Monday, August 13, 2012

ஸ்பெக்ட்ரம் மறக்காமல் இருக்க செல்போன் தருகிறார்களா?


காங்கிரஸின் காலைச் சுற்றிய பாம்பு என்று செல்போனைத்தான் சொல்ல வேண்டும். மத்திய ஆட்சிக்கு ஊழல் முத்திரை குத்தக் காரணம் ஆனது செல்போன் அலைக்கற்றை பங்கீடு. இப்போது மீண்டும் அதே செல்போனைக் கையில் எடுத்துள்ளார்கள். இலவச செல்போன் கொடுத்து... அடுத்தும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிடு கிறது காங்கிரஸ்! 
'மானியங்களைக் குறைக்கவேண்டும்... இலவசங்களை ஒழிக்கவேண்டும்’ என்று மாநிலங்களுக்கு அறிவுரை கூறி வரும் மத்திய அரசு, 'ஒவ்வொரு கையிலும் ஒரு செல்போன்’ என்ற கோஷத்துடன் களம் இறங்குகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் 60 லட்சம் குடும்பங்களுக்கு மூன்று கோடிஇலவச செல்போன் வழங்க இருக்கும் மத்திய அரசு, இதற்கென 7,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது.
இந்தத் திட்டத்துக்கான செலவில் 50 சதவிகிதத்தை தொலைத் தொடர்புத் துறையின் உலகளாவிய சேவைப் பொறுப்புப் பிரிவும், மீதம் உள்ள 50 சதவிகிதச் செலவை இந்தத் திட்டத்தை ஏலத்தில் எடுத்து செயல்படுத்தும் செல்போன் நிறுவனமும் ஏற்கும் என்கிறார்கள். இலவச செல்போன் பெறும் ஒவ்வொருவருக்கும் மாதம் 200 நிமிடங்கள் இலவச அழைப்பு கொடுக்கப்படுமாம். இது தவிர பராமரிப்பு அல்லது டாக் டைம் வசதிக்காக 100 ரூபாய் கொடுக்கவும் திட்டம் இருக்கிறதாம். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையில் இந்தச் சாதனை(?) அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், நாடு முழுவதும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து நிற்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வான சௌந்தரராஜன், ''மத்திய அரசு இலவச செல்போன் வழங்கப்போகிறது என்ற செய்தியைக் கேட்டபோது, 'கும்பி கூழுக்கு அழுதபோது கொண்டை பூவுக்கு அழுததாம்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. முதலில் அனைவருக்கும்மின்சாரம் கொடுக்கட்டும் அதன் பிறகு செல்போனுக்குப் போகலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் 60 லட்சம் குடும்பங்கள்தான் நம் நாட்டில் இருக்கின்றன என்று அவர்கள் எடுத்த கணக்கே மிகப் பெரும் தவறு. நாளுக்கு நாள் இந்தியா வில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு செல்போன் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு முன் உணவுக்கு உத்தரவாதம் கொடுங்கள். வேலைக்கு உத்தரவாதம் கொடுங்கள்.
இன்று நம் நாட்டில் ஒரு வேளை உணவுக்கு எத்தனை பேர் அல்லாடு கிறார்கள் என்று பொருளாதாரப் புலிக்குத் தெரியாதா என்ன? இந்தியாவில் கழிவறைகளைவிட செல்போன்கள் அதிகம் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சொல்கிறது. ஏராளமான தாய்மார்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டே போகிறது. இதை எண்ணி வெட்கப்படுகிறேன் என்று இதே பிரதமர்தான் சொல்லி இருக்கிறார்.  முதலில் இவற்றைச் சரிசெய்யத்தானே நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். 7,000 கோடி வரிப் பணத்தை அடிப்படைத் தேவைகளுக்கு கொடுக்காமல், அம்பானிகளுக்குக் கொடுக்க நினைப்பதற்கு பேர் சாதனையல்ல... வேதனை'' என்றார் சீறலாக.
பி.எஸ்.என்.எல். தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி.கே.மதிவாணன், ''இப்படி ஒரு திட்டம் வந்தால் பி.எஸ்.என்.எல். ஊழியர் என்ற அடிப்படையில் நான் இதை வரவேற்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பதுதான் எனது கருத்து. முன்பு பஸ்வான் அமைச்சராக இருந்தபோது பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு மாத வாடகை இல்லாமல் தொலைபேசி என்று அறிவித்தார். அப்போது, 'பஸ்வான் ரயில்வே அமைச்சராக இருந்தால் டிரெயின் பெட்டி இலவசம், பாதுகாப்பு அமைச்சராக இருந்தால் பீரங்கி இலவசம்’ என்ற ரீதியில் பத்திரிகைகள் நக்கலடித்தன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு என்னென்ன விமர் சனங்களை சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை. மிஸ்டு கால் புகழ் இந்தியா இது. இலவச செல்போன் வாங்கியவர்கள் 200 நிமிடங்களுக்கு மேல் பேசாமல் போனால் நிச்சயம் சேவை தரும் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும். சில மாதங்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்ப முயற்சி செய்தது மத்திய அரசு. இப்போது அறிவிக்க உள்ள இந்தத் திட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். மூலம் இலவச அழைப்புகள் கொடுத்து, இறுதியில் எங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடக் கூடாது'' என்றார் உஷாராக.
''2014 நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டே இந்த மெகா திட்டத்தைக் கொண்டுவர காங்கிரஸ் ஆர்வம் காட்டுகிறது. கை சின்னத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில்தான் திட்டத்துக்கு, 'ஒவ்வொரு கையிலும் ஒரு செல் போன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் ஒரு செல்போன் விலை 1,500 ரூபாய் என்றால்கூட 4,500 கோடி ரூபாய்தான் செலவாகும். எதற்காக 7,000 கோடி என அதிகத் தொகை நிர்ணயித்து உள்ளார்கள் என்று சொல்லாமலேயே தெரிகிறது'' என்று பாரதிய ஜனதா இப்போதே கொந்தளிக்க ஆரம்பித்து உள்ளது.
''செல்போன் கொடுக்கட்டும்... ஸ்பெக்ட்ரம் ஊழலை மீண்டும் சொல்லிக்காட்ட இது நல்ல வழி'' என்று எதிர்க் கட்சிகள் கிண்டல் அடிக்க ஆரம்பித்து உள்ளன.
தேர்தல் காய்ச்சல் தொடங்கிவிட்டது. இனி, டிரிங் டிரிங்தான்.

No comments:

Post a Comment