Saturday, October 15, 2011

ஒற்றை மனிதர் பிரசாரம்!

தேர்தல் களத்தில் போராளி

ரு ஸ்கூட்டி... அதில் விளம்பரத் தட்டி... ஒரு மைக் மட்டும் எடுத்துக்கொண்டு, தனி ஆளாக ஓட்டுக் கேட்டு வருகிறார் கோபால கிருஷ்ணன். சென்னை மாநக ராட்சித் தேர்தலில் 131 மற்றும் 138 வார்டுகளில் சுயேச்சையாகக் களம் இறங்கி இருக்கும் கோபால கிருஷ்ணன், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் ஏரியாக்களை தினமும் வட்டமடித்து வருகிறார். தங்கையின் ஸ்கூட்டியை இரவல் வாங்கி அதில் கார் பேட்டரியைப் பொருத்தி மைக் இணைப்பு கொடுத்திருக்கிறார். பதிவு செய்த தனது உரையை தொடர்ந்து ஒலிபரப்புகிறார்.
யார் இந்த கோபால கிருஷ்ணன்? தகவல் உரிமைப் போராளி. 'சமூக சேவகர், அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்கிற பிரிவுகளில் வீட்டு வசதி வாரியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் முறைகேடாக வீடுகளையும் மனைகளையும் வாங்கிய விவகாரத்தை வெளிக்கொண்டுவந்து, ஜாஃபர் சேட், ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் என்று பலரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய அதே கோபால கிருஷ்ணன். பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த மோசடிக் குற்றச்சாட்டில் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது ஆவதற்கும் காரணமாக இருந்தவர். ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடந்தபோது அதில் பங்கெடுத்தவர்.
''லோக்பால் போராட்டத்தின்போது 'நாடாளு மன்றத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மட்டுமே சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு’ என்று சொன்னது மத்திய அரசு. அதனால்தான் தேர்தலில் நிற்க முடிவெடுத்தேன். எங்க ஏரியாவில் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கியவர்களுக்கு கிரையப் பத்திரம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு கொடுத்து, நயா பைசா செலவே இல்லாமல் பத்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். முதியோர் உதவித் தொகையைக் கொண்டுவரும் தபால்காரர்கள் அதில் பணம் பிடித்துக்கொண்டு கொடுத்தபோது, அவர்களை சி.பி.ஐ. மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
மக்கள் மீது நம்பிக்கைவைத்து களத்தில் நிற்கிறேன். அவர்கள் விரும்பினால், என்னை மாமன்றத்துக்கு அனுப்பிவைக்கட்டும்!'' என்கிறார் நம்பிக்கையுடன் கோபாலகிருஷ்ணன்.
இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் வைரம். ஆளுக்கேத்த சின்னம்தான்!
- எம். பரக்கத் அலி, படங்கள்: எம். உசேன்
*********************************************************************************
சென்னை ரவுண்ட்ஸ்

தொண்டு தோள் கொடுக்குமா?
கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது, தி.மு.க-வினர் நடத்திய வன்முறையால் கடுமை யாகத் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தேவி என்ற தேவகி. உயர் நீதிமன்றமே மறு தேர்தல் நடத்தச் சொன்னதற்கு தேவி மீதான தாக்குதலும் முக்கியக் காரணம். இப்போது தேவி போட்டியிடும் 74-வது வார்டு, மார்க்சிஸ்ட் கட்சிக்கு கௌரவப் பிரச்னை போல ஆகிவிட்டது. அதனால், இங்கு தீவிரமாக சுழன்று சுழன்று வேலை செய்கின்றனர். கடந்த 10 வருடங்களாக, ஏரியாவுக்கு கவுன்சிலர் தேவி என்னென்ன செய்தார்? என்பது பற்றி, 'தொண்டுகள் தொடர, தோள் கொடுப்பீர்’ என்ற 32 பக்கப் புத்தகம் ஒன்றை வீடு வீடாகக் கொடுத்து பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க. தரப்பில் போட்டி இருந் தாலும், அ.தி.மு.க. தரப்பில் பிரசாரத்தையே காணோம். அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் வீடு இதே வட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த முறை அ.தி.மு.க-வின் வன்முறை இருக்குமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள், ஏரியாவாசிகள். இந்த முறையும், தொண்டு தோள் கொடுக்குமா?
யாருக்காவது போடுங்க!

டாக்டருக்கு வருத்தமா?
எப்போதும் கோஷ்டி கானம் இசைக்கும் காங்கிரஸில், சென்னை மேயர் வேட்பாளர் ஸீட்டுக்கு கடும் போட்டி என்று எதுவும் இல்லை. வாசன் ஆதரவாளர்கள் நான்கைந்து பேர் முயற்சிக்க... தற்போதைய மாநகராட்சி எதிர்க் கட்சித் தலைவரான சைதை ரவிக்கு சான்ஸ் அடித்தது. கவுன்சிலர் இடங்களிலும் 65 சதவிகிதத்துக்கும் மேல் வாசன் அணியினரே அள்ளினார்கள். ஒரே கோஷ்டியாக ஸீட் வாங்கியவர்கள், பிரசாரத்தில் புது ஆவர்த்தனம் வாசிக்கிறார்கள். 'கவுன்சிலர் ஓட்டை எனக்குப் போடுங்க, மேயருக்கு எந்த கட்சிக்காவது போட்டுக்கோங்க...’ என்பதுதான் அவர்களின் பிரசார கோஷம். காரணம் என்னவாம்? 'வைட்டமின் ப’ பரிவர்த்தனை நடைபெறவே இல்லையாம். அது சரி, காங்கிரஸில் கோஷ்டி கானம் கேட்காமல் இருந்தால்தானே ஆச்சர்யம்!
மாநில அங்கீகாரம் இல்லாத கட்சிகள்கூட மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தி, வாய்ப்புள்ள வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், தேசியக் கட்சியான பி.ஜே.பி-க்கு மேயர் வேட்பாளரே இல்லை. பி.ஜே.பி-யின் சார்பில் மனுத் தாக்கல் செய்த ராஜேந்திரகுமாரின் மனு, விதிமுறைப்படி இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால், அந்தக் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர்கள், பிரசாரத்தின்போது மேயருக்கு யாருக்கு வாக்கு கேட்பது என்பதைச் சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. மேயருக்குப் போட்டி இல்லாததால், பெரிய தலைகளின் பிரசாரமும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னையில் தனியாகப் போட்டியிட்டு, 30,000 வாக்குகளைப் பெற்றவர் டாக்டர் தமிழிசை. அவரை நிறுத்தியிருந்தால், கௌரவமான போட்டியாக இருந்திருக்கும் எனப் புலம்புகிறார்கள், காவித் தொண்டர்கள். ''தமிழிசை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத சிலரின் திருவிளையாடல்கள்தான் இது!'' என்றும் கட்சிக்குள் புலம்பல் கேட்கிறது.
எஸ்.எம்.எஸ். தட்டுங்க.. மெயில் பண்ணுங்க!
சென்னை மாநகராட்சியின் 81-வது வார்டில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாபிரா யார் தெரியுமா? பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யான ஜே.எம்.ஆரூணின் அண்ணன் மகள். இது வரை அரசியல் வாசமே இல்லாமல் இருந்த சாபிரா திடீர் வேட்பாளராகி இருக்கிறார். படித்த மக்கள் அதிகம் உள்ள வார்டு என்பதால், 'கவுன்சிலராகி சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரலை. உங்களுக்கு எதாவது நல்லது செய்யத்தான் வந்திருக்கேன். உங்க குறைகள் எதுவா இருந்தாலும் எனக்கு நீங்க எஸ்.எம்.எஸ்., அல்லது மெயில் பண்ணுங்க...’ என்று ஹைடெக்காக ஓட்டு கேட்கிறார். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தனது செல்போன் நம்பரையும், இ-மெயில் ஐ.டி-யையும் கொடுத்து வருகிறாராம். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!
கட்சி மீது கடுப்பு?
காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கம் ஊராட்சி, இப்போது சென்னை மாநகராட்சியின் 185-வது வார்டாக மாறியுள்ளது. கடந்த 1996, 2001-ம் ஆண்டுகளில் ஊராட்சித் தலைவராக இருந்தவர், பாலவாக்கம் சோமு. இவர் ம.தி.மு.க-வின் காஞ்சி மாவட்டச் செயலாளரும்கூட. 2006-ம் ஆண்டு இந்த ஊராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டதும், அவர் மகளையே நிற்கவைத்து வெற்றிபெறச் செய்தார் சோமு. இப்போது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் அவரே போட்டியிடுகிறார். இது அல்ல சங்கதி. ம.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான வேட்பாளர் என்றாலும், பிரசார சுவரொட்டியில் கட்சியின் வாசனையே தென்படவில்லை. சோமுவின் பெயரும் சின்னமும் மட்டும்தான் இருப்பதைப் பார்த்து சீறுகிறார்கள் கட்சிக்காரர்கள். அட, தன்னம்பிக்கைக்கு ஒரு அளவு வேண்டாமுங்களா?
பொட்டு... ஓட்டு...
சென்னை மாநகராட்சி 169வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார் ஜெயச்சந்திரன். 168 வது வார்டுக்கு அவரது மகனே, அ.தி.மு.க. வேட்பாளர். இவர்கள் இருவரும் வாக்குக் கேட்க வரும்போது... ஜெயலலிதா படம் போட்ட சிறு அட்டையைக் கொடுக்கிறார்கள். உள்ளே திருப்பிப் பார்த்தால் ஏராளமான கலரில் ஸ்டிக்கர் பொட்டுகள் இருக்கும். ''பொட்டைப் பார்த்த சந்தோஷத்திலயே பெண்கள் எங்களுக்கு ஓட்டு போட்டுருவாங்க'' என்று சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் புழுதிவாக்கம் பகுதி அ.தி.மு.க.வினர்!
- ஜூ.வி. டீம்

No comments:

Post a Comment