந்து மைல்கள். இந்தக் கோட்டைக்குள் பெரிய கோயில், கல் மண்டபம், சிறைக்கூடம், அகலமான குளம், படை வீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம் போன்றவையும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.கீழ்க்கோட்டைக்குச் செல்ல இரண்டு வாசல்கள் இருக்கின்றன. வடக்கே உள்ள வாசல் வேலூர் வாசல் என்றும், கிழக்கில் உள்ளது புதுச்சேரி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டில் எந்த வழியாகச் சென்றாலும்,  24 அடி அகலமும் 60 அடி ஆழமும்​கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்ல வேண்டும். மலையின் உச்சியை அடைவதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் கோட்டையில் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. ராஜ கிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கீழ்க்கோட்டையில் ஒரு பள்ளிவாசலும், வெங்கட்ரமண சுவாமி கோயிலும் இருக்கிறது. கோட்டையில் இருந்து இரண்டரை மைல் தூரத்தில் சிங்கவரம் என்ற ஊர் இருக்கிறது. இங்கே குடைவரைக் கோயில் உள்ளது. செஞ்சிக்கோட்டையை ஆனந்த கோன் என்ற மன்னர் 12-ம் நூற்றாண்டில் கட்டியதாகச் சொல்கின்றனர். விஜயநகரப் பேரரசுக் காலத்தில்தான் இந்தக் கோட்டை முழுமையாக வலிமை பெற்றது. 1464-ம் ஆண்டு செஞ்சியில் வேங்கடபதி நாயக்கர் காலத்தில் முதன்முதலாக நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னால் இதை, பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றி கில்தார் என்ற படைத் தலைவனை செஞ்சிக்குப் பொறுப்பாளராக நியமித்தார்.


செஞ்சிப் பகுதியில் சமணர்கள் அதிகமாக வாழ்ந்து இருக்கின்றனர். இங்கே, ஏழாம் நூற்றாண்டு வரை சமணம் தழைத்தோங்கி இருந்தது. பல்லவர் காலத்தில் செஞ்சிக்குத் தெற்கே பனமலை, மண்டகப்பட்டு ஆகிய இடங்களில் குகைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கி.பி. 1677-ல் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து செஞ்சியை மராட்டிய மன்னர் சிவாஜி மீட்டு மேலும் பலப்படுத்தினார். அவருக்குப் பிறகு, இந்தக் கோட்டை கர்நாடக நவாபுக்களின் கைக்குப் போனது. அவர்கள், 1750-ல் இதை பிரெஞ்சுக்காரர்களிடம் தோற்றனர். இறுதியாக, 1761-ல் பிரிட்டிஷ் படை செஞ்சியைக் கைப்பற்றியது.
1780-ம் ஆண்டு ஹைதர் அலி செஞ்சியைத் தாக்கி, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். அதுவே, செஞ்சிக் கோட்டையில் நடந்த கடைசிப் போர். 1799-ல் செஞ்சி மீண்டும் பிரிட்டிஷ்வசமானது. அவர்கள் அதை முறையாகப் பராமரிக்காமல் காவல் அரண் போலவே பாவித்தனர். 1921-ம் ஆண்டில் செஞ்சி தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.


நிகோலஸ் பிமண்டோ என்ற கிறிஸ்துவப் பாதிரியார் எழுதிய நாட்குறிப்பில், 'தான் பார்த்த கோட்டைகளில் மிகப் பெரியது செஞ்சி. அது ஒரு சிறந்த பட்டினமாக விளங்குகிறது’ என்ற தகவல் காணப்படுகிறது.
நவாபை எதிர்த்து தைரியமாக சண்டை போட்ட தேசிங்கு, மக்கள் மத்தியில் இன்றும் வீர நாயகனாக புகழ்பெற்று விளங்குகிறான். இவ்வளவுக்கும், தேசிங்கு ராஜா செஞ்சியை ஆட்சி செய்தது 10 மாதங்கள் மட்டுமே. செஞ்சியும் வேலூரும் ஒரே வரலாற்றின் இரண்டு பக்கங்கள்.

வேலூர் கோட்டையைக் கட்டியதும் விஜயநகர ஆட்சியாளர்களே. 16-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் இந்தக் கோட்டையைக் கட்டினார். செஞ்சியைப் போலவே, வேலூரும் பிஜப்பூர் சுல்தான் வசம் சில காலம் இருந்தது. 1760-ம் ஆண்டு இந்தக் கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசம் சென்றது. வெள்ளைக்காரர்கள், மைசூர் போரில் திப்பு சுல்தானை வென்ற பிறகு திப்புவின் குடும்பத்தினரை வேலூர் கோட்டைக்குள் அடைத்துவைத்து இருந்தனர். அத்துடன் திப்புவின் சிப்பாய்களில் பலரையும் பிரிட்டிஷ் அரசு தனது படையில் சேர்த்துக்கொண்டது.

ராஜ்யத்தை இழந்தபோதும் விசுவாசம் இழக்காத மைசூர்வாசிகள் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிடத் தருணம் பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனர். அதற்காக ஆங்கிலேய எதிர்ப்புப்பிரசாரத்​தை நாடக​மாகவும் கிராமியக் கலைகளாகவும் நிகழ்த்தத் தொடங்கினர். அந்த நெருப்புப் பொறி, வேலூர் பகுதிகளில் மெள்ளப் பரவத் தொடங்கியது.


No comments:

Post a Comment