Saturday, October 15, 2011

உச்சிவெயிலில் உள்ளாட்சி காமெடி!

முதல்ல டீ... அடுத்து கலரு... அடுத்து கடாபுடா!

மிழக உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவருக்கான போட்டியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., உட்பட கிட்டத்தட்ட 10 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார் கள். அதோடு, நகராட்சி கவுன்சிலர் பதவிக்கும் ஆட்கள் களத்தில் இருக்கி றார்கள். தவிர, சுயேச்சைகளும் வேறு கச்சைக்கட்டி நிற்கிறார்கள். சரி, இருந்து விட்டுப் போகட்டுமே, அதனால் என்ன? அதில்தான் இருக்கிறது வாக்காளர் களுக்கான வேதனையே!
காலை 6 மணியளவில் வாக்காளர் எழுந்து காலைக் கடன்களை செய்வதற்கு முன்னால்... ''அய்யா வணக்கம்யா... அம்மா வணக்கம்மா. நான்தான் நம்ம வார்டுக்கு கவுன்சிலரா நிக்கிறேன், நம்ம சின்னம் இதுதான், பாத்து செய்யுங்க!'' என்று கழுத்தில் சுற்றிய துண்டோடு பூபாளத்தை முழங்க... 'என்னய்யா கொடுமை?’ என்று யோசிப்பதற்குள்... ''அண்ணி... அண்ணன் இல்லைங் களா? நான்தான் இந்தக் கட்சி வேட் பாளர்!'' என்று அடுத்த குரல். 'அவங்க டாய்லெட்ல இருக்காங்க’ என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னால், ''இருக்கட்டும், இருக் கட்டும்... வந்ததும் பார்த்துட்டு போயிடறேன்!'' என்கிறார் அந்த வேட்பாளர். அவசர அவசரமாக வெளியில் வந்து அசடு வழிந்துவிட்டு குளிக்கப் போனால்... கூக்குரல் கொடுக்கிறது இன்னொரு குரல். குளியலையும் அரைகுறையாக முடித்துவிட்டு, வேட்பாளரையும் அனுப்பிவிட்டு சாப்பிட உட்கார்ந் தால்... ''என்னாண்ணே, சாப்பாடா? நாமளும் சாப்பிடலாமா?'' என்று வருகிறது உரிமைக் குரல்.
இந்த அமளிதுமளியால் அலுவலகத்துக்குக் கிளம்ப, பரபரத்து வெளியே வரும்போது, ''அண்ணே, உங்களை நம்பித்தான் நிற்கிறேன். நீங்கதான் இந்த தடவை மனசு வைக்கணும்!'' என்று இன்னொருவர் கெஞ்ச... 'ஐயோ, ஆபீஸில் நாம் போய் கெஞ்ச வேண்டுமே?’ என்ற நினைப்போடு பேருந்தைப் பிடிக்க ஓடுவார் மாண்புமிகு வாக்காளர். இப்படி நகரப் பகுதி வாக்காளர்களைத் துரத்தும் ஓட்டு வேட்டை ஒரு புறம் இருக்க... கிராமத்தில் நடக்கும் கூத்துகளோ நம்மை கரும்பைப்போல் பிழிந்து விடுகின்றன.
விடியற்காலை 5 மணிக்கெல்லாம் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள் வேட்பாளர்கள். தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தால்... ''என்ன மச்சான், இன்னும் தூங்குறீங்க?'' என்று உறவைச் சொல்லி ஓட்டு கேட்பார் ஊராட்சித் தலைவர் வேட்பாளர். 'ஓஹோ, அவர் வீட்டுக்குப் போகிறாரா? சரி, நாம் தெரு முனையில் மாப்பிளையைப் பார்த்துவிடுவோம்’ என்று கும்பலோடு காத்திருக்கிறார் மற்றொரு வேட்பாளர். தெருமுனையில் அவரைச் சந்தித்துவிட்டு டீக்கடைக்குப் போனால், ''டேய், அண்ணனுக்கு ஒரு டீ சொல்லுடா. அண்ணே... நம்ம சின்னம் பூட்டு சாவி மறந்துடாதீங்க!'' என்று மற்றொரு வாக்காளர் ஓட்டு சேகரிக்கிறார். அடுத்து பெட்டிக்கடையில் போக... இன்னொரு வேட்பாளர் கலரை (கிராமத்து கூல்டிரிங்ஸ்!) உடைத்து நீட்டுவார். மறுத்தால்... ''அவர் கொடுத்தா குடிப்பீங்க, நாங்க கொடுத்தா குடிப்பீங்களா?'' என்று போட்டு வாங்குவார். அதனால், அதையும் குடித்துவிட்டு வயிறு கடாபுடா சத்தம் போட, வயக்காட்டு பக்கம் ஓட வேண்டும்.
வயலில் வேலை செய்யும் தாய்மார்களிடம் கும்பிட்டு விழுந்து வாக்கு சேகரிக்கிறார் ஒரு வேட் பாளர். கூலியோடு சேர்த்து இன்னொரு 100 ரூபாய் உபரியாகக் கிடைக்க... ''அது நம்ம சூனாபானா கொடுக்கச் சொன்னாரு. மறந்துடாதீங்க... ஏணியில ஒரு ஓட்டைப் போட்டுடுங்க...'' என்று வழிகிறார்கள். அலுத்துப்போய் கள்ளச்சாராயக் கடைக்குப் போனால், அங்கே தயாராக நிற்கிறது ஒரு அல்லக்கை. ''வாங்க, வாங்க... இன்னிக்கு நம்ம செலவுதான். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க. எல்லாம் அண்ணன் செலவுதான். அவர் சின்னம் மூக்குக் கண்ணாடி மறந்துடாதீங்க!'' என்று தாராளம் காட்டுகிறார் அந்த அல்லக்கை. ஓசியில் கிடைத்த சாராயத்தால் மட்டையாகும் குடிமகன் வீட்டில் போய் ரகளை கட்டுகிறார். அவர் களால் வீட்டுப் பெண்கள் படும் பாடு சொல்லி முடியாது.
எந்த வேட்பாளரோடு கூட போனால், அதிக ரூபாய் கொடுப்பார்கள் என்று காலையில் கணக்குப் போட்டு கிளம்புகிறார்கள் சில வாக்காளர்கள். வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு தவறாமல் ஆரத்தி எடுக்கிறது பெண்கள் கூட்டம். காரைக் காலுக்கோ, புதுவைக்கோ யாரை அனுப்பி சரக்கு வாங்கலாம், எந்தக் கடையில் குறைந்த விலைக்கு பிரியாணி வாங்கலாம் என்றெல்லாம் கணக்குப் போடுகிறது வேட்பாளர்களின் மனது.
இதைவிட பெரிய சோகம்... கிராமங்களில் நேற்று வரை தாயாய் பிள்ளையாய், மாமன் மச்சானாய் பழகிய சொந்தக்காரர்கள் இப்போது ஜென்மப் பகை ரேஞ்சுக்கு முறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவரும் மற்ற வேட்பாளர்களிடமோ அவர்களது ஆதரவாளர்களிடமோ பேசுவது இல்லை. டீக்கடைகளில் கும்பல் கும்பலாகப் பிரிந்து உட்கார்ந்து இருக்கிறார்கள். சாவு வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் தனி அணி. மொத்தத்தில் நகரங்கள் பரவாயில்லை, கிராமங்களோ அதன் இயல்பைத் தொலைத்துவிட்டு தேர்தல் திருவிழாவில் தொலைந்துபோன குழந்தையாய் விழிக்கின்றன!

No comments:

Post a Comment