Saturday, October 8, 2011

சித்திரப் பாவை ஸ்வேதா!

'என்னோட ஓவியங்கள் தத்ரூபமாவும், என் வயசுக்கு நம்ப முடியாததாவும் இருக்கறதா எல்லாரும் பாராட்டுறப்ப இன்னும் சிறப்பா வரையணும்ங்கிற பெறுப்பு வருது!''

- தூரிகை வண்ணம்போல ரசிக்க ரசிக்கப் பேசுகிறார் ஸ்வேதா... சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி!


- முதல் பத்தியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் ஸ்வேதா.''என் அப்பா அழகா வரைவார். அதைப் பார்த்து எல்.கே.ஜி-யில இருந்தே எனக்கும் வரையறதுல ஆர்வம் வந்துடுச்சு. இளையராஜா சார், பாரதிராஜா சார்னு இப்போ ஓவியத்துல கலக்கிட்டு இருக்கற ஆர்ட்டிஸ்ட்களுக்கு எல்லாம் வரையக் கத்துக் கொடுத்த ரஞ்சித் சார்தான் எனக்கும் கத்துக் கொடுத்தார். புகைப்படங்களைப் பார்த்துதான் நான் வரையறேன். இதுவரைக்கும் நாம பார்த்திராத வித்தியாசமான படங்களா தேர்ந்தெடுத்து வரையறதுதான் என் ஸ்பெஷல். இதுவரைக்கும் ஓவியத்துக்காக 50 அவார்டுகள் வாங்கியிருக்கேன்''

''ஸ்கூல் லெவல், டிஸ்ட்ரிக்ட் லெவல்னு ஓவியப் போட்டிகள்ல படிப்படியா முன்னேறி பரிசுகள் குவிச்சேன். 'ஃப்ரம் த ஐஸ் ஆஃப் ஆன் இண்டியன் சைல்ட்'ங்கற (From the Eyes of an Indian Child) தலைப்புல மாநில அளவுல நடந்த ஓவியப் போட்டியில் இரண்டாவது பரிசு, 'ஐ.டி.சி. கிளாஸ்மேட்’ நடத்தின போட்டியில் 'லேடி பேர்ட்’ சைக்கிள் பரிசு, 'லுக் அண்ட் லேர்ன்’ இணையதளத்துக்கு நான் வரைஞ்ச ஓவியத்துக்குக் கிடைச்ச 20 பவுண்ட் பரிசு... இதெல்லாம் மறக்க முடியாதது!'' எனும் ஸ்வேதா, தன் ஓவியங்களை கண்காட்சி ஆக்கியதும், அதன் விற்பனை மதிப்பும் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்!

''இதுவரை மூணு முறை என்னோட கண்காட்சி வெச்சுருக்கேன். இந்த வருஷம் என்னோட பதினைந்து ஓவியங்கள், 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆச்சு. இதை எல்லாம் என் ஓவியத்துக்கு கிடைச்ச பாராட்டா, அங்கீகாரமா நினைச்சு சந்தோஷப்படறேன்!'' என்ற ஸ்வேதாவின் ஓவியங்கள், சினிமாவிலும் என்ட்ரி ஆகியிருக்கின்றன.

''கண்காட்சிக்கு வந்திருந்த எஸ்.வி.சேகர் சார், ரொம்பப் பாராட்டினார். இப்போ அவர் தயாரிக்கற 'நினைவில் நின்றவள்’ படத்துக்கு, டைட்டில் கார்டு ஓவியங்கள் வரைஞ்சு கொடுத்திருக்கேன். என் மனசுக்குத் தோணின திசையில் வரைஞ்சுட்டு இருந்த எனக்கு, ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ப, வேற ஒரு மீடியத்துக்காக வரையற இந்த புது அனுபவம் ரொம்பப் பிடிச்சுருக்கு'' என்றவர்,

''பத்தாயிரம் மணி நேரம் ஒரு செயல்ல தொடர்ந்து ஈடுபட்டா, யாரா இருந்தாலும் அதுல சிறந்து விளங்கலாம்னு எங்க அப்பா சொல்வார். நான் பத்து வருஷமா ஓவியம் வரையறேன். என்னோட அர்ப்பணிப்பு இதுல இன்னும் பெரிய உயரங்களுக்கு கண்டிப்பா என்னைக் கொண்டு செல்லும்னு நம்பிக்கை இருக்கு!''

- புன்னகை உதிர்த்து, தன் பறவைகள் ஓவியத்துக்கு ஃபைனல் டச் கொடுக்கிறார் ஸ்வேதா!


- அவள் விகடன்


No comments:

Post a Comment