Saturday, October 15, 2011

முரசு ஒலிக்கும் நகராட்சிகள்!

விறுவிறு பார்வை

விழுப்புரம்:
'சட்டமன்றத் தொகுதி களைக் கைப்பற்றிய தைப் போன்றே உள்ளாட்சியிலும் நகராட்சிகளைக் கைப்பற்றி விட வேண்டும்’ என்று அ.தி.மு.க. ஒரு பக்கமும், 'கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கைப்பற்றிய நகராட்சிகளை யாவது மீண்டும் தக்க வைக்க வேண்டும்’ என்று தி.மு.க. மறு பக்கமும் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே, '29 எம்.எல்.ஏ-க்களை கைவசம் வைத்திருக்கும் நாம், இரட்டை இலக்க எண்ணிக் கையில் நகராட்சிகளைக் கைப்பற்றினால்தான் கௌரவம்’ என்று இவர்களுக்கு மத்தியில் தே.மு.தி.க. போராடுகிறது. அப்படி தே.மு.தி.க. குறிவைத்து அசுரத்தனமாக இயங்கும் நகராட்சிகளை எட்டிப் பார்த்தோம்.
விழுப்புரம் நகர தே.மு.தி.க. செயலாளராக இருக்கும் வக்கீல் துரைசாமி இங்கு சேர்மன் வேட்பாளர். மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசனின் அன்புக்குரிய நபராக இருப்பதால், தொண்டர்கள் ஓடியாடி உழைக்கிறார்கள். 'விழுப்புரம் நகரத்தை, சென்னை நகரத்தைப்போல மேன்மையாக்குவோம்!’ என்று வாக்குறுதி கொடுத்து வருகிறார். அ.தி.மு.க. வேட் பாளர் பாஸ்கருக்கு எதிராக, கட்சியில் ஸீட் கிடைக்காத நூர்முகம்மது சுயேச்சையாகப் போட்டியிடுவதால், அ.தி.மு.க. ஓட்டுகள் சிதறக்கூடும். இப்போதைக்கு தி.மு.க. வேட்பாளர் சக்கரைக்கு சாதகமாக இருக்கும் நகராட் சியை, துரைசாமி அசுர வேகத்தில் உழைத்தால் அசைத்துப் பார்க்கலாம்.
பண்ருட்டி:
தே.மு.தி.க-வின் கடலூர் மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கும் டாக்டர் அறிவொளிதான் இங்கு வேட்பாளர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சைடில் பஞ்சாயத்தும், கோஷ்டிப் பூசலும் தலைதூக்கி நிற்கிறது. தே.மு.தி.க. வேட்பாளர் மீது அப்படியரு சாயம் இல்லாததால், பொதுமக்கள் அவரை ஆர்வமாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பண்ருட்டி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான சிவகொழுந்து, வேட்பாளர் அறிவொளிக்கு பக்க பலமாக உழைக்கிறார். மற்ற கட்சிகள் தள்ளாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால், தே.மு.தி.க-வினரின் முரசு வெற்றிகரமாக ஒலிக்கலாம்.
விருத்தாசலம்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முதன் முதலில் எம்.எல்.ஏ-வானது, இங்குதான். கட்சிக்கு ராசியான தொகுதி என்ற நம்பிக்கை நிலவுகிறது அதனால் விருத்தாசலம் நகராட்சியைக் கட்டாயம் தே.மு.தி.க. கைப்பற்ற வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். இங்கு வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர், நகரப் பொருளாளரான அனந்தகோபால். இவர் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர் என்பது மட்டும்தான் மைனஸ். விருத்தாசலம் நகராட்சியில் பெரிய கட்சிகளான தி.மு.க-வின் தட்சணா மூர்த்தியும், அ.தி.மு.க-வின் அரங்கநாதனும் பலமாக மோதினாலும், அனந்த கோபாலும் புஜம் உயர்த்து கிறார்.
திருவாரூர்:
தே.மு.தி.க-வில் பொறுப்புகள் ஏதும் இல்லாத எத்திராஜை வேட்பாளராக அறிவித்து இருக் கிறது கட்சித் தலைமை. மைனாரிட்டியாக உள்ள நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றா லும் தனது அணுகுமுறையால், மக்களை நெருங்கி வருகிறார். கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் இருப்பது எக்ஸ்ட்ரா எனர்ஜி. திருவாரூரில் விஜயகாந்த் செய்த பிரசாரம் பெண்கள் மத்தியில் ஆதரவை அதிகப்படுத்தி உள்ளது. அதிரடி அரசியல் நடக்கும் திருவாரூரில், எத்திராஜ் அமைதிப் புரட்சி படைத்தால் ஆச்சர்யம் இல்லை.
கரூர்:
தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனின் வேட்பு மனு கடைசி நேரத்தில் தள்ளுபடியாக... மாற்று வேட்பாளரான ஆர்.ராமநாதன் களத்தில் இருக்கிறார். இவர் கடந்த எம்.பி. தேர்தலில் 52,000 ஓட்டுகள் வாங்கியவர். பெரும்பான்மையான கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வாக்குகள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் 'தமிழ்நாடு’ செல்வம், தி.மு.க. வேட்பாளர் 'தாந்தோணி’ ரவி ஆகியோர் மீது சொந்தக் கட்சியில் சிறிது அதிருப்தி நிலவுகிறது. அதனால், அரசியல் மாற்றம் விரும்புகிறவர்களின் வாக்குகளைக் கைப் பற்றி விடலாம் என்று கணக்குப் போடுகிறார் ராம நாதன்.
மேட்டுப்பாளையம்:
மாவட்ட மீனவரணிச் செயலாளரான ஜாஃபர் சாதிக், களத்தில் நிற்கிறார். தே.மு.தி.க-வுக்கு ஏற்கெனவே இரண்டு கவுன்சிலர்கள் இருப்பதால், சந்துபொந்துகளில் நுழைந்து எப்படி பிரசாரத்தைக் கொண்டுசெல்லலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்கிறார்கள். பி.ஜே.பி. சார்பாகப் போட்டியிடும் சதீஷ்குமாருக்கு அபரிமிதமான ஆதரவு இருந்தாலும், 'அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மேல் வெறுப் பில் இருக்கும் மக்கள் தங்களுக்குத்தான் ஓட்டு அளிப் பார்கள்’ என்பது இவர்கள் எதிர்பார்ப்பு. இதைத் தாண்டி, கூட்டணித் தோழனான மார்க்சிஸ்ட், ஜாஃபரின் வெற்றிக்காக வியர்க்க, விறுவிறுக்க உழைப்பதைப் பார்த்து ரொம்பவும் நம்பிக்கையில் இருக்கிறது தே.மு.தி.க.
பல்லடம்:
இங்கு தே.மு.தி.க. சார்பில் பி.ஏ.சேகர் போட்டியிடு கிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு நிகராக கவுன்சிலர் பதவிகளை தே.மு.தி.க. கைப்பற்றியது. தே.மு.தி.க. ஆதரவுடனே தி.மு.க. நகராட்சியை கைப்பற்றியது. அதனால், எளிதில் வெற்றிபெறலாம் என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் அக்கட்சியினர். அ.தி.மு.க. நகரச் செயலாளர் ரத்தினசாமிக்கு ஸீட் கொடுக்காமல், நகர அவைத் தலைவர் தங்கவேலுவுக்கு ஸீட் கொடுத்திருப்பதால், உட்கட்சியில் சலசலப்பு. அதனால், தே.மு.தி.க. மற்றும் தி.மு.க. இடையேதான் போட்டி. கொஞ்சம் தம் கட்டி உழைத்தால் நகராட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறது விஜயகாந்த் கட்சி.
உடுமலைப்பேட்டை:
இங்கு தே.மு.தி.க. மாவட்ட துணைச் செய லாளரான ராதா பாலசுப்ரமணியம் களத்தில் நிற்கிறார். டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ், காஸ் ஏஜென்சி, ரியல் எஸ்டேட் என்று பல்வேறு பிசினஸ் செய்வதால் பணத்துக்குப் பஞ்சமில்லை. தே.மு.தி.க. சார்பில் நடத்தப்படும் இலவச ஆம்புலன்ஸ் சேவையில் 600-க்கும் மேற்பட்டவர் களைக் காப்பாற்றி இருப்பதை சாதனையாகச் சொல்லி வாக்குச் சேகரிக்கிறார்கள். 33 வார்டுகளைக் கொண்ட நகராட்சியில் 31 வார்டுகளில் மட்டுமே தி.மு.க. போட்டியிடுகிறது. தே.மு.தி.க-வோ அத்தனை வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இப்போதே வெற்றி உறுதி என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர்.
நரசிங்கபுரம்:
சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளர் பச்சமுத்து போட்டியிடுகிறார். வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர். தி.மு.க-வில் நகரச் செயலாளர் வேல்முருகனும், அ.தி.மு.க-வில் மணிவண்ணனும் களம் காண்கிறார்கள். தி.மு.க-வில் ஸீட் கிடைக்காத காட்டுராஜா என்கின்ற பழனிசாமி சுயேச்சையாக நிற்கிறார். இவர் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். நகராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்த இவருக்கு மக்கள் செல்வாக்கு உண்டு. தற்போது நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காட்டுராஜா, வெளியே வந்து பிரசாரம் செய்தால்... அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஓட்டுகளைப் பிரிப்பார். இந்த வாய்ப்புக்காக தே.மு.தி.க. காத்திருக்கிறது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இந்த நகராட்சியில் தே.மு.தி.க. சார்பாக நகர வர்த்தக அணிச் செயலாளர் மாதேஸ்வரன் போட் டியிடுகிறார். வசதியான பார்ட்டி என்பதால், இவருக் காகப் பெரும் கூட்டமே வேலை செய்கிறது. தி.மு.க-வில் முன்னாள் நகரத் துணைச் செயலாளர் குணசேகரனும், அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் நாகராஜும் களத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஸீட் கிடைக்காத குமாரபாளையம் தொகுதி இணைச் செயலாளர் சிவசக்தி தனசேகரன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அதனை சாதகமாக்கி, நகராட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது தே.மு.தி.க.!
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் இருக்கும் இந்த நகராட்சியில் சரிசம பலத்தில் ஒக்கலிக கவுடர்களும், முக்குலத்தோரும் இருக்கிறார் கள். கூடலூர் பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்து முக்குலத்தோர் மட்டுமே தலைவர் இருக்கையை அலங்கரித் துள்ளனர். இம்முறையும் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்குலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே சேர்மன் வேட்பாளராக அறிவிக்க... தே.மு.தி.க மட்டும் கவுடர் சமூகத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அருண்குமாரை அறிவித்தது. அருண்குமார் இமேஜுக்காக விழுந்திடும் இதர சமூக ஓட்டுகளோடு, ஒட்டுமொத்த கவுடர் சமூக ஓட்டுகள் அருண்குமாரை சேர்மன் இருக்கையில் உட்கார வைத்துவிடும் என்றே நம்புகிறார்கள்.
திருத்தணி:
தே.மு.தி.க-வில் மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். திருத்தணி எம்.எல்.ஏ-வான அருண்சுப்ரமணியன் கட்சிக்காரர் களை முடுக்கிவிட்டு வேலை செய்கிறார். மன்ற நிர்வாகிகளும் ஒற்றுமையோடு களப்பணி ஆற்று கிறார்கள். அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் சவுந்திரராஜனும், தி.மு.க-வில் நகரச் செயலாளர் சந்திரனும் சம பலத்தோடு மோதுகிறார்கள். தீவிர களப்பணி ஆற்றுவதன் மூலம் மக்கள் மனதை மாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்று ஜெயிக்க தே.மு.தி.க. துடிக்கிறது.

No comments:

Post a Comment