Saturday, October 15, 2011

மூவர் தூக்கு மத்திய கேபினெட்டில் ஏற்கப்பட்டதா?

அம்பலப்படுத்தும் ஆதாரக் கடிதம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி. 'இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த இழுத்தடிப்புக்குப் பிறகு, இப்போது பதில் வந்துள்ளது. மூவர் தூக்கு விவகார விசாரணை நெருங்கி வரும் நிலையில், உள்துறையின் பதில் குறித்து வேலுசாமியிடம் பேசினோம்.
''ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான குழப்பங்கள்... இந்தியாவின் மாபெரும் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சில விஷமிகளைத் தப்ப வைப்​பதற்காகவே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விசாரணை அதிகாரிகள் பலிகடா ஆக்கினார்கள். ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தை விசாரிக்கும் பல்​முனை​நோக்கு விசாரணைக் குழுவிடம் நான் ஆரம்பம்தொட்டே பலவிதமான சந்தேகங்களையும் சொல்லி வருகிறேன். ஆனால், விசாரணை முற்றுப்பெறாத நிலையிலேயே இம்மூவரையும் தூக்கு மேடையை நோக்கித் துரத்தும் விதமாக, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னணியில், யாருடைய கைங்கர்யம் இருந்தது என்பதை வெட்டவெளிச்சமாக்க நினைத்தே என் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 13.8.11 அன்று மத்திய அரசுக்கு அனுப்பினேன். மூன்று பேருடைய தூக்குக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அது சம்பந்தமான கேள்விகளுக்கு விரைந்து பதில் அளித்திருக்கவேண்டிய மத்திய அரசு, திட்டமிட்டுத் தாமதம் செய்தது. அதனால், 'உரிய பதில் வராவிட்டால், நீதிமன்றத்துக்குச் செல்வோம்’ என நாங்கள் நினைவூட்டுக் கடிதம் அனுப்பிய பிறகே கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பதில் வந்துள்ளது. (பதில் வந்த நகலை நம்மிடம் காட்டுகிறார்) அதில், உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகு கருணை காட்டுங்கள் எனச் சொல்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும், மூவருடைய தூக்கு குறித்து பலவிதமான ஆலோசனைகளை நடத்திய பிறகே, உள்துறை அமைச்சகம் கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதில், மிக முக்கியமான தகவல், மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம், கருணை மனு நிராகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் யாரிடமும் கலந்து பேசவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து பேசித்தான் கருணை மனு நிராகரிப்பு குறித்து குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ய முடியும். ஆனால், தன்னிச்சையாகவே ப.சிதம்பரம், கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்து இருக்கிறார். மத்திய அமைச்சரவையில் உள்ள வேறு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி அவர் செய்ததே தவறு. மூன்று பேர் தூக்கு குறித்த நீதிமன்ற விசாரணைகள் வேகமாகி வரும் நிலையில், உள்துறை செய்த இந்தக் குளறுபடியை மிக முக்கிய ஆவணமாகப் பதிவு செய்யலாம்!'' என்று சொல்கிறார் வேலுசாமி.
''தூக்குத் தண்டனைக் கைதிகள் குறித்த கருணை மனுக்களை மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து தன்னுடைய கருத்தை குடியரசுத் தலைவருக்குச் சொல்லவேண்டும். அந்த அடிப்படையில் அவர் முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அப்படிப்பட்ட ஆலோசனைகள் நடக்கவில்லை என்பது வேலுசாமிக்கு வந்துள்ள கடிதத்தின் மூலம் தெரிந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் உள்துறை அமைச்சரது ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். எனவே இந்த உத்தரவே செல்லாது!'' என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
மூவருக்குமான தூக்கு குறித்த அடுத்த கட்ட விசாரணைகளில் வேலுசாமிக்கு வந்திருக்கும் கடிதத்தையும் முக்கிய ஆவணமாகக் கையில் எடுத்திருக்கிறார்கள். பார்க்கலாம்..!

No comments:

Post a Comment