கால் நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிய உலகிலும் கலை உலகிலும் பவனி வருபவர்.
அரசியல் புயல், திரையுலகின் காலமாற்ற வெள்ளம் எதற்கும் சல்லி வேரில் கூட சலசலப்புக் காட்டாத காட்டு மரம், இந்தப் பாட்டு மரம்.
திரைத்தமிழில் சத்து குறையும் போதெல்லாம் தன் பைந்தமிழால் பச்சையம் தயாரித்துத் தரும் பாட்டு வைத்தியர்.
யாரையும் பாதிக்காமலும், யாருடைய பாதிப்பிற்கும் ஆளாகாமலும் இத்தனை காலம் ஒரு தனிப்பயணம் மேற்கொண்டிருக்கும் இவர் திரையுலகின் தனித்த அடையாளம்.
ரஜினியின் ‘கோச்சடையான்’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, பாரதிராஜாவின் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’, மணிரத்னத்தின் ‘கடல்’, செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படங்களுக்குப் பாடல் எழுதும் பணியில் பரபரப்பாக இருந்தவரை சந்தித்துப் பேசினோம்.
இந்த ஆண்டு நிறையப் படங்கள் ஒப்புக் கொண்டு திரைத்துறையில் தீவிரமாக இருக்கிறீர்களே... அதுபற்றி?
‘‘கடந்த சில ஆண்டுகளாக திரைத் துறையில் என்னை முழுமையாய் ஒப்படைக்க முடியவில்லை. காரணம், என் தனிவாழ்வுக் கடமைகள்.
தனிவாழ்வுக் கடமைகளை நிறைவேற்றும் பொழுதுதான் ஒருவன் பொதுவாழ்விலும் பூரணம் பெறுகிறான். அந்தவகையில் கடந்த ஐந்தாண்டுகள் எனக்குக் கடமையாண்டுக ளாய் அமைந்துவிட்டன.
இரண்டு பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வித்தேன். சிறுகச் சிறுகச் சேர்த்து எழுத்துச் சூழலுக்கு ஏற்ப ஒரு வீடு கட்டினேன். அத்துடன் ‘ஆயிரம் பாடல்கள்’ தொகு த்தேன். பாரங்கள் மெல்ல மெல்ல இறங்கிய ஒரு பரவசம் என் நெஞ்சில் நிலவுகிறது. உடம்பும் மனசும் ஒரே புள்ளியில் இயங்குகின்றன. இளமை தீருவதற்குள் அனுபவ த்தைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது காலம். படைக்கும் ஆசை கனலாய் நெஞ்சில் கனிந்து கொண்டே இருக்கிறது. திரைப்பாட்டுக்கு முன்னுரிமையென்று தீர்மானித்தி ருக்கிறேன் இந்த ஆண்டை.’’
இத்தனை பாடல்கள் எழுதிக் குவித்துவிட்டீர்கள். எப்போதாவது போதும் என்ற நினைப்பு வந்ததுண்டா?
‘‘உண்டு முடித்ததும் போதும் என்று சொல்கிறோம்; மீண்டும் பசிக்கிறது.
அருந்தி முடித்ததும் போதும் என்று சொல்கிறோம்; மீண்டும் தாகமெடுக்கிறது. பசி போன்றது, தாகம் போன்றது படைப்பாற்றலும்.
ஒரே நேரத்தில் ஐந்தாறுபேர் நெருக்கடி தரும்போது, போதும் என்று தோன்றும். கொஞ்சம் ஓய் வெடுத்ததும் மீண்டும் படைப்பு துடிக்கும்.
இதைவிட்டால் எனக்கு வேறு என்ன தெரியும்?
என் சமகால சமூகத்தை உற்சாகத்தோடும் உணர்ச்சியோடும் பேணுவதற்கு எனக்கொரு பெரும் பொருளாகத் தமிழ் வாய்த்திருக்கிறது. என் கடன் தமிழ் செய்துகிடப்பதே என்று காலம் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறது.
எழுதிக் கொண்டேயிருப்பேன் படைப்பாற்றலின் கடைசிச் சுடர் அணையும் வரை; அல்லது என்னைத் தாண்டும் ஒருவன் வரும்வரை.
வரட்டும்; வருவான் ஒருவன். அல்லது வரவேண்டும் ஒருவன்.’’
புதிய இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்கள் வருகை குறித்து?
‘‘எண்ணிக்கை என்னவோ மலைப்பாகத்தானிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சற்றேறக்குறைய 90 இசையமைப்பாளர்களும் 60 பாடலாசிரியர்களும் தமிழ்த் திரையில் இயங்கியிருக்கிறார்கள். சில நல்ல பாடல்களையும் கேட்கமுடிந்தது. ஆனால் Trend setter என்று சொல்லப்படும் தடம் அமைத்தவர்கள் இதில் யார் என்ற கேள்விக்குப் பெரிதாக பதில் இல்லை.
உணர்ச்சியை இட்டு நிரப்பும் கலையாக இசையும் மொழியும் இருந்தது போய், ஓசைகளின் பள்ளத்தாக்கை நிரப்பும் பொருளாகப் பாடல் அமைந்துவிடுகிறதோ என்ற அச்சம் எழுகிறது. கலை என்பது தாயின் மார்பில் சுரக்கும் பாலாக மணக்கவேண்டும்; எந்திரத்தின் இடுக்கில் கசியும் எண்ணெய்யாக இருந்துவிடக்கூடாது.’’
அண்மையில் எழுதிய பாடல்களில் நீங்கள் மிகவும் ரசித்த பாட்டு?
‘‘இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படம் ‘கடல்’. அந்தப் படத்தின் பாடல்களுக்காக ஏ.ஆர்.ரகுமானிடம் எனது ‘வைரமுத்து கவிதைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளைத் தந்து இசையமைக்கச் செய்திருக்கிறார். அதில் இருகுரலிசைப் பாடலைக் கேட்டு மெய்மறந்து போனேன். கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த சிறந்த பத்துப் பாடல்களில் அதுவும் ஒன்று என்று சொல்லலாம்.’’
திரைத்துறையில் நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள்?
‘‘மொத்தப் படத்தின் பாடல்களையும் என்னை நம்பி ஒப்படைக்கும் இயக்குநர்களை. எல்லா வரிகளிலும் திருத்தம் கேட்காத இசையமைப்பாளர்களை. என்னை மதித்து மெய்யன்பு செலுத்தும் தயாரிப்பு நிறுவனங்களை. வாக்குத் தவறாத தயாரிப்பாளர்களை.
மொத்தப் பாடல்கள் எழுதும் படத்தோடு எனக்கொரு பந்தம் நேர்ந்துவிடுகிறது. பாத்திரங்களோடு என் பாடலும் பயணப்படுகிறது. அதன் முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எனக்கு அதிக அக்கறை தோன்றுகிறது.’’
கவிதை பாடல் நாவல் என்று தமிழிலக்கியத்தில் ஓர் உயரத்தைத் தொட்டுவிட்டீர்கள்; மொழி எல்லையை எப்போது கடக்கப் போகிறீர்கள்?
‘‘இந்த நல்ல கேள்வியை நான் ரசிக்கிறேன். தமிழ் இலக்கியச் சூழலில் மொழி எல்லைகளைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ‘கவிப்பேரரசு’ என்று நீங்களெல்லாம் கொண்டாடுகிறீர்கள். ஆனால் சென்னையிலேயே எனக்கு நேர்ந்த ஓர் இலக்கிய அவமானத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டால் தவிர, எல்லை கடக்க முடியாது. மொழிபெயர்க்கப்படுவதுகூட முக்கியமில்லை. உலகச் சந்தையில் உரிய இடத்தில் பரவச் செய்வதற்கு சர்வதேசப் பதிப்பு நிறுவனங்கள் தேவை. நானும் பதிப்பகங்கள் தேடியலைந்தேன். கடைசியில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘வைரமுத்து கவிதைகள்’ இந்த மூன்றையும் மொழிபெயர்ப்பதற்கு “Oxford University Press” இன் லண்டன் தலைமையகத்தில் அனுமதி பெறப்பட்டது.
முதலில் “கள்ளிக்காட்டு இதிகாசத்தை எடுத்துக் கொண்டோம். மொழிபெயர்ப்புப் பிரிவின் தலைவர் மினிகிருஷ்ணன் அற்புதமான ஆங்கிலப் புலமையாளர். ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் வாழ்க்கையையும் வட்டார வழக்கையும் அவர் முற்றும் அறியாதவர். மொழிபெயர்ப்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை எனக்குத்தர அவர் மறுத்துவிட்டார். அவர் அந்த மொழிபெயர்ப்புப் பணியை ஒரு பெண்மணியிடம் ஒப்படைத்தார். அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர்; டெல்லியில் வளர்ந்தவர். கிராம வாழ்க்கை பற்றிய அனுபவஞானம் அற்றவர்; அவர் மொழிபெயர்ப்பில் வார்த்தை இருந்தது; வாழ்க்கை இல்லை. கள்ளிக்காட்டு இதிகாசத்தின் உள்ளார்ந்த உயிர் அதில் இல்லை. ஏழெட்டுமுறை சந்தித்தோம். ஒவ்வொரு சந்திப்பும் சூடான விவாதங்களில் முடிந்தது. மொழிபெயர்ப்பாளரை மாற்றுங்கள் என்றேன்; அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
மொழிபெயர்ப்பை மேம்படுத்துவதற்கு ஒரு வல்லுனர்குழு அமைத்துத் தருகிறேன் என்றேன். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. ஒரு அத்தியாயம் முடிப்பதற்குச் சில மாதங்கள் எடுத்துக்கொண்டார் அந்த அம்மையார். மொத்த மொழிபெயர்ப்பும் முடிவதற்குச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் சொன்னார். மொழிபெயர்ப்பில் நேர்த்தியும் இல்லை; காலக்கெடுவில் நேர்மையும் இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்; ஒரு நாள் தொலைபேசியில் அவரை அழைத்து ‘ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுங்கள்; நன்றி’ என்று சொல்லிவிட்டேன். கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பேயத்தேவரை நான் சாகடித்தேன்; ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி என்னைச் சாகடித்தது. எப்படித் தமிழை உலகமெல்லாம் கொண்டு செல்வது? தமிழ்நாட்டிலேயே தடை தமிழ் இலக்கியத்திற்கு.’’
அரசியலும் சினிமாவும் தமிழ்நாட்டில் பின்னிப்பிணைந்து கிடக்கிறதே... எப்படி நீங்கள் எல்லைகட்டிக் கொள்கிறீர்கள்?
‘‘இரண்டும் இரு வேறு துறைகள். இரண்டுக்கும் தனித் தனி ஆளுமைகள் தேவைப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒன்று இன்னொன்றால் இயங்குகிறது.கொஞ்சம் விழிப்பாக இல்லை என்றால் ஒன்று இன்னொன்றை வீழ்த்திவிடும்.இரண்டிலும் பயன்பெற்றவர்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.
எனக்கு நடிகர் வடிவேலுவை நினைத்தால் இரக்கமே வருகிறது. அவர் ஒரு தொழில்முறை அரசியல்வாதி அல்லர். ஒரு சந்தர்ப்பத்தால் பிரசாரத்திற்குச் சென்றார் என்பது உண்மை. அவரது பிரசாரம் சிலரைக் காயப்படுத்தியதும் உண்மை. அதற்காகத் திரையுலகம் அவரை இவ்வளவு கடுமையாகத் தண்டிக்க வேண்டாம்.
வடிவேலு ஒரு பிறவிக் கலைஞன். உலக நடிகர்களுக்கு இணையானது அவர் உடல்மொழி. வட்டார வழக்கறிந்த மண்ணின் கலைஞன். அவரைத் திரையுலகம் மீண்டும் முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் நடிக்கவில்லையென்றால் நட்டம் அவருக்கல்ல; நமக்குத்தான்.
அவர் மீண்டும் நடிக்க வந்தால் இப்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வடிவேலுவின் நகைச்சுவை உலகம் தனித்து இயங்குவது.
முதலமைச்சரோ நண்பர் விஜயகாந்தோ நிச்சயமாக அவருக்குத் தடைவிதித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
படத் தயாரிப்பாளர்கள் அவரை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடிவேலுவும் தயாரிப்பாளர்களின் பொருளாதாரம் அறிந்து ஒத்துழைக்க வேண்டும்.’’
நல்ல பாடல்கள் பெரிய படங்களுக்குத்தான் அமையுமா? சிறிய படங்களுக்கு அமையாதா?
‘‘ஒரு படம் பெரியதா சிறியதா என்பதைப் படம் வெளிவந்த பிறகுதான் தீர்மானிக்க முடியும். எழுதும்போது எனக்கு எந்த பேதமும் இல்லை. உதயநிதி தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கும் ‘நீர்ப்பறவை’ பொருளாதார ரீதியாகச் சிறிய படம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதன் ஐந்து பாடல்களும் பெரிய படங்களைத் தாண்டிப் பேசப்படவிருக்கிறது.
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’’
அண்மையில் மகிழ்ந்த செய்தி...?
‘‘என் இளைய மருமகள் டாக்டர் ரம்யா கபிலன் கருவுற்றிருக்கிறார். இந்த ஆண்டு மறுபடியும் தாத்தாவாகிறேன்.
நேற்றுதான் நான் கல்லூரிப் படிப்பை முடித்த மாதிரி தோன்றுகிறது ஆனால் கால்களில் சக்கரம் கட்டிக் காலம் விரைகிறது.’’.
No comments:
Post a Comment