Saturday, October 15, 2011

திருச்சி மேயர் போராட்டம்

முந்தும் ஜெயா... நெருங்கும் விஜயா!

'திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தீர்ப்பு தாமதமானதால், மற்ற மாநகராட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே, இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து அவசரம் அவசரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், மாநகராட்சியின் நிலவரம் யாருக்கு சாதகம் என்பதைப் பார்ப்போம்.
திருச்சி மாநகரின் முக்கியப் பிரச்னைகள் போக்குவரத்து நெரிசலும், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பும்தான். அதோடு இவ்வளவு பெரிய நகரில் விடுமுறை தினங்​களில் மக்கள் குடும்பத்தோடு பொழுதைக் கழிக்க சினிமா தியேட்டர்களைத் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு அம்சமும் கிடையாது. அவற்றை தீர்த்து வைப்பதையே முக்கியமான பிரசாரமாக அனைத்து கட்சியினரும் மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள். அனைவரையும் முந்திக்கொண்டு அ.தி.மு.க-வின் ஜெயாதான் முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சிக்கு புதுமுகமான இவருக்கு ஸீட் வழங்கப்பட்டதால், அதிருப்தி கோஷ்டிகள், 'வேட்பாளரை மாத்துங்கம்மா’ என்று தலை​மைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பின. இருப்பினும், தலைமை கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை.
'ஜெயாவை ஜெயிக்க வைக்கலைன்னா... நீங்க நிர்வாகிகளா நீடிக்க முடியாது’ என்பதாக மேலிடத்தில் இருந்து தகவல் வரவே, அடித்துப் பிடித்துக்கொண்டு அனைவரும் இப்போது ஜெயாவுக்காக வேலை செய்கிறார்கள். ''குண்டும் குழியும் இல்லாத தார் சாலை, தடையில்லாத குடிநீர் வசதி, அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவேன். திருச்சி மக்களுக்காக பொழுதுபோக்கு பூங்கா அமைப்பேன். வாக்கிங் செல்வதற்கு சரியான இடம் அமைத்துத் தருவேன். அம்மாவின் ஆட்சி நடப்பதால், திருச்சியின் தேவைகளை எடுத்துச் சொல்லி திட்டங்களை என்னால் உடனடியாக நிறைவேற்ற முடியும். அதனை மனதில் கொண்டு மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்!'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெயா.
தி.மு.க-வின் வேட்பாளர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளரான விஜயா ஜெயராஜ். கட்சியில் அனை​வருக்கும் நன்கு அறிமுகமானவர். கேட்டரிங் கல்லூரி, மெட்ரிகுலேசன் பள்ளி, ஹோட்டல் நடத்தி வருகிறார் என்பதால் பணத்துக்கு பஞ்சமில்லை. கட்சியினரும் ஓடியாடி வேலை செய்கிறார்கள். ''நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம் மையப் பகுதியில் அமைந்திருக்கும் காந்தி மார்க்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றி பொதுமக்களின் கருத்து கேட்டு முடிவெடுப்பேன். நகரின் முக்கிய இடங்களில் குறிப்பாக தெப்பக்குளம் பகுதி, தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைப்பேன். மாநகர மக்கள் பொழுது போக்க கல்லணைக்கோ, முக்கொம்புக்கோ போக வேண்டி இருக்கிறது. அதனால், நகர எல்லைக்​குள்ளேயே அனைத்து வசதிகளுடன் கூடிய தீம் பார்க் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என்கிறார் விஜயா ஜெயராஜ்.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, 'எப்போது தேர்தல் நடந்தாலும் இவர்தான் வேட்பாளர்’ என்று ம.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டவர் டாக்டர் ரொஹையா. நகரில் கணிசமான அளவில் இருக்​கும் இஸ்லாமியர் வாக்குகளும், தன்னிடம் மருத்துவம் பார்த்​தவர்களின் வாக்குகளும் தன்னைக் காப்பாற்றும் என்பது ரொஹை​யாவின் நம்பிக்கை.
தே.மு.தி.க. சார்பில் வழக்கறிஞர் சித்ரா வேட்பாளராக இருக்கிறார். ''இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க என்ன முயற்சி மேற்கொண்டார்கள்? என்னை மேயர் ஆக்கி​னால், காந்தி மார்க்​கெட்டை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றுவேன். சுற்றுச் சூழலைக் காக்க பசுமைத் திட்டம் நிறைவேற்றுவேன். மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்​பை தடுக்க நடவடிக்கை எடுப்பேன்!'' என்கிறார் சித்ரா.
மேயராக இருந்த சுஜாதாவுக்கே ஆரம்பத்தில் காங்கிரஸ் ஸீட் தந்தது. கோபத்தில் கொந்தளித்த சுஜாதா, 'யாரைக்கேட்டு என்னை வேட்பாளராக அறிவிச்சீங்க? நான் ஸீட் கேட்டு விருப்ப மனுவே கொடுக்கலையே?’ என்று பாய... விஜயா சேகர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதுதவிர, பா.ம.க. சார்பில் லீமா சிவகுமார், பி.ஜே.பி. சார்பில் பேராசிரியை கிரிஜா, ஐ.ஜே.கே. சார்பில் டாக்டர் லதா ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இருப்பினும், தி.மு.க-வின் விஜயா ஜெயராஜ், அ.தி.மு.க-வின் ஜெயாவுக்கும் இடை​யில் போட்டி என்பதுதான் இப்போதைய நிலவரம். மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக ம.தி.மு.க-வின் ரொஹையாவும், தே.மு.தி.க-வின் சித்ராவும் கடுமையாக முயற்சிக்கிறார்கள்.

No comments:

Post a Comment