Saturday, October 15, 2011

மும்முனைப் போட்டியில் திணறும் வேலூர் கோட்டை...


வேலூர் மாநகராட்சியில் மும்முனைப் போட்டி என்றவுடன் வழக்கமான கட்சிகளுக்கு இடையே போட்டி என்று நினைத்துவிடாதீர்கள். அது​தான் இல்லை... கோட்டை மாநகராட்சியில் முக்கியக் கழகங்களுக்கு உள்ளேயே உட்கட்சிப் பூசல்... அடிதடி தடாலடிதான்!
நகராட்சியாக இருந்த வேலூரை அன்றைய தி.மு.க. அரசு, 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி மாநகராட்சியாக விரிவாக்க உத்தரவிட்டது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த கார்த்திகேயன் மேயராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில்,
'தி.மு.க. கைப்பற்றி இருக்கும் அந்தப் பதவியைப் பிடித்தே தீர வேண்டும்’ என அ.தி.மு.க-வும், 'கைவசம் இருக்கும் மாநகராட்சியை எவருக்கும் கொடுக்கக் கூடாது’ என தி.மு.க-வும் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றன. இடையே கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க. கூட்டணி வேறு!
அ.தி.மு.க. புள்ளி ஒருவர் நம்மிடம் பேசினார். ''கட்சியில் உழைச்சவனுக்கு ஸீட் கொடுக்காம யார் பணம் அதிகமாத் தருகிறார்களோ அவர்களுக்கு ஏலம் போட்டு கொடுத்தா எப்படி இருக்கும்? 48 வார்டுகளாக இருந்த மாநகராட்சியில் இப்போது 60 வார்டுகள்... ஆனா, போகிற போக்கைப் பார்த்தா நாங்க 6 ஸீட்டுகூட வாங்கமாட்டோம்னு நினைக்கிறோம். மேயர் வேட்பாளரா நிக்கிற கார்த்தியாயினிக்கு கட்சியோட சின்னம்கூட தெரியலை. போன வாரம் அமைச்சர் தலைமையில் நடந்த வேட்பாளர் கூட்டத்தில் அந்தப் பொண்ணு, 'நீங்க எல்லோரும் மறக்காம இரட்டை சின்னத்தில் வாக்குக் கேட்டு வெற்றி பெற செய்யுங்கள். நமது இரட்டை சின்னம் பெருவாரியாக வெற்றி பெரும்’னு பேசினாங்க! இரட்டை இலைனுகூட சொல்லத் தெரியாத அந்தப் பொண்ணு நாளைக்கு மக்களுக்கு என்ன பண்ணும்? ஒவ்வொரு நாளும் அமைச்சரோடு ஓட்டுக் கேட்க போறாங்க. ஆனா, காலையில் கையெடுத்துக் கும்பிட்டா சாயங்காலம்தான் கையை இறக்கி விடுறாங்க. இதுவரைக்கும் 50 வார்டுகளுக்குப் போய் பிரசாரம் பண்ணிட்டோம். இருந்தும், மக்கள்கிட்ட வெறுப்புதான் அதிகமா இருக்கு.
எங்களுக்கு எதிர்க் கட்சிகூட எதிரி இல்லை, நாங்களே​தான்! மேயர் வேட்​பாளர்கள் பட்டி​யல் கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிட்டாங்க. அப்ப எங்க அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நான்காம் இடத்தில் இருந்தது. நாங்க கேட்டதுக்கு, 'அகர வரிசைப்படிதான் பெயர்களை வெளியிடவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது’னு அதிகாரி சொன்னார். அவர் சொல்படி வரவேண்டியதுதானே! ஆனா, எங்க கட்சிக்காரங்க சிலரே, 'நாங்க ஆளும் கட்சி... எங்ககிட்டயே சட்டம் பேசுறியா?’னு அவரை மிரட்டினாங்க. அதிகாரியும், 'இதெல்லாம தேர்தல் கமிஷன் பண்ணச் சொன்னது’னு சொல்லியும் அவரைக் கேவலமாத் திட்டிட்டாங்க. அங்கிருந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் என்ன நினைப்பாங்க... மக்களுக்கு நல்லது செய்யத்தான் தி.மு.க. ஆட்சியைத் தூக்கிட்டு எங்களை உட்கார வச்சிருக்காங்க. எங்க ஆளுங்க இப்படி செஞ்சா... தங்களுக்குத் தாங்களே குழியைப் பறிச்சுக்குவாங்க’!’ என்றார் வெறுப்போடு.
தி.மு.க. நிலை, இன்னும் மோசம்... மாவட்ட உடன்பிறப்பு ஒருவர், ''முன்னாள் அமைச்சர் என்று அண்ணன் துரைமுருகனை நாங்கள் எப்போதும் பார்த்ததில்லை. எப்போதும் அவர்தான் எங்கள் அமைச்சர். அப்படிப்பட்டவர், 'வேலூர் கோட்டை தி.மு.க-வின் கோட்டை. இதை எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம்’ என்று மூன்று மாதத்துக்கு முன் வீர வசனம் பேசியவர், இப்போது தேடினால் கிடைப்பதில்லை. கடந்த 20 வருஷங்களாக காங்கிரஸ் சார்பில் ஞானசேகரன் எம்.எல்.ஏ.வா இருந்தார். அ.தி.மு.க. சார்பில் இப்போது டாக்டர் விஜய் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இதுவரை இவர்களால் வேலூருக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டதா? வேட்பாளர் ராஜேஸ்வரி கட்சிக்காரங்கிட்ட சரியா பேச மாட்டேங்கிறாங்க. அப்புறம் எப்படி மக்கள் குறையைப்பற்றி அவங்க பேசுவாங்க? துரைமுருகன் அண்ணனும் வாக்கு சேகரிக்க வர மாட்டேங்கிறார். இப்படி கட்சியில் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் போய்கிட்டு இருந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்? கோட்டையை நாங்க கைப்பற்றுவோமானு சந்தேகமா இருக்கு!'' என்றார் வருத்தமுடன்.
தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா மக்களிடையே நல்ல அறிமுகம்தான். இருந்தாலும் வாக்கு சேகரிப்பதில் தே.மு.தி.க-வினர் போதிய அக்கறை காட்டவில்லை என்று காம்ரேட்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். போதாதக் குறைக்குத் தே.மு.தி.க-வில் முதலில் மேயர் வேட்பாளர் அறிவிக்கபட்டது. பிறகு நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட்
களுக்கு வேலூர் ஒதுக்கப்பட்டுவிட, கேப்டன் விசுவாசிகள் ஏகத்துக்கும் கவலையில் உள்ளனர்.
இவர்களுக்கு நடுவே... தனி ரூட் போட்டுக்கொண்டு பா.ம.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இருக்கின்றன. என்ன பண்ணுவது என்றே வேலூர்வாசிகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் நிஜம்!
பாவம் மக்கள்!

No comments:

Post a Comment