Saturday, October 15, 2011

அத்தனை பேரும் அன் - அப்போஸ்டு!

நாலுகோட்டை நல்லாட்சி தேர்தல்!

'பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏலத்தில் விற்பனை, வாக்கு சேகரிப்பதில் அண்ணன் தம்பிகளுக்குள் குத்து​வெட்டு, பதற்றமான வாக்குச் சாவடி​களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு...’ - என எந்தக் களேபரமும் இல்லாமல், நாலுகோட்டை பஞ்சாயத்துத் தலைவரும் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்களும் போட்டி இன்றித் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்!
சிவகங்கை யூனியனில் உள்ள நாலுகோட்டை பஞ்சாயத்தில், 1965-ல் ராமநாதன் என்பவர் தலைவரானார். தனது சேவைகளால் இந்தப் பஞ்சாயத்தை ஒரு முன்மாதிரி பஞ்சாயத்தாக மாற்றிக் காட்டியதால், 2001-ம் ஆண்டு வரை தொடர்ந்து தலைவராகவே இருந்தார். 2006-ல் பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் ராமநாதனின் மனைவி காளியம்மை தலைவ​ரானார். இரண்டு வருடத்தில் அவர் இறந்ததால், அடுத்த மூன்று வருடங்​களுக்கு ராமநாத னின் மருமகள் ராஜேஸ்வரியைப் போட்டியின்றி தலைவராகக் கொண்டு​வந்தார்கள் மக்கள்.
இரண்டு முறை மாவட்டத்தின் சிறந்த ஊராட்சிக்கான விருது, அனைவருக்கும் பொது மயானம் அமைத்துத் தீண்டா​மையை ஒழித்ததற்காக சமத்துவ மயான ஊக்க விருது, முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சிக்கான மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது, சிறந்த ஊராட்சித் தலைவருக்கான மாநில அரசின் உத்தமர் காந்தி விருது... என விருதுகளைக் குவித்திருக்கிறது நாலுகோட்டை பஞ்சாயத்து.
''சிட்டிங் தலைவரான எங்க அண்ணி ராஜேஸ்வரியும் என் மனைவி மாசிலாமணியும் தலைவர் பதவிக்கு மனு கொடுத்திருந்தாங்க. 'உள்ளூர்ல இருக்கிற மாசிலாமணி வரட்டுமே’னு ஊர்ப் பெரியவர்கள் கேட்டுக்கிட்டதால எங்க அண்ணி வேட்பு மனுவை வாபஸ் வாங்கிட்டாங்க. இதே மாதிரி, 'எல்லா வார்டுலயும் நீ யாரைச் சொல்றியோ அவங்களே மெம்பரா இருக்கட்டுமப்பா’னு சொல்லிட்டாங்க. இந்திரா நகரில் மட்டும் ரெண்டு பேர் போட்டிக்கு வந்தாங்க. கூட்டம் போட்டு பேசி அதையும் சரி பண்ணிட்டோம்...'' பெருமையோடு சொன்னார் ராமநாதனின் இளைய மகன் மணிகண்டன்.
''பொதுமக்களுக்கு சேவை செய்யுற​வங்க மட்டும்தான் இந்தப் பொறுப்புக்கு வரணும்னு திட்டமிட்டுத்தான் நாங்க இந்த முடிவை எடுத்திருக்கோம். நான் உள்பட யாருடைய செயல்​பாடு சரியில்லைன்னு மக்கள் நினைக்​கிறாங்​களோ... அந்த நிமிஷமே பதவியை ராஜினாமா பண்ணிட்டு மத்தவங்களுக்கு வழி விட்டுறணும்னு முடிவு எடுத்திருக்கோம்...'' என்று தெளிவாகச் சொல்கிறார் தலைவர் பதவிக்குத் தேர்வாகி இருக்கும் மாசிலாமணி.
நாலுகோட்டையின் தலைமுறை தாண்டிய இந்த நல்லாட்சி தொடரட்டும்!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
உள்ளாட்சி யானை... குருடர்களாக மக்கள்!


''உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கட்சிகளின் கூட்டணி விளையாட்டு​களும் தேர்தல் கசமுசாக்களும்தான் மக்களின் நினைவுக்கு வருகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் என்பது, சாதாரண மக்களுக்குக் கிடைத்திருக்கும் அசாதாரண உரிமை. யானைக்குத் தெரியாத அதன் பலத்தைப் போலத்தான் உள்ளாட்சி அதிகாரம் பற்றி மக்களுக்குத் தெரியவில்லை...'' என்று சொல்கிறார் பேராசிரியர்.க.பழனித்துரை. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் க.பழனித்துரை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரம் குறித்து எழுதியும் பேசியும் வருபவர். சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும், புதிய பஞ்சாயத்து அரசாங்கம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம், கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு, சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், அதிகாரப் பரவலின் அடிப்படைகள் என்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகிறார்.
''உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி. ஏதோ பணம் வாங்கி, சாலை போடு​வது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது இவைதான் உள்ளாட்சியின் பணிகள் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு கிராமத்தையே தலைகீழாகமாற்றிக்காட்டும் சாதனையை உள்ளாட்சி செய்ய முடியும். உதாரணமாக இந்தியாவில் 53 சதவிகித கிராமப் பெண்களுக்கு ரத்தசோகை இருக்கிறது. அந்தப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். இதுபோன்று ஒவ்வொரு கிராமத்துக்கும் இருக்கும் பிரத்தியேகப் பிரச்னைகளை உள்ளாட்சிகளே அரசுத் துறைகளைப் பயன்படுத்தி தீர்த்துவிட முடியும்.
ஐந்து ஆண்டுகளில் ஓர் ஊராட்சி தன் நலனுக்காகக் கிட்டத்தட்ட 7 கோடி வரை செலவழிக்க முடியும். கடந்த தி.மு.க ஆட்சியில் மட்டும் 369 திட்டங்கள் இருந்தன; மத்திய அரசின் திட்டங்கள் 99. இவை அனைத்தையும் முறையாக நம் பஞ்சாயத்துகள் பயன்படுத்தியதா, பயன்படுத்துகின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
நமது உள்ளாட்சி, கிராமப் பஞ்சாயத்துகள், வட்டாரப் பஞ்சாயத்துகள், மாவட்டப் பஞ்சாயத்துகள் என்று மூன்றடுக்கு கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பஞ்சாயத்தும் மாவட்டத் திட்டக்குழுவும் இருக்கும். இந்த திட்டக்குழு செம்மையாகச் செயல்பட்டது என்றால், ஊழல்களைக் குறைத்து கிராமங்களின் தேவைகளை கிராமங்களே நிறைவு செய்ய முடியும். கேரளாவில் இந்த மாவட்டப் பஞ்சாயத்துகளும் மாவட்டத் திட்டக்குழுவும் சிறப்பாகச் செயல்படுகின்றன. எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட பல நிதிகள் இந்த மாவட்டப் பஞ்சாயத்துகள் மூலம்தான் செலவழிக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்துகள், வட்டாரப் பஞ்சாயத்துகளை விரும்புகிற அளவுக்கு அரசியல் கட்சிகள் மாவட்டப் பஞ்சாயத்துகளை விரும்புவதில்லை.
73-வது அரசியல் சட்டத் திருத்தச் சட்டத்தை ஒட்டித்தான் பஞ்சாயத்துராஜ் முறை அமலாக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் மிகத்தெளிவாக, உள்ளாட்சி என்பது சுயாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரப்பரவல் சட்டங்களின் மூலம் நடைபெற வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால், தமிழக அரசு 1994-ல் உருவாக்கிய உள்ளாட்சி சட்டமோ, உள்ளாட்சியை ஆலோசனை கூறும் அமைப்பாகவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும், அதிகாரிகளின் கீழ் இயங்கும் அமைப்பாகவும் மாற்றிவிட்டது. பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களும்கூட, சட்டத்தின் மூலம் வழங்காமல், அரசு ஆணைகள் மூலம் வழங்கப்பட்டன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிக்க வேண்டியதும் மாநில அரசின் கடமை. ஆனால், பஞ்சாயத்துத் தலைவர்கள் எப்படி அரசு அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றுதான் தமிழக அரசு பயிற்சி தந்தது.
ஆனால், மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டால் மாநில அரசும் அரசியல் கட்சிகளும் உருவாக்கி வைத்திருக்கும் தடைகளைத் தாண்டி உள்ளாட்சிகளால் சிறப்பாகச் செயல்பட முடியும். ஏனெனில், ஒரு கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அரசியல் சட்டத் திருத்தம் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
நம் நாட்டில், தலித் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராவதோ, நாடாளுமன்ற உறுப்பினராவதோ, அமைச்சர்​களாக வருவதோ, ஜனாதிபதியாக வருவதோ, மிகப்பெரிய சாதனை அல்ல. சாதிய அதிகாரம் உறைந்துபோயுள்ள உள்ளாட்சியில் அதுவும் கிராமப் பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்குப் பெண்கள் வருவதும், தலித்கள் வருவதும்தான் சாதனை.
மழை நீர் சேகரிப்பானாலும் சரி, பாலிதீன் இல்லாத கிராமத்தை உருவாக்குவதானாலும் சரி; குடிசை வீடு இல்லாத கிராமமாக மாற்றுவதானாலும் சரி, கழிவறை இல்லாத வீடே இல்லை என்ற சாதனை படைப்பதானாலும் சரி; சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்வசதி செய்து தருவதானாலும் சரி; கிராமத்தில் உருவாகும் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து பஞ்சாயத்துக்கு வருமானம் சேர்த்து, கிராமத்தையும் சுத்தமாக வைத்து வரலாறு படைப்பதிலும் சரி, பஞ்சாயத்துத் தலைவர்கள்தான் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.
பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம் அமைத்து, தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் முன்வருகின்றனர். தலித் பஞ்சாயத்து தலைவர்களும் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளத் தனியான ஒரு கூட்டமைப்பை உருவாக்கிப் போராடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில்தான் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது குட்டி மகாத்மாக்கள் உருவாவார்கள்.
உண்மையில் தலித் அமைப்புகள் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தல்களில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை, தேர்தல் ஆணையத்தைப் போல உள்ளாட்சி அமைப்புகளும் சுயேச்சையாக இயங்கும் நாள் வரும்போது இந்தியாவும் இந்தியாவில் வாழும் எளிய மக்களும் மகத்தான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள்!'' என்கிறார் க.பழனித்துரை.

No comments:

Post a Comment