சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக ஜவஹர் அறிவிக்கப்பட்ட வேகத்திலேயே, புகார் அறிக்கையும் அவர் மீது வாசிக்கப்பட, தி.மு.க. கிறுகிறுத்துக்கிடக்கிறது.
என்ன புகார்?
புளியங்குடி அருகே உள்ள வெள்ளாளன் கோட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் ஜேம்ஸ், அருணாச்சலம். இவர்களில், ஜேம்ஸ் என்பவரது மகன்தான் இப்போது தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜவஹர் சூர்யகுமார். இவரது சித்தப்பா அருணாச்சலம், முன்னாள் மத்திய அமைச்சர். காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்தவர், 2004-ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து அதாவது 2008-ம் ஆண்டு, 'செங்கோட்டையில் உள்ள ஏழு ஏக்கர் நிலத்தையும் தனக்கு 2003-ம் ஆண்டே அருணாசலம் எழுதிக் கொடுத்துவிட்டார்’ என்று ஓர் உயிலை வெளியிட்டாராம் ஜவஹர் சூர்யகுமார்.
'அது போலியான உயில்’ என்று அருணாச்சலத்தின் மனைவி அமலா, அப்போதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ''ஐ.பி.சி.468, 471, 420, 120 பி. ஆகிய பிரிவுகளின் கீழ் ஜவஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணையும் நடந்து வருகிறது. தடய அறிவியல் துறை முடிவில், அந்த உயில் போலியானது என்பது நிரூபணமாகி இருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை இன்னமும் முடிவடையாத நிலையில் ஜவஹரை வேட்பாளராக அறிவித்திருப்பது வேதனையாக இருக்கிறது'' என்கிறார்கள் அமலா அருணாச்சலத்துக்கு நெருக்கமானவர்கள்.
தி.மு.க. வேட்பாளரான ஜவஹர் சூர்யகுமார் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறார்? ''புருஷன் பொண்டாட்டிக்குள் தகராறு வந்தால், மூணாவது மனுஷன் உள்ளே நுழைவாங்களா? அது மாதிரித்தான் இதுவும். இது எங்க குடும்பத்து விவகாரம். நாங்க எங்களுக்குள்ள முடிச்சுக்குவோம். இதில் வேறு யாரும் தலையிடுவதை நாங்க விரும்பலை. இதை எனது கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்திவிட்டேன். என்னைப் பிடிக்காத எதிரிகள் தேர்தல் சமயத்தில் அவதூறான செய்திகளைப் பரப்பி இந்த விஷயத்தைப் பெருசு பண்ணப் பார்க்கிறாங்க. இப்படி எல்லாம் செய்தால், என்னுடைய வெற்றியைத் தடுத்துடலாம்னு தப்புக் கணக்கு போடுறாங்க. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் தி.மு.க-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது'' என்று நிதானமாகச் சொன்னார்.
ஆனால் அ.தி.மு.க-வினரோ, ''குடும்பப் பிரச்னை என்றால், வீட்டுக்குள்ளேயே முடிச்சுக்கணும். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ்னு போனப்புறம் நாலு பேரு பேசத்தான் செய்வாங்க. பதில் சொல்லித்தான் ஆகணும். நாங்களும் இதை மக்கள் முன்பு பிரசாரத்தில் முன்வைக்கத்தான் போகிறோம். முடிஞ்சா, புகார் கொடுத்த அமலா அருணாச்சலத்தையே பிரசாரத்துக்கும் கூப்பிடுவோம்'' என்கிறார்கள்.
சங்கரன்கோவில் களை கட்டிருச்சு!
No comments:
Post a Comment