Wednesday, February 1, 2012

அழகிரியைச் சிக்க வைக்கும் தாசில்தார் வழக்கு!

த்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 21 பேருக்குக் குற்றப்பத்திரிகை வழங்கப்​பட்டதை அடுத்து, சாட்சிகள் விசார​ணைக்கு முன்னேறுகிறது அழகிரி மீதான தாசில்தார் அட்டாக் வழக்கு!

சட்டமன்றத் தேர்தலின் போது, மேலூர் அருகே வல்லடிக்காரர் கோயி​லுக்கு தனது பரிவாரங்களுடன் ஓட்டுக் கேட்டு சென்றார் அழகிரி. அப்போது, அதைப் படம் பிடிக்கச் சென்ற மேலூர் தாசில்தார் காளிமுத்து, அழகிரியின் ஆட்களால் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக அழகிரி, மன்னன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவானது. பிறகு, ''என்னை யாரும் தாக்கவில்லை'' என்று அந்தர்பல்டி அடித்தார் காளிமுத்து. விசாரணை அதிகாரியான மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி மட்டும் கடைசிவரை உறுதியாய் நின்றார்.
'புகார் கொடுத்தவரே அதை மறுப்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். மேற்கொண்டு இன்ஸ்பெக்டர் மாடசாமி இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது’ என்று அழகிரி தரப்பிலிருந்து உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதனால், முன்ஜாமீனில் இருந்த அழகிரி உள்ளிட்டவர்கள் கைதாவதில் இருந்து தப்புவதற்காக ஜூன் 7-ம் தேதி மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான அழகிரி, மத்திய அமைச்சராக இருந்தாலும், தேர்தல் விவகாரம் என்பதால் சபாநாயகரின் அனுமதி தேவை இல்லை என்று முடிவு செய்து, ஆகஸ்ட் 24-ல் அதிரடியாக, அழகிரி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது போலீஸ்.

கடந்த நவம்பர் மாதம் மேலூர் கோர்ட்டிலிருந்து அழகிரி உள்ளிட்ட 21 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அப்போது அழகிரி இருக்கும் இடம் தெரியாததால், சம்மனை வழங்க முடியவில்லை. அழகிரி, பாராளுமன்ற கூட்டத் தொடரில் இருந்ததால் இரண்டாவது அனுப்பப்பட்ட சம்மனும் வழங்கப்பட வில்லை. அதனால், 'அழகிரி கட்டாயம் ஆஜராக வேண்டும்’ என்ற கண்டிப்புடன் ஜனவரி 19-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

இந்த முறையும் ஜகா வாங்கினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படலாம் என்பதால் 19-ம் தேதி மேலூர் கோர்ட்டில் ஆஜரானார் அழகிரி. காலை 11 மணிக்கு கோர்ட் வளாகத்துக்கு வந்தவர், அங்குள்ள

மரத்தடியில் சேர் போட்டு 10 நிமிடங்கள் அமர்ந்திருந்தார். பிறகு, அவர் தலைமையில் 21 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். எட்டு சான்று ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களைத் தொகுத்து 148 பக்கங்​களைக் கொண்ட குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. தேர்தல் விதிமுறை மீறல், சட்ட விரோதமாகக் கூடுதல், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பொது நோக்கத்துடன் கூடுதல், அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்து அடித்துக் காயப்படுத்துதல், உடன் இருந்து கொண்டு மற்றவர்களைத் தூண்டிவிட்டு அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்த்தல் உள்ளிட்ட செக்ஷன்கள் அழகிரி மீது பாய்ந்திருக்கிறன்றன.


இத்துடன், தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்ட சமயத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் வாக்குமூலத்தையும், காளிமுத்து தி.மு.க-வினரால் மிரட்டப்பட்டது தொடர்பாக நடத்திய விசாரணை விவரத்தையும் சேர்த்திருக்கிறார்கள். போலீஸ் வட்டாரத்தில், ''தாக்குதல் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளைப் பார்த்தாலே உண்மை நிலவரம் புரிந்து விடும். தாசில்தார் காளிமுத்து இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இனி உண்மையைச் சொல்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை'' என்றார்கள்.

இன்ஸ்பெக்டர் மாடசாமியோ, ''பிப்ரவரி 23-ம் தேதி இந்த வழக்கின் மறு விசாரணை வரும்போது, சாட்சிகள் விசாரணைக்கு சம்மன் அனுப்ப உத்தரவாகும். முதல் சாட்சியாக தாசில்தார் காளிமுத்துதான் சாட்சி சொல்வார். அவர் உண்மையைச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம். சொல்லாமல் போனாலும் அதைப்பற்றிக் கவலை இல்லை. முதலில் எனக்கு மிரட்டல் விட்டுப் பார்த்தார்கள். அதற்கு நான் பணியவில்லை என்றதும் தூது அனுப்பினார்கள். 'அண்ணனை மட்டுமாவது குற்றப் பத்திரிகையிலிருந்து நீக்கிவிடுங்கள்’ என்றார்கள். இதற்காக தி.மு.க-வில் உள்ள எனது உறவினர்கள் மூலமாகக்​கூட மிரட்டிப் பார்த்தார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் இந்த வழக்​கை விசாரித்து முடித்திருக்கிறேன். இனி, தீர்ப்பை எழுதவேண்டியது நீதிமன்றம்தான்'' என்றார்.

அழகிரி தரப்பிலோ, ''வேறு எதிலும் அண்ணனைச் சிக்க வைக்க முடியாது என்பதால் ஒன்றும் இல்லாத இந்த வழக்கை வைத்து அவருக்குக் குடைச்சல் குடுக்கப் பாக்குறாங்க. வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள நாங்களும் தயார்'' என்கிறார்கள்.

''ஒவ்வொரு செக்ஷனுக்கும் தனித்தனியாக தண்டனை அறிவித்தால், அழகிரிக்கு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்​டனை விதிக்கப்படலாம். சாட்சிகள் விசாரணை தொடங்​கினால், அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டு விடும்'' என்று படபடக்கிறது கோர்ட் வட்டாரம்!

No comments:

Post a Comment