Wednesday, August 22, 2012

தமிழகத்தை மிரட்டிய இரண்டு வதந்'தீ'கள்!


டந்த வாரம் சென்னையை இரண்டு வதந்திகள் புரட்டிப் போட்டன. முதல் வதந்தியால் சென்னை சென்ட்​ரல் ரயில் நிலையமும், இரண்டாவது வதந்தியால் அரசு மருத்துவமனைகளும் அல்லோலகல்லோலப் பட்டன. 
வெடிக்காத கலவரம்: அஸ்ஸாம் மாநிலத்​தின் பூர்வகுடிகளுக்கும், அங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் கலவரத்தை மையப்படுத்தி நாடெங்கும் பரவிய வதந்தி, சென்னையையும் தொற்றிக்கொண்டது. செல்போனில் எஸ்.எம்.எஸ்-களாகவும் இணையத்தில் படக்காட்சி​களாகவும் வந்த தகவல்கள் அனைத்தும், ஒவ்வொரு மாநிலத்திலும் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பீதியைக் கிளப்பியது. இது உண்மையா, பொய்யா என்று யோசிக்கக் கூட அவகாசம் தராமல், வேகவேகமாகப் பரவிய வதந்தியால், வடமாநிலத்தவர்கள் பயந்துபோய் கும்பல் கும்பலாக சொந்த ஊருக்கு மூட்டை கட்டினர்.
மும்பையில் தொடங்கிய இந்தப் பிரச்னை பீகார், ஹைதராபாத் வழியாக பெங்களூருவில் நுழைந்து தமிழகத்திலும் பரவியது. இதையடுத்து சென்னையில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குச் செல்லும் கவுகாத்தி ரயிலில் பயணம் செய்வதற்கு, ஆயிரக்கணக்கில் குவிய ஆரம்பித்தனர். சுற்று மாநிலங்கள் அனைத்தையும் சேர்த்து தெற்கு ரயில்வே சொல்லும் புள்ளிவிவரப்படி ஒரு மணி நேரத்தில் 9,700 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாம். அரசு சுதாரிப்பதற்குள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் கொத்துக் கொத்தாக வடமாநில இளைஞர்கள் குவிந்து​விட்டனர். ரயிலில் இடம் பிடிப்பதில் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்ட பிறகே பிரச்னையின் முழுவீரியத்தையும் உணர்ந்தது ரயில்வே நிர் வாகம். ரயில்வே போலீஸார் அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்தும், உயிர் மீது இருந்த பயம் மற்றும் கலக்கம் ரயில்வே போலீஸாரின் முயற்சிகளை முறியடித்தன. அவர்களை ஒழுங்குப்​படுத்தி ரயிலில் ஏற்றி அனுப்பி வைப்பதைத் தவிர போலீஸுக்கு வேறு வழி இல்லை.
மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரயிலில் இடம்பிடிக்க வரிசையில் நின்ற முனய் கோகுலிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில் எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இங்குள்ள அனைவரும் எங்களை பாசத்துடனும் மரியாதையுடனும் நடத்துகிறார்கள். ஆனால், ஆந்திராவில் எங்கள் ஆட்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. கேரளாவிலும் தாக்குதல் ஆரம்ப​மாகி விட்டது. தமிழ்நாட்டிலும் அந்த நிலை ஏற்படுவதற்கு முன், ஊருக்குச் சென்றுவிடலாம் என்று நினைக்கிறோம். எங்கள் உறவினர்களும் பெற்றோரும் உடனே கிளம்பி வரும்படி வற்புறுத்துகின்றனர். அங்கு அவர்கள் மிகவும் பயந்து போய் உள்ளனர். அதனால்தான் நாங்கள் போகிறோம். திரும்பி வருவோமா, இல்லை​யா என்று தெரியாது'' என்றார் வருத்தத்​துடன்.
கடந்த 18-ம் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸில் கூடுதலாக ஆறு பெட்டிகள் இணைக்க வேண்டிய அளவுக்கு வடமாநிலத்தவர்களின் கூட்டம் அலைமோதியது. பிரச்னையின் தீவிரத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். காவல் துறை சார்பில் வட மாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டு, செல்போனில் குருப் எஸ்.எம்.எஸ்-களுக்கு கட்டுப் பாடும் கொண்டு வரப்பட்டது. தற்காலிகமாகப் பிரச்னை ஓய்ந்து இருக்கிறது. ஆனால், மீண்டும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தைத் தங்களுக்குப் பாதுகாப்பான இடமாகக் கருதுவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகத்தான் செய்யும்!
மிரட்டிய மெஹந்தி: ரம்ஜான் பண்டிகைக்கு முதல்நாள் நள்ளிரவு, கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது. 'ரம்ஜான் பண்டிகைக்​காக தங்களை மெஹந்தியால் அலங்கரித்துக்கொண்ட சில முஸ்லிம் பெண்களுக்கு கை, கால்களில் எரிச்சல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற் பட்ட அரிப்பால் அவர்களின் கை, கால்கள் வீங்கி விட்டன’ என்று சொல்லப்பட்டது. இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும், மெஹந்தி வைத்துக்கொண்ட பலரும் மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
கிருஷ்ணகிரியில் தொடங்கிய இந்த வதந்தி, சென்னை வந்து சேரும்போது மெஹந்தி வைத்துக்கொண்ட எட்டு பெண்கள் விஷம் பரவி இறந்து விட்டதாகச் சொல்லப்பட்டது.
அவ்வளவுதான்... சென்னையில் உள்ள முஸ்லிம் மக்களிடம் ரம்ஜான் குதூகலம் காணமால் போய், மெஹந்தி பயம் பற்றிக்கொண்டது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பாரிமுனை, மண்ணடி பகுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு கும்பல் கும்பலாகக் கூடிய பெண்கள், கைகளில் வைத்திருந்த மெஹந்திகளை அவசர அவசரமாகக் கழுவியதோடு, மெஹந்தி வைத்த குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குப் படையெடுத்தனர். திருவல்லிக்கேணி பை கிராஃப்ட்ஸ் சாலையில் கூடிய சிலர், 'விஷத் தன்மை உள்ள மெஹந்தியை விற்றவர்களைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று மறியலில் ஈடுபட்டனர்.
மெஹந்தி விவகாரம் பற்றி ராயப்பேட்டை மருத்துவமனை டீன் குணசேகரனிடம் கேட்டோம். ''செயற்கையாகத் தயாரிக்கப்படும் மெஹந்திகளில் கூழ்மத்தன்மை நீடித்து இருப்பதற்காக, சில வேதிப்பொருட்களைக் கலக்கின்றனர். அது சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. லேசான எரிச்சலும் அரிப்பும் ஏற்படும். மற்றபடி, பயப்படும்படி எதுவும் நிகழாது. சம்பவத்தன்று ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். அனைவருக்கும் உரிய தடுப்பூசி போட்டு, மாத்திரைகள் வழங்கினோம்'' என்றார்.
ஒரு சிலருக்கு ஏற்பட்ட அலர்ஜியால், தமிழகமே அலறிப் போன சம்பவம் இனியாவது நடக்காமல் இருக்கட்டும்.

No comments:

Post a Comment