Saturday, October 15, 2011

மல்லுக்கட்டும் மல்லை!

மாமல்லபுரம் நிலவரம்

ரு பேரூராட்சித் தலைவர் வேட்பாளருக்காக வைகோ, பெரியார்தாசன், தமிழருவிமணியன், நாஞ்சில் சம்பத் போன்ற பெரும் தலைகள் வரிசையாக களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்கள். யாருக்காகவாம்? மாமல்லபுரத்தில் ம.தி.மு.க. சார்பாக போட்டியிடும் மல்லை சத்யாவுக்காகத்தான்.
கடந்த 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க வேட்பாளராக மல்லை சத்யா களம் இறங்கினார். அப்போதைய ஆளும் கட்சி யான தி.மு.க-வை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை. கட்சியில் முக்கிய பதவியில் இல்லாத சூழ்நிலையிலும், தனது உள்ளூர் செல்வாக்கின் மூலம் ஆளும் கட்சியை வீழ்த்திக் காட்டி னார். அடுத்த 2001-ம் ஆண்டு உள் ளாட்சித் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கைநழுவிப் போனது. இரண்டு முறை எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிட்டும் தோல்வி அடைந் தார். இப்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.
மாமல்லபுரம் பகுதிக்கு நிலவரம் அறியச் சென்றோம். தி.மு.க-வில், நகரச் செயலாளர் விஸ்வநாதன் வேட்பாளராக உள்ளார். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதால் வாய்ப்பு கிடைத்துள்ளது. 'அவருக்கு கட்சியில் செல்வாக்கு இருந்தாலும், உள்ளூர் செல்வாக்கு குறைவுதான்’ என்று உடன்பிறப்புகளே ஒத்துழைப்பு தராமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.
மாமல்லபுரத்தின் தற்போதைய பேரூராட்சித் தலைவர் யஸ்வந்த் மீது அ.தி.மு.க-வுக்கு அதிருப்திஎன்பதால் கோதண்டபாணிக்கு ஸீட் கிடைத்துள்ளது. இவருக்கு கட்சியில் இருந்து மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மட்டுமே ஆதரவு கொடுத்துச் சென்றார், மற்ற யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதால் இங்கேயும் உள்குத்து வெகுவாக இருக்கிறது.
ம.தி.மு.க. சார்பாக போட்டியிடும் சத்யா, பேரூராட்சித் தலைவராக இருந்தபோது செய்த பணிகளையே நினைவுகூறி வாக்கு கேட்கிறார். எம்.எல்.ஏ. பதவிக்கு நின்றவர் இப்போது பேரூராட்சிக்கு நிற்கிறீர்களே என்று கேட்டோம். ''அமைச்சராக இருந்தவர்கள் கூட, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதனால் மக்களுக்குச் சேவை செய்வதில் பெரிய பதவி, சிறிய பதவி என்று வித்தியாசம் கிடையாது. பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் இந்த மக்களுக்கு சேவகனாக, போராளியாக வலம் வந்தவன். இந்தமுறை வெற்றி நிச்சயம்!'' என்கிறார் நம்பிக்கையாக.
முக்கிய எதிர்க்கட்சிகள் சுணங்கி நின்றாலும் மல்லை கடுமையாக மல்லுக்கட்டுவதைப் பார்த்தால், மறுமலர்ச்சி தெரிகிறது.

No comments:

Post a Comment