பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும். ஒருத்தரின்கிட்டேயே கோபம் நெருங்க முடியாது; மகா கோபிஷ்டர் கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகி விடுவார் என்றால், அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம் படைத்தவ ராகத்தானே இருக்க வேண்டும். இப்படி ஒரு உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது.நம் எல்லோரிடமும், ஈ எறும்பில் இருந்து ஆரம்பித்து அனைத்து ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடியவர் யார்? ஸாக்ஷ£த் அம்பாள்தான். இத்தனை ஜீவராசி களுக்கும் தாயாக இருக்கப்பட்ட அகிலாண்ட ஜனனி அவள்தானே? அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேச்வரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) இருக்கப்பட்ட அகிலாண்டேச்வரி, கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்கிர கோலமாக ஆகிவிட்டாள். ஸகல சக்தியும் அவள்தான் ஆகையால் அன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள். கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆச்சார்யாள் அங்கே வந்தார். பரமேச்வர அவதாரம் ஆனதால், அவரால் உக்ர கோலத்திலிருக்கிற அம்பாளிடமும் போக முடியும். ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிள்ளையாரின் அன்பு மனப் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க நினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோயில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை பண்ணிவிட்டார்.
அவ்வளவுதான் செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்கிரமும் போன இடம் தெரியாமல் போய் விட்டது! அப்போது அம்பாளைவிட்டு போயிருந்த கோபம் மறுபடியும் ஒருபோதும் அவளிடம் திரும்பிவிடக் கூடாதென்று, நினைத்தார் ஆச்சார்யாள். அதனால் அந்த உக்ர கலைகளை இரண்டு தாடங்கங்களில் ஆகர்ஷித்து சமனம் செய்தார் (அடக்கினார்). அந்த தாடங்கங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்தார். ஜம்புகேஸ்வரம், திரு ஆனைக்கா இரண்டு பெயர்களிலுமே பிள்ளையார் சம்பந்தமிருக்கிறது. ஜம்பு என்பது நாவல் மரம். பிள்ளையாருக்கு ரொம்பப் பிடித்தது நாவல் பழம். திருஆனைக்கா என்றபோதும் அதில் ஆனை வந்து உட்கார்ந்து கொண்டு கஜானன மூர்த்தியை ஞாபகப்படுத்துகிறது.
- மகா பெரியவா (தெய்வத்தின் குரலிலிருந்து...)
No comments:
Post a Comment