தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அதிரடியைத் தொடர்ந்து தி.மு.க-வுக்கு மேலும் ஒரு பிரச்னை. தி.மு.க-வின் தலையிலேயே கை வைப்பது போன்று, அதன் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் முகப்புப் பகுதியை கைப்பற்றத் துடிக்கிறது, சென்னை மாநகராட்சி.
அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் 1,893 சதுர மீட்டர் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை குறி வைத்து மாநகராட்சி மன்றக் கூட்டத் தில் பிரச்னையை எழுப்பிய சின்னய்யனிடம் பேசினோம். ''அறிவாலயத்தின் திறந்தவெளி நிலத் துக்கு சி.எம்.டி.ஏ-வுக்கு தானப்பத்திரம் வழங்கி, பத்திரப் பதிவு செய்து இருக்கிறார்களா? பொது மக்கள் பயன்படுத்த அந்தப் பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதா? தற்போது அறிவாலயத்தின் இரண்டு வாயில்களை கல்யாண மண்டபத்துக்கும் அறிவாலயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பூங்காவுக்கான பாதை எங்கே? உண்மையில் அந்தப் பூங்கா பொது மக்களுக்கானது அல்ல; மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. தவிர, அந்த இடத்தில் பொழுதுபோக்குக்கான ஊஞ்சல், சறுக்கு தளம் போன்ற எந்த அம்சங்களும் இல்லை. பொது மக்களுக்கான பூங்கா என்ற பெயரில் தி.மு.க. அந்த நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களி டம் இருந்து மாநகராட்சி நிலங்களை மீட்டதாகப் பெருமை பேசிக்கொண்டார் அப்போதைய மேயர் மா.சுப்ரமணியன்.அறிவாலயத்தை ஒட்டி இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலின் முகப்புப் பகுதியையும் மீட்டு, 'இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்’ என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள். பக்கத்துக் கட்டடத்துக்கு ஒரு சட்டம். இவர்களுக்கு ஒரு சட்டமா? கேட்டால், சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது என்பார்கள். மக்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்தால்தான் சிறப்பு அனுமதி. எனவே, அந்த அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை அறிவாலயத்திடம் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காவை திறந்து வைக்க வேண்டும்...'' என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டோம். ''கடந்த 1980-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்த போது, அறிவாலயம் இருக்கும் இடத்தில் பலமாடி கட்டடம் கட்டிக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு ஆணை வெளி யிடப்பட்டது. அந்த ஆணையின்படி மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித நிலத்தை தி.மு.க. அறக்கட்டளை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஒப்படைக்கவில்லை.
மீண்டும் 1986-ல் அந்த இடத்தில் மேலும் சில சலுகைகள் கேட்டு, அரசு ஆணையில் திருத்தம் செய்யும்படி மேல் முறையீட்டு மனு அளித்தார்கள். அந்த மனு நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், 1988-ல் மீண்டும் கவர்னர் ஆட்சி. அப்போது அந்த இடத்தில் தி.மு.க. அறக்கட்டளை அலுவலகக் கட்டடம், திருமண மண்டபம் மற்றும் அனாதை இல்லம் கட்டுவதாகச் சொல்லி, மொத்த பரப்பளவில் 10 சதவிகிதம் நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்ணா பூங்காவை அமைப்பதாக தி.மு.க. அறக்கட்டளை அறிவித்தது. அதன்பின்னர், அவர்கள் வசதிக்கு ஏற்ப அனுமதியில் திருத்தம், வரைபடத்தில் திருத்தம், பூங்கா பராமரிப்பில் மாற்றம் என சட்ட விதிகளை மீறியது தி.மு.க. அறக்கட்டளை. அவர்கள் ஆட்சியில் அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அனாதை இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று இதுவரை அங்கு அனாதை இல்லம் எதுவும் கட்டப்படவில்லை. அதனால், தி.மு.க. அறக்கட்டளைக்கு மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப் பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு அரசு ஆணையை ரத்து செய்து, அந்த நிலத்தை மீண்டும் மாநகராட்சிக்கு வழங்க அரசிடம் மாநகராட்சி மன்றம் பரிந்துரைத்து உள்ளது. அனுமதி கிடைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டதும், அந்த இடத்தை கையகப்படுத்தி, பொது மக்களுக்கான பூங்கா அமைக்கப்படும்...'' என்றார்.
இதுகுறித்து, முன்னாள் மேயர் மா.சுப்ரமணி யனிடம் கேட்டோம். ''அந்த இடத்தில் அண்ணா பூங்கா அமைத்து, அதை பராமரிக்கும் உரிமை தி.மு.க. அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று வரை அந்தப் பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பூங்காவில் புங்கன், பூவரசு, நாவல், தேக்கு உட்பட ஏராளமான மரங்கள் உள்ளன. அறிவாலய வளாகத்தில் வெற்றிச்செல்வி அன் பழகனார் இலவச கண் மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அறிவாலயத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். தங்கள் குறைகளைக் கூற கட்சி அலுவலகத்துக்கு மக்கள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இளைப்பாற அந்தப் பூங்காவைத்தான் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆட்சியில் சென்னையில் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களை மீட்டோம். அப்படி கிண்டியில் ஐ.டி.சி. ஹோட்டலிடம் இருந்து மீட்கப்பட்ட 12.5 கிரவுண்டு நிலத்தை கடந்த மாதம் மீண்டும் அவர்களிடம் கொடுத்து விட்டது அ.தி.மு.க. அரசு. இதுகுறித்து, நடுநிலையாளர்கள் சிலர் விமர்சிக்கவே, அதை மூடி மறைக்கவும் யாரையோ சந்தோஷப்படுத்தவும் அறிவாலய பிரச்னையை கையில் எடுத்துள்ளார்கள். அனாதை இல்லம் கட்டுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. எல்லாவற்றையும் சட்டப்படியே எதிர்கொள்வோம்...'' என்றார் தெளிவாக!
No comments:
Post a Comment