Monday, October 17, 2011

-சிறையிலிருந்து நளினி எழுதும் கண்ணீர் டைரி பாகம் 3


வார்த்தைகள் போதாதென்று, இரவு முழுவதும் இப்படி உட்காரவிடாமல் நிற்க வைப்பது, தனியொரு மரண வேதனையாக இருக்கும். கால் வலியோடு, நா வறண்டு, உயிர் பிரிவதுபோன்ற மயக்கம் வரும். ஒருவழியாக, விடியற்காலை 4 அல்லது 4.30 மணிக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த அறையிலிருந்து வெளியேறியதும், தூக்கம் பேய் மாதிரி வந்து என்னை இழுத்துச் செல்லும். ஆனால், அரைமணி நேரம்கூட விடமாட்டார்கள். வந்து எழுப்புவார்கள். பகலிலும்கூட கண் அசரவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். காலை பத்து மணிக்கு வேறு ஒரு அதிகாரி வருவார். இரவு அந்த அதிகாரியிடம் சொன்னதையே மீண்டும் இவரிடம் சொல்ல வேண்டும்.

உங்களால் நம்ப முடிகிறதா? இதுபோல், தொடர்ச்சியாக இருபது நாட்கள் என்னை தூங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்களை எந்த வேலையும் செய்யவிடாமல், போதுமான ஓய்வு கொடுத்து, ஆரோக்கியமான உணவு கொடுத்து பார்த்துக் கொள்வதுதான் உலக வழக்கம். நானோ, தூக்கமில்லாமல், உணவு இல்லாமல், அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, கேட்கக்கூடாத வார்த்தைகளை கேட்டுக்கொண்டு இருந்தேன். தொடர்ந்து தூக்கம் இல்லாத காரணத்தால், பகலில் என்னையறியாமல் தூங்கி வழியும் நேரங்களில் பணியில் இருக்கும் அந்த மூன்று இன்ஸ்பெக்டர்களும், ‘‘வேசிக்கு தூக்கம் ஒரு கேடா?’’ என்று சொல்லி காலால் எட்டி உதைப்பார்கள்.
nalini_3_small
தினமும் ஒரு வீடியோ கேசட்டைப் போடுவார்கள். அதில் பெண் புலிகள் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அவர்களில் சிலரை குறிப்பிட்டு, ‘இதுல யாராவது ஒரு பெண் நீதான்னு ஒப்புக்கோ’ என்று என்னை வற்புறுத்துவார்கள். என்னை எப்படியாவது போராளியாக சித்தரித்துவிட வேண்டும் என்ற போலீஸ் புத்தி எனக்கு தெரியாமல் இல்லை. அந்த வீடியோவில் வரும் பெண் நானாக இல்லாதபோது எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? ஆனால், சித்ரவதைகள் விடாமல் தொடர்ந்தன.

தொடர்ந்து நடத்தப்பட்ட சித்ரவதைகளால், எழுந்து நிற்கக்கூட முடியாமல் மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன். மோசமான உணவு, வாந்தி, தூக்கமின்மை, சித்ரவதைகள் என்னை மேலும் பலவீனமாக்கின. நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், குளிக்கவோ, உடை மாற்றிக் கொள்ளவோ அனுமதிக்கவில்லை. வாந்தி எடுத்த இடத்திலேயே படுத்துக் கொள்ள வேண்டும். என் தலையெல்லாம் பயங்கரமாக பேன் பிடித்துக் கொட்டத் தொடங்கியது. என் உடல், துணியெல்லாம் துர்நாற்றம் வீசியது. அவர்களால், என் அருகில் நெருங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டபோதுதான், என்னை குளிக்கவும், உடை மாற்றவும் அனுமதித்தனர்.

நான் சித்ரவதையினால் பலவீனப்பட்டு மயக்கம் அடைந்த சமயங்களில் எல்லாம் எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். என் உடலில், பெயருக்கு உயிர் ஒட்டிக் கொண்டிருந்தால் போதும் என்ற அளவிற்கே என்னை வைத்திருந்தார்கள். குளுக்கோஸ் ஏற்றும்போதுகூட, விஷ ஊசி போட்டு என் குழந்தையைக் கொன்றுவிடுவோம் என்று ஆளாளுக்கு வந்து மிரட்டினார்கள். குளுக்கோஸ் என்ற பெயரில், என் குழந்தையைக் கொல்ல விஷத்தை ஏற்றுகிறார்களோ என்ற அச்சத்தில் நான் 24 மணி நேரமும் மரண பயத்திலேயே இருந்தேன். இந்த பயமே என்னை தூங்கவிடாமல் மிகவும் கொடுமைப்படுத்தியது. விழிப்பிற்கும், தூக்கத்திற்கும் இடையில் நான் எவ்வாறெல்லாம் போராடினேன் என்பதை அனுபவித்தால் மட்டுமே உங்களால் உணர முடியும்.

ஒருநாள், மல்லிகை அலுவலகத்தில் மொட்டை மாடிக்குச் செல்லும் வழக்கமான வராந்தாவில் என்னை உட்கார வைத்தனர். அது பாதை என்பதால், எந்நேரமும் யாராவது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக என்னால் சௌகரியமாக உட்காரவோ, படுக்கவோ முடியாது. எனக்கு காவலாக இரண்டு பெண் காவலர்கள் இருந்தனர். அவர்களைத் தவிர, மத்தியப் படையைச் சேர்ந்த இரண்டு காவலர்களும், எஸ்.ஐ.டி.யைச் சேர்ந்த ஒரு காவலரும், 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக இருப்பார்கள்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நேரத்தைத் தவிர, எப்போதும் என் கையில் விலங்கு மாட்டியே வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போதும், இயற்கை கடன்களை கழிக்கும்போதும்கூட என் கை விலங்கு அகற்றப்படாது. கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக விலங்கு மாட்டப்பட்டு இருந்ததால், என் கை மணிக்கட்டில் புண் ஏற்பட்டது. அந்தப் புண் எனக்கு கூடுதல் வலியை ஏற்படுத்தினாலும், விலங்கு மட்டும் கழற்றப்படவே இல்லை.

பிரமாண்ட இயக்குநர் பெயர் கொண்ட ஆய்வாளர் ஒருவர் அங்கிருந்தார். அவர் பேசிய வார்த்தைகள் இருக்கிறதே... அடிக்கடி என்னிடம் வந்து, ‘‘வேசி மகளே! உனக்கு பொம்பள குழந்தை பொறந்தா, நானே.................................. அதை ........................ஆக்குவேன். பையன் பொறந்தா, அவனுக்கு மொட்டை அடிச்சி தெருவில பிச்சை எடுக்க வைப்பேன். இது சத்தியம்டி’’ என்று சொல்லிவிட்டுப் போவார். அவரது இந்த சபதம், ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து, நிமிடத்துக்கு நிமிடம் என்னை அழ வைத்தது.

ஒருநாள், என்னை குளியலறைக்கு அழைத்துச் சென்றபோது, தற்செயலாக என் கணவரைப் பார்க்க நேரிட்டது. அவரைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருந்தது. பட்டினியால் அவர், மிகவும் பலவீனமாக நடக்க முடியாமல் இருந்தார். கண்களில் நீர் வழிய, ‘சாப்பிட்டீங்களா?’ என்று சைகையால் கேட்டேன். கேட்டதுதான் தாமதம், ‘‘ஓ... ஜாடை காட்றீங்களோ, ஜாடை! நான் ஜாடை காட்றேன், பாக்கறியா?’’ என்று அருவெருப்பான செய்கை காட்டி, ‘‘உன் புருஷன் கண்ணெதிர்லயே உன்னை............................................?’’ என்று ஆவேசமாக கத்தினார். என்றாவது ஒரு நாள் எனக்கு அப்படி ஒரு கொடுமை இழைக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் என்னுள் அதிகரிக்கத் துவங்கியது. மறு நாள்....

-இரவுகள் நீளும்

No comments:

Post a Comment