Monday, October 17, 2011

அமைதியாக நடந்தது உள்ளாட்சித் தேர்தல்; நகர்பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தம்!

சென்னை, அக்.17,2011

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடந்தது. நகர்பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. கிராமங்களில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையாற்றினர்.

சென்னை உள்பட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு திங்கட்கிழமை காலை 7 மணியில் தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒரு சில இடங்களைத் தவிர, தமிழகம் முழுவதுமே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

எந்திரங்களில் இருந்த கோளாறு காரணமாக, சில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

மாநகராட்சி, நகராட்சிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

சென்னையில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடியால் வாக்காளர்கள் தவித்தனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வீடியோக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், எண்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வீடியோ கேமராக்கள் வைக்கப்படவில்லை என்றும் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். அதேபோல், அதிமுகவினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக கூறிய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், வாக்கு எண்ணும் அனைத்து மையங்களிலும் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சென்னை - ஸ்டெல்லா மேரி கல்லூரியில் வாக்களித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சரிசெய்யபட்டுள்ளது. பேரவைத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை கோபாலபுரத்தில் வாக்களித்த திமுக தலைவர் கருணாநிதி, "தமிழக அரசைப் போலவே வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்களும் இயங்கவில்லை," என்று குறைகூறினார்.

"முறையாக வாக்குப்பதிவு நடைபெறாத இடங்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்," என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் குண்டர்களின் உதவியுடன் அதிமுகவினர் கள்ள ஓட்டுகள் போட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த ஆட்சியில் ஆளும் கட்சி மீது கூறப்பட்ட புகார்கள் நீடிக்கின்றன என்றும், பூத் சிலிப் வழங்கியதில் மிகுந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது," என்றும் கூறினார்.

இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (புதன்கிழமை) 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தப் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அன்று மதியமே முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment