ரிலையன்ஸ் நிறுவனம்தான் சர்ச்சைகளை உருவாக்குகிறதா அல்லது சர்ச்சைகள்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறதா என்கிற கேள்விக்கு பதிலே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் சர்ச்சை இயற்கை எரிவாயு வடிவத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.
இந்த சர்ச்சையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா - கோதாவரி 6-வது படுகையில் ஒரு நாளைக்கு 80 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டர் (எம்.எம்.எஸ்.சி.எம்.டி.) இயற்கை எரிவாயு எடுப்பதற்கான உரிமையை மத்திய அரசிடமிருந்து பெற்றது ரிலையன்ஸ் நிறுவனம்.இப்பகுதியில் மொத்தம் 31 கிணறுகள் தோண்டலாம். ஆனால், இதுவரை 22 கிணறுகளை மட்டுமே தோண்டி இருக்கிறது. அவற்றுள், 18 கிணறுகளில் இருந்துதான் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது.ஆரம்பத்தில் இந்த கிணறுகளிலிருந்து 70 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. இயற்கை எரிவாயுவை எடுத்தது. ஆனால், இன்றைக்கு வெறும் 37 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. இயற்கை எரிவாயுவை மட்டுமே எடுக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களில் இது 22 எம்.எம்.எஸ்.சி.எம்.டி.யாக குறையலாம் என்கிறது ரிலையன்ஸ்.எந்த நிறுவனமாக இருந்தாலும் காலம் செல்லச் செல்ல உற்பத்தியை அதிகரிப்பதே வழக்கம். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டே போகிறதே, என்ன காரணம்? எரிவாயு கிடைக்கவில்லையா அல்லது அதை எடுக்க ரிலையன்ஸுக்கு மனசில்லையா? இந்த கேள்வியை பலரும் கேட்கத் தொடங்கியதே சர்ச்சையின் ஆரம்பம்.
''இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்தது மிகவும் சீரியஸான பிரச்னை. இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்'' என்று சமீபத்தில் எச்சரித்திருக்கிறார் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் புவியியல் காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியவில்லை என்கிறது ரிலையன்ஸ். எல்லா கிணறுகளையும் தோண்டாமல் உற்பத்தி குறைவதாகச் சொல்வது சரியில்லை என்கிறது மத்திய அரசு.இயற்கை எரிவாயுவிற்கு தற்போது தரப்படும் விலை (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (MMBTU) 4.2 டாலர். 'இந்த விலை எங்களுக்குப் போதாது’ என்று மத்திய அரசிடம் கேட்டது ரிலையன்ஸ். ஆனால், 2014-ம் ஆண்டு வரைக்கும் விலையை உயர்த்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி ரிலையன்ஸின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு உற்பத்தியை மேலும் குறைத்திருக்கிறது ரிலையன்ஸ்.
இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
'தற்போது உலகச் சந்தையில் மூன்று முதல் நான்கு டாலருக்கு மேல் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு விற்கப்படுகிறது. ஆனால், ரிலையன்ஸுக்கு கிடைக்கும் தொகையோ 4.2 டாலர். தற்போதைய நிலையிலே மார்க்கெட் விலையைவிட அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. இருந்தும், இன்னும் அதிக விலை வேண்டும் என்று சொல்லி ரிலையன்ஸ் உற்பத்தியைக் குறைக்கக்கூட செய்யலாம்.இயற்கை எரிவாயுவை சரியாக பயன்படுத்தினால் மின்தட்டுப்பாடு உள்பட பல பிரச்னைகளுக்கு நம்மால் எளிதாக தீர்வுகாண முடியும். மத்திய அரசு இது தொடர்பாக கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருவது நாட்டுக்கு நல்லது.
No comments:
Post a Comment