Wednesday, February 1, 2012

பாஸ் (எ) திவாகரன்

'அரெஸ்ட் அலெர்ட்... முதலில் கைதாகும் 3 பேர்’ என்ற தலைப்பிட்ட ஜூ.வி. இதழ் ரிலீஸ் ஆன அன்று மதியமே திவாகரன் அரெஸ்ட்டுக்கான முஸ்தீபுகள் ஆரம்பம் ஆகிவிட்டன. இந்த இதழ் அச்சாகும் வரை திவாகரனை போலீஸ் கைது செய்யவில்லை. ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். எனவே, சசிகலா குடும்பத்தின் கைதுப் படலத்தின் தொடக்கம் திவாகரனாக இருக்கலாம்

ஜெயலலிதா - சசிகலா பிரிவு நடந்த உடனே எம்.நடராஜனுக்கு அடுத்தபடியாக தீவிரக் கண்​காணிப்புக்கு ஆளானவர் திவாகரன். சசிகலாவின் பெயரைச் சொல்லி கட்சியிலும் ஆட்சியிலும் நிழல் (நிஜ?) சக்தியாக இருந்த இவரை 'பாஸ்’ என்றுதான் டெல்டா மாவட்டத்து மந்திரிகள் முதல் தொண்டர்கள் வரை அழைப்பார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி உடன்பாடு போன்றவற்றில், மன்னார்குடியில் இருந்தபடியே மாயாஜாலம் நிகழ்த்தியவர் திவாகரன். தற்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 25 சதவிகிதம் இவர் பாக்கெட்டில் இருக்கின்றனர் என்பது மன்னார்குடி வகையறாக்களின் அழுத்தமான நம்பிக்கை. 'எம்.நடராஜன் பேசத்தான் செய்வார். ஆனால், திவாகரன் அதைச் செய்தே காட்டுவார்’ என உறவு வட்டாரங்களால் சக்தி மிகுந்த புள்ளியாகப் பார்க்கப்பட்டவர் திவாகரன். கடந்த இதழில் 'அரெஸ்ட் அலெர்ட்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்ட காலையிலேயே மன்னார்குடி ஆதரவாளர்களிடம் இருந்து நமக்குத் தொடர் அழைப்புகள் வந்தது. ''கைது பண்ற அளவுக்கு பாஸ் என்ன தப்பு பண்ணிட்டார்?'' என்று நம்மிடமே கேள்விகளால் துளைத்தார்கள். ''செங்கமலத் தாயார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி விழாவில் மிகுந்த சந்தோஷத்தோடு பாஸ் பங்கேற்றார். அவரைக் கைது செய்ய இன்னும் யாரும் பிறக்கவில்லை'' என்று நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், கடந்த 21-ம் தேதி மதியத்துக்கு மேல் மன்னார்குடி பரபரப்பானது. ஏதாவது ஒரு புகாரை வைத்து திவாகரனை உடனே கைது செய்யுங்கள் என மேலிட உத்தரவு வர, போலீஸ், மன்னார்குடியைச் சுற்றிவளைத்தது. செங்கமலத் தாயார் கல்லூரி, திவாகரனுக்குச் சொந்தமான ரிஷியூர் பண்ணை, வீடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பைத் தீவிரம் ஆக்கியது. மஃப்டி உடையில் அப்பகுதி முழுக்க ஆங்காங்கே போலீஸ் உட்கார்ந்தனர்.
திவாகரனுக்கு எதிரான ஒரு புகாரை கையில் வைத்து இருந்தது போலீஸ். அந்தப் புகாரைக் கொடுத்தவர் ரிஷியூர் தமிழார்வன் என்பவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது திவாகரனுக்கும் ரிஷியூர் தமிழார்வனுக்கும் ஏற்பட்ட பகைதான் புகாராகப் பதிவானது. அவரை, திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைத்து அவருடைய கார் டிரைவரின் மனைவியின் பெயரில் ஒரு புகாரை வாங்கி நடவடிக்கையைத் தொடங்கி உள்ளனர்.

தமிழார்வன் புகார் கொடுத்ததும் ஐந்தாறு கார்களில் போலீஸார் கிளம்பினார்கள். முதலில்,

திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் கல்லூரிக்குச் சென்றார்கள். அவர்கள் உள்ளே சென்றதும் கேட் இழுத்து மூடப்பட்டது. கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே மாணவிகள் விடுதியும் உள்ளது. அங்கே செல்லக் கல்லூரித் தரப்பு மறுப்பு தெரிவிக்க, அவசர அவசரமாக மகளிர் போலீஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்தன. பின்னர், திவாகரன் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். கூத்தாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபடி எஸ்.பி.சேவியர் தன்ராஜ் உத்தரவிட்டபடி இருக்க, போலீஸார் அனைத்துப் பகுதிகளையும் சல்லடை போட்டு அலசத் துவங்கினர்.


கல்லூரியிலும் அவர் இல்லை. வீட்டிலும் இல்லை. அதனால், திவாகரன் அகப்படவில்லை. 'என்னதான் மேலிட உத்தரவு என்றாலும் திவாகரனுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. முதல் அமைச்சரின் கோபத்தையும், தொடர்ந்து அவர் எடுத்துவரும் நடவடிக்கைளையும் அனுதினமும் அப்டேட்-டாக சில அதிகாரிகள் திவாகரனிடம் கொடுத்து வருகிறார்கள். இதன்மூலம், கைதுக்கான வாய்ப்பு இருப்பதைத் தெரிந்துகொண்ட திவாகரன், அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகவே இருந்தார். போலீஸ் தன்னைக் கைது செய்யத் தயார் ஆகிவிட்ட தகவல் தெரிந்ததும் உஷாரான திவாகரன், காரில் தஞ்சாவூர் விரைந்தார். தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் மன்னை எக்ஸ்பிரஸில் ஏறிவிட்டார். இது, ரெய்டு போன போலீஸுக்குத் தெரியவில்லை'' என்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள். வந்த வேகத்தில் அவசரமாக இறங்கிய திவாகரன் காரின் 'ஹேண்ட் பிரேக்’கைக்கூட போடாமல் இறங்கி விட்டாராம். சற்று நேரத்தில் கார் தானாகப் பின்புறம் நகரத் தொடங்கி, பயணிகளைப் பதற வைத்தது... இன்னொரு காமெடி!

இந்த அளவுக்கு அவசரமாக திவாகரன் கிளம்பிப் போனது எங்கே? ஏன்? சென்னையில் யாரைச் சந்தித்தார்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்னமும் ரகசியமாகவே இருக்கின்றன.
செங்கமலத் தாயார் கல்லூரியில், வெள்ளி, சனிக்கிழமையில் கல்லூரிகளுக்கு இடையேயான 'பேப்பர் பிரசன்டேஷன்’ விழா நடந்தது. முதல் நாள் முழுமையாக இதில் திவாகரன் பங்கெடுத்தார். சனிக்கிழமை, 'போலீஸ் உங்களைத் தேடி வருகிறது’ எனத் தகவல் வர, திவாகரன் கல்லூரியைவிட்டு உடனே வெளியேறினார்.

திவாகரன் மீதான புகாரின் பின்னணியில் இருக்கும் தமிழார்வனிடம் பேசினோம். 'நான் 15 ஆண்டுகள் ரிஷியூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவன். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்தேன். பின்னர், 2008 -ம் ஆண்டு தி.மு.க.வுக்கு மாறினேன். இதுதான் திவாகரன்


என்மேல் கோபம்கொள்ள முக்கியக் காரணம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே சில அதிகாரிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி 27.05.2011 அன்று நான் இல்லாதபோது ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் நுழைந்து பதிவேடுகளை அவரது ஆட்கள் எடுத்துச் சென்றனர். இதைச் சட்ட ரீதியாக சந்தித்து வெற்றிபெற்றேன். இதனால், ஆத்திரம் அடைந்த சிலர் காவல் துறையினரின் உதவியுடன் என் மனைவியைக் கைது செய்தார்கள். ஊர்மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்த பின்னர், என் மனைவியை விடுவித்தார்கள். இன்னமும் என்னையும் என்னைச் சார்ந்தோரையும் தொல்லைப்படுத்துவது தொடர்​கிறது. இந்த அநியாயத்துக்கு முற்றுப்​புள்ளி வைத்தாக வேண்டும்'' என்றார்.

தமிழார்வனின் கார் டிரைவர் பாலசுப்பிரமணி​யத்தின் மனைவி கஸ்தூரியின் பெயரில்தான் புகார் வாங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்களும். ''நானும் என் கணவரும் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் குடியிருப்பதற்கு அரசாங்கம் நிலம் கொடுத்தது. அதில்தான் கூரைவீடு கட்டிக் குடியிருந்தோம். திவாகரன் தூண்டுதல் பேரில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், 28.11.11 அன்று நீடாமங்கலம் சந்தானராமசாமி கோயில் நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மன்னார்குடி காவல்துறைத் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் என் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர். புகார் அல்லது வழக்கு கொடுத்தால் நீயும் உன் கணவரும் உயிரோடு இருக்க முடியாது என மிரட்டினார்கள். பயந்துபோய் அப்போது நாங்கள் புகார் கொடுக்கவில்லை. இப்போது புகார் கொடுத்திருக்கிறோம்' என்றார். கஸ்தூரியின் புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி.சேவியர் தன்ராஜ், உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கொலை முயற்சி உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

திவாகரன் தரப்பு வழக்கறிஞர்களிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, 'ஏதும் பேச விருப்பம் இல்லை’ என்றனர்.கைது செய்யும் அளவுக்கு திவாகரன் மீது ஜெயல​லிதா கோபமானது ஏன் என்பதுதான் அ.தி.மு.க.வினரை ஆச்சர்யத்தோடு யோசிக்க வைத்திருக்கும் கேள்வி.

'எம்.நடராஜனுக்கு இப்போது முழு பக்கபலமாக இருப்பது திவாகரன். தஞ்சாவூரில் நடந்த எம்.நடராஜனின் தமிழர் கலை இலக்கிய விழாவில் குத்துவிளக்கு ஏற்றும் பொறுப்பு முதலில் திவாகரனிடம் கொடுக்கப்பட்டது. அங்கே அதிரடியாக சில விஷயங்களைப் பேசவும் திவாகரன் முடிவெடுத்து இருந்தார். இந்த தகவல், க்யூ பிராஞ்ச் அதிகாரிகள் மூலம் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. 'கட்சிக்கு எதிராக ஏதாவது பேசினால், அங்கேயே கைது செய்யுங்கள்’ என போலீஸுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தெரிந்துகொண்ட திவாகரன் விழாவில் கலந்து கொள்ளாமல் அமைதி காத்தார். அதே நேரம், முப்பதுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எல்.எல்.ஏ.க்களைத் தங்களுக்கு ஆதரவாகத் திரட்டும் வேலைகளிலும் திவாகரன் தீவிரமானார். இந்த எம்.எல்.ஏ.க்களை ஜெயலலிதாவுக்கு எதிராகத் திருப்பினாலே, கட்சியின் நிலைமை கவலைக்கிடம் ஆகிவிடும் என்பது திட்டம். இந்தத் தகவல்களும் கார்டனுக்கு அனுப்பப்பட்டன. இதுதான் ஜெயலலிதாவை இந்த அளவுக்கு உக்கிரமாக்க வைத்தது.

கார்டனைவிட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட​போது, ஜெயலலிதாவுக்கு எதிராக திவாகரன் ஆவேசமாகப் பேசியதையும் உளவுத்துறை ஏற்கெனவே மேலிடத்துக்கு அனுப்பியிருந்தது. அடுத்தடுத்து திவாகரனின் செயல்பாடுகள் இப்படியாக இருக்கவே, அதற்கு செக் வைக்கும் விதமாகத்தான் இந்த கைது உத்தரவு' என்கின்றனர் அ.தி.மு.க.வின் செல்வாக்குப் புள்ளிகள்.

கஸ்தூரியின் புகார் அடிப்படையில், திவாகரன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில், தன் தம்பிக்காக சசிகலா கலக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதுதான் நிஜம்.

No comments:

Post a Comment