வழக்கமாக, தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்தான் கொன்று குவிப்பார் கள். இந்த 'மரண’ விளையாட்டில் இப்போது, இத்தாலியும் இணைந்து கொண்டது. குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின் மற்றும் பூத்துறையைச் சேர்ந்த அஜீஸ் பிங்குவை சுட்டுக் கொன்று இருக்கிறார்கள் இத்தாலியக் கப்பற்படை அதிகாரிகள்.
குமரிமாவட்டம் மேற்கு கடற்கரைக் கிராமங் களைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடலில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். கடந்த 15-ம் தேதி பூத்துறையைச் சேர்ந்த ஃபிரடி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அஜீஸ் பிங்கு, கிலாரி, ஜான்சன், முத்தப்பன், அலெக்சாண்டர் மற்றும் குளச்சலைச் சேர்ந்த ஜெலஸ்டின் உட்பட 11 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கொல்லம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்தது, 'என்ரிகா லக்ஸி’ என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பல்.
அடுத்து நடந்ததை விவரிக்கிறார் துப்பாக்கிச் சூடு நடந்தபோது விசைப்படகில் இருந்த ஃபிரடி. ''நாங்க எல்லோரும் நல்லாத் தூங்கிட்டு இருந்தோம். ஜெலஸ்டின்தான் படகை ஓட்டிட்டு இருந்தார். திடீர்னு வெடிச்சத்தம் கேட்டு விழிச்சோம். எழும்பிப் பார்த்தா... ஜெலஸ்டின் காதிலும் வாயிலும் ரத்தம் வந்து செத்துக்கிடந்தார். அப்புறம்தான், கப்பல்காரங்க சுடுறாங்கன்னு தெரிஞ்சு, 'எல்லாரும் படுங்க’னு கத்தினேன். அதுக்குள்ள அஜீஸ்பிங்கு நெஞ்சிலும் குண்டு பாய்ஞ்சிருச்சு. இத்தாலி கப்பல்ல இருந்த பாதுகாப்பு அதிகாரிங்கதான் எங்களைப் பார்த்துச் சுட்டாங்க. எங்களைக் கடல் கொள்ளையர்கள்னு நினைச்சு சுட்டுட்டதாச் சொல்றாங்க. ரேடார்ல பாத்திருந்தா... நாங்க என்ன பண்றோம்னு தெரிஞ்சிருக்கும். அதைக்கூட அவங்க செய்யலை. அநியாயமா ரெண்டு பேரைக் கொன்னுட்டாங்களே...'' என்று கதறினார்.
மீனவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பூத்துறை மக்கள் வீடுகளில் கறுப்பு கொடிகள் ஏற்றி தங்களது எதிர்ப்பைக் காட்ட, சுற்றுவட்டார கிராமங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அஜீஸ் பிங்கு 19 வயது வாலிபர். தாய், தந்தையை இழந்தவர். சொந்த வீடு இல்லாமல், தனது இரண்டு சகோதரிகளுடன் அத்தை வீட்டில் வாழ்ந்தவர். மற்றொரு மீனவரான ஜெலஸ்டின், தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள்.
அஜீஸ் பிங்குவின் சகோதரிகளான அபிநயா மற்றும் அகுணாவிடம் பேசினோம். ''அப்பா, அம்மா இறந்தப்புறம், எங்க அண்ணன்தான் எங்களுக்கு எல்லாமே. எங்க கல்யாணத்தை முடிச்சிட்டு அப்புறமா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்வான். சொந்த வீடுகூட இல்லாத நாங்க, எங்க அண்ணன்தான் விடிவு காலம்னு நம்பினோம். அதுக்குள்ள இப்படி நடந்துபோச்சு'' என்றவர்கள், அதற்கு மேல் பேச முடியாமல் அழுதனர்.
மீனவர்கள் சுடப்பட்ட தகவல் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட... அவர்கள் கொல்லம் மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். கடலோரக் காவல் படையினரின் உதவியோடு ஆழ்கடலில் கப்பலை மடக்கிப் பிடித்த துறைமுக அதிகாரிகள், கொச்சி துறைமுகத்துக்கு அந்தக் கப்பலைக் கொண்டு வந்தனர். அந்தக் கப்பலில் கேப்டன் உட்பட 24 ஊழியர்கள் இருக்கிறார்கள். மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை போலீஸார் கைது செய்ய முயன்றபோது, 'நாங்கள் எச்சரிக்கை செய்த பிறகும் படகு எங்களை நோக்கி வந்தது. அதனால்தான் சுட்டோம். மேலும், சர்வதேசக் கடல் எல்லையில்தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. எனவே, இந்திய சட்டத்துக்கு நாங்கள் உடன்பட முடியாது’ என்று, இத்தாலி கப்பல் கேப்டன் வீம்பு பிடித்திருக்கிறார். அதன்பிறகு, இத்தாலி தூதரக அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.இறந்துபோன மீனவர்கள் இருவரது குடும்பத்துக்கும் தலா ஐந்து லட்ச ரூபாயை நிவாரண நிதியாக கேரள அரசு வழங்க... அஜீஸ் பிங்குவின் குடும்பத்துக்கு தமிழக அரசும் ஐந்து லட்சம் அறிவித்துள்ளது.
தெற்காசிய மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில், ''கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசும், மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனமும் நிவாரணம் வழங்க வேண்டும். சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு 50 லட்ச ருபாய் நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’' என்று கோரிக்கை வைத்தார்.
மீனவர்கள் உயிருக்குத்தான் எத்தனை சோதனைகள்!
No comments:
Post a Comment