Wednesday, February 8, 2012

எனது இந்தியா! ( ஊழல் நாயகன் கிளைவ்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ந்திய வரலாற்றில் எல்லாவற்றுக்குமே உதாரணங்கள் இருக்கின்றன. ஊடகங்களால் இன்று பரபரப்பாக பேசப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதாகத் தோன்றியவை அல்ல. அதற்கும் பல முன்னோடிகள் இருக்கிறார்கள். அந்த முன்னோடிகளில் இருவர் தனித்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர், கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் நிலைபெறச் செய்த நாயகன் என்று கொண்டாடப்படும் ராபர்ட் கிளைவ்.மற்றொருவர், கிளைவ்-வின் சமகாலத்தில் புதுச்சேரியை ஆண்ட துய்ப்பிளக்ஸின் மனைவி ழான். தன் கணவனுக்கு இணையாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பணத்தைப் பிடுங்கியவர் ழான். கையூட்டுப் பெறுவதில் ஆண், பெண் என்ற பேதமென்ன இருக்கிறது? பேராசை என்பது பொதுவான குணம்தானே!அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெரும்பணம் சேர்த்து விட்டார் என்று, துய்ப்பிளக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான நீதி விசாரணைகள் கூட நடந்தன. இந்தியர்களின் பணத்தை உறிஞ்சி வாழ்ந்தவர் துய்ப்பிளக்ஸின் மனைவி ழான் என்று பகிரங்கமாகவே ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குற்றம் சாட்டி இருக்கிறார்.வரலாற்றின் துடைக்கப்பட முடியாத கறை போல படிந்துவிட்ட இந்த இருவரது வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்ப்பதன் வழியே, இந்தியா எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக உணர முடியும்.


1774-ம் ஆண்டு தனது 49-ம் வயதில் இங்கிலாந்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட தற்கொலை செய்து கொண்டு செத்துப்போனார் ராபர்ட் கிளைவ். தீவிரமான மனச்சிதைவு மற்றும் பித்தப்பைக் கோளாறு காரணமாக அவதிப்பட்ட ராபர்ட் கிளைவ், தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுக் கொண்டிருந்தார். அது, நரம்புத் தளர்ச்சியை அதிகமாக்கியது. அவரால் யாருடனும் பேச முடியவில்லை. வலியும் வேதனையும் மிதமிஞ்சிய கோபத்தையே உருவாக்கியது. அழுது கதறியதோடு தன்னைக் கொன்று விடும்படி நாளெல்லாம் கத்திக்கொண்டே இருந்தார்.17 வயதில் இந்தியாவுக்குச் சாதாரண கிளர்க் வேலைக்கு வந்து முப்பது வயதுக்குள் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் பதவிகளை வகித்து, லட்சக்கணக்கில் பணத்தையும் வைரங்களையும் இந்தியாவில் கொள்ளையடித்து, அதன்பிறகு இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகி பேரும் புகழும் அடைந்தார் கிளைவ். அதிகாரத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டுகளில் சிக்கி விசாரிக்கப்பட்டு, மறுபடியும் பதவி கிடைத்த கிளைவின் வாழ்வு புறக்கணிக்கப்பட்ட ஒரு அநாதையின் கதியைப் போல முடிந்து போனது.இந்தியாவைச் சுரண்டிக் கொள்ளை அடித்த துரோகத்துக்கான விலையைத் தந்ததுபோல, கிளைவ் தன் சாவைத் தானே தேடிக்கொண்டார். அப்படித்தான் நடக்கும் என்கிறது நீதிநெறி.அதேபோல, புதுச்சேரியின் கவர்னராக இருந்த தன் கணவனின் பதவியைப் பயன்படுத்தி ஊரையே வளைத்துப் போட்டார் மேடம் துய்ப்பிளக்ஸ். அன்றைய பிரான்ஸ் ஆட்சியில் முக்கியப் பதவிகள் எல்லாமும் பகிரங்கமாகவே லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டன. துய்ப்பிளக்ஸ் மனைவி ழான், லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடந்தார். கணவன் கப்பல் வணிகத்தில் சம்பாதித்த பணத்தை விட அதிகமாக, ழான் கையூட்டு பெற்று பணம் சம்பாதித்து வந்தாள் என்கிறது வரலாறு. துய்ப்பிளக்ஸ் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, விசாரணைக் கைதியாகப் பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரோடு ழானும் பிரான்ஸ் சென்றாள்.

அங்கே, பதவியை இழந்து வறுமையும் நோய்மையும் ஒன்று சேர தனது கடந்தகால நினைவுகளில் மூழ்கித் தவித்த ழான், எப்படியாவது புதுச்சேரிக்குப் போக வேண்டும் என்ற கடைசி ஆசை நிறைவேறாமலேயே இறந்து போய்விட்டாள். பன்னிரெண்டு குழந்தைகளின் தாயான ழான், புதுச்சேரி வரலாற்றில் அதிகம் கையூட்டு பெற்ற முதல்பெண் என்ற களங்கத்துடன் சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பெற்றிருக்கிறாள். ழானைப் பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் மிகவும் நுட்பமாக ஆராய்ந்து தனது கட்டுரை ஒன்றில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு முக்கிய தகவல் இடம்பெற்றுள்ளது. புதுச்சேரியின் கோர்த்தியேவாக, மிகமுக்கிய அரசுப் பொறுப்பில் இருந்த கனகராயமுதலி, இறந்து போகிறார். ஏற்கெனவே, துணை கோர்த்தியேவாகவும் துபாஷியாகவும் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளைக்கே அந்தப் பதவி போய்ச்சேரும் என்றே அரசியல் வட்டாரம் நினைத்தது. இதற்கு ஊடாக, அன்னபூர்ண ஐயன் என்கிற வைத்தியன், ழானைச் சந்திக்கிறான். அவளுக்கு 1500 வராகனும் (1 வராகன் 3 ரூபாய்), குவர்னருக்கு 5000 வராகனும் தருவதாகவும் கூறி, அந்தப் பதவி தனக்கு வேண்டும் என்கிறான். கனகராய முதலியின் தம்பி சின்ன முதலியும் அந்தப் பதவிக்குப் பணம் தரத் தயாராகிறான்.ழான், மிக புத்திசாலித்தனமாக யோசிக்கிறாள். பதவியின் 'விலை’யை ஆனந்தரங்கப் பிள்ளையிடம் பேரம் பேசி மிரட்டி இருக்கிறாள். அதைப்பற்றிக் குறிப்பிடும் ஆனந்தரங்கம் பிள்ளை, 'காசு சத்தம் கேட்டால்மாத்திரமே அம்மாள் வாயைத் திறக்கிறாள்’ என்று தன் டைரியில் எழுதி இருக்கிறார்.குவர்னர் துரை லஞ்சம் வாங்கலாம். துரைசானி லஞ்சம் வாங்கக் கூடாதா என்பது ழானின் கேள்வியாக இருந்தது. பதவியைப் பயன்படுத்தி சுயலாபங்களைப் பெருக்கிக் கொள்வது அரசியல் உலகெங்கும் ஒன்று போலவே இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, கிழக்கிந்தியக் கம்பெனி போன்ற வணிக நிறுவனத்தின் வழியே ஆட்சியைக் கைப்பற்றிய பெரும்பான்மையான கவர்னர்கள், கம்பெனியை பயன்படுத்தி தங்களது செல்வத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். குறிப்பாக, இந்தியாவில் இருந்து பருத்தி, வாசனைப் பொருட்கள், சணல் என்று முக்கிய வணிகப் பொருட்களை தாங்களே அடிமாட்டு விலைக்கு வாங்கி அதை கம்பெனியின் கப்பலிலேயே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர். கம்பெனி கமிஷன் போக மிச்சப்பணத்தை தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள்.

அப்படி, கிழக்கிந்தியக் கம்பெனி உயரதிகாரிகள் நடந்து கொள்வதற்கு கம்பெனி நிர்வாகத்துக்குள்ளேயே லஞ்சப் பெருச்சாளிகள் இருந்ததுதான் காரணம். அவர்களும் கையூட்டு வாங்கிக் கொண்டு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. அதுபோலவே, தன் அதிகாரத்துக்கு உட்பட்ட நிலப்பிரபுக்கள், நவாப்புக்களிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர்கள் பெற்ற லஞ்சப் பணமும் நகைகளும் வைரங்களும் ஏராளம்.ராபர்ட் கிளைவ், இங்கிலாந்தின் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர். அத்தை வீட்டில் பால பருவத்தைக் கழித்த கிளைவ் பதின்வயதுகளிலே வீட்டுக்கு அடங்காதவராகத் திரிந்தார். குறிப்பாக, பொறுக்கியாகத் திரிந்த பையன்களை தன்னோடு சேர்த்துக் கொண்டு டிரைட்டன் சந்தைப் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் வசூலித்தார் கிளைவ் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.தனக்கு மாமூல் கொடுக்காத கடைகள் மீது சேற்றை வாரி வீசுவதும், கடையின் கண்ணாடியை உடைப்பதும் கிளைவ்வின் வேலை. அதற்காக, இரண்டு முறை தண்டிக்கப்பட்டு இருக்கிறார். ஒழுக்கமற்று யாருக்கும் அடங்காத பிள்ளையை உருப்படச் செய்வதற்குத்தான் அவரை, கிழக்கிந்தியக் கம்பெனியின் எழுத்தர் பணிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் அவரது அப்பா ரிச்சர்ட் கிளைவ். 1743-ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி மெட்வே என்ற இடத்தில் இருந்து விஞ்செஸ்டர் என்ற பாய்மரக்கப்பலில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் கிளைவ். அப்போது அவரது வயது 17. இவரை ஒத்த இளவயது பையன்கள் பலரும் அதே கப்பலில் பயணம் செய்தார்கள். கப்பலில் வரும் நாட்களில் அவர்களுக்கான உணவு மற்றும் சவரக் கூலியை அவர்களே செலவு செய்து கொள்ள வேண்டும். அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று சண்டை போட்டு இருக்கிறார் கிளைவ். அத்தோடு, தன்னைப் போன்ற இளைஞர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு கப்பலின் விதிமுறைகளை மீறி குடித்து விட்டு ஆட்டம் போட்டு இருக்கிறார். இதற்காக, கேப்டனால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்.லத்தீனும் ஆங்கிலமும் கற்றிருந்த கிளைவ், இந்தியாவில் ஆவணங்களைப் பிரதி எடுக்கவும் கணக்கு வழக்குகளைக் கவனிக்கவும் கிளார்க் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது கப்பல் பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் சில மாதங்கள் நிற்க நேர்ந்தது. அந்த நாட்களில், கிளைவ் போர்த்துக்கீசிய மொழியை கற்றுக்கொண்டார். அதுதான், மதராஸில் அவர் வேலை செய்த நாட்களில் அவருக்கு பெரும் உதவி செய்வதாக இருந்தது.

விகடன்

No comments:

Post a Comment