Saturday, October 8, 2011

பிரதமர் அணுகுமுறையில் அதிருப்தி: மீண்டும் வெடிக்கிறது கூடங்குளம் போராட்டம்!


கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அணுகுமுறையில் அதிருப்தியுற்றுள்ள போராட்டக்குழு, இடிந்தகரையில் மீண்டும் தங்களது போராட்டத்தைத் தொடங்க தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்தப் பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம்போடுவதாக கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசியல் கட்சி குழுவும், கூடங்குளம் போராட்டக்குழுவும் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது, கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான தமிழகக் குழுவின் கருத்துக்களை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டறிந்தார்.

பின்னர், "நாட்டின் வளர்ச்சிக்கு மின் சக்தியின் தேவை எந்த அளவுக்கு இன்றியமையாததாக
விளங்குகிறதோ, அதே அளவுக்கு மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரமும் முக்கியமானது. இந்தப் பிரச்னையை ஒரே கூட்டத்தில் தீர்த்து விட முடியாது.

எனவே, மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய ஒரு கூட்டுக் குழு உருவாக்கப்படும். அந்தக் குழு கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை குறித்து விரிவாக ஆராயும்," என்று தமிழகக் குழுவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஜெ. ஆதரவு கோரிய பிரதமர்!


தமிழகக் குழுவிடம் பேச்சுநடத்திய பிரதமர் மன்மோகன் சிங் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் கடிதம் மூலம் ஆதரவு கோரினார்.

கூடங்குளம் அணுமின்நிலையம் உரிய நேரத்தில் செயல்படுவதற்கு தமிழக முதல்வரிடம் இருந்து ஆதரவை எதிர்பார்பார்ப்பதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையான நடவடிக்கைகளையும் அவர் விவரித்திருந்தார்.

உதயகுமார் சாடல்...

பிரதமருடன் பேச்சு நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை இரவு கூடங்குளம் போராட்டக்குழு சென்னை திரும்பியது. அப்போது நிருபர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், "தமிழக மக்களை மத்திய அரசு மீண்டும் ஏமாற்றிவிட்டது," என்று குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "இலங்கை தமிழர் பிரச்னை மற்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் விவகாரங்களை போலவே கூடங்குளம் விவகாரத்திலும் தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. தமிழக அமைச்சரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும் மத்திய அரசு மதிக்கவில்லை," என்றார்.

மேலும், "திட்டமிட்டப்படி நாளை அடையாள உண்ணாவிரதம் நடைபெறும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூடங்குளம் போராட்டக் குழுவை சந்தித்த பின் முடிவு செய்யப்படும்," என்றார் உதயகுமார்.

No comments:

Post a Comment