Wednesday, February 1, 2012

இசைஞானி நல்லா இருக்கார்... எங்க அண்ணனைக் காணோம்! இளையராஜா பற்றி கங்கை அமரன் ஆதங்கம்

‘பதினாறு வயதினிலே’ படத்தின் ‘செந்தூரப் பூவே... செந்தூரப் பூவே...’வை மறக்க முடியுமா? எஸ்.ஜானகிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த அந்தப் பாடலின் மூலம்தான் கங்கை அமரன் என்கிற பாடலாசிரியரை தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாரதிராஜா. நீண்ட இடைவெளி விட்டு இப்போது பாரதிராஜாவுடன் கை கோர்த்திருக்கிறார் கங்கை அமரன்.

பாரதிராஜாவின் ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் அமரன். ‘அண்ணன் இளையராஜாவுடன் அமரனுக்கு உறவு சரியில்லை; மனைவி ஜீவா இறந்த சமயம் கங்கை அமரனிடம் இளையராஜா கடுமையாக நடந்து கொண்டார்’ என்றும், ‘கங்கை அமரன் தன் குடும்பத்தினரைப் பிரிந்து தனியாக வாழ்கிறார்’
என்றும் தகவல்கள். கங்கை அமரனைச் சந்தித்தோம்...

‘‘இன்னிக்கு தமிழர்களால மீட்கப்படணும்னு சொல்லப்படற தேவிகுளம், பீர்மேடு மலையடிவாரத்துல பிறந்த குடும்பம் எங்கது. பாவலர் அண்ணன் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பாடுன பிரசாரப் பாடல்கள்தான் எங்களுக்கான இசை மூலம். மேடையில அவருக்கு கிடைச்ச கைதட்டல்கள், அண்ணனைப் போல பாடணும்ங்கிற ஆசையை அப்பவே என் மனசுல விதைச்சுது. 13 வயசுலயே நான் எழுதின பாடலை மேடையில அண்ணன் பாடியிருக்கார்.

அந்தச் சமயத்துலதான் மலேரியா இன்ஸ்பெக்டரா எங்க ஊருக்கு வந்தார் பக்கத்து ஊர்க்காரரான பாரதிராஜா. சினிமாத் தேடல்ல இருந்த அவரும் இசைத் தேடல்ல இருந்த நாங்களும் சந்திச்சது பெரியவங்க செஞ்ச புண்ணியமா இருக்கணும். ராஜாண்ணா, பாஸ்கரண்ணா, பாரதிராஜா மூணு பேரும்தான் முதல்ல சென்னைக்கு வண்டி ஏறுனாங்க. வாடகைக்கு மயிலாப்பூர்ல ஒரு வீட்டைப் பிடிச்சு இருந்தவங்களுக்கு ஓட்டல்ல சாப்பிட்டு கட்டுபடியாகலை. அவுங்களுக்கு சமைச்சு, துணி

மணியெல்லாம் துவைச்சுப் போடறதுக்கு ஒரு ஆள் தேவைப்பட, ஊருல சும்மா இருந்த நான் சென்னை வந்தேன். எனக்குத் தெரிஞ்ச சமையலைப் பண்ணிட்டு, நேரங்கிடைக்கிறப்ப எதையாச்சும் எழுதிட்டே இருந்தேன்.

அவங்க வாய்ப்புக்காக அலைஞ்ச நாட்களும் பிறகு ஜெயிச்ச கதையும் உலகம் அறிஞ்சதுதான். இளையராஜாவும் பாரதிராஜாவும் பிரபலம் ஆயாச்சு... இந்த கங்கை அமரன், அண்ணன் பேச்சை மீறாம அவரோட டீம்ல கிடார் வாசிச்சிட்டிருந்தேன். ‘இவனும் பாட்டு எழுதுவான்யா’ன்னு நம்பி வந்த வாய்ப்புதான் ‘செந்தூரப் பூவே...’. முதல் பாட்டே தேசிய விருது. தொடர்ந்து முழுசா பாட்டெழுதுன படங்களும் வெளியாச்சு. ‘அம்மன் கோவில் கிழக்காலே’ மாதிரி சில படங்களுக்கு அத்தனை பாட்டுகளையும் எழுதுனேன். பிறகு தக்கிமுக்கி தனியா மியூசிக் பண்ற அளவுக்கு வந்தாச்சு. ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்துக்கு முதன்முதலா இசையமைச்சேன். இந்த அவதாரமெல்லாம் முடிஞ்ச பிறகுதான் டைரக்டர் ரோல். பிரபு ஹீரோவா அறிமுகமான ‘கோழி கூவுது’ முதல் படம். விஜியும் அதுலதான் அறிமுகம்.


அந்தப் படத்தை ரீ ரெக்கார்டிங்குக்கு முன்னால பார்த்துட்டு, ராஜாண்ணா திட்டுன திட்டு இப்பவும் மறக்க முடியாதது. ‘என்னடா படம் பண்ணியிருக்க’ ன்னு கத்தி, சில மாற்றங்களைக் கூட பண்ணச் சொன்னார். ஆனா, ‘என்னோடது இதுதான், வர்றது வரட்டும்’னு அதுக்கு மறுத்துட்டேன். கடவுளோட கருணையில படம் வெள்ளி விழா கண்டுச்சு. அப்படியே இருபது படங்களுக்கு மேல இயக்கியாச்சு. பாதிக்கு மேல ஹிட். அதுல எவர்கிரீன் ‘கரகாட்டக்காரன்’. அதோட வெற்றி எனக்கு அமைஞ்ச வரம். ஆனாலும் தொடர்ந்து படம் இயக்காம இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராவும் தான் போயிட்டிருந்துச்சு வாழ்க்கை. ஏன் எதுக்குங்கிற காரணமெல்லாம் தெரியலை. எல்லாத்தையுமே அது போற போக்குலயே ஏத்துக்கிடவும் பழகியிருந்தேன் நான்.

இசையில ராஜா அண்ணன் மாதிரி வர முடியலைன்னாலும் அவர்போல எங்கயும் போய் முறையா இசையைக் கத்துக்காமலே, 200 படங்களுக்கு மேல இசையமைச்ச திருப்தி மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ரஜினி, கமல்னு எல்லாருக்கும் பாட்டெழுதியாச்சு. லதா மங்கேஷ்கர், ஆஷா போன் ஸ்லே ரெண்டு பேருமே முதன்முதலா என் பாட்டைப் பாடித்தான் தமிழ் உச்சரிச்சாங்க. இன்னொருபுறம் என் பையன் வெங்கட் பிரபுவோட மிருதங்க அரங்கேற்றத்துக்கு பேச முடியாத சூழல்லயும் முதலைமைச்சரா இருந்த எம்.ஜி.ஆர் வந்து கலந்துக்கிட்டார். சென்னையில சில சாலைகளுக்கு இசைக்கலைஞர்கள் பேரை வச்சது அந்த நிகழ்ச்சியிலதான். நான் எழுதுன மெலடி பாடல்கள் காலங்களைத் தாண்டி இப்பவும் இளைஞர்களால விரும்பப்படுது.

இன்னொரு புறம், ‘வாழ்க்கைய யோசிங்கடா’, ‘விளையாடு மங்காத்தா’ன்னு இந்தத் தலைமுறைக்காகவும் எழுதி ஹிட் தந்தாச்சு. பசங்கள்ல ஒருத்தன் டைரக்டராகவும், இன்னொருத்தன் நடிகராகவும் அவங்கவங்க திறமையைக் காட்டுறாங்க. இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு? ‘சைல்டு வெல்ஃபேர் ஃபவுண்டேஷன்’ங்கிற அமைப்பு மூலமா ஆதரவற்ற குழந்தைகளோட வளர்ச்சிக்காக நேரத்தைச் செலவிடலாம்னு இருக்கேன்’’ என்கிறார் கங்கை அமரன்.

‘‘துக்க வீட்டில் கூட கடிந்து கொள்ளுமளவுக்கு அண்ணனுடன் என்னதான் பிரச்னை?’’

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine  Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘‘அண்ணன் தம்பி சண்டையெல்லாம் வீட்டுக்கு வீடு இருக்கிறதுதான். தம்பியைத் திட்டாத அண்ணனும் இருப்பாங்களா என்ன? ஆனா, உரிமையா திட்டுனாருன்னா சந்தோஷமா ஏத்துக்குவேன். திட்டறதுக்காவது எங்கூடப் பேசுறாரேன்னு மனசுக்கு நிறைவா இருக்கும். ‘உங்களுக்குள்ள என்னதான் பிரச்னை’ன்னு கேக்கறவங்களுக்கு சுருக்கமா நான் சொல்றது இதுதான்... ‘பண்ணப்புரம் தெருக்கள்ல ஒண்ணா விளையாடிட்டிருந்த காலத்துல இருந்த என் ராஜாண்ணாவை, மயிலாப்பூர்ல பொங்கிச் சாப்பிட்டுட்டு சுத்துன காலத்துல இருந்த எங்க அண்ணனை இப்ப காணோம்’! இசைஞானி இளையராஜா நல்லா இருக்கார்.

நம்மகிட்டயும் பாசமா, அக்கறையா இருக்கணும்னு அவரைச் சுத்தி இருக்கிறவங்க எதிர்பார்க்கறதுல என்ன தப்பு? காசு, பணம் வேண்டாம், நாலு வார்த்தை பேசக்கூடவா நேரமிருக்காது? ஏதாவது விசேஷம்னா எல்லாரும் ஒண்ணா கூடி கலகலப்பா இருக்கறது எல்லாக் குடும்பங்கள்லயும் நடக்கறதுதானே? எங்க வீட்ல அந்தக் கொடுப்பினை இல்லை. பாவலரண்ணா, பாஸ்கரண்ணா வீட்டுல பேரக் குழந்தைங்க பேர்கூட ராஜாண்ணாவுக்குத் தெரியுமான்னு சந்தேகமா இருக்கு. அவர் அந்த மாதிரி இருக்கறவர் இல்லை. ஏனோ ஒட்டாம இருக்கார். கொஞ்சம் ஆறுதலுக்கு சித்தப்பா பெரியப்பா புள்ளைங்க கொஞ்சம் ஒத்துமையா இருக்காங்க.’’

‘‘சரி, உங்க வீட்டுல என்ன பிரச்னை?’’

‘‘ஒரு பிரச்னையும் இல்லையே. ஆரம்பத்துல ராஜா அண்ணாமலைபுரத்துல இருந்தோம். அங்கிருந்து இடம்பெயர வேண்டிய ஒரு சூழல். இப்ப திரும்ப மந்தைவெளியில வீடு கட்டிட்டு இருக்கோம். ஆனி மாதம் கிரஹப்பிரவேசம். ரெண்டு ஏரியாவோட பின்கோடும் பையன் படத்துப் பேரான ‘சென்னை28’தான். ஒரே பேத்தியான ஷிவானி நல்லா பாடுறது மனசுக்கு சந்தோசமா இருக்கு. பிரேம்ஜிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்ங்கிறதுதான் உடனடி ஆசை. நாங்க சில பொண்ணுகளைப் பார்த்தோம். அவனும் சில பொண்ணுகளைக் காமிச்சான். எதுவும் அமையலை. ஆனா எப்படியாச்சும் இந்த வருஷம் கால்கட்டு போட்டுடணும்.’’

‘‘பார்ட்டியையும் உங்க பசங்களையும் பிரிக்க முடியாது போல?’’

‘‘நாங்களும் பார்ட்டி பார்த்தவங்கதான். மீடியா வெளிச்சம் இன்னிக்கு அளவுக்கு இல்லாததால அன்னிக்கு நாங்க தப்பிச்சோம். ஆனா, இப்ப உள்ள பசங்களுக்கு கமுக்கமா பார்ட்டி கொண்டாடவும் தெரியலை; பார்ட்டியில ஏதாச்சும் கசமுசா நடந்தா அதை கமுக்கமா அமுக்கவும் தெரியலை. விடுங்க... என்ஜாய் பண்ணிட்டுப் போறாங்க!’’

No comments:

Post a Comment