சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்யும் கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த ஒருசிலரில் பிரகாஷ்ராஜ் ஒருவர். ‘டூயட் மூவீஸ்’ என்ற படத்தை தொடங்கி, அறிமுக இயக்குனர்கள் தனது பட நிறுவனத்தின் மூலம் வாய்ப்புக் கொடுத்து வருகிறார். அதேபோல தரமான படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தரமான நடிப்புக்காக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஏழை நெசவுத் தொழிலாளியாகி இவர் நடித்த ‘காஞ்சிபுரம்’ திரைப்படம் இவருக்கு தேசியவிருதை வாங்கிக்கொடுத்தது. நடிப்பின் உச்சம் திட்ட பிரகாஷ்ராஜ், தனது திரைவாழ்க்கையின் அடுத்த படியான திரை இயக்கத்திலும் கால்வைத்தார். தமிழில் இவர் தயாரித்து நடித்த ‘அபியும் நானும்’ படத்தை கன்னடத்தில் இயக்கினார்.
தற்போது தமிழில் ’தோனி’ என்ற படத்தை நேரடியாக இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் இசைவெளியிட்டு விழாவிற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜின் குருவான இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். வந்தவர் பிரகாஷ்ராஜின் நிறைகளை பாராட்டிய அதேநேரம், அவரது குறைகளையும் பட்டவர்த்தனாமாக மேடையில் போட்டு உடைத்து, அவரை விமர்சிக்க… பார்வையாளர்கள் தரப்பில் இருந்து “அதான்யா பாலச்சந்தர்” என்று குரல்கள் எழுந்தன. அப்படி என்னதான் பேசினார் கே.பி.?! அவர் பேசியது இதுதான்…
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ், படப்பிடிப்பு காலை 6 மணிக்கு என்றால் 10 மணிக்கு வருவதும், சில சமயங்களில் வராமலே போவதையும் கேள்விப்பட்டு எனக்கு கோபம்,கோபமாக வரும்! என்னிடம் இன்னமும் பணிவாகத்தான் இருக்கிறான். அவன் பீக்கில் இருந்தபோது அவனை எனது டி.வி., சீரியலில் நான் நடிக்க வைத்ததை பார்த்து பலரும் பலவாறாக டி.வி சீரியலில் நடிக்காதே என அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவன், “அவர் என் குருநாதர்., அவர் மேலே இருந்து கீழே குதி என்றால் நான் குதிப்பேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான். இதை நான் கேள்விப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதே நேரம் பிற தவறுகளையும் அவன் திருத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment