Wednesday, October 12, 2011

இப்ப மட்டும் என்ன திடீர் கரிசனம்? கருணாநிதி நிதியை வாங்காத வாச்சாத்தி!

ந்திய நீதி வரலாற்றி​லேயே மிக நீண்ட இழுபறிக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த வழக்கு என்றால் அது தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராம பலாத்கார வழக்குதான். கடந்த 29.9.11 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே தினம், முன்னால் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி தானாகவே முன்வந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 15 ஆயிரத்தை நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இதை முகத்தில் அறைந்தாற்போல வாச்சாத்தி மக்கள் மறுத்துவிட்டனர். காரணம், அறிய அங்கு சென்று விசாரித்தோம்.
கோபம் கொப்பளிக்க அம்மக்கள் நம்மிடம் பேசினார்கள். ''ஒன்றல்ல, இரண்டல்ல... 19 ஆண்டு​கள்... அப்போதெல்லாம் எங்களுக்கு நடந்த இந்தக் கொடுமை இவர்களுக்கு தெரிய​வில்லையா? ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது கண்டுகொள்ளாதவர்களுக்கு இப்போது மட்டும் என்ன திடீர் கரிசனம்!'' என்று மக்கள் முகம் சிவந்து கூக்குரலிட்டனர். அதன் பிறகு நாம் கேட்ட கேள்விகளுக்கு, ''உங்களுக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், இந்தத் தீர்ப்புக்காக இவ்வளவு காலமும் முன்னின்று போராடிய 'மலைவாழ் மக்கள் சங்க’ மாநிலத் தலைவர் சண்முகத்திடம் பேசுங்கள்...'' என்றனர்.
அப்படியே சண்முகத்தை தொடர்புகொண்டோம். அவர், ''சம்பவம் நடந்தது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில். அன்று தொடங்கி இப்போது தீர்ப்பு வெளியானது வரையிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தச் சலனமும் காட்டாத அரசியல் தலைவர் ஜெயலலிதா மட்டும்தான். இது ஒருபுறம் இருக்க, சம்பவத்துக்குப் பிறகு தி.மு.க-வும் ஆட்சிப் பீடம் ஏறியது அவர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. 'தனி நீதிமன்றம் அமைத்து வழக்கை விரைவாக நடத்த வேண்டும்’ என்றுகூட கோரிக்கை வைத்தோம். அந்த அரசோ இதைக் காதில்கூட வாங்கவில்லை. உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகும்கூட, 'தனி நீதிமன்றம் அமைக்க இயலாது. சி.பி.ஐ-க்கு அரசு தரப்பில் வழக்கறிஞர்களை மட்டும் நியமிக்கிறோம்.’ என்று கழன்றுகொண்டது. ஆக நீதியை விரைவுபடுத்தும் வாய்ப்பிருந்தும் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் அக்கறையே காட்டவில்லை. இந்த வழக்குக்காக நாங்கள் பட்ட அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் அளவே கிடையாது. சட்டம் மட்டுமே அந்த மக்களுக்கு துணையாக நின்று இந்த நீதியை பெற்றுத் தந்திருக்கிறது. வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனதும், சட்ட உதவியோடு கடும் முயற்சி செய்து சுமார் 1.50 கோடியை நிவாரணமாகப் பெற்றனர் வாச்சாத்தி மக்கள். ஆனாலும், ஒவ்வொரு பாதிப்புக்கும் ஏற்றவகையில் சட்டம் நிர்ணயித்துள்ள நிவாரணத் தொகையை கணக்கிட்டால், இன்னும் சில கோடி ரூபாய் அந்த மக்களுக்குத் தர வேண்டி இருக்கும். அதுக்கான முயற்சியை தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். இதற்கிடையில், எந்தத் தலைவர்களின் அனுதாபத்தையும் வாச்சாத்தி மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சட்டம் சொல்லுவதை மட்டும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றி​னாலே அந்த மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்!'' என்றார் தீர்க்கமாக.
''இந்த சம்பவத்தில் இதுவரை வெளிவராத தகவல்கள் எதுவும் உண்டா?'' என்று அவரிடம் கேட்டோம். அதற்கு, ''முக்கியமான சில விஷயங்களை சொல்கிறேன். சம்பவத்துக்குப் பிறகு 1992 ஆகஸ்ட் 1-ல், சேலம் சிறை மைதானத்தில் அடையாள அணிவகுப்பு நடத்த சி.பி.ஐ. ஏற்பாடு செய்தது. ஆனால், அதை சீர்குலைக்க நடந்த முயற்சிகள் ஏராளம். அன்றைய ஆளும் கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு அச்சுறுத்தல்களை பரப்பினர். அதாவது, 'அடையாள அணிவகுப்புக்கு நீங்கள் சென்றால் வனத் துறை அதிகாரிகள் அங்கேயேவைத்து உங்களுக்கு தாலி கட்டிவிடுவார்கள். அதற்குப் பிறகு உங்களை கடத்திச் சென்று கொல்லவும் தயங்கமாட்டார்கள். தப்பினாலும் அவர்கள் வீட்டில் இரண்டாம்தாரமாகத்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். 10 ஆயிரம் வாங்கித் தருகிறோம், இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடுங்கள்’ என்றெல்லாம் கிராமத்துப் பெண்களிடம் மிரட்டினர். குழம்பிய இந்தப் பெண்களுக்காக, முன்னால் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான அண்ணாமலை உள்ளிட்டவர்கள்தான் தைரியம் தந்தனர். பிறகே, அரூர் போலீஸில் இந்த மிரட்டலைப் புகாராகப் பதிவு செய்தனர் பெண்கள். அதன் பிறகும் அணிவகுப்பு ஏற்பாடுகள் ரத்தாகிவிட்டதாக ஊத்தங்கரையின் அன்றைய மாஜிஸ்ட்ரேட் பெயரில் போலி அறிக்கையை கசியவிட்டு குழப்பம் விளைவித்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு அணிவகுப்பு ஏற்பாடு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் நடந்த அணிவகுப்பில் ஒரே நேரத்தில் 1,500 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அடையாளம் காட்ட வந்த பெண்களை, கேலியும் கிண்டலும் செய்ததால், அன்றும் ஏற்பாடுகள் ரத்தானது. உயர் நீதிமன்ற தலையீட்டின் பிறகே அக்டோபர் 10 முதல் 16-ம் தேதி வரை சேலம் சிறை வளாகத்தில் பெரிய அறை ஒன்றில் 50, 50 பேர்களாக நிறுத்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில்தான், 11 பேரை பெண்கள் அடையாளம் காட்டினர். இந்த அடையாளம் காட்டும் முயற்சிக்கே எத்தனை முட்டுக்கட்டைகள் போடப்பட்டன என்பதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்போது எல்லாம் இம்மக்களுக்கு உதவிகள் செய்ய வராதவர்கள் இப்போது மட்டும் ஏன் வர வேண்டும். அதனால்தான் பொதுமக்கள் இந்தச் சலுகையை உதாசீனப்படுத்தினார்கள்!'' என்றார்.

No comments:

Post a Comment