Saturday, October 8, 2011

உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் பங்கு!

கைக்கு எட்டும் நெருக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

மக்களே ஓட்டுப் போட்டு, மக்களே ஆட்சி செய்கிற உரிமையை வழங்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் பற்றிய அடிப்படை விழிப்பு உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? தங்கள் கிராமங்களைச் சிறு நாடுகளாகப் பாவித்து ஆட்சி செய்ய வேண்டிய ஊராட்சித் தலைவர்கள், ரோடு போடும் ஒப்பந்ததாரர்களாக மட்டுமே முடங்கிப்போனது எதனால்? சுய சார்புடன் தங்கள் கிராமங்களை வளர்த்தெடுக்க மக்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன?

கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் இளங்கோ. வேதியியல் பொறியாளர். மத்திய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றியவர். திடீரென ஒரு நாள் தன் வேலையை உதறிவிட்டு, சொந்தக் கிராமத்துக்குப் பணியாற்ற வந்த இளங்கோ, உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு நின்று வெற்றி பெற்றவர். அடுத்த 10 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட தன்னுடைய குத்தம்பாக்கம் ஊராட்சியை மாநிலத்திலேயே முன் மாதிரி ஊராட்சியாக மாற்றியவர். இதற்காக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தன் அனுபவத்தில் கிடைத்த ஊராட்சி நிர்வாக அறிவை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

ஊராட்சி... நமக்கான சுய ஆட்சி!

''கிராம ஊராட்சிதான் மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாக அமைப்பு. சாலை, குடிநீர், தெருவிளக்கு, நீர்நிலைகள் போன்ற அடிப்படையான பராமரிப்புப் பணிகளைக் கிராம ஊராட்சிதான் மேற்கொள்ளும். இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் ஊராட்சித் தலைவரிடம் முறையிடலாம். ஊராட்சி நிர்வாகத்தில் முக்கியமான கட்டமைப்பு கிராம சபை. இதில் கிராமவாசிகள் அனைவருக்கும் உரிமை உண்டு. 'நாங்கள் ஓட்டுப் போடுகிறோம்... நீங்கள் ஆட்சி செய்யுங்கள்’ என்கிற நிலையில் இருந்து, 'நாங்களே ஓட்டுப் போடுகிறோம்... நாங்களே ஆட்சி செய்கிறோம்’ என்கிற நிலைக்கு மக்கள் முன்னேறி வர, ஊராட்சித் தேர்தல் வாய்ப்பு அளிக்கிறது!''

என்னவெல்லாம் செய்யலாம் ஊராட்சி?

''குத்தம்பாக்கத்தில் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் தலைவரின் முடிவு. இது அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சி. மற்ற ஊராட்சிகளில் 2 லட்சம் ரூபாய் வரி வாங்க வேண்டிய இடத்தில் ஊராட்சித் தலைவர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு 50,000 ரூபாய் மட்டும் வாங்கிக்கொள்வார்கள். நாங்களோ அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்கு நேர்மையான முறையில் வரி விதித்ததால் நிதி ஆதாரம் பெருகியது. பெண்களுக்கு சிறுதொழில்கள் கற்றுக்கொடுப்பது, குழந்தைகளுக்குக் கணினி மூலமாகக் கல்வி கற்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, எந்த ஒரு திட்டத்திலும் மக்களை அதிகமாகப் பங்கேற்கவைத்து, செலவுகளைக் குறைப்பது என்று மனித வளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினோம். அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பது, ஊராட்சியின் நிதி நிலையை மேம்படுத் துவது, திட்டங்களில் மக்களைப் பங்கேற்கவைப்பது ஆகிய விஷயங்களைச் செய் தாலே, ஓர் ஊராட்சி தனித்து நின்றுவிட முடியும்!''

நமக்கு நாமே!

''கிராம ஊராட்சிகளை 'சுய அரசாங்கங்கள்’ என்கிறது சட்டம். இங்கு மக்கள்தான் பங்கேற்பாளர்கள். அவர்கள் வெறும் பயனாளிகள் மட்டும் இல்லை. தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1994-ன்படி, கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள் அதுவே அரசாங்கமாக இருக்கிறது. அது ஐந்தாண்டு களுக்குத் திட்டமிட வேண்டும். அதுவும் கிராம மக்கள் பங்கேற்புடன் திட்டமிட வேண்டும். அப்போதுதான் திட்டங்களுக் கான நிதித் தேவையை மக்களால் உணர்ந்துகொள்ள முடியும்.

உதாரணத்துக்கு, குத்தம்பாக்கத்தில் 'நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் பல விஷயங்களைச் செய்திருக்கிறோம். மழைநீர் வடிகால்கள், கான்க்ரீட் சாலைகள் போன்ற பணிகளைச் செய்ய ஊராட்சியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதி இருந்து, மேலும் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டால், மக்கள் இந்தத் தொகையை வழங்குவார்கள். அதேபோல 'குடிசை இல்லாத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. இதில் மத்திய அரசுடன், தொண்டு நிறுவனங்களும் உதவின. 'நூதன முறையில் வீடு கட்டும் திட்டம்’ என்பதன் கீழ் மத்திய அரசு ரூ.25,000 வழங்க, தொண்டு நிறுவனம் ரூ.10,000 வழங்க, அந்த வீட்டுக்கு உரியவர் ரூ.10,000 வழங்க, வீடுகள் கட்டித் தரப்பட்டு, இன்று குத்தம்பாக்கத்தில் அந்தத் திட்டத்தை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கிறோம். வெறுமனே மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றும் முகமையாக உள்ளாட்சிகள் இருக்கக் கூடாது!''

மக்கள் திட்டம்... மகேசன் திட்டம்!

''இதுநாள் வரை அரசு நமக்காகத் திட்டம் தீட்டிக்கொண்டு இருந்த நிலைமை மாறி, நாம் அரசாங்கத்துக்கு இந்தத் திட்டங்களைச் செய்யுங்கள் என்று ஆணையிடப்போகிறோம். கிராமத்தின் திட்டங்களே இந்த நாட்டின் திட்டங்களாக மாற வேண்டும். அது எப்போது சாத்தியப்படுகிறதோ அப்போது அரசின் அனைத்துத் திட்டங்களும் மக்கள் திட்டங்களாக மாறும். கேரளத்தில் இந்த முறை ஓரளவுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அங்கே வார்டு கள் பெரிது என்றாலும்கூட, ஒவ்வொரு வருடமும் திட்டமிடும் வாரங்கள் என்ற ஒன்றைப் பின்பற்றுகிறார்கள். மக்கள் ஒத்துழைப்பதால், தங்களுக்காகத் தீட்டப்படுகிற திட்டங்களில் தரத்தை எதிர்பார்க்கிறார்கள். இதன் பயனாக, அந்த மாநிலத்தின் திட்ட நிதியில் 40 சதவிகிதம் சேமிக்கப்பட்டு, அது மீண்டும் மக்களுக்கே திரும்பி வருகிறது!''

நிதி வாங்கு... திட்டம் தீட்டு!

''பிரதம மந்திரி சாலைத் திட்டம், கண் ஒளித் திட்டம் போன்ற திட்டங்களை மத்திய அரசே திட்டமாக்கிச் செயல்படுத்துகிறது. உண்மையில், இவற்றை எல்லாம் உள்ளாட்சிகள் செய்திருந்தால் கடைக்கோடி மனிதனுக்கும் அதனுடைய பலன் சென்று இருக்கும். பஞ்சாயத்துக்குத் திறந்தவெளி நிதியைக் கொடுத்து அதன் மூலம் பஞ்சாயத் துகளே திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தால், அது நன்மை பயத்திருக்கும். உதாரணத்துக்கு, பிரதம மந்திரி சாலை திட்டத்தை எடுத்துக்கொள்வோம். சில ஊர்களுக்குச் சாலை தேவைப்படும். சில ஊர்களுக்குக் குடிநீர் வசதி தேவைப்படும். சில ஊர்களுக்கு கண்ணொளித் திட்டம் தேவைப்படும். ஊராட்சிகளிடம் நிதியைக் கொடுத்துவிட்டு, நீங்களே திட்டம் தீட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால், அந்தந்த ஊர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால், தற்போது மத்திய அரசே நிதியையும் கொடுத்து, திட்டத்தையும் அறிவிப்பதால் எல்லா ஊராட்சிகளுமே அந்த நிதியைக் குறிப்பிட்ட அந்தத் திட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்தால், மக்களுக்கு உண்மையான நல்லாட்சி கிடைக்கும்!

உள்ளாட்சி அமைப்புகளைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கி இருப்பது, நிதி கையாளும்போது ஊராட்சி துணைத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி இருப்பது என விவாதத்துக்குரிய விஷயங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றன. இதுபோன்ற சின்ன குறைகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. ஏனென்றால், இது மக்களுக்கான தேர்தல். இதை முன்னிறுத்தி இதுவரை 400 ஊராட்சிகளில் பயிற்சி அளித்து இருக்கிறேன். 2016-ம் ஆண்டுக்குள் இந்த 400 ஊராட்சிகளையும் முன் மாதிரி ஊராட்சிகளாக மேம்படுத்தி, மற்ற மாநிலங்கள் முன் நிறுத்த வேண்டும் என்கிற ஆசையும் லட்சியமும் இருக்கிறது எனக்கு. இளைஞர் ஆதரவுடன் நிச்சயம் செய்வேன். அதற்கான நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.''

லட்சியம் வெல்வது நிச்சயம்!

- ஆனந்த விகடன்

No comments:

Post a Comment