Saturday, October 8, 2011

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம் 85 : ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி

சில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive சேவையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளி யிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம்?

முக்கியமாக, விலை! இந்தக் குளிகையை ஐ-பேடைவிடக் குறைவான விலையில் விற்றாக வேண்டும். கணிசமாகக் குறைவான விலை. (அற்புதமாக இருந்த மோட்டரோலாவின் Xoom குளிகை பயங்கரத் தோல்வியைச் சந்தித்ததற்கு மிக முக்கியக் காரணம், விலைதான்!) விலை குறைத்து விற்பது என்பது அமேசானுக்குப் பழக்க மான மாடல்தான். அவர்களது கிண்டில் சாதனத்தை நஷ்டத்துக்கு விற்பது என்பது அவர்களது பிசினஸ் பிளான். மின் புத்தகம் மற்றும் பத்திரிகைகள் போன்ற digital content சமாசாரங்களை கிண்டில் பயனீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் சாதன விற்பனை நஷ்டத்தை ஈடு செய்து விடலாம் என்ற திட்டம் சிறப்பாகவே நிறைவேறியதைச் சென்ற இரண்டு ஆண்டு களில் பார்த்தோம். இதற்கு மாறான திட்டம், ஆப்பிளுடையது. சாதனங்களை விற்பதற்காக, digital content ஐ இலவச மாகவோ, அல்லது அடிமாட்டு விலைக்கோ கொடுப்பது அவர்களது திட்டம். இதுவும் பிரமாண்ட வெற்றியைக் கொடுப் பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை!

கிண்டில்போல மின் படிப்பானாக மட்டுமே இந்தக் குளிகை இருக்காது. கூகுளின் ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்தக் குளிகையில் மென்பொருள்களைப் பதிவேற்றிக்கொள்ளலாம். இது மடிக்கணினிக்கு நிகரானதாக இருக்கும் என்கிறது அமேசான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும்.

குளிகை விற்க இலவச content என்பது ஒரு புறமும் content விற்க விலை குறைந்த குளிகை என்பது மறு புறமும் இருந்தால், அமேசானின் மாடல் வெற்றியடைய வாய்ப்புகள் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. இதைச் சமாளிக்க ஒரே வழி, விலையைக் கூட்டுவது. அப்படிச் செய்தால், Xoomன் கதி அமேசான் குளிகைக் கும் ஏற்படலாம். தான் எடுத்த முயற்சிகளில் போராடி வெற்றி பெறும் வரலாறு அமேசானுக்கு உண்டு. மேகக்கணினியத் தொழில்நுட்பத்தில், ஆப்பிள், கூகுள் போன்ற ஜாம்பவான்கள் நுழையும் முன்னரே, அழுத்தமாகத் தனது பெயரைப் பதித்து, தொடர்ந்து வளர்ந்து வருகிறது இந்தப் 'பழைய’ இணைய நிறுவனம். குளிகைத் துறையில் என்ன/எப்படி செய்யப்போகிறது என்பதை அக்டோபர் மாதவாக்கில் தெரிந்துகொள்ளலாம்.

'வருங்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பை நீங்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை அண்டன். எப்போது பார்த்தாலும் சமூக ஊடகம்பற்றித்தான் எழுதுகிறீர்கள்!’ என்று விகடன் டாட்காமில் அக்கறையுடன் கேட்ட பாலசுப்ரமணியும், அவரது பின்னூட்டத்தை 'Like’ செய்த மற்ற மூன்று வாசகர்களும், அவரது கருத்துக்கு ஆதரித் தும்/எதிர்த்தும் பின்னூட்டம் இட்ட மற்ற பலரும் சமூக ஊடகத்தின் வலிமையைப் பயன்படுத்தி இருப்பது நல்ல நகைமுரண். ஒரு கட்டுரைபற்றி அதைப் படிக்கும் பலருடன் உரையா டலில் ஈடுபடும் 'Engagement’ சமூக ஊடகத்தின் மிக முக்கிய வலிமைகளில் ஒன்று. இது இல்லை என்றால், 'Dear Editor, In an otherwise well-written article,...’ என்று போஸ்ட் கார்டில் எழுதி அடுத்த வாரம் அது பிரசுரம்ஆகிறதா என்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அதெல்லாம் சரிதான். ஆனால், சமூக ஊடகத் தொழில்நுட்பம் எதிர்காலத்துக்கு அத்தனை முக்கியமானதா என்றால், 'நிச்சயமாக யுவர் ஹானர்!’ என்று சொல்வேன்.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் இணையத்தில் இயங்குகிறார்கள். அதில் முக்கால்வாசி ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் அத்தனை முக்கியம் இல்லை. காரணம், பொருளாதாரம் பயின்றவர்களுக்கு, 'Law of diminishing returns’ என்ற விதி நன்றாகத் தெரிந்திருக்கும். முதலீட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்குத் தகுந்தபடி விளைவு அதிகரிப்பது இல்லை. அதற்கு மாறாக, குறையத் தொடங்கும் என்பதுதான் இந்த விதியின் சாராம்சம். தெளிவாகத் தெரிந்துகொள்ள, இந்த விதிபற்றிய விக்கி உரலியைச் சொடுக்குங்கள் http://en.wikipedia.org/wiki/Diminishing_returns. சமூக ஊடகத்தில் அதிக அளவில் பயனீட்டாளர்கள் இணை யும்போதும், இதே விதியின்விளைவு நிகழும் என்பது உறுதி.

அதே வேளையில், டெக் உலகின் ட்ரெண்டுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெளிவாகப் புலப்படும். எந்த ஏரியாவில் (முக்கிய மாக கவனிக்கவும்... எந்த நிறுவனத் தில் அல்ல! எந்த ஏரியாவில்) தொழில் முதலீடு அதிக அளவில் செய்யப் படுகிறதோ, அந்த ஏரியாவில் ஆராய்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்கப்படும். அதிகமானவை தோல்வியில் முடிந்தாலும், புதிய முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். 90-களில் ஈகாமர்ஸ் ஏரியாவுக்கு தண்ணீராய் அனுப்பப்பட்ட தொழில் முதலீட்டுப் பணம் தான், ஈபே, அமேசான் போன்ற பிரமாண்ட நிறுவனங்களை நிறுவவும், அவை வணிகம் என்பதன் அடிப்படை யையே மாற்றவும் பயன்பட்டது.

வீடியோ ஏரியாவில் செலுத்தப்பட்ட முதலீடு YouTube, BrightCode போன்ற நிறுவனங்களும் அவற்றின் தொழில்நுட்பங்கள் பயனீட்டாளர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது!

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சமூக ஊடகத் தொழில்நுட்பங்களுக்காகச் செலுத்தப்பட்டு இருக்கும் தொழில் முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள்.



புதுமை செய்யும் ஆற்றலுக்குரிய ஐந்து திறமைகள் என்ன?

ன்னொரு புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தொழில்நுட்பப் படிப்புகளின் மீதுள்ள ஆர்வம் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியா வில் இருக்கையில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் சேரப்போகும் சோனேஷின் பெற்றோர்கள் இருவரும் டாக்டர்கள் என்றாலும், சோனேஷின் விருப்பம் தொழில்நுட்பம். கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ரோஷனின் அப்பா பஸ் கண்டக்டர், அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியை. ஒவ்வொருவருக்கும் பலவிதக் கனவுகள். 10 வருடங்களுக்கு முன் தொழில்நுட்பம் கற்றால் ஏதோ ஒரு நிறுவனத்தில் வசதியாக வேலை கிடைக்கும் என்பது மட்டுமே உந்துகோலாக இருந்தது. இணையமும், அலைபேசித் தொழில்நுட்பங்களும், மாறி வரும் உலகச் சூழலும் தொழில்முனைதல் (entre preneurism) மற்றும் புதுமை செய்தல் (inno vation) போன்றவை அத்தனை கடினம் அல்ல என்ற நிலையைக் கொண்டுவருவது தெளிவாகப் பார்க்க முடிகிறது.

அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் (Apple) போலவோ, லேரி பேஜ் (Google) போலவோ மார்க் ஸக்கர்பெர்க் (Facebook) போலவோ வருவதற்கான வாய்ப்புகள் என்ன?

வெற்றிகரமான Innovator ஆவதற்குப் பிறப்பிலேயே திறமை இருக்க வேண்டுமா? அதெல்லாம் தேவை இல்லை என்கிறார்கள் 'The innovators DNA: Mastering the five skills of disruptive innovators’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள். பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் (Problem Solving Skills), தீவிரப் பயிற்சியோடு (Practice) இணையும்போது புதுமை செய்யும் ஆற்றல் வந்துவிடுகிறது. இதற்கு ஜீன்ஸ் தேவை இல்லை என்பதுதான் புத்தகத்தின் அடிப்படை.

அந்த ஐந்து திறமைகள் என்ன? பார்க்கலாம்.

கேள்வி கேட்டுக்கொண்டே கேளுங்கள்!

குறிப்பாக, 'What if’ வகை கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருங்கள். பயனீட்டா ளர்கள் உங்களது பொருளுக்குக் குறைந்த விலையே கொடுக்கத் தயாராக இருந்தால், அதை எப்படி வடிவமைப்பீர்கள்? அவர் களுக்குப் பணம் ஒரு பொருட்டாகஇல்லை என்றால், உங்கள் வடிவமைப்பு எப்படி மாறும்? நீங்கள் உங்கள் பொருளை/தீர்வை வெளியிடும் முன், இன்னொரு போட்டி யாளர் வெளியிட்டால் என்ன செய்வீர்கள்? என்ற ரீதியில் கேட்டுக்கொண்டே இருங்கள். மற்றவர்களிடம் அல்ல... உங்களிடம் நீங்களே!

மற்றவர்கள் பார்க்காதவற்றை உற்று நோக்குங்கள்!

இருக்கும் இடங்களில் உள்ளவற்றை வெறுமனே பார்க்காதீர்கள் அவற்றை உற்றுநோக்கி, உள்வாங்கிக்கொண்டு மனதில் அலசுங்கள். இந்தத் திறனை வளர்க்க அடிக்கடி புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது உதவும். தெரியாத புதிய இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு இருப்பவர்கள் அந்தச் சூழலைப் பார்ப்பதைவிட, நீங்கள் கூர்மையாக உற்றுநோக்குவீர்கள். நாளடைவில், அது உள்ளார்ந்த திறனாகவே மாறிவிடும்!

சரியான நட்பு வட்டத்தில் ஈடுபடுங்கள்!

பொதுவாக, மக்களின் மனோநிலை அவர்களைப் போன்றவர்களுடன் நட்பு வட்டத்தில் இணைவதுதான்- Birds of the same feather fly together - ஆனால், புதுமை செய்ய விரும்பும் தொழில்முனைவோர், தமது சமூக வட்டத்தைத் தாண்டி புதிய network ஐ வளர்த்துக்கொள்வது மிகமிக அவசியம். அப்போதுதான் உங்களது எண்ணங்கள் விசாலமாகும். அது புதுமைக்கு இழுத்துச் செல்லும்!

பரிசோதனை மூலம் கற்றுக்கொள்ள பயப்பட வேண்டாம்!

விர்ஜின் நிறுவனத்தின் ரிச்சர்ட் ப்ரான்சன் இதற்கு நல்ல உதாரணம். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத, கிட்டத்தட்ட 300 நிறுவனங்களை நடத்துகிறார் இவர். என்ன துறையில் பிசினஸ் தொடங்க வேண்டும் என்றாலும், இவர் தயார். லாபமாக நடந்தால் தொடர்ந்து நடத்துவார். நஷ்டம் அடைந்தால், மூடிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இந்த நான்கு திறமைகளையும் பயிற்சி செய்தபடியே இருந்தால், ஐந்தாவது தானாகவே வந்துவிடும். அது...

Associational Thinking!

சம்பந்தம் இல்லாத பல பிரச்னைகளை யும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஐடியாக் களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்க முடிகிற திறன் என்று இதைச் சொல்லலாம். வெற்றிகரமாகப் புதுமைகளைச் செயல் படுத்தும் தொழில்முனைபவர்களிடம் இந்தத் திறன் இருப்பது தெரியவரும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

'சிங்களத் தீவினுக்கோர்
பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்
செய்குவோம்!’

என்றெல்லாம் பிரமாண்ட கட்டுமானத் தொழில்நுட்பக் கனவுகளை மட்டுமே ஒரு காலத்தில் காண முடிந்தது. இந்தியா போன்ற வளரும் பொருளாதாரச் சமூகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒவ்வொரு பிரச்னையின் தீர்வும் புதுமை செய்வதற்கான வாய்ப்பு. இந்தக் கட்டுரையின் தாக்கத்தினால் 'யாரிடமாவது வேலைக்குப் போவதைவிட, கம்பெனி ஒன்று தொடங்கப் போகிறேன்!’ என்று ஒரு மாணவராவது முடிவு செய்தால், அதை இந்தக் கட்டுரைத் தொடரின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதுவேன்!



கடைசி நேரத் தேவைகள்

சென்ற வாரம் தனிப்பட்ட முறையில் எனக்கு அதி சிறப்பானது. விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் பயிற்சி முகாமுக்கு என்னைப் பேச அழைத்தனர். சில பல வருடங்களுக்கு முன், இதே பயிற்சித் திட்டத்தில் மாணவனாக இருந்தவன் நான். பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவப் பத்திரிகையாளர் கள்போலவே, என் திட்டக் காலத்தில் சிறப்புரைகளுக்கு வந்திருந்த பிரமுகர்களிடமும் நிபுணர்களிடமும் குறுகுறு பார்வையுடன் பல கேள்விகளைக் கேட்ட நினைவு இருக்கிறது. வருடங்கள் பல கடந்த பின்னர், அதேபோன்ற கேள்விகள் நம்மிடம் கேட்கப்படும்போது, அவற்றுக்குப் பதில் சொல்வது எளிது அல்ல என்ற உண்மை புலப்பட்டது. நான் மாணவப் பத்திரிகையாளனாக இருந்தபோது, பெரும்பாலும் பயன்படுத்தியது சைக்கிள். கட்டுரையை பேப்பரில் எழுதி, கூரியரில் அனுப்ப வேண்டும். இந்த வருடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் 56 புதிய பத்திரிகையாளர்களிடம் எனது பேச்சின்போது, தொழில் நுட்பப் பயனீடுபற்றிச் சில கேள்விகள் கேட்டேன்.

அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது. ஓரிருவர் தவிர, எல்லோரிடமும் மின் அஞ்சல் முகவரி உண்டு. 75 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள்.

இது இணையப் பயனீட்டாளர்களின் ஒரு குறுக்குவெட்டு சாம்ப்ளிங் என்று சொல்லலாம். இவர்களில் சிலர், சில வருடங்களுக்குப் பின்னர் என்னைப்போலவே பேச அழைக்கப்படலாம். அப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்னவாகும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

அது இருக்கட்டும்... டெக் உலகில் சமீபத்தில் வெளிவந்து கலக்கிக்கொண்டு இருக்கும் தளங்கள், சேவைகள், சாதனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

'கடைசி நேரத் தேவைகள்’ என்பது நல்ல லாபம் ஈட்ட முடிகிற சந்தை. ஏர்லைன் நிறுவனங்கள் கடைசி நிமிடங்களில் மலிவான விலையில் பிசினஸ் கிளாஸுக்கு upgrade செய்யத் தூண்டுவதை சர்வதேசப் பயணங்களில் சாதாரணமாகப் பார்க்கலாம். காலியாகப் போகும் இருக்கைகளை, குறைவான விலையில் விற்றால் லாபம்தானே!

இதேபோல், கடைசி நேரத் தேவைகள் பலவற்றைச் சந்திக்கும் சந்தை, இணையம் வரும் முன்னர் சிறிய அளவில்தான் இருந்தது. காரணம், கடைசி நேரத் தேவையைச் சந்திக்க முடியுமா என்பதை, நீங்கள் நேரிலோ, ஏஜென்ட் ஒருவர் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இணையம் வந்த பின்னர் இந்தச் சந்தை மிகப் பெரிதாக விரிவடைந்தது. கடைசி நேரப் பயண டிக்கெட்டுகளையும், வாடகை கார்களையும், ஹோட்டல் ரூம்களையும் வாங்கித் தரும் சேவைகள் அறிமுகமாகின. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி, மொபைல் சார்ந்த சேவைகள். குறிப்பாக, அடிக்கடி பயணிப்பவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் ரூம் வசதி. திடீரெனப் பயணம் செய்யும் அவசியம் வரும்போது, தங்க இடம் கிடைக்காமல் அவதிப்படு வது உண்டு. இதைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டு இருக்கும் முதல் சேவை Hotel Tonight என்ற மொபைல் மென்பொருள். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பதிவிறக்கி இயக்க முடிகிற இந்த மென்பொருள், Location Based Services எனப்படும் இடம் சார்ந்த சேவையை மிக அழகாகப் பயன்படுத்துகிறது. நீங்கள் கோவைக்கு அவசரமாகச் செல்ல வேண்டி இருக்கிறது. ரயிலில் சென்று சேர்கிறீர்கள். ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து, அலைபேசியை எடுத்து, மென்பொருளை இயக்கி, ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களின் விவரங்களை யும், அதன் வாடகையையும், அதில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்களின் பின்னூட் டங்களையும் படித்து, அலைபேசியில் இருந்தே அறையை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்றால், எப்படி இருக்கும்? அதைத்தான் Hotel Tonight மென் பொருள் செய்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு மட்டுமே இருந்த Hotel Tonight இப்போது அமெரிக்காவின் பல நகரங்களிலும் இயங்குகிறது. 'கடைசி நேரத் தேவை’ ஏரியாவில் தொடர்ந்து பல புதுமையான சேவைகள் விரைவில் வரும் என நம்புகிறேன். தொழில் முனையும் ஆர்வம் உள்ளவர்கள், இந்தியாவில் இது போன்ற சேவைகளை வெளியிட முன்வரலாம். நிச்சயம், வரவேற்பு சிறப்பாக இருக்கும்!

சின்ன விஷயங்களில் புதுமையைப் புகுத்தி அதை talk of the town ஆக மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம்: ஐவாட்ச் ( http://www. iwatchz.com/ ). ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஓர் உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு. அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கே கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு strap ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!

இதில் இருக்கும் மற்றொரு மென்பொருள் Pedometer. இதை இயக்கி நடக்க ஆரம்பித்தால், எத்தனை அடிகள் நடந்து இருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட்டபடியே வரும். நானோவை கணினியில் இணைத்து உங்களது நடைத் தகவலை www.nikeplus.com என்ற தளத்துக்குப் பதிவேற்றம் செய்து, உங்களது நண்பர்களுடன் 'யார் அதிகம் நடந்தது’ என்று போட்டி போடலாம்.

இன்னும் சில மாதங்களில் iCloud வந்து விடும். அதன் பின்னர், கணினியில்

இணைத்து நடை மற்றும் ஓட்டம்பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் அவசியம் இருக்காது. உங்களது ஒரு நண்பர் மெரினா பீச்சிலும், மற்றவர் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரிலும், நீங்கள் சிங்கப்பூரிலுமாக இருந்துகொண்டு நடை / ஓட்டப் போட்டி நடத்தலாம்!



இடையீடு ஸ்பெஷல்

சென்ற சில வாரங்களாக இந்தியாவுக்குள் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்துக்கொண்டு இருந்ததால், பயணத்தின்போது படிப்பதற்கு எனச் சில புத்தகங்கள் வாங்கினேன். (தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் கிண்டில் போன்ற மின் படிப்பான்களில் படிக்க எப்போது கிடைக்கும்?) 90-களின் இறுதியில் 'விகடன் பேப்பர்’ தினசரியில் 'சுஜாதாட்ஸ்’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய பத்திகளின் தொகுப்பைப் படித்தேன். அவரது பெரும்பாலான டெக் கணிப்புகள் இப்போது நிகழ்வுக்கு வந்திருப்பது உண்மை என்றாலும், கம்பி வழி இணைப்பே இணையத்தை பிரமாண்டமாக்கப்போகிறது என்ற அவரது நம்பிக்கையை Y2K காலகட்டத்துக்குப் பின்னர் நடந்த உலகமயமாக்கல் நிகழ்வுகள் தகர்த்து இருப்பது தெரிகிறது. குறிப்பாக, அலை பேசித் தொழில்நுட்பம் இத்தனை பிரமாண்டமாகும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அழகிய பல தமிழ் கலைச் சொற் கள் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல்லூடகம் (Multimedia), மின்னம்பலம் (Cyberspace) போன்ற வார்த்தைகள் படிக்க இனிமை.

என்னைக் கவர்ந்த மற்றொரு வார்த்தை, 'இடையீடு’. Disruption என்பதன் தமிழாக்கமான இந்த வார்த்தை தொழில்நுட்பம் படிக்கும், தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. புதிதாக வெளியிடப்படும் ஒரு பொருள் அல்லது தொழில், இப்போது புழக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றை அடியோடு வேர் அறுக்குமானால், அதை இடையீடு செய்வதாகச் சொல்லலாம்.

உதாரணத்துக்கு,

கேசட் டேப் > சி.டி. தகடு

தந்தி > தொலைபேசி

என்று பலவற்றைச் சொல்லலாம்.

இணைய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்னர் தோன்றிவிட்ட

இ-மெயில் தொழில்நுட்பம், குறுஞ்செய்தி, ட்விட்டர் எனப் பல வந்துவிட்டாலும், இடையீடு இல்லாமல் இன்னும் பல வருடங்கள் வாழும் எனத் தோன்றுகிறது. பிரபலமான குருப்பானில் தொடங்கி, பல வலைதளங்களில் நுழையவே இ-மெயில் முகவரியைக் கொடுக்க வேண்டும். உங்க ளுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருப் பதற்கு இ-மெயில்தான் தேவை என்ற நிலைதான் இதற்குக் காரணம். ஏன், அமெரிக்க வெள்ளை மாளிகையின் வலைதளமான http://www.whitehouse.gov/ சென்றால், அதிபரிடம் இருந்து தொடர்ந்து செய்திகள் பெற்றுக்கொள்ள உங்கள் இ-மெயில் முகவரி கொடுங்கள் என்கிறது முதல் பக்கம். கொடுக்காமலும் செல்லலாம். ஆனால், அவ்வப்போது 'இ-மெயில் கொடு’ எனக் கேட்டபடி இருக்கும் இந்தத் தளம்!

இ-மெயில் முகவரிகளைக் கொடுப்பதில் பயனீட்டாளர்களுக்கு வரும் மிகப் பெரிய தலைவலி spam. நம் அனுமதி இல்லாமல் நமக்கு அனுப்பப்படும் மின் குப்பைக் கூளங்களான இந்த மெயில்களைக் கட்டுப்படுத்த, அரசாங்க ஆட்சியாளர்கள் தொடங்கி இணைய இணைப்புகள் கொடுக்கும் ISPக்கள் வரை படாதபாடு இல்லை. ஆனாலும், spam மெயில்களின் எண்ணிக்கை குறையவில்லை. spam அனுப்பும் spammer களின் நோக்கம் அதீத அளவில் இ-மெயில் முகவரிகளைச் சேகரித்து, அவை அனைத்துக்கும் இ-மெயில் அனுப்பினால், சிலராவது பார்க்க மாட்டார்களா என்பது தான். இவர்கள் இ-மெயில் முகவரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு இ-மெயில் அறுவடை ( Email Harvesting ) என்ற பெயர் உண்டு.

சில பிரபலமான அறுவடை டெக்னிக்குகள்: வலைதளங்களை மேய்ந்து அதில் இ-மெயில்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை நோட்டமிடும் bot களை எழுதுவது மிகச் சுலபம். கூகுள் போன்ற தேடல் தளங்கள் வலைதள விவரங்களைத் தெரிந்துகொண்டு, தொகுப்பதற்கு (indexing) இப்படிப்பட்ட botகளைப் பயன்படுத்துவதால், வலைதளங்கள் bot தங்களது தளத்தில் உலவ அனுமதிப்பது உண்டு. இதைத் தவறாகப் பயன்படுத்தி இ-மெயில் அறுவடை செய்வது spammerகளின் முக்கியப் பணிகளில் ஒன்று.

நீதி போதனை: யார் வேண்டுமானாலும் படிக்க முடிகிற வலைதளங்களில் இ-மெயில் முகவரிகளைக் கொடுக்காதீர்கள்.

நண்பர்கள் பலருக்குப் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது, அவர்களின் முகவரிகளை To பகுதியிலோ அல்லது CC பகுதியிலோ எழுதுகிறீர்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது என்றாலும், அவர்கள் முகவரிகள் அனைவரும் பார்க்கும்படியாகத் தெரிகிறது.

அதில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட இ-மெயிலை வேறு சிலருக்கு forward செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தெரிந்தோ, தெரியாமலோ spammer ஒருவர் கையில் அவை கிடைத்தால் போதும். அத்தனை இ- மெயில் முகவரிகளுக்கும் வயாகரா மெயில்கள் வரத் தொடங்கும்.

நீதி போதனை: பலருக் கும் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது அவர் களது முகவரிகளை BCC பகுதியில் எழுதுங்கள்.

தெரியாத வலைதளங்களில் பொதுவாக, உங்களது இ-மெயில்களைக் கொடுப் பது நல்ல ஐடியா இல்லை. ஆனால், பல வலைதளங் களைப் பயன்படுத்தவே இ-மெயில் தேவை என்ப தால், இது சாத்தியம் அல்ல.

முதன்மையாகப் பயன் படுத்தும் இ-மெயிலைக் கொடுக்காமல், இது போன்ற தளங்களில் பயன்படுத்துவதற்கு என்றே சில எக்ஸ்ட்ரா இ-மெயில் முகவரிகளைப் பலர் பயன் படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் பிராக்டிகலாக உதவாது. ஒரு இ-மெயிலுக்குப் பதிலாக பலவற்றைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து தலைவலியாகவே முடியும். கூகுளின் ஜி-மெயில் இதற்கு ஸ்மார்ட்டான தீர்வு ஒன்றைக் கொடுக்கிறது.

என்ன அது? பார்க்கலாம்.



அமேசானின் சாதனை!

மேசான் நிறுவனம் சத்தம் இல்லாமல் சாதனை ஒன்றை இந்த வாரத்தில் செய்து இருக்கிறது. எந்தவித பிரமாண்ட அறிவிப்பு களும் செய்யாமல், ஆப்பிளுக்கு பெப்பே காட்டியதுதான் அந்தச் சாதனை. விரிவாகப் பார்க்கலாம்!

ஆப்பிளின் தொழில்நுட்பங்களை மிகவும் விரும்புபவர்களும் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அது இந்த நிறுவனத் தின் மூடிய தன்மை. குறிப்பாக, ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் மென்பொருட்களை உருவாக்குபவர்களுக்கு இது மிகப் பெரிய தலைவலி கொடுக்கும் விஷயம். தயாரித்த மென் பொருளை அவர்களது Appstore கடையில் விற்பனைக்கு வைக்க, அவர்களது விதிமுறைகள் கிட்டத்தட்ட சர்வாதிகார பாணியில் இருப்பது தெரிய வரும். சில மாதங்களுக்கு முன்னால், இந்த சர்வாதிகாரத் தோரணையில் பதிப்பு நிறுவனங்களுக்குப் புதிய விதிமுறை கொண்டுவந்தது ஆப்பிள். அதன்படி, பதிப்பாளர்களின் மென்பொருளில் இருந்து நேரடியாக சந்தா வசூலிக்கக் கூடாது. மாறாக, ஆப்பிள் சந்தா வசூலிக்கும். அதில் 30 சதவிகிதத்தை வைத்துக்கொண்டு, மீதியைப் பதிப்பாளருக்குக் கொடுக்கும். அதிர்ச்சியும் எரிச்சலுமாகப் பதிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பிரபல Financial Times செய்தி நிறுவனம் தனது எதிர்ப்பை ஆப்பிள் புரிந்துகொள்ளும் பாணியில் தெரிவித்தது. 'ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் பிரத்யேக (Proprietary) மென்பொருள்களை நாங்கள் இனிமேல் தயாரிக்கப்போவது இல்லை. மாறாக, இணையத்தில் இணைக்கக் கூடிய மொபைல் சாதனங்களில் வலைதளமாகவே நாங்கள் எங்களது சந்தாதாரர்களுக்கு எங்களது செய்தித்தாளைக் கொடுக்கப் போகிறோம்!’ என்பதுதான் அந்த அறிவிப்பு. கலங்கிப்போன ஆப்பிள், சில வாரங்களில் மேற்கண்ட இந்த விதிமுறையை நீக்கிவிட்டாலும், இந்தச் சம்பவத்தின் கசப்புச் சுவை மின் பதிப்பாளர்களின் வாயில் தொடர்ந்து இருந்தபடியேதான் இருந்தது. இப்படி எல்லாம் விதிமுறைகளைக் கொண்டுவர முயற்சி செய்யும் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் மட்டுமே இயங்கக்கூடிய விதத்தில் மென்பொருள் தயாரிக்க, மெனக் கெடத்தான் வேண்டுமா? என்பது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் பெரிதாக எழுந்த கேள்வி. பலரும் பலவித கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்த வேளையில், உலகிலேயே மிகப் பெரிய மின் பதிப்பாளராக இருக்கும் அமேசான் இதைப்பற்றிய கருத்து எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், அமைதியாக, Cloud Reader என்ற தொழில்நுட்பத் தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி இருப்பது இப்போது தெரிய வருகிறது!

ஆப்பிளின் ஐ-போன், ஐ-பேட் உட்பட எந்த 'ஸ்மார்ட்’ மொபைல் சாதனத்தில் இருக்கும் browser-ஐப் பயன்படுத்தி https://read.amazon.com/ வலைதளத்துக்குச் சென்றால் போதும். அமேசானின் மின் பதிப்புகளைப் படிக்க முடியும். பொதுவாக, browser பயன்படுத்திச் செல்லும் வலைதளங்களின் மிகப் பெரிய குறைபாடு, இணையத்தில் இணைக் கப்பட்டு இருந்தால் மட்டுமே வலை தளத்தைப் பார்க்க முடியும். இந்தக் குறைபாட்டை நேர்த்தியாகச் சரி செய்து இருக்கிறது, அமேசான். தேவைப்படும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்ய மட்டுமே இணைய இணைப்பு தேவை. அதன் பின்னர், அந்தப் புத்தகத்தைப் படிக்க இணையம் தேவை இல்லை. இதைச் சாத்தியமாக்க முடிந்த HTML 5 தொழில் நுட்பம் வெகு விரைவில் பல்லாயிரக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவது நிச்சயம்.

சென்ற வாரக் கட்டுரையில், இ-மெயில் தொழில்நுட்பத்தில் இருக்கும் spam பிரச்னைக்கு கூகுளின் ஜி-மெயிலில் தீர்வு இருக்கிறது என்று சொன்னேன். அதைப் பார்க்கலாம்!

உங்களது முகவரி nallavan@gmail.com என்று வைத்துக்கொள்ளலாம். இந்த முகவரியில் இருக்கும் nallavan என்ற பெயருடன் ஐ இணைத்து வார்த்தை ஏதாவது இணைத்துக்கொண்டால் போதும்... அடுத்த முகவரி ரெடி. உதாரணத்துக்கு, வெள்ளை மாளிகை வலைதளத்தில் உங்களது முகவரியைக் கொடுக்கும்போது nallavan+ white house @gmail.com என்று கொடுக்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி எத்தனை புதிய இ-மெயில் முகவரிகளையும் ஆரம்பித்துக்கொள்ளலாம். ஆனால், இந்த முகவரிகளுக்கு அனுப்பப்படும் மெயில்கள் உங்களது ஜி-மெயில் முகவரியில்தான் வந்துசேரும். தேவை இல்லாத spam மெயில்கள் உங்களுக்கு வரும்போது, அவை எந்த முகவரிக்கு அனுப்பப்படுகின்றன என்பதைப் பார்க்க முடியும். இப்படி உருவாக்கப்பட்ட முகவரி எதற்கா வது spam வந்தால், அதை ஜி-மெயிலில் spam என்று குறித்துவைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் இருந்து, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்படும் மெயில்கள் அனைத்தும் Junk கோப்புக்கு அனுப்பப் பட்டுவிடும்.

இ-மெயில் spam பிரச்னையை வெற்றி கரமாக மேற்கொள்ள டிப்ஸ் ஏதாவது இருந்தால், விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில் (http://www.facebook.com/vikatanweb) எழுதுங் களேன்.

நம் ஊரில் கல்லூரி முடித்த மாணவர் கள், பல நிறுவனங்களின் வலைதளங்களில் இ-மெயில்களை எடுத்து வேலைக்கான spam முறையில் விண்ணப்பம் அனுப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் என்றார் கோவை டெக் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கும், சூரியா ராம்பிரசாத்.

அவர்களுக்கான நீதி போதனை: முதல் கோணல், முற்றிலும் கோணல்! நீங்கள் வேலை பார்க்க விரும்பும் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நீங்கள் ஏன் பொருத்தமானவர் என்பதை எழுதி அனுப்புவது முக்கியம். இப்படி பொத்தாம்பொதுவாக spam பாணி மெயில் அனுப்புதல் நல்லது அல்ல. சமீபத்தில் பதிவுலகின் கவனத்தை ஈர்த்து இருக்கும் மேத்யூ எப்ஸ்டீன் செய்தது இது. அவருக்கு கூகுள் நிறுவனத் தில் சேர மிக விருப்பம். அதற்காக வலை தளம் ஒன்றையே உருவாக்கி, ஜேம்ஸ் பாண்ட் பாணியில் உடை அணிந்து, இன்ன பிற குரங்குச் சேட்டைகள் செய்து வீடியோ எடுத்து, கலக்கி இருக்கிறார்.





No comments:

Post a Comment