Wednesday, October 12, 2011

ஸ்பெக்ட்ரம் ஃபைல் கிழித்தது யார்?

மிஸ்டர் கழுகு: மின்வெட்டு 'அணு' மர்மம்?


ழுகார் நம் முன்னால் ஆஜரான நேரம்... முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று நமது மெயிலில் வந்து விழுந்தது!
''மின்வெட்டு தொடர்பான அறிக்கையோ..?'' என்று கேட்டார் கழுகார். ''அதே!'' என்றோம்.
''விடாது கருப்பு கதைதான்! தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எந்த விஷயம் அதிகமான சலனங்களை ஏற்படுத்தியதோ... அதுவே இந்த ஆட்சிக்கும் தலைவலியாக மாறிக்கொண்டு இருக்கிறது. நகரம், கிராமம் என எல்லாப் பகுதிகளிலும் மின்தடை போட்டுத் தாக்குகிறது. இதை முதல்வர் கவனத்துக்கு மிகத் தாமதமாகவே அதிகாரிகள் கொண்டுசென்றனர். 'ஏன் இதை முன்கூட்டி எனக்குச் சொல்லவில்லை?’ என்று முதல்வர் கோபப்பட்டாராம். அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் அழைக்கப்பட்டு முதல்வரின் அவசர ஆலோசனையில் இருந்துள்ளார்!''
''என்ன சொன்னார்களாம் அதிகாரிகள்?''
''அரசாங்கம் சொல்லும் காரணத்தைப் பார்த்தீர், அல்லவா? தமிழ் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் குறிப்பிட்ட அளவு ஆந்திர மாநிலம் ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து வருகிறது. அதற்குத் தேவையான நிலக்கரி சிங்கரேனி சுரங்கத்தில் இருந்து வருகிறது. ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால், அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி வரவில்லை. இதனால் மின்சாரத் தயாரிப்பும் குறைகிறது என்பது அதிகாரிகள் சொன்ன காரணம். ஒரிஸ்ஸாவில் இருந்தும் நமக்கு மின்சாரம் வருகிறது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்ததாகவும் சொல்கிறார்கள். சுமார் 1,026 மெகாவாட் மின்சார வரத்து குறைவதாக அதிகாரிகள் சொன்னார்கள். 'உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மின்வெட்டு இருக்கக் கூடாது’ என்று கறாராகச் சொல்லி இருக்கிறாராம் முதல்வர்!''
''சில அதிகாரிகள் வேண்டும் என்றே இந்த மின்வெட்டை உருவாக்கியதாக ஒரு திக் தகவல் காதில் விழுந்ததே?''
''இந்த சந்தேகக் கேள்வி பலராலும் பரப்பி வைக்கப் படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். முதல்வரும் அப்போராட்டத்தை ஆதரித்து மத்திய அரசுக்கு தனது எதிர்ப்புக் கருத்தை
பதிவு செய்தார். இதில் மேல்மட்ட அதிகாரிகள் சிலருக்கு உடன்பாடு இல்லையாம். 'பார்த்தீர்களா! நாடு முழுவதும் மின்வெட்டு வந்துவிட்டது. இதற்காகத்தான் கூடங்குளம் அணுமின் நிலையம் வர வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அது வந்தால்தான் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகும்!’ என்று அவர்கள் மறைமுகப் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்களாம். அவர்களின் கைங்கர்யம் இதில் இருக்கலாம் என்ற அடிப்படையில்தான் திக் தகவல் பரவியிருக்கிறது. எதுவாக இருந்தாலும் ஆட்சிக்குக் கெட்ட பெயர்தான்.''
''ம்...''
''மின் துறை அதிகாரிகளை அழைத்துப் பேசியது மாதிரியே இன்னொரு முக்கியத் துறையின் அதிகாரிகளையும் முதல்வர் சந்தித்தார். சந்தித்துப் பேசினார் என்பதைவிட... பாய்ந்தார் என்பதுதான் சரி! பல ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் விவகாரம் அது. தமிழகம் முழுவதும் பரவலாகச் செய்ய வேண்டிய பணி. இந்தப் பணிகளுக்கான டெண்டர் ஒன்று இரண்டு முறை அல்ல... ஐந்து முறைக்கு மேல் விட்டுவிட்டார்கள். ஆனால், ஆளைத் தேர்ந்தெடுக்கவில்லை. எல்லாமே 'மேல்படி’ விவகாரம்தான். 'அவருக்கு இவ்வளவு... இவருக்கு இவ்வளவு... மூன்றாமவருக்கு அவ்வளவு...’ என்று பேசிப் பேசியே டெண்டர் போட்டவர்கள் அனைவரையும் தெறித்து ஓட வைத்துவிட்டார்களாம். இது எப்படியோ முதல்வர் கவனத்துக்குப் போனது. உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து ஒரு ரவுண்ட் டோஸ் விட்டார். அடுத்து, அந்தத் துறையின் மந்திரியைத் தேடி இருக்கிறார்கள். அவசர நேரத்தில் ஆளைக் காணோம். 'அடுத்த ரெண்டு நாளில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். யார் இந்த டீலிங்கை முடிவுசெய்தது என்ற தகவல் உடனடியாக வந்தாக வேண்டும்’ என்று முதல்வர் கறார் காட்டினார். தேர்தல் முடிந்ததும் அந்த மந்திரிக்கு சிக்கல் வரலாம். அவர் பாவம், யாரை காட்டிக் கொடுப்பார்? அதோடு...''
''அதையும் சொல்லிவிடும்!''
''தனக்கு முறையாகத் தகவல்கள் வந்து சேரவில்லை என்றும் முதல்வர் வருத்தப்பட்டுள்ளார். நிழல் மனிதர்களின் ஆதிக்கம் தலையெடுப்பது குறித்து உளவுத் துறை தன்னை சரியாக அலர்ட் செய்ய வில்லை என்று புழுங்கிவிட்டாராம். உளவுத் துறை ஏ.டி.ஜி.பி-யான ராஜேந்திரன் மாற்றப்பட்டதற்கு இப்போது இந்தக் காரணத்தையும் சொல்கிறார்கள். அதோடு, 'பொதுமக்கள் கருத்து எதுவானாலும், தயங்காமல் நேரடியாக அதை என்னிடம் கொண்டுவாருங்கள்’ என்று சொல்லி இருக்கிறாராம் புதுசாக உளவுத் துறைக்கு வந்துள்ள டி.ஐ.ஜி-யான பொன்மாணிக்கவேலிடம்...'' என்று சொல்லிவிட்டு, தி.மு.க. பக்கம் வந்தார் கழுகார்!
''முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் வரிசையாகப் பாயப் போகின்றன என்று முன்பே சொன்னேன். நீரும் 'ரெய்டு வாரம்’ என்று போட்டிருந்தீர். அதை அடுத்து பொன்முடி, தா.மோ.அன்பரசன் வீடுகளில் ரெய்டுகள் நடந்தன. மொத்தம் 17 முன்னாள் அமைச்சர்கள் மீது இந்த வழக்குகள் பாயப் போகின்றன. 'அக்டோபர் 20-ம் தேதி, அம்மா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னால் இந்த ரெய்டுகள் நடக்குமாம். அதற்குள் ஸ்டாலினையும் குறிவைத்து ஏக இக்கட்டில் ஆழ்த்தும் போலீஸ்!’ என்று கோட்டையில் பேச்சு. திருச்சி மேற்கு தி.மு.க. வேட்பாளரும், கடலூர் சிறையில் இருப்பவருமான கே.என்.நேரு மீது இன்னொரு வழக்கும் தயாராகி வருகிறது.''
''அது என்ன?''
''கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் என பல்லாயிரம் பேரை நியமித்தார்கள். அதை மையமாக வைத்துத்தான் இந்த வழக்கு இருக்குமாம். இப்படியே போனால், நேரு இப்போதைக்கு வெளியில் வர முடியாது. அது இருக்கட்டும்... வெளியே வந்திருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் வருத்தத்தைச் சொல்லவா..?''
''இதற்கெல்லாமா கேட்டுக் கொண்டிருப்பது?''
''ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனாலும், 30-ம் தேதி தி.மு.க. முப்பெரும் விழா என்றதும் அண்ணா அறிவாலயத்தில் முதல் வரிசையில் ஆஜரானார். அக்கூட்டத்தில் பேசிய கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அதிகமாக வருத்தம் அடைந்தாராம் வீரபாண்டியார். ஜெயலலிதாவை விமர்சித்துக்கொண்டே வந்த கருணாநிதி, பொன்முடியின் கைதை மட்டுமே விலாவாரியாகக் கண்டித்துப் பேசினாராம். 'தம்பி பொன்முடி, தம்பி பொன்முடி...’ என்றார் உருக்கமாக. 'பொன்முடி மட்டும்தான் கைதானாரா? நாங்கள் சிக்கலை எதிர்கொள்ளவில்லையா? எங்களை எல்லாம் தலைவருக்கு மறந்தே போச்சா?’ என்று கர்ஜித் தாராம் வீரபாண்டியார்.''
''தலைவரிடமா... தன் ஆதர வாளர்களிடமா?''
''கருணாநிதியிடம் சொன்ன தாகத் தகவல் இல்லை. தன்னை சந்திக்க வந்தவர்களிடம்தான் வருத்தப்பட்டுப் புலம்பி இருக்கிறார்! கூடவே, அழகிரியின் வருத்ததையும் கேளும்! அவர் முப்பெரும் விழாவுக்கு சென்னை வரவில்லை. மதுரையில் உட்கார்ந்து ஏதோ படம் பார்த்துக்கொண்டு இருந்ததாகச் சொல்கிறார்கள். 'முறைப்படி எனக்கு அழைப்பு வரவில்லை’ என்று சொல்லிவிட்டாராம் அழகிரி. ஸ்டாலின் வராததற்குக் காரணம் வைரல் ஃபீவர் என்கிறார்கள். மூன்று நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் தங்கிவிட்டு ரிலீஸ் ஆகி இருக்கிறார். 'உள்ளாட்சிப் பிரசாரத்துக்கு உன்னைத்தான் நம்பி இருக்கேன். நீ உடம்பை நல்லா பார்த்துக்கோ’ என்று பதறிப் போனாராம் கருணாநிதி!''
''கருணாநிதி டெல்லி செல்வதாகச் சொல்கிறார்களே?''
''எப்போது வேண்டுமானாலும் அவர் கிளம்பலாம்! கனிமொழியை அவர் டெல்லி சென்று பார்த்து 100 நாட்களுக்கு மேல் ஆகப் போகின்றன. இப்ப வந்திடுவார்... உடனே வந்திடு வார்... என்று சிலர் தப்பான 'ஹோப்' கொடுத்ததால், கருணாநிதியின் பயணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. டெல்லி போனால், பிரதமர் மற்றும் சோனியாவைப் பார்த்தாலும் சிக்கல்... பார்க்காவிட்டாலும் பல பேச்சுகள் வரும். அதனால்தான் கருணாநிதி தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தள்ளி வைத்திருந்தார். ராஜாத்தி அம்மாளோ, மகள் பற்றிய கவலையில் தொடர்ந்து டெல்லியிலே தங்கி விட்டார். அவர் கருணாநிதியிடம் சமீப காலமாகச் சரியாகப் பேசக்கூட இல்லை என்கிறார்கள். அந்தக் கோபத்தை நீடிக்க விடக்கூடாது என்று, டெல்லி செல்ல கருணாநிதி திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கனிமொழியின் பெயில் மனு அக்டோபர் 17-ம் தேதிதான் விசாரணைக்கு வரப் போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த மாதம் 2ஜி விவகாரம் அசுர வேகம் எடுத்து, சிலபல தடாலடிகள் அரங்கேறிவிடும் போல...'' என்ற கழுகார்,
''காங்கிரஸின் நிலைமை டெல்லியில் மிகப் பரிதாபம். 'தற்கொலைப் பாதையை நோக்கிப் போகிறது அரசு. சீக்கிரமே தேர்தல் வரும்' என்று பி.ஜே.பி. தலைவர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பது, வழக்கமான பூச்சாண்டி அரசியலாகத் தோன்றவில்லை!'' என்றபடியே கழுகார் விட்டார் ஜூட்!
சிதம்பர ரகசிய தேக்கடி விசிட்!
டெல்லியில் 'பிரணாப் புயல்’ வீசி அடங்கிய(?) பிறகு தேக்கடிக்கு குடும்பத்தோடு காஷ§வல் டிரஸ்ஸில் ஓய்வுக்கு வந்தார் ப.சிதம்பரம்!
'சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது 2ஜி விவகாரத்தில் காட்டப்பட்ட மந்தநிலையே இவ்வளவு ஊழலுக்கும் காரணம்’ என பிரணாப் அமைச்சகம் அனுப்பிய கடிதம், ப.சி-யை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டதாம். சோனியாவின் அவசரத் தலையீட்டால் உள்கட்சி எதிரிகள் அடங்குவது போல் தெரிந்தாலும், வேறு திசையிலிருந்து குடைச்சலைக் கூட்டவே செய்வார்கள் என்று நினைக்கிறாராம் சிதம்பரம்.
டெல்லியில் இருந்து மனைவி நளினியுடன் 1-ம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார் ப.சி. அங்கு தயாராக இருந்த மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி, பேத்தி ஆகியோருடன் காலை 8.30 விமானம் மூலம் மதுரையை அடைந்தார். இவரது வருகை மதுரை, தேனி போலீஸாருக்குத் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது. அவசரகதியாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். மதியம் 12.30 மணிக்கு குமுளியை அடைந்த சிதம்பரத்தின் முகம் வழக்கமான கலகலப்பைத் தொலைத்திருந்தது. அதிகாரிகள் வரவேற்பை இறுக்கத்தோடு ஏற்றுக் கொண்டவர் தேக்கடி நீர்த் தேக்கத்தின் நடுவில் உள்ள கேரளா சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஆரணி நிவாஸ் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் குடும்பத்துடன் தேக்கடியில் படகு சவாரி சென்றார். பலத்த பாதுகாப்புடன் குமுளியில் உள்ள தனியார் ஸ்பைசஸ் பேலஸ் ஹோட்டலில் இரவு தங்கியது சிதம்பரம் குடும்பம்.
அமைச்சரைப் பேட்டி காணக் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நல்ல முகம் காட்டவில்லை போலீஸ்! மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தரப்பில், ''தனது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைமையிடம் சிதம்பரம் கொடுத்திருக்கிறார். அதை ஏற்காத சோனியா, 'இந்த நேரத்தில் ராஜினாமா என்றால் 2ஜி ஊழலில் காங்கிரஸுக்கும் பங்கு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் இன்னும் உரக்கக் கத்தும்’ என்றார். இருந்தும் மனவலி தீராமல்தான் குடும்பத்தோடு சில விஷயங்களைப் பேசி முடிக்க சிதம்பரம் சுற்றுலா கிளம்பினார்...'' என்று கூறப்படுகிறது.

கழுகார் பதில்கள்

ஆ.முருகநாதன், சேலம்.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவன் நான். ஆனால், இதைப்பற்றி பேசினாலே என் நண்பர்கள் கிண்டல் செய்கிறார்களே?
உயிரற்ற மீன்கள்தான் அருவி பாயும் திசையில் செல்லும். நீங்கள் அறிவுள்ள மீன் அதுபற்றிக் கவலைப்படாதீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர் என்பதால், உங்களுக்கு தேல்ஸ் பற்றித் தெரிந்திருக்கும்! சாக்ரடீஸுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த வானியல் அறிஞன். ஒரு நாள் அவர் சிறு கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். ஒரு பெண், அவரைத் தூக்கிவிட்டுக் காப்பாற்றினாள். 'உங்கள் காலுக்குக் கீழே இருக்கும் சிறு கிணறுகூட உங்களது கண்ணுக்குத் தெரியவில்லை. எட்டாத உயரத்தில் இருக்கும் வானத்தை எப்படி ஆராய்ச்சி செய்வீர்கள்?’ என்று அவள் கேலி செய்தாள். ஆனால், அதைப்பற்றி தேல்ஸ் கவலைப்படவில்லை. தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். விண்மீன்கள், சூரியகிரகணம், திசைகள் பற்றி அதற்குப் பிறகுதான் கண்டுபிடித்துச் சொன்னார் தேல்ஸ். சூரியனின் கோள அளவைச் சொன்னவரும் அவர்தான். ஒரு ஆண்டுக்கு 365 நாள் என்று வரையறுத்ததும் அவரே. எனவே கிண்டலை உரமாக எடுத்துக்கொள்ளுங்கள்!
கி.சுதா, ப.வேலூர்.
மனசாட்சி உள்ள அரசியலின் நல் இலக்கணம் என்ன?
எவரையும் வஞ்சிக்காமல், எவர் மீதும் பொறாமைப்​படாமல் இருப்பது!
இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.
ராஜீவ் காந்தி செய்த தவறுகள் என்ன?

போபர்ஸ் ஆயுத பேர ஊழலில் அவர் மீது விழுந்த கறை இன்று வரை துடைக்கப்படவில்லை. இத்தாலிய தரகர் குவாத்ரோச்சியைக் காப்பாற்ற சி.பி.ஐ. இதுவரை துடிப்பது அவருக்கு களங்கம் கற்பிப்பதாக இருக்கிறது!
பெரும்பான்மை ஈழத் தமிழர்க்கு ஒப்புதல் இல்லாத ஒப்பந்தம் ஒன்றை ஜெயவர்த்தனாவுடன் போட்டார் ராஜீவ். அந்தக் குறைபாடு உடைய அறிக்கையைக்கூட அமல்படுத்த இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. இந்த விஷயம் குறித்து இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ராணுவத் தளபதிகளே நிறைய எழுதி உள்ளார்கள். முதல் விஷயம், அந்தக் காலத்து 'இந்து’ பத்திரிகையில் ஆதாரபூர்வமாக வெளிவந்தன.
பி.ராமையா, பல்லடம்.
நம் மக்களிடம் விழிப்பு உணர்வு எவ்வாறு உள்ளது?
இலவச கலர் டி.வி-யை நல்ல விலைக்கு விற்றது மாதிரி... 'கிரைண்டர் கொடுத்தால் எவ்வளவுக்கு எடுப்பீர்கள்?’ என்று இப்போதே சிலர் விசாரிக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வு வளர்ந்துள்ளது!
எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
அடுத்த விக்கெட் அஞ்சாநெஞ்சனா? தளபதியா?
இடையில் இன்னும் பல விக்கெட்டுகள் பாக்கி உள்ளன!
கோம்பை. எஸ்.ரவீந்திரன், சேலம்-5.
வீட்டுவசதி வாரிய இடங்களை முதலமைச்சர் கொடுப்பது அவருக்கு உள்ள சிறப்பு உரிமை என்கிறாரே கருணாநிதி?
சிறப்பு உரிமை இருக்கலாம். ஏற்கெனவே வீட்டுவசதி வாரியத்தில் மனை வாங்கியவர்க்கு மறுபடியும் கொடுப்பது, ஏற்கெனவே சொந்த வீடுகள் இருப்பவர்களுக்குக் கொடுப்பதும் விதியை மீறிய செயல். முதலமைச்சரே அதைச் செய்யக் கூடாது. 'சமூக சேவகர்’ என்ற கோட்டா உண்மையில் சேவை செய்பவர்களுக்குத்தான். யாருக்கெல்லாம் வீடு, மனை கொடுக்க வேண்டுமோ அவர்கள் அனைவரையும் 'சமூக சேவகர்’ என்று சொல்லித் தாரை வார்த்திருக்கிறார்கள். இது தவறானது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் இவை நடந்துள்ளன. கடந்த தி.மு.க. ஆட்சியில் அதிகம் நடந்துள்ளன. இதில்தான் அவர்களுக்குள் போட்டியே!
தேவிகா ஜெயக்குமார், ஆனைமலை.
'அதிகாரம் மிக்கவர்களை குற்றவாளி ஆக்க முடியாது’ என்கிறாரே முன்னாள் நிதி அமைச்சர் ஜஸ்வந்த்சிங்?
ஸ்பெக்ட்ரம் முதல் பெங்களூரூ வரை அதைத்தானே பார்க்கிறோம்!
கி.இளங்கோ, சீலநாயக்கன்பட்டி.
தூக்கிலிட நாள் குறிக்கப்பட்ட பிறகு எதற்காக தனிமைச் சிறை? 40, 50 காவலர்கள் பாதுகாவல் ஏன்? வாழும் சில நாட்கள் மற்றவர்களிடம் பேசுவதற்கு அனுமதி வழங்காத கொடூரச் சிறைவிதிகள் அவமானம் இல்லையா?
எப்போதோ வகுக்கப்பட்டவை இந்த விதிகள். உடலில் சிறு காயம் இருந்தால், அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் தூக்கிலிட மாட்டார்கள். எனவே, அத்தகைய காயத்தை மற்ற கைதிகள் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் தனிமையில் வைக்கிறார்கள். தூக்கில் இடுவதே கொடூரம். அதில் விதிமுறைகள் மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்?
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
விசாரணை கமிஷன் அறிக்கைகள் என்னவாகின்றன?
சட்டமன்ற, நாடாளுமன்ற நூலகங்களில் தூங்குகின்றன. 'குறிப்பிட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்கிறது’ என்று ஒரு ஃபைல் எழுதி கையெழுத்துப் போடுவதோடு கடமை முடிந்துவிடும். கொள்கை அளவில் ஏற்கிறேன் என்றாலே, 'செயல்படுத்தும் நிலைமையில் இல்லை’ என்று அர்த்தம். எல்லா விசாரணை கமிஷன்களின் கதையும் அதுதான். அதனால்தான் எந்தப் பிரச்னையையும் அமுக்க... 'கல்லைப் போடு இல்லேன்னா கமிஷனைப் போடு’ என்கிறார்கள்!
சி.பி.கணேசன், பேராவூரணி.
தமிழக காவல் துறையின் சமீபத்திய செயல்பாடு சிறப்பா? மிடுக்கா?
இரண்டாகவும் இல்லை. திருட்டு குறைந்திருந்தால் சிறப்பாக இருப்பதாகச் சொல்லலாம். குற்றங்கள் குறைந்திருந்தால் மிடுக்கானவர்கள் என்று பாராட்டலாம். எல்லா இடங்களிலும் 'லத்தி’ மட்டும் சுழல்வதால் 'துடுக்கு’ என்று மட்டும் சொல்லலாம். அதுவும் அப்பாவிப் போராட்டக்காரர்கள் மீது மட்டுமே அவை பாய்கின்றன!

டெல்லி களவு காட்சிகள்!
'ஸ்பெக்ட்ரம் வழக்கு ஸ்வாகா ஆகிறதா?’ என்று டெல்லியில் கிளம்பிய ஒரு பகீர் சந்தேகத்தை, சில இதழ்களுக்கு முன் சொல்லி இருந்தோம். இப்போது இந்த சந்தேகம் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்திருப்பதுதான் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்!
ஆ.ராசா, கனிமொழி, ப.சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி, சி.பி.ஐ., பிரணாப் முகர்ஜி, நீதிபதிகள் ஜி.எஸ்..சிங்வி, ஏ.கே.கங்குலி, பிரசாந்த் பூஷண், சி.ஏ.ஜி., நீதிபதி ஓ.பி.சைனி, சுரேஷ்குமார் பல்சானியா, நாடாளுமன்றம், ஆர்.கே.சந்தோலியா, நீரா ராடியா, ஜெ.பி.சி., சாக்கோ (நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர்), ஷாகித் உஸ்மான் பால்வா, மன்மோகன் சிங், அனில் அம்பானி, தயாநிதி மாறன்... என்று குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதைத் தோண்டித் துருவுபவர்களுமாக, தினம் தினம் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஜி வழக்கு வட்டத்தில் கூடிக்கொண்டே போகிறது! இந்த பிரமாண்ட மனித சஞ்சாரத்துக்கு நடுவே சில கறுப்பு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!
காந்தி நினைவு நாளான அக்-2-ம் தேதி டெல்லியில் ஒரு வித்தியாசமான காட்சி. பிரதமர், சோனியா, கபில்சிபல் ஆகியோருடன் பி.ஜே.பி. தலைவர் அத்வானியும், சுஷ்மா சுவராஜும் இருக்கிறார்கள். இவர்களுடன் சுப்பிரமணியன் சுவாமியும் இருக்கிறார். 'இதுவித்தியாச மான காட்சியா... விஷயமுள்ள காட்சியா! என்று டெல்லி பத்திரிகை யாளர்கள் கிண்டலடித்தார்கள்!
இந்த விவகாரத்தில், 'யாருக்கு என்ன நோக்கம்? எதற்காக ஊழல் செய்தார்கள்? பணம் எங்கே? எப்படி ஊழல் செய்தார்கள்? யார் யார் ஊழல் செய்தார்கள்? யாருடைய புகார்? பொது நலன் வழக்கு எதற்கு? யார் இன்ஃபார்மர்கள்? ஊழலில் யார் யாருக்குப் பங்கு? இதில் பிரதமரின் ரோல் என்ன? நிதியமைச்சர் யார் பக்கம்? சுவாமியின் பின்னணி என்ன? ராசாவின் பணம் எங்கே? யார் வழக்கைப் பதிவு செய்தார்கள்? கருணாநிதி ஏன் புலம்புகிறார்? சோனியா இந்த விவகாரத்தில் கெஸ்ட் ரோலா... முக்கிய ரோலா... நோ ரோலா? எப்படியெல்லாம் புலனாய்வு செய்கிறார்கள்? ஏன் முன்னுக்குப் பின் முரணமாகக் குழப்புகிறார்கள்? ஏன் வழக்குப் பதிவில் திடீர் தாமதங்கள்?’ - இப்படி எத்தனையோ கேள்விகள் இன்னமும் வெறும் கேள்விகளாகவே இருக்கின்றன!
இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்தப் புது ரகசியம் வெளியே வந்திருக்கிறது.
சுப்பிரமணியன் சுவாமி, 13 பக்கங்கள் கொண்ட ஆவணத்தைத் தாக்கல் செய்தார். ''மிக முக்கியமான ஆதாரங்கள் இவை!'' என்றும் சொன்னார். அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீல், ''இது புதிய தகவல் அல்ல. நிதி அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட 500 பக்க ஆவணங்களில் இருப்பதுதான்!'' என்று சொன்னார். ''இந்த ஆவணங்களை நீங்கள் ஆய்வு செய்தீர்களா?'' என்று கேட்ட நீதிபதிகள், அந்த 500 பக்க ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொன்னார்கள். மறுநாளே சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

இந்த நிதித் துறை ஆவணத்தில் உள்ளவை பெரும்பாலும் சுப்பாராவ் என்பவர் நிதித் துறை செயலாளராக இருந்த​போது எழுதப்பட்டவை. தொலைத் தொடர்புத் துறைக்கு ஸ்பெக்ட்ரம் விலையை மறுபரிசீலனை செய்யக் கோரி சுப்பாராவ் எழுதிய கடிதங்களும் இதில் உண்டு. டெலிகாம் நிதி கமிஷன் கூட்டத்தை, அமைச்சராக இருந்த ஆ.ராசா தள்ளி வைத்துக்கொண்டே போனது குறித்து சுப்பாராவ் ஏற்கெனவே சி.பி.ஐ-க்கு வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதே சுப்பாராவ் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகியும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 2ஜி விவகாரத்தில் நிதித் துறையின் ஆலோசனைகளையும், தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளையும் நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்திடம் அவ்வப்போது தெரிவித்த தாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நிதி அமைச்சகம், தொலைத் தொடர்புத் துறையை வலியுறுத்த முடியாமல் போனது என்றும் சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்கள் இப்போது சுப்ரீம் கோர்ட் வசம் இருக்கின்றன. இவற்றை வரிசையாகப் பார்த்து வந்த நீதிபதிகள், திடீரென சில இடங்களில் அதிர்ச்சிக்கு ஆளானார்களாம். ''இதில் சில பக்கங் களைக் காணவில்லையே?'' என்று கேட்டனர். அதற்கு சி.பி.ஐ. வக்கீலால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
''காணாமல் போன பக்கங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்!'' என்று உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். அந்தப் பக்கங்கள் அரசு கோப்பிலிருந்து திட்டமிட்டே கிழித்து எடுக்கப்பட்டதா... அதில் என்ன விதமான தகவல்கள் இருந்தன... ஏன் அவற்றைக் காணவில்லை... இது யாரைக் காப்பாற்றுவதற்காக என்பதுதான் இப்போது சுப்ரீம் கோர்ட் போட்டுக் குடையும் ரகசியம். ''இந்த விஷயத்தில் சி.பி.ஐ. ஆரம்பத்தில் சரியாகவே நடந்து கொண்டது. ஆனால், போகப் போக தனது நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்துக் கொண்டது. சிவசங்கரன் வாக்குமூலம் மற்றும், அனில் அம்பானி நிறுவனத் தொடர்புகள் குறித்து முரண்பாடான தகவல்களை சி.பி.ஐ. சொல்வதைப் பார்த்தாலே, அவர்கள் கைகள் மறுபடியும் கட்டப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முக்கியமாக, பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை கோர்ட்டுக்கு இழுக்க, ஆ.ராசா வேலைகளைத் துவங்கியது முதல் சி.பி.ஐ-யின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது!'' என்று சுவாமி தரப்பில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் தொலைத் தொடர்புத் துறை ஊழல் கண்காணிப்புப் பிரிவிலும் இரண்டு கோப்புகள் மாயமானதாகத் தகவல் பரவி உள்ளது. கடைசியாக அந்தக் கோப்புகள் யார் வசம் இருந்தன என்று தேடும் காரியத்தைத் தொடங்கி இருக்கிறார்களாம். ''அதை வைத்திருந்த அதிகாரி சில மாதங்களுக்கு முன்னால் ஓய்வு பெற்றுவிட்டார்!'' என்கிறார்கள். ''இது ஸ்பெக்ட்ரம் தொடர்பானவை அல்ல. வேறு வழக்கு தொடர்பானவை!'' என்று சிலர் சொல்வதையும் ஏற்க முடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் சில முக்கியக் கோப்புகளைக் காணவில்லை என்பது உறுதி.
''ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரை மட்டும் மாட்டிவிட்டு... மற்றவர்களைக் காப்பாற்ற டெல்லி மேலிடம் முடிவெடுத்து விட்டதா?'' என்று தி.மு.க. தரப்புக் குரல்கள் டெல்லியில் கேட்க ஆரம்பித்துள்ளன. இந்த ஃபைல்கள் காணாமல் போன மேட்டரை பி.ஜே.பி-யும் கையில் எடுக்கப் போகிறது. அடுத்த கட்ட விசாரணையில் சுப்ரீம் கோர்ட் என்னவெல்லாம் கேட்டு சாட்டையை சொடுக்கப் போகிறதோ?

No comments:

Post a Comment