''நீங்க பிலோ ஆவரேஜ் ஸ்டூடன்ட் கேள்விப்பட்டு இருப்பீங்க. ஆனா, நம்ம சத்யன் 'பில்லோ ஆவரேஜ் ஸ்டூடன்ட்’. கிளாஸுக்குப் போனதுமே தூங்கிருவாரு. மூணு வருஷமா போய்ட்டு வந்த கிளாஸுக்கே ஒருநாள் வழி தெரியாம, கண்டுபிடிக்க முடியாம பஸ் ஏறி வீட்டுக்குத் திரும்ப வந்தவன் இவன்.
ஆனா, 'நண்பன்’ படத்துல ஒரு சீன்ல ஃபர்ஸ்ட் ரேங்க் போயிருச்சேனு ஒரு ஃபிகர்கிட்ட இவன் சீன் போட்டப்போ, எனக்கே தாங்கலைங்க. ஸ்பாட்லயே சாத்துசாத்துனு சாத்தலாமானு தோணுச்சு!''- 'சைலன்ஸர்’ சத்யனை இறுக்கமும் நெருக்கமுமாகக் கட்டிக்கொண்டு சிரிக்கிறார் 'வைரஸ்’ சத்யராஜ். 'நண்பன்’ படத்தில் பட்டையைக் கிளப்பிய இந்த பிரின்சிபால் - மாணவன் கூட்டணி, நிஜத்தில் சித்தப்பா - மகன் உறவு!
''ஹலோ! விருமாண்டி சந்தானம்... ஐ டிடின்ட் லைக் இட். இப்போ இந்த ஹிஸ்ட்ரி, ஜியாக்ரஃபி எல்லாம் அவங்க கேட்டாங்களா?'' என பீட்டர் மீட்டரில் கொதிக்கிறார் சத்யன்.
''அட! தங்கம்... எஞ் செல்லம்... எஞ் சிங்கக்குட்டி... உங்களுக்குக் கோபம்லாம் வேற வருதா? ஒரு நிமிஷம், உன் சம்சாரத்துக்குப் போன் போட்டுக் கொடுத்தாலே போதும்... உன் வண்டவாளம்லாம் தண்டவாளம் ஏறிடும்!'' என்று சத்யராஜ் சதாய்க்க, ''தலைவா££ யூ ஆர் கிரேட்!'' என்று சரண்டர் ஆனார் சத்யன்.
''அது எப்படிறா மகனே... நிஜமாவே ஞானசுண்டி சூரணம் எதுவும் சாப்பிட்டியா? படத்துல மெஷினுக்கு இங்லிபீஸ்ல அவ்வளவு நீளமா விளக்கம் கொடுத்து அசத்திட்டியே?'' என்று சத்யராஜ் கேட்க, சத்யன் முகத்தில் வெட்கம் பந்திவைத்தது!
''படத்துல அடிக்கடி பேன்ட் கழட்டிக் காட்டினது இருக்கட்டும்... நிஜத்துல பள்ளிக்கூடத்துக்கு டிராயர் போட மறந்துட்டுப்போனது... காலேஜுக்கு லுங்கி கட்டிட்டுப் போனது... இதெல்லாம் நீயே சொல்றியா... இல்லை...'' என்று சிரிப்பை அடக்க முடியாமல் சத்யராஜ் சொல்லச் சொல்ல, ''நீங்க வாங்க சார்... நாம பேசுவோம். அடிமை சிக்கிட்டானேனு இவர் பாட்டுக்குக் 'கற்பழிச்சுட்டே’ இருப்பார்!'' என்று என்னைத் தன் 'சைடு’ சேர்த்துக்கொண்டார் சத்யன்.
''பொள்ளாச்சி பக்கத்துல வேட்டைக்காரன்புதூர் நமக்கு. விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து 'இங்கிலீஷ்’ங்கிற வார்த்தையைக் கேட்டாலே தோல் எல்லாம் தடிப்புத் தடிப்பா ஆகிடும் எனக்கு. கான்வென்ட்ல படிக்க முடியாதுனு அடம்பிடிச்சு ஓடியாந்துட்டேன். நல்லா மூக்குப் பிடிக்கச் சாப்பிடுறது, தூங்குறதை மட்டுமே முழு நேரமா செஞ்சுட்டு இருந்தேன். ஐஸ்க்ரீம், முறுக்கு, கடலை மிட்டாய், பஞ்சு மிட்டாய், தேன் மிட்டாய்னு ரகரகமா அரைச்சுக்கிட்டே இருப்பேன். எங்க அப்பாரு, 'தலையில கறுப்புத் தொப்பி மாட்டிக்கிட்டு நீ சிரிக்கிற மாதிரி கனவு கண்டேன்டா தம்பி. ப்ளீஸ்... எப்படியாச்சும் ஒரு பட்டம் வாங்கிருடா’னு கெஞ்சினார். அப்புறம் பி.எஸ்.ஜி. காலேஜ்ல முக்கிமுக்கி பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சேன். கருமம், இப்ப வரைக்கும் எப்படி பாஸ் ஆனேன்னே தெரியலை. 'சின்ன வயசு சத்யராஜ் மாதிரியே இருக்கேடா’னு பசங்க உசுப்பேத்துனதால நடிக்கிற ஆசை வந்தது. நான் படிச்ச லட்சணத்தைப் பார்த்துட்டு, 'இவன் நடிக்கிறதே பெட்டர்’னு அப்பாவும் தண்ணி தெளிச்சு விட்டுட்டார். 'இளையவன்’, 'கண்ணா உன்னைத் தேடுகிறேன்’னு ரெண்டு சூப்பர் டூப்பர் மெகா ஃப்ளாப் படங்களில் நடிச்சேன். 'பய படிக்கிற மாதிரியே நடிக்கிறான்டா’னு அப்பா சொன்னதுதான் எனக்குக் கிடைச்ச ஆஸ்கர்!
வீட்ல என் சம்சாரம்கூட, 'ஏனுங்க, நீங்க நடிக்கிற படத்துக்கு மட்டும் என்னைக் கூட்டிட்டுப் போகாதீங்க. மனசுக்குக் கஷ்டமா இருக்குங்கோ’னு ஓப்பனா சொல்லிடு வாங்க. ஃப்ரெண்ட்ஸுங்ககிட்ட 'படம் பார்த்துட்டு கமென்ட் சொல்லுங்கடா’னு கேட்டா, 'படம் ஆரம்பிச்சாச்சு, இப்போ இன்டர்வெல், படம் முடிஞ்சிருச்சு, வீட்டுக்கு வந்துட்டேன். மனசு சரிஇல்லை. குட்நைட்!’னு நாலு மெசேஜ் அனுப்பிட்டு செட்டில் ஆகிடுவாங்க. நடிக்கிறதை நிறுத்திட்டு மாதம்பட்டி பக்கமா விவசாயம் பார்க்கப்போலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரம்தான், 'நண்பன்’ வந்து காப்பாத்திட்டான்.
பொண்டாட்டி தட்கல்ல டைவர்ஸுக்கு அப்ளை பண்ணலாமானு யோசிச்சுட்டு இருந்தாங்க. இப்போ 'சின்னத்தம்பி’ குஷ்பு கணக்கா தினமும் என் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்குறாங்க. தேங்க்ஸ் டு ஷங்கர் சார்!''
''படத்துல ரெண்டு பேருக்கும் பிடிச்ச காட்சி எது?’
சத்யராஜே ஆரம்பித்தார், ''எங்க ரெண்டு பேருக்கு மட்டும் இல்ல... ஊருக்கே அந்தக் 'கற்பழிப்பு’ சீன்தான் பிடிச்சிருக்கும். ஆனா, அந்தக் காட்சியைப் படம்பிடிக்கும்போது, ஊர்ல சத்யனோட அப்பா சீரியஸா இருக்கார்னு தகவல் வந்துச்சு. எனக்குப் பயமாவும் கவலையாவும் இருந்தது. இவன்தான் அந்த சீன்ல ஹீரோ. பெரிய பெரிய வசனமா பேசணும். காலைல ஆரம்பிச்சா, சாயந்தரம் தாண்டியும் போகும் ஷூட்டிங். தகவல் தெரிஞ்சதும் ஷங்கர்கூட 'ஷெட்யூல் மாத்திக்கலாமா?’னு கேட்டார். ஆனா, சத்யன் பிடிவாதமா 'அப்பா என்னை ஒரு நல்ல நடிகனாப் பார்க்கணும்னு ஆசைப்பட்டார். இந்தப் படம்தான் அவரோட கனவை நிறைவேத்தும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ நான் நடிக்காமகோயம்புத்தூர் போய் அவர் முன்னாடி நின்னாக் கூட என்னை அவர் திட்டத்தான் செய்வார். நான் நடிக்கிறேன்’னு சொல்லிட்டு நடிக்க ஆரம்பிச்சுட்டான். என்ன பண்றதுனு தெரியாம நான் கேரவன்ல கம்முனு கண்ணை மூடி உட்கார்ந்திருக்கேன். இவன் கொஞ்ச நேரத்துலயே வந்துட்டான். 'மனசு மாறி கோயம்புத்தூர் கிளம்பிட்டியா?’னு கேட்டேன். 'இல்லை... ஒரே டேக்ல முடிச்சுட்டேன்’னு சொன்னான். அப்புறம் ஷங்கரே வந்து, 'சத்யனுக்குள்ள ஒரு பெரிய கலைஞன் இருக்கான் சார்!’னு மனசுவிட்டுப் பாராட்டினார். அன்னைக்கு சத்யன் அப்பா பிழைச்சுட்டாலும், அப்புறம் கொஞ்ச நாள்ல இறந்துட்டார். இப்போ எல்லாரும் இவனைப் பாராட்டுறதை அண்ணன் மேல இருந்து பார்த்து ஆசீர்வதிக்கிறார்னு தோணுது!'' என்று சத்யராஜ் நெகிழ,
''ஜாலி மீட்டிங்கை ஏன் ஃபீலிங்ஸ் மீட்டிங்கா மாத்தணும்? உங்க வாயால நான் நல்லா நடிக்கிறேன்னு சொன்னீங் களே... அதுவே போதும் வைரஸ்!'' எனக் கம்மிய குரலில் சத்யன் சொல்லும்போது அவரது விழிகளில் ஈர மினுமினுப்பு!
No comments:
Post a Comment