Wednesday, February 1, 2012

நள்ளிரவு போலீஸ் ஜாக்கிரதை!

போலீஸ் உடையைப் பார்த்து மரியாதை கொடுத்தால் மட்டும் போதாது, இனி சந்தேகப்படவும் வேண்டும். ஆம், கொலையாளிகள் போலீஸ் உடையிலும் வரத் தொடங்கி விட்டார்கள்.
போரூர் அருகே கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரது கணவர் ஓட்டல் ஊழியராக இருக்கிறார். இவர்களுக்கு இரு மகன்கள். அம்பிகா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் போரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராகவும் சில குழுக்களுக்குத் தலைவியாகவும் இருந்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எப்போது கேட்டாலும் கடன் கிடைக்கும் என்ற அளவுக்கு போரூர் சுற்றுவட்டாரத்தில் அம்பிகாவின் பெயர் பிரபலம்.

கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சங்கத்துக்கு தமிழகம் முழுவதும் தொழில் மற்றும் நகைக் கடன்கள் வழங்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இரண்டு

கோடி ரூபாய் போரூர் கிளைக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், மற்ற எந்தக் கிளைக்கும் வழங்காமல், போரூர் கிளையில் மட்டுமே 20 கோடி ரூபாய்க்கும் சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் மூலம் குறுகிய கால இடைவெளியில் கடன் வழங்கப்பட்டது. அம்பிகா கை காட்டியவர்களுக்கு எல்லாம் கடன் கிடைத்தது என்கிறார்கள்.


மற்ற கிளைகளுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யாமல், ஒரே கிளையில் மொத்த பணமும் கடன் வழங்கியதால் சந்தேகம் அடைந்த காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ஞானசேகரன், இதுகுறித்து வணிகவியல் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், வங்கியில் கவரிங் நகைகளை வைத்தும், போலி முகவரிகளில் ஆவணங்கள் தயாரித்தும் பல கோடிக்கு மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த விசாரணை நடந்தபோதே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வங்கியில் மர்மமான

முறையில் தீப்பிடித்து... கம்ப்யூட்டர் மற்றும் மொத்த ஆவணங்களும் எரிந்து போயின. ஆனாலும், மோசடி நடந்ததை உறுதிப்படுத்திய போலீஸார், கடந்த டிசம்பர் மாதம் வங்கியின் மேலாளர் ஜான் பாஷா உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் ஐந்து பேரைக் கைது செய்தார்கள்.


இந்த நிலையில்தான் நடந்திருக் கிறது அம்பிகா கொலை. மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலத் திடம் பேசினோம். ''கொலையாளிகள் கூலிப்படையினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கடந்த திங்களன்று அதிகாலை 3.30 மணி அளவில் இரண்டு வாலிபர்கள் போலீஸ் உடையில், அம்பிகா வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார்கள். அவரது கணவர் ரவி கதவை திறந்தவுடன், 'உயர் நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறோம். வங்கி மோசடி குறித்து உங்கள் மனைவிடம் விசாரிக்க வேண்டும்’ என்றதும் அம்பிகாவும் வந்துள்ளார். அப்போது இரண்டு பேரும் டீ கேட்டுள்ளனர். வீட்டில் பால் இல்லை என்றதும், தண்ணீர் கேட்டிருக்கிறார்கள். தண்ணீர் எடுக்க ரவி உள்ளே போனதும், அம்பிகாவின் வாயைப் பொத்தி தெருவின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு தூக்கிச்சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்கள்.

கொலையாளிகள் முன்னரே அந்தத் தெருவுக்கு வந்து நோட்டம் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான், அந்தத் தெருவில் இருந்த ஐந்து மின் கம்பங்களின் மெயின் ஸ்விட்சை அணைத்துவிட்டு... இருட்டில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள். ஆனால், எதற்காக போலீஸ் உடையில் வந்து கொலை செய்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.

அம்பிகாவின் கணவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறோம்.

அம்பிகாவின் நடவடிக்கைகள் பலவும் மர்மமாகவே இருந்துள்ளன. நேரம், காலம் பார்க்காமல் அவர் வெளியே செல்வதையும் பலரிடம் பழகுவதையும் அவரது கணவர் கண்டித்து இருக்கிறார். அதனால், சில மாதங்களுக்கு முன்பு அம்பிகா தூக்க மாத் திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.

அந்தப் பிரச்னைக்குப் பிறகு யாரும்அம்பிகாவைக் கண்டிப்பது இல்லை. கடந்த ஞாயிறு அன்று மாலை வெளியே சென்ற அம்பிகா இரவு 11.30 மணிக்குத்தான் வீடு திரும்பியிருக்கிறார். அவர் எங்கு சென்றார்; யாரைச் சந்தித்தார் என்பது தெரியவில்லை. சில செல்போன் எண்களைக் கண்டு பிடித்து உள்ளோம். அதன் மூலம் கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம். ஆனால், வங்கி மோசடிக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை...'' என்றார்.

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் ஊழியர் ஒருவர் நம்மிடம், ''கடன் மோசடியில் முக்கிய சாட்சி அம்பிகாதான். அவர் சொன்ன ஆட்கள் பலருக்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அம்பிகா மூலமாகக் கடன் பெற்றவர்கள், தங்கள் பெயர்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று வற்புறுத்தினார்கள். அதேசமயம், வங்கி மோசடியில் கைதானவர்களும் அம்பிகா எதுவும் பேசிவிடக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களிடம் அம்பிகா பேரம் பேசி வந்தார். இந்த இரண்டு தரப்பினரில் யாராவதுதான் இந்தக் கொலையைச் செய்து இருக்க வேண்டும்...'' என்றார் கள்.

வங்கி மோசடி வழக்கை விசாரிக்கும் வணிகவியல் குற்றப்பிரிவின் எஸ்.பி-யான ஆனி விஜயாவிடம் பேசியபோது, ''அந்தப் பெண்ணின் கொலைக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட சட்டம் - ஒழுங்கு போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்...'' என்றார்.

No comments:

Post a Comment