Friday, October 14, 2011

அக்டோபர் 13 - உலக பார்வை தினம்


ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை, ' உலக பார்வை தினம்' ஆக அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளில் உலக சுகாதார நிறுவனத்தால் World Health Organization) பிரகடப்படுத்தப்பட்ட இந்தத் தினத்தையொட்டி, சர்வதேச அளவில் விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பார்வை குறைப்பாட்டைத் தவிர்க்க உலக சுகாதார மையத்தின் 'விஷன் 2020: ரைட் டு சைட்' என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக முக்கியத்துவம் பெறும் இந்த தினத்தின் நோக்கமே 'பார்வையற்றோர் மற்றும் பார்வைத்திறனில் குறைபாடு உள்ளோர்' மீது உலக மக்களது கவனத்தைக் கொண்டு செல்வதுதான்.

உலக சுகாதார அமைப்பு கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் மக்களிடம் சர்வே எடுத்துள்ளது. அதன்படி, உலக அளவில் கிட்டத்தட்ட 285 மில்லியன் மக்கள் பார்வைத்திறனில் பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதில் 246 மில்லியன் மக்கள் குறைந்த பார்வைத் திறன் உள்ளவர்களாகவும், 39 மில்லியன் மக்கள் முழுவதுமாகவே பார்வையற்றவர்களாக உள்ளனராம்.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வேக்களைப் பொறுத்தவரை, கடந்த இருபது ஆண்டுகளில் பார்வைத்திறன் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவிக்கின்றது.

தற்பொழுது, பார்வை குறைபாடு உள்ளவர்களில் 80 சதவிகிதத்தினர் குணப்படுத்தக்கூடிய நிலையில்தான் உள்ளனர். இருந்தபோதிலும், போதிய விழிப்பு உணர்வு இல்லாததால் தங்களுடைய பிரச்னை சரி செய்யக்கூடியது தான் என்பதை அறியாமலே உள்ளனர். குணப்படுத்த முடியாத பிரச்னைகள் தவிர பெரும்பாலும் சத்துக்குறைவு, முதுமை, விபத்தினால் ஏற்படும் பார்வை இழப்பு போன்றவைதான் பார்வையற்றவர்கள் உருவாக காரணம்.

பார்வைக் குறைபாடு உள்ளவர்களில் 82 சதவிகிதத்தினர் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர் - சிறுமியர் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு உள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

அதிக நேரம் டி.வி., கம்ப்யூட்டர் முன்னாலே இருக்கும் குழந்தைகளது விழிகள் விரைவில் சோர்ந்து விடுவதுடன் டியூஷன், கோச்சிங் கிளாஸ் என்று கொஞ்ச நேரம்கூட விழிகளுக்கு ஓய்வே தராமல் இருப்பது எல்லாம் சேர்ந்து, பார்வைத் திறனில் குறைபாடு உண்டாக காரணமாக இருக்கின்றது.

சின்னச் சின்ன டிப்ஸ்களை பெற்றோரும், ஆசிரியர்களும் கையாண்டாலே பிள்ளைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கவும், ஒருவேளை ஏற்கனவே குறைபாடு இருக்கின்றதா என்று தெரிந்துகொள்ளவும் முடியும்.

பெற்றோர்களுக்கு...

1. பிள்ளைகள் ஆசைப்படுகின்றார்கள் என்பதற்காக ஜங்க்-ஃபுட் அயிட்டங்களாக வாங்கித்தராமல், கீரை காய்கறிகள் போன்றவற்றை உண்ணவும் பழக்கப்படுத்துங்கள்.

2. டி.வி, கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பார்க்கும் குழந்தைகள் அமர்வதற்கு எது சரியான தூரம், எவ்வளவு நேரம் அவற்றில் செலவிடலாம் என்பதை கண்டிப்பு கலந்து சொல்லிக்கொடுங்கள்.

3. வகுப்பறையில் கரும்பலகையில் இருந்து சரியான தூரத்தில் அமர்ந்துள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

4. நண்பர்களுடன் விளையாடும் பொழுது கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட சொல்லித்தாருங்கள்.

5. எல்லாவற்றிர்க்கும் மேலாக, அசாதாரண பிரச்னை என்று தெரிந்தால், உடனே சரியான மருத்துவரை அணுகுங்கள்.

6. சிறுவர் - சிறுமிகளை இருசக்கர வாகனங்களில் கொண்டுசெல்லும்போது கூலர்ஸ் அணிவிக்க தவறாதீர்கள். நம் சாலைகளின் தூசு மாசுகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

புத்தகத்தில் உள்ளதையே மறுபடி மறுபடி சொல்லி போரடிக்காமல், அவ்வப்போது பிள்ளைகளது நலனிலும் அக்கறை செலுத்த விரும்பும் ஆசிரியர்களுக்கு..

1. நீங்கள் கரும்பலகையில் எழுதும் எழுத்துக்களை பிள்ளைகளால் சரியாக பார்க்க முடிக்கின்றதா என்பதை கவனியுங்கள்.

2. மாணவர்கள் யாருக்கேனும் கண்களில் பிரச்னை இருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் பெற்றோருக்கு தகவல் தெரிவியுங்கள்.

3. பெற்றோர்கள் சொல்லும் எதையும் அலட்சியம் செய்யும் பிள்ளைகள், நீங்கள் சொன்னாலோ "எங்க மிஸ் சொன்னாங்களே" என்று அக்கறையுடன் செய்வார்கள். எனவே, கண்களின் நலனுக்கென உள்ள பயிற்சிகள் சொல்லித் தருவதுடன், தொடர்ந்து செய்ய அறிவுறுத்துங்கள்.

4. எல்லாவற்றையும் விட முக்கியமாக, கண்தானம் பற்றிய விழிப்புணர்வை சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

கண்களின் பாதுகாப்பை தொட்டில் பழக்கமாக பிள்ளைகள் கற்றுக்கொண்டார்கள் என்றால் வருங்காலத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களே இல்லை என்ற சமுதாயம் நிச்சயம் உருவாகும். 'கண்ணை விற்று ஓவியம் வாங்கிப் பயனில்லை' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் நலம்.

No comments:

Post a Comment