சட்டசபைக்கும் விஜயகாந்த்துக்கும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் கையை ஓங்கி, நாக்கைத் துருத்தி அனலைக் கிளப்பிய விஜயகாந்த்துக்கு, கூட்டத்தொடரில் கலந்துகொள்ள 10 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார் சபாநாயகர். அந்தப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போது விஜயகாந்த் சட்டசபைக்குப் போவதற்கே ஆப்பு அடிக்கும் வகையில் ஜெயந்தி என்பவர் ஒரு வழக்கைத் தொடுத்துள்ளார்.
விஜயகாந்த் வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தவர்தான் ஜெயந்தி. ஆனால், இவருடைய மனுவை, தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துவிட்டார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். வழக்கறிஞர் இல்லாமல், தானே ஆஜராகி வாதாடும் ஜெயந்தியைத் தொடர்பு கொண்டோம்.
''விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தேன். தேர்தல் அதிகாரி வாசுதேவன் என் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார். காரணம் கேட்டபோது, 'என்னை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட வரிசை எண்ணில் இல்லை என்பதால் மனு செல்லாது’ என்று கூறினார். அதை சரிசெய்து மனுவைக் கொண்டுவர நான் அவகாசம் கேட்டேன். அதற்கு தேர்தல் விதிமுறையிலும் இடம் உள்ளதையும் குறிப்பிட்டேன். ஆனால், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், 'நீ சொல்வதை எல்லாம் நான் கேட்க முடியாது. உன்னுடைய மனு தள்ளுபடி ஆகிவிட்டது. நீ தேர்தலில் போட்டியிட முடியாது. உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்’ என்று கூறிவிட்டார்.
நான் உடனே சென்னைக்கு வந்து, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரைச் சந்தித்து முறையிட்டேன். அவர், 'தேர்தல் வழக்குப் போட்டுக்கொள்ளுங்கள். இப்போதைக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார். அதனால்தான், விதிமுறைகளை மீறி நடந்த அந்தத் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடுத்துள்ளேன்'' என்றார்.
இந்த வழக்கால் விஜயகாந்த்தின் பதவிக்கு எப்படி சிக்கல் வரும் என்று நினைப்பவர்கள், அண்மையில் வெளியான இளையான்குடி சட்டசபைத் தேர்தல் வழக்கையும், அதில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அறிந்து கொள்ளவேண்டும்.
2006-ம் ஆண்டு இளையான்குடித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன், அ.தி.மு.க-வுக்குச் செல்வதற்காக தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால் 2009-ம் ஆண்டு, இளையான்குடித் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் தி.மு.க. சார்பில் மதியரசன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். ஆனால், அந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின்போது, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் கலைமணியும் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட வரிசையில் இல்லை என்று கூறி கலைமணியின் வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துவிட்டார். (ஜெயந்திக்குச் சொல்லப்பட்ட அதே காரணம்) அப்போது வாக்காளர் பட்டியலில் தன்னை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் இருப்பதைப் பார்த்தார் கலைமணி. ஆனால், வரிசை எண்கள் மட்டும் மாறி இருந்தன. அது வாக்காளர் பட்டியல் அச்சிடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்பதால், அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இளையான்குடி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் செல்லாது’ என்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. நீதிபதி வீ.தனபாலன் இந்தத் தீர்ப்பை வழங்கியபோது, ''ஒரு வேட்பாளரின் மனுவில் உள்ள எழுத்துப் பிழைகள், வரிசை எண் பிழைகள் போன்றவற்றை தேர்தல் அதிகாரி சரிசெய்ய வேண்டும். மேலும், அவற்றை சரிசெய்வதற்கான கால அவகாசத்தை வேட்பாளருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், இளையான்குடி தொகுதியில் பணியாற்றிய தேர்தல் அதிகாரி, இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், வேட்பாளரின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார். இது முற்றிலும் தவறு. இந்த தவறும் விதிமுறை மீறலும் உடனடியாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனது கடமையில் இருந்து தவறி உள்ளார். எனவே, இளையான்குடி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் செல்லாது'' என்று சொல்லி இருந்தார்.
இப்போது, ஜெயந்தி தொடந்துள்ள வழக்கும், இதே பிரச்னையின் அடிப்படையில் தொடரப்பட்டது தான். ஆனால், பிரச்னைக்கு உரிய ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் விஜயகாந்த்துக்கோ, அவருடைய கட்சியின் சட்ட அணியினருக்கோ இந்த வழக்கின் தீவிரம் புரியவில்லை. அதனால்தான், 'ஜெயந்தியின் மனுவை விசாரணைக்கே எடுக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று விஜயகாந்த் தரப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். விஜயகாந்த்தின் அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அடுத்த மாதம், ஜெயந்தி வழக்கு மீதான விசாரணை தொடங்க உள்ளது. அப்போது, இளையான்குடி தொகுதித் தேர்தல் வழக்கை முன்உதாரணம் காட்டி, ரிஷிவந்தியம் தேர்தலும் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், விஜயகாந்த்தின் எம்.எல்.ஏ. பதவியும்... எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகும்!
என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?
No comments:
Post a Comment