Tuesday, February 7, 2012

தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!




ஆனைமுகனுக்குத் தம்பியாய் வந்த ஆறுமுகனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த பன்னிரு தோள்களைக் கொண்டவனே! பன்னிருகைப் பரமனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! செவ்வேள் முருகனே! திருமாலின் மருகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் தந்தருள வேண்டுகிறேன்.
* அம்மையப்பர் ஈன்றெடுத்த அருந்தவப்புதல்வா! தேன்சிந்தும் புது மலர்களை விரும்பி அணிபவனே! திருத்தணி முருகனே! கந்தனே! கடம்பனே! கார்த்திகேயனே! சூரபத்மனுக்கு வாழ்வு தந்த வள்ளலே! வெற்றிவீரனே! வள்ளிக்கு வாய்த்தவனே! வாழ்வில் தடைகளைப் போக்கி நல்வழி காட்டுவாயாக.
* குயிலைப் போல இனிய மொழி பேசும் தெய்வானை மணாளனே! வள்ளிநாயகியை காதல் மணம் செய்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! வடிவேலனே! விரைவில் என் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அருள்புரிவாயாக.
* மலைக்கு நாயகனே! மயிலேறிய மாணிக்கமே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் கரை சேர்ப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவனே! இன்னல்களைப் போக்கி வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நீயே தர வேண்டும்.
* உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொறுக்கும் குணக்குன்றே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கிலும் அருளாட்சி புரிபவனே! சரவணனே! சேவற்கொடியோனே! என் வசந்தத்தை வரவழைக்கும்படி சேவலைக் கூவச் செய்வாயாக.
* தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் உமைபாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பமெல்லாம் போக்கி, ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த குருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.
* தண்டாயுதபாணியே! சிங்கார வேலனே! ஒருமையுடன் தியானிக்கும் பக்தர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்த என் ஆண்டவனே! எனக்கு நல்லறிவையும், மதிநுட்பத்தையும் கொடுப்பாயாக.
* வேதத்தின் உட்பொருளே! அழகில் மன்மதனை வென்றவனே! பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரப்பெருமானே! தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! சரவணப்பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு கனி ஈந்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.
* சண்முகப்பெருமானே! நான் மட்டுமல்லாமல், என்னைச் சேர்ந்தவர்களான மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் உன் அன்பர்களாக வாழச் செய்வாயாக. உன்னருளால் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

முருகன் பாடல்கள்

தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடி வளம் பல பெறுங்கள்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்று ஓதுவார் முன்.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்த வேலுண்டே துணை.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.

ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!

No comments:

Post a Comment