பொன்னையும் பொருளையும் அல்ல, அலங்கரிக்கப்பட்ட அறைகளை அல்ல, வாளையும் ஈட்டியையும் அல்ல, கனி வகைகள் கொண்ட தோட்டங்களை அல்ல, அந்த மாளிகையில் அமைந்துள்ள ஜன்னலைத்தான் மிகவும் விரும்பினான் சிந்துபாத். நாள் முழுக்க ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தான். உண்மையான செல்வம் மாளிகைக்கு உள்ளே அல்ல, வெளியில்தான் கொட்டிக்கிடக்கிறது என்பது சிந்துபாத்தின் நம்பிக்கை.குறிப்பாக, கடலில். ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் பரந்து விரிந்திருக்கும் கடலை ஏக்கத்துடன் பார்த்தபடி முழு நாளையும் அவன் கழித்திருக்கிறான். ஆரவாரத்துடன் புறப்பட்டுச் செல்லும் மீனவப் படகுகளையும் ஆடி அசைந்து கரை ஒதுங்கும் பிரமாண்டமான பாய்மரக் கப்பல்களையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பான். இவை எங்கிருந்து வருகின்றன? எங்கே செல்கின்றன? ஆர்வத்தைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் ஒருநாள் கடற்கரைக்குச் சென்றான் சிந்துபாத். மீனவர்களும் மாலுமிகளும் கப்பல் பணியாளர்களும் வணிகர்களும் மும்முரமாக கப்பல்களில் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர். அவர்களிடம் பேசத் தொடங்கினான் சிந்துபாத். மன்னனின் மகன் என்பதால் ஆரம்பத்தில் சற்றே விலகி நின்றவர்கள் நாள்பட நாள்பட நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.
‘சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய சுறாமீனைப் பிடித்தேன். ஆஹா எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று நினைத்து அதன் வயிற்றைப் பிளந்து பார்த்தால்...’ சிந்துபாத் முன்னால் நகர்ந்து வந்தான். ‘என்ன இருந்தது?’ ‘எப்படிச் சொல்வேன், போ! ஒரு கண்ணாடி சீஸா. அதைத் திறந்தால் உள்ளே ஒரு காகிதம்.’ஆவென்று வாய் பிளந்தான் சிந்துபாத். ‘அதற்குள் வாயைத் திறந்துவிட்டாயே, சிந்துபாத். அந்தக் காகிதத்தில் என்ன இருந்தது தெரியுமா? ஒரு வரைபடம். சரி, வரைபடத்தில் உள்ள இடத்தைக் கண்டு பிடிப்போம் என்று நாங்கள் புறப்பட்டுப் போனோம். வெகு நாள்களுக்குப் பிறகு, நீண்ட தேடலுக்குப் பிறகு அந்த இடத்தைக் கண்டறிந்தோம். அடடா, இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது.’ சிந்துபாத்தின் உடலும்கூட சிலிர்த்தது. அந்த மாலுமி தொடர்ந்தான். ‘அள்ள அள்ளக் குறையாத வைரங்கள், வைடூரியங்கள், மாணிக்கங்கள்... இன்னொரு சமயம் என்ன ஆனது தெரியுமா? என் நண்பர்களும் நானும்...’சிந்துபாத் முடிவுசெய்து விட்டான். போதும் இந்த மாளிகை வாழ்க்கை. அப்பாவிடம் அனுமதி பெற்று கடலுக்குள் சென்றுவிட வேண்டியது தான்! இது வரை அவன் சேகரித்து வைத்த கதைகள், (அவை உண்மையா, கற்பனையா என்று சோதித்துப் பார்க்க விருப்பமில்லை) அவனுக்கு அசாத்தியமான துணிச்சலையும் அடக்கமுடியாத ஆர்வத்தையும் ஊட்டியிருந்தன.
சிந்துபாத்தின் ராஜா அப்பா கொஞ்சம் தயங்கினார். இருக்கும் செல்வங்களும் வசதிகளும் போதாதா? உயிரைப் பணயம் வைத்து எதற்கு ஒரு கடற்பயணம்? சிந்து பாத் விளக்கினான். அப்பா, என்னால் இங்கே சிறைபட்டுக் கிடக்கமுடியாது. இங்கிருந்து எதையும் கற்கவும் முடியாது. நம் மாளிகைகளைக் காட்டிலும் கடல் செழிப்பானது. நான் கடலில் வாழவே விரும்புகிறேன். அனுமதி தாருங்கள். அதற்கு மேல் மறுக்கமுடியாததால், ராஜா அந்த ஊரின் மிகச் சிறந்த பாய்மரக் கப்பலை வாங்கி சிந்துபாத்துக்குப் பரிசளித்தார்.கடல் நண்பர்கள் மூலமாக, மிகச் சிறந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் சிந்துபாத். பயணத்துக்குத் தேவையான நீர் உள்ளிட்ட உணவுப் பொருள்களைச் சேகரித்துக்கொண்டார்கள். துறைமுகத்தோடு பிணைக்கப்பட்ட கயிறுகள் விடுவிக்கப் பட்டபோது, சிந்துபாத் உற்சாகக் குரல் எழுப்பினான். மாலுமி சிந்துபாத்தின் முதல் கடல் பயணம் ஆரம்பமானது. சில்லென்று முகத்தில் வீசும் குளிர் காற்றை கண்கள் மூடி ரசித்தான் சிந்துபாத். இரவும் குளிரும் கருமை படர்ந்த கடலும் சூரிய விடியலும் அவனை உற்சாகப்படுத்தியது. கப்பல் பணியாளர்கள் ஒன்றுதிரண்டு பெருங்குரல் எடுத்து பாடல்கள் பாடியபோது, சிந்துபாத்தும் இணைந்துகொண்டான்.ஒருநாள், திடீரென்று வீசிய பெருங்காற்றால் கப்பல் நிலைதடுமாறியது. சிந்து பாத் கட்டுப்பாட்டு அறைக்கு ஓடோடிச் சென்று தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து பார்த்தான். கப்பலை அவனால் மீட்க முடியவில்லை. நடுஇரவில் கப்பல் கவிழ்ந்தது. ஒரு மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டான் சிந்துபாத். இரவு முழுவதும் மயக்கம் நீங்கவில்லை.
விடிந்தபோது எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. அடுத்த மூன்று தினங்களுக்கு மிதந்துகொண்டே இருந்தான் சிந்துபாத். உணவில்லை, நீரில்லை. மூன்று தினங்களுக்குப் பிறகு ஒரு சிறு நிலத்தைக் கண்டான். சிதறிப் போன சில பணியாளர்களையும் கண்டான். மகிழ்ச்சியுடன் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். அந்தப் புதிய நிலத்தில் கால் பதித்தார்கள். இது என்ன தீவா அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு நிலப்பிரதேசமா? தன் தந்தையின் பெயரை அதற்குச் சூட்டிவிடலாம் என்றுகூட சிந்துபாத் நினைத்துக்கொண்டான்.அப்போது அந்த நிலம் அசைந்தது. ஆ, இதென்ன அதிசயம்? நிலம் அசையுமா? சிந்துபாத் அதிர்ச்சியுடன் அங்கும் இங்கும் நகர, நிலம் அப்படியே மேலே எழும்பி, சடாரென்று நேராக நின்று பிறகு மீண்டும் சாய்ந்தபோதுதான் புரிந்தது. அது நிலமே அல்ல. ஒரு மிகப் பெரிய திமிங்கிலம். மீண்டும் கடலில் மூழ்கினான் சிந்து பாத். மீண்டும் மயக்கம். மீண்டும் விழிப்பு. மீண்டும் திண்டாட்டம். மீண்டும் பயணம். கடல் அலைகளைப் போல்தான் அமைந்து விட்டது சிந்துபாத்தின் வாழ்வும். ஒரு நொடி மேலே. அடுத்த விநாடி கீழே. பல வகைக் கனிகள் நிரம்பிய தோட்டத்தில் ஒய்யாரமாக படுத்தபடி ருசித்துக்கொண்டிருப்பான். அடுத்த நாள், புயல் தாக்கும். நாள்கணக்கில் பட்டினி கிடக்கவேண்டியிருக்கும். சிலசமயம் கொள்ளையர்கள் ஈட்டியுடன் பாய்ந்து வருவார்கள். புதிய கப்பல் கிடைக்கும். உள்ளே செல்வங்கள் இருக்கும். மறுநாள் கப்பல் கொள்ளையடிக்கப்படும்.அல்லது வழி தவறி ஏதேனும் ஓர் இடத்தில் கரை ஒதுங்கும். ஏதேனும் சாப்பிட அகப்படாதா என்று அலையும் போது தொலைவில் ஒரு வீடு தெரியும். ஓடோடிச் சென்று பார்த்தால், வந்தாயா வா மகனே என்று சொல்லி ஒரு பெரிய பூதம் வரவேற்கும். இன்றைக்கு என் இரவு உணவு நீதான் என்று அவனைப் பிடித்துக்கொள்ளும். பூதத்தை வீழ்த்திவிட்டு தப்ப வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அனுபவம். புதுப்புது தேடல்கள். புதிய ஆபத்துகள். புதிய சாகசங்கள். சிந்துபாத் கடலை விட்டு நீங்கவேயில்லை. வேண்டாம் இந்த வாழ்க்கை என்று அவன் மனம் வெறுக்கவில்லை. தன் கனவையும் லட்சியத்தையும் விட்டுக்கொடுக்க அவன் தயாராகயில்லை.
இறுதியில், ஒரு பயணத்தின் முடிவில் அதுவரை கண்டிராத செல்வங்களை சிந்துபாத் கண்டுகொண்டான். முன்னர் ஒரு மாலுமி நண்பர் விவரித்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிக வைரங்களையும் மரகதக் கற்களையும் நவரத்தினங்களையும் மலை மலையாக அவன் கண்டுபிடித்தான். பல கப்பல்களிலும் யானைகளிலும் மூட்டைகளை நிரப்பி, தன் ஊருக்கு எடுத்துச் சென்றான். அப்பா மகிழ்ந்தார். சிந்து பாத்தை அணைத்துக்கொண்டார். சேகரித்த செல்வத்தை சிந்துபாத் ஏழை மக்களிடம் பகிர்ந்துகொண்டான்.சிறிது காலத்துக்குத்தான் சிந்துபாத் அமைதியாக ஓய்வெடுத்தான். பிறகு மீண்டும் அந்த ஜன்னலை நெருங்கினான். மீன் பிடிக் கப்பல்களும் பாய்மரக் கப்பல்களும் மிதந்துகொண்டிருந்தன. கடல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. இதோ கிளம்பி விட்டேன் நண்பா. சிந்துபாத் அடுத்த பயணத்துக்குத் தயாரானான். ரிச்சர்ட் பர்ட்டன் மொழிபெயர்த்த அரபு இலக்கியத்தின் பொக்கிஷமான 1001 அரபிய இரவுகள் நூலின் ஆறாம் பாகத்தில் மாலுமி சிந்து பாத் பயணங்கள் இடம்பெறுகின்றன. ஷெகரஷாத் என்னும் இளம்பெண் சொன்ன கதைகளின் தொகுப்புதான் 1001 இரவுகள். பல்வேறு எழுத்தாளர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த நாடோடிக் கதைகளைத் தொகுத்திருக்கின்றனர். தெற்கு இராக் பகுதியைச் சேர்ந்த பஸ்ரா என்னும் இடத்தைச் சேர்ந்தவன் சிந்துபாத். கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் சிந்துபாத் மேற்கொண்ட சாகசக் கடல் பயணங்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. மொத்தம் ஏழு பயணங்களை சிந்துபாத் மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment