Friday, August 10, 2012

'நான் உங்களுக்கு என்ன தீங்கு பண்ணேன் இளங்கோவன் சார்? கனிமொழி


'நல்லா இருக்கேன்... ரொம்ப நல்லா இருக்கேன். இனி, அனுபவிக்கப் பெருசா எந்தத் துயரமும் இல்லை. நம்மைச் சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்காம இருக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்கிறதை இப்போ உணர்ந்துட்டேன். இனி, எல்லாத்துக்கும் தயாரா இருக்கேன். என்ன, நீங்க கேக்காமலே உங்க முதல் கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேனா?'' - சின்ன சிரிப்போடு பேட்டிக்கு அமர்கிறார் கனிமொழி. அதே சிரிப்பு, அதே வாஞ்சை, அதே எளிமை. திகார்வாசம், ஸ்பெக்ட்ரம் சுழல், அழகிரி - ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த், நண்பர்கள், இலக்கியம், 'டெசோ’... எல்லாவற்றையும்பற்றி பேசிய கனிமொழியின் பேட்டியில் இருந்து...
''திகார் சிறையில் 195 நாட்கள்... சிறை சிரமங் கள் குறித்து இதுவரை எதுவுமே பேசவில்லையே நீங்கள்?''
(நீண்ட யோசனைக்குப் பிறகு...) ''திகாரின் பெண்கள் பிரிவு சிறைச்சாலையில் ரொம்பவும் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும். இட நெருக்கடியும் ஜாஸ்தி. வாரத்துக்கு ஒரு முறை ஏதாவது ரெண்டு நம்பருக்கு போன் பண்ணி கொஞ்ச நேரம் பேசிக்கலாம். ஆரம்ப நாட்களுக்குப் பிறகு, அந்தச் சலுகையையும் நான் பயன்படுத் திக்கலை. அங்கே பெண் கைதிகளின் குழந்தைகள் தங்கியிருக்க சின்ன 'க்ரீச்’ உண்டு. சனி, ஞாயிறுக் கிழமைகளில் அந்தக் குழந்தைகளோட பேசிச் சிரிச்சுப் பொழுதைப் போக்குவேன். என்கிட்ட அந்தக் குழந்தைங்க ரொம்பப் பாசமா ஒட்டிக்கிட்டாங்க. ஜாமீன்ல வெளியே வந்த பிறகு, அந்தக் குழந்தைங்களைப் பிரிஞ்சு ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ கோர்ட்டுக்குப் போயிருந்தப்போ, சிறையில் இருந்த ஒரு குழந்தை ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டா. எனக்குக் கண் கலங்கிடுச்சு. நான் ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள போலீஸ்காரங்க அந்தக் குழந்தையை அழைச்சுட்டுப் போயிட்டாங்க. சிறை நினைவுகளில் இனிமை சேர்த்தது அந்தக் குழந்தைகள்தான்!''
''திகாருக்குப் பின்... கனிமொழிக்குள் என்ன மாற்றம் நிகழ்ந்தது?''
''எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்தவள்னு என்னைப் பத்தி நான் வெச்சிருந்த நம்பிக்கை உண்மைதானாங்கிற கேள்விதான் என்னை முதலில் அலைக்கழிச்சது. தண்ணியோட அழகை ரசிச்சு நின்னுட்டு இருக்கிறப்ப, திடீர்னு சுழல்ல சிக்கினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்துச்சு எனக்கு. ஏதோ ஒரு மர்மம் என்னை முழுங்கிச் செரிச்ச வேதனை இப்பவும் இருக்கு. ஆனா, எனக்காக நின்னவங்களை நினைச்சுப் பார்க்குது மனசு. அவங்களுக்காக அடுத்தடுத்து நான் செய்ய வேண்டிய கடமைகளை மனசுக்குள் தீர்மானிச்சுட்டேன். நடந்ததை நினைச்சு வருந்தும் நிலைமையில் நான் இல்லை. எதுவும் சீக்கிரமே வர்றது நல்ல விஷயம்தானே?''
''சிறையில் இருந்து சென்னை திரும்பிய அன்று அப்பா உங்களிடம் என்ன பேசினார்?''
''சொல்ல முடியாத அளவுக்குச் சந்தோஷமா இருந்தார். 'ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான் நிம்மதியாத் தூங்குவேன்’னு சொன்னார். அந்த வார்த்தைகள் அன்னைக்கு முழுக்க என்னைத் தூங்கவிடலை.''
''டெல்லியில் இப்போது உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? நாடாளுமன்ற விவாதங்களில் நீங்கள் முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பங்கெடுத்துப் பேசுவது உரியவர்களால் கவனிக்கப்படுகிறதா?''
''மத்தவங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... ஆனா, டெல்லி அரசியல்வாதி களுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் உண்மைகள் அப்பட்டமாத் தெரியும். அதனால், அவங்க பார்வையில் எந்த மாற்றமும்இல்லை. நாடாளுமன்ற விவாதங்களில் தமிழக நலனை முன்னிறுத்தி நான் பேசும்போது, உரிய துறை அமைச்சர்கள் விளக்கம் கொடுக்கிறாங்க. ஆனால், தமிழகத்தின் நலனுக்காகப் பேசுறப்பகூட சபையே நடத்த முடியாத அளவுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் சத்தம் போடுறாங்க. இத்தனைக்கும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காகத்தான் நான் பேசினேன். அ.தி.மு.க-வினரின் பார்வையில் அதுவும் தப்பாத் தெரியுதோ என்னமோ?''  
''உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... 'டெசோ’ அமைப்பு நடத்தும் மாநாடு கருணாநிதியின் அரசியல் கணக்குதானே?''
''இலங்கைத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க-தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரலாறு. ராஜீவ் காந்தி படு கொலைக்குப் பிறகு, இலங்கை என்கிற வார்த்தையைச் சொல்லக்கூடப் பயந்து ஒளிஞ்சவங்க இப்போ தலைவர் கலைஞரை நோக்கி விரல் நீட்டிப் பேசுறாங்க. இலங்கைத் தமிழர்கள்குறித்துப் பேசுவதற்கான களமும் தளமும் திரும்ப அமைந்தது தி.மு.க. ஆட்சியில்தான். தலைவர் கலைஞர் எது செய்தாலும் குற்றம் சாட்டுபவர்கள், 'நான் ஆட்சிக்கு வந்தால், தமிழ் ஈழத்தை உருவாக்கிக் காட்டுவேன்’ என வாக்குறுதி கொடுத்தவர்களை ஏன் மறந்துட்டாங்க? 'போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்’னு மனசாட்சியே இல்லாமப் பேசினவங்களைக் கேள்வி கேட்க ஏன் ஆளே இல்லை? எல்லாப் பிரச்னைகளுக்கும் தலைவரை மட்டும் விமர்சிப்பவர்கள் கிட்ட, இப்போ ஆட்சியில் இருப்பது தலைவர் கலைஞர் இல்லைனு யாராவது எடுத்துச் சொன்னா நல்லா இருக்கும்.''
''ஆனால், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தி.மு.க. இன்றைக்குக் காட்டும் அக்கறையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் இருந்தபோதே காட்டி இருக்கலாமே?''
''ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. என்னங்க செய்யலை? போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும் பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கும் தலைவர் எவ்வளவு பாடுபட்டார்னு அந்த முயற்சிகளைப் பாழாக்கினவங்களுக்கு நல்லாத் தெரியும். தி.மு.க. மட்டுமே அத்தனை விமர்சனங்களுக்கும் பதில் சொல்லுதுங்கிற ஒரே காரணத்துக்காக, குறை கூறுவதை மட்டுமே முழு நேர வேலையா சிலர் வெச்சிருக்காங்க. இன்னைக்கு யார் வேணும்னாலும், 'பிரபாகரன் என்கிட்ட அதைச் சொன்னார்... இதைச் சொன்னார்’னு கற்பனைகளைப் பரப்பலாம். அதை எல்லாம் ஏன் அவங்க அன்னைக்கே சொல்லலை? போர் முடிந்த பிறகு, அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மூலமாகத்தான் அங்கு இருக்கும் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச நன்மையைக்கூடச் செய்ய முடியும். அந்த நோக்கத்தில் அவர்களைச் சந்திக்கப்போனால்... அதற்கும் அடுக்கடுக்காக விமர்சனங்கள். ஒருவேளை எங்களை மட்டுமே விமர்சிக்கிறவங்களுக்கு ஜெயலலிதாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவோ என்னவோ? இன்னைக்கும் இலங்கைத் தமிழர்கள் கஷ்டப்பட்டுட்டுத்தானே இருக்காங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கைக்கான உத்தரவாதம் அளிக்க ஜெயலலிதா என்ன செஞ்சாங்க? குறைந்தபட்சம் இதைப் பற்றி மத்திய அரசிடம் பேசக்கூட இல்லை. எந்தச் சூழலிலும் எதற்காகவும் ஜெயலலிதாவை விமர்சித்துவிடக் கூடாதுனு நினைக்கிறவங்கதான் தலைவர் கலைஞரை விமர்சிக்கிறாங்க. காரணம், கலைஞரை விமர்சிச்சா, பதில் வரும்... அம்மையாரை விமர்சிச்சா, வழக்கு வரும். இலங்கைத் தமிழர்களின் துயரங் களை யார் அரசியலாக்கினாலும் அது அநாகரிகம். இங்கே இருக்கிற தமிழர்களைக் கைதட்ட வெச்சாலோ, உசுப்பேத்தினாலோ அங்கே இருக்கிற தமிழர்களுக்கு எந்த நல்லதும் நடக்காது!''
'' 'டெசோ’ அமைப்பு மாநாட்டில் தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தப்போவது இல்லை என கருணாநிதி அறிவித்ததற்கு மத்திய அரசின் மிரட்டல் தான் காரணம் என்று சொல்கிறார்களே?''
''தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டுட்டதா கலைஞர் எப்பவுமே சொல்லலை. இலங்கைத் தமிழர்களுக்கான இப்போதைய தேவை... அடிப்படைஉரிமை களும் வாழ்வாதாரங்களும். அதுக்கு ஒரு தீர்வு கிடைச்ச பிறகே, தனி ஈழக் கோரிக்கை சாத்தியம். எதை எப்போ வலியுறுத்தணும்னு கலைஞருக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்சு 'டெசோ’ மாநாடுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாருமே தி.மு.க-கிட்ட பேசலை. மிரட்டலுக்குப் பின்வாங்கியதா சொல்வது கற்பனை.''
''அ.தி.மு.க. ஆட்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''
''தி.மு.க. தலைவர்கள் மேல் பொய் வழக்கு பதிவது, அதிகாரிகளையும் அமைச்சர்களையும் பந்தாடுவது தவிர, இங்கே வேற என்ன நடக்குது? தி.மு.க. கொண்டுவந்ததுங்கிற ஒரே காரணத்துக்காக மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் துறையை உரிய கவனிப்பு இல்லாமல் போட்டுவெச்சிருக்காங்க. தி.மு.க. மீதான கோபத்தில் மாற்றுத் திறனாளிகளைப் பழிவாங்குவது பாவம் இல்லையா? மெட்ரோ ரயில் தொடங்கி மதுரவாயல் திட்டம் வரைக்கும் எல்லாத்தையுமே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த ஒரே காரணத்துக்காக கிடப்பில் போடுறது என்ன நியாயம்? சென்னை முழுக்கவே குப்பைமேடாக மாறிக்கிடக்கே... அதுக்கு யார் பொறுப்பு? ஆனா, இது சம்பந்தமா எந்தக் கவலையும் இல்லாமல் கொடநாட்டில் ஓய்வெடுத்துட்டு இருக்காங்க ஜெயலலிதா. துக்ளக் ஆட்சியில் தலைநகரை மாத்துன காட்சிகள் இப்பவும் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை.''
''எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தின் செயல்பாடுகள்?''
''எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாத ஆட்சியாளர்களை வெச்சுக்கிட்டு எதிர்க் கட்சியும் என்னதான் பண்ண முடியும்? சட்ட மன்றமே அம்மா போற்றியில் ஆரம்பிச்சு திருவடி சரணத்தில் முடியுது. எதிர்க் கட்சியினரின் குரலுக்கு அங்கே மரியாதை யும் இல்லை; பதிலும் இல்லை.''
''நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தைத் தி.மு.க. கூட்டணிக்கு இழுக்கும் வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகின்றனவே?''
''தேர்தலுக்கு இன்னும் பல மாசங்கள் இருக்கு. கூட்டணி சம்பந்தமா முடிவு எடுக்கவும் உரியவங்ககிட்ட பேசவும் கட்சியில் சீனியர்கள் இருக்காங்க. அதை அவங்க பார்த்துப்பாங்க.''
''ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து உங்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறீர்களே... அது சாத்தியமா?''
''கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் நான் ஒரு பங்குதாரர் மட்டும்தான். அங்கே எடுக்கப்படுகிற எந்த முடிவுகளும் என்னைக் கலந்து ஆலோசிச்சு எடுக்கப்படுவது இல்லை. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் சம்பந்தப்பட்ட எந்தக் கூட்டத்திலும் நான் கலந்துக்கிட்டது இல்லை. பங்குதாரர் என்கிற வரையறையைத் தாண்டி எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த லாபமும் இல்லை. இது சம்பந்தமா நீதிமன்றத்தில் நான் சமர்ப்பிச்ச ஆதாரங்களின் அடிப்படையில்தான் என்னை விடுவிக்கும்படி கேட்டிருக்கேன்.''
''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நீங்கள் சாமர்த்தியமா சிக்கவைக்கப்பட்டு இருந்தால், அந்தப் பின்னணியை வெளிப்படையாகப் பேசலாமே?''
''இப்போதைக்கு வேணாமே! கலைஞர் தொலைக்காட்சிக்காக வாங்கப்பட்ட 200 கோடி ரூபாய் கடனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதை மட்டும் உறுதியாச் சொல்றேன்.''
''அழகிரி - ஸ்டாலின் இடையே மறுபடியும் மோதல்... நீங்கள் யார் பக்கம்?''
''எனக்கு மொத்தம் நாலு அண்ணன்கள். நாங்க அத்தனை பேருமே தலைவர் கலைஞர் பக்கம்.''
'' 'அழகிரி, ஸ்டாலின் வேண்டாம்... கனிமொழியைத் தலைமை பதவிக்குக் கொண்டுவாங்க’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லி இருக்கிறாரே?''
''அவர் எத்தனையோ தடவை என்னை விமர்சிச்சுப் பேசி இருக்கார். அப்போ எல்லாம் அவர்கிட்ட நான் எதுவும் கேட்டது இல்லை. ஆனா, இப்போ கேட்கணும்னு தோணுது... 'நான் உங்களுக்கு என்ன தீங்கு பண்ணேன் இளங்கோவன் சார்?’ ''
'' 'கட்சியில் முக்கியப் பதவியிலும் இல்லை... மத்திய அமைச்சரவையிலும் பொறுப்பு வகிக்கவில்லை... கனிமொழியை நம்பி இனி பலன் இல்லை’ என்று உங்கள் ஆதரவாளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும்?''
''மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பிடிச்சப்பவே, என் நலன் விரும்பிகள் என்னை வற்புறுத்தி னாங்க. ஆனா, அப்போ கட்சிக்கும் தலைவருக்கும் இருந்த இக்கட்டை உணர்ந்து பதவி வேண்டாம்னு முடிவெடுத்தேன். யாருக்கும் எப்பவும் நான் நெருக்கடி கொடுக்க மாட்டேன். கட்சி யில் என் வேலையைச் சரிவரச் செய்றேன். அதுக்கான அங்கீகாரம் பதவி மட்டும்தான்னு எனக்குத் தோணலை.''
''ஸ்பெக்ட்ரம் சர்ச்சைகளுக்குப் பிறகு, உங்களிடம் நட்பை முறித்துக்கொண்டவர்கள் யாரேனும் உண்டா?''
''இருக்கத்தானே செய்வாங்க? கட்சிக்காரங்க, உறவுக்காரங்கனு பிரிச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு மாமா, பெரியப்பானு பழகியவங்ககூட ஒரு கட்டத்தில் திடீர்னு கட்சியைவிட்டுப் பிரிஞ்சுபோனாங்க. எத்தனையோ வருஷமா தலைவருக்கு வண்டி ஓட்டிட்டு இருந்த டிரைவர் நடுரோட்ல வண்டியை நிறுத்திட்டு, 'எனக்குப் பயமாருக்கு’னு சொல்லிட்டு ஓடிப்போனார். தலைவருக்கே அந்த நிலைமைன்னா, நான் எல்லாம் எம்மாத்திரம்? ஆனா, என்னைவிட்டுப் பிரிஞ்சவங்களை நினைச்சு வருந் தும் நிலைமையில நான் இல்லை. யார் உண்மையான நண்பர்கள்னு தெரிஞ்சுக்க எனக்குக் கிடைச்ச ஒரு வாய்ப்பு இது.''
''இலக்கியவாதி கனிமொழி என்ன செய்கிறார்?''
''சுத்தி நடக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன். 'நாலு புத்தகங்களைக் கையில கொடுத்துட்டு, என்னை ஜெயில்ல போட்டாக்கூடக் கவலைப்பட மாட்டேன்’னு சின்ன வயசுல சொல்வேன். ஆனா, அதுவே நடக்கும்னு நினைக்கலை. நிறையப் படிச்சாலும், பல எண்ணங்கள் வந்து வந்து மோதினாலும் ஏனோ எழுதணும்னு தோணலை. சீக்கிரமே எழுதுவேன்னு நம்புறேன்.''
''சினிமா பார்க்க நேரம் கிடைக்கிறதா?''
''நேரம் கிடைக்கிறப்ப பார்ப்பேன். இப்போ 'அழகர்சாமியின் குதிரை’ ரொம்பப் பிடிச்சது. 'வாகை சூடவா’ அழகா இருந்தது. 'வழக்கு எண் 18/9’ பார்க்கணும்.''
''ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தி.மு.க-தான் அதிகமாகக் காயப்படுகிறது... கவனிக்கிறீர்களா?''
''கவனிக்கிறோம். ஆனா, நீங்களோ நானோ பட்டப்படிப்பை முடிச்சிருக் கோம்னா, அதுக்கான உழைப்பைக் கொட்டினது திராவிட இயக்கங்கள்தான். ஒரு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு உங்களோட எண்ணங்களை இறக்கிவைக்க முடியுதுன்னா... அதுக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது திராவிட இயக்கங்களின் வியர்வைதான். ஆரம்பத்தில் இணையத்தை நாங்க அசட்டையா அணு கியது உண்மைதான். ஆனா, இப்போ இயக்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கிறோம். ஆக்கபூர்வமா விவாதிக்கிறோம். எதிர்காலத்துல சமூக வலைதளங்கள் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் தளங்களா இருக்கும்.''
''ஏன்டா அரசியலுக்கு வந்தோம் என்று நினைக்கிறீர்களா?''
''நிச்சயமா இப்போ இல்லை. ஆனா, ஸ்பெக்ட்ரம் பரபரப்புகளுக்கு எல்லாம் ரொம்ப முன்னாடி அப்படி நினைச்சேன். அரசியல் நமக்குத் தேவையானு ரொம்ப ஆழமா யோசிச்சிருக்கேன். ஆனா, இத்தனை தூரம் சர்ச்சைகள், சங்கடங்கள் தாண்டி வந்த பிறகு, அப்படி ஓர் எண்ணம் எனக்கு ஏற்படலை. தெளிவான, உறுதியான அரசியல்வாதியா இப்போ இருக்கேன்... எப்பவும் இருப்பேன்!''

No comments:

Post a Comment