Saturday, October 15, 2011

திருப்பத்தை உண்டாக்குமா திருப்பூர்?



கராட்சி என்ற நிலையில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு திருப்பூர் சந்திக்கும் முதல் உள்ளாட்சித் தேர்தல். 60 வார்டுகளில் சுமார் 4 லட்சம் மக்கள் தொகையுடன் திமிர்ந்து நிற்கும் திருப்பூர் மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு, மிகக் கடுமையான போட்டி நடக்கிறது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற அத்தனை பெரிய கட்சிகளும் தங்கள் பிரதிநிதியை இங்கே களமிறக்கி இருக்கின்றன என்றாலும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில்தான் கடும் மோதல். அ.தி.மு.க-வின் வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார் விசாலாட்சி. மாநில மகளிரணி துணைச்செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழகப் பேச்சாளர் என்று ஏகப்பட்ட கட்சிப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருப்பவர். கடந்த சில தேர்தல்களில் இவருக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதே வேகத்தில் பறிக்கவும் பட்டது. தொடர் ஏமாற்றங்களைச் சந்தித்தாலும்கூட அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே இருந்ததன் பலனை இந்த முறை அடைந்திருக்கிறார். திருப்பூரில் அ.தி.மு.க-வுக்குத் தனி செல்வாக்கு இருக்கிறது என்றாலும் உட்கட்சிக்குள் விசாலாட்சிக்கு ஆகாத ஒன்றிரண்டு வில்லங்கப் புள்ளிகள் இருக்கிறார்கள். அவர்கள் விசாலாட்சிக்கு எதிராகத் தொடர்ந்து உள்ளடி வேலைகளைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக, விசாலாட்சியின் பர்சனல் விஷயங்களை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்கி, அவர் பெயரை டேமேஜ் செய்வதில் குறியாய் இருக்கிறார்கள். திருப்பூரில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டிராத முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் விசாலாட்சியின் பலவீனம்.
''முழு ஆசீர்வாதத்தோட அம்மா என்னை களமிறக்கி விட்டிருக்காங்க. கடந்த மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊரோட வளர்ச்சிக்காக உருப்படியா எதையும் செய்யாததால் மக்கள் அதிருப்தியில் இருக்காங்க. எடுத்ததுக்கும், தொடுத்ததுக்கும் 'வசூல்’ வேட்டை நடத்தித் தங்களை டார்ச்சர் செய்த மாஃபியாக்கள் மீது தொழில் நிறுவன அதிபர்களும் ஆத்திரத்தில் இருக்கிறாங்க. அதனால் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கிறது!'' என்று உறுதியாகப் பேசுகிறார் விசாலாட்சி.
ஆனாலும் விசாலாட்சிக்கு கண்ணில் கலவர பயத்தை காட்டி வருகிறார், சிட்டிங் மேயரான தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ். கட்சியின் மாநகரச் செயலாளர் என்ற வகையில் இவருக்காக ஓடியாடி உழைக்கிறார்கள் உடன்பிறப்புகள். அ.தி.மு.க-வின் அத்தனை பலவீனங்களையும் நிதானமாக கவனித்து, அதை தனக்கான பலமாக்கி வருகிறார் செல்வராஜ். குறிப்பாக கம்யூனிஸ்ட் வாக்குகளை வளைப்பதைச் சொல்லியே ஆகவேண்டும். கூட்டணி முறிவால் அ.தி.மு.க-வுக்கு எதிராக வாக்களிக்கத் தயாராக இருக்கும் கம்யூனிஸ்ட் வாக்குகள் தே.மு.தி.க-வுக்குச் செல்ல வாய்ப்பு அதிகம். இங்கேதான் செக் வைக்கிறார் செல்வராஜ். கம்யூனிஸ்ட் வாக்குகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தன் கழகத்தினரை இறக்கி படுபரிவாகப் பேசி மனம் கரைய வைத்திருக்கிறார். போதாக்குறைக்கு பலமான பண விநியோகமும் நடக்கிறது என்கிறார்கள்.
குறுகிய காலத்தில் இவர் சேர்த்திருக்கும் சொத்து விவரம் குறித்து மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சிகள் எடுத்துவைக்கும் பாயின்ட்கள் பகீர் ரகம். கூடவே, மேயராக இருந்த காலத்தில் இவருக்கு நெருக்கமான நபர்கள் நிலபுலன்களை வளைத்துப்போட்டு, சமீபத்தில் கைதானதும் இவரை பலவீனப்படுத்துகின்றன. ''மாநகராட்சிக்கு ஏற்ற மாதிரியான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் ரொம்பவும் உழைத்திருக்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியும். மாநகராட்சியாக மாறிய குறுகிய காலத்தில் எவ்வளவு வசதிகளை செஞ்சு தரமுடியுமோ அதுக்கு மேலும் செஞ்சிருக்கோம். இந்த உழைப்பே என்னை வெற்றி வேட்பாளராக்கிவிடும். அதனால் குறுக்கு வழியில் பணத்தை இறைச்சு ஓட்டு வாங்கவேண்டிய அவசியமே எனக்கு இல்லை!'' என்கிறார் செல்வராஜ்.
இருபெரும் கட்சி வேட்பாளர்களும் அதிர்ந்து நோக்கும் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. வேட்​பாளர் தினேஷ்குமார். கட்சியில் வடக்கு மாவட்டச் செயலாள​ராக இருக்கும் இவருக்காக வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் தே.மு.தி.க-வினர். 'நம்ம கைக்கு வர வாய்ப்பு இருக்குப்பா’ என்று விஜயகாந்த் வட்டம் போட்டு வைத்திருக்கும் மாநகராட்சி இது. தொழிற்சங்கங்கள் நிறைந்த திருப்பூர் இயல்பாகவே கம்யூனிஸ்ட் பெல்ட். அதிலும் மார்க்சிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது விஜயகாந்த் கட்சிக்கு பலம்தான். ''மிக மோசமான ரோடுகள், 15 நாளைக்கு ஒரு தரம் குடிநீர், நிரம்பி வழியும் குப்பைகள்ன்னு கேவலப்பட்டு கிடக்குது திருப்பூர். என்னை பொறுப்பில் உட்கார வைத்தால் இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்னு மக்கள் நம்பிக்கையோட பார்க்கிறாங்க...'' என்கிறார் தினேஷ்குமார்.
இப்படி மூன்று வேட்பாளர்களும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டிருக்க, இடையில் தன் பங்குக்கு தடாலென வாக்குகளை பிரிக்க வந்து நிற்கிறார் வைகோவின் வேட்பாளர் நாகராஜ். வைகோ அபிமானிகளின் கவனிக்கத்தக்க வாக்குகள் இவருக்கு நிச்சயம் உண்டு. சமீபத்தில் வேறொரு நிகழ்வுக்காக திருப்பூர் வந்திருந்த தமிழருவி மணியன், நாகராஜ்க்கு ஆதரவாக ம.தி.மு.க. மேடையிலேறி பிரசாரம் செய்தது நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை திருப்பி... இவரது செல்வாக்கை அதிகப்படுத்தி இருக்கிறது.
பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வெற்றிக் காற்று மாறி மாறி வீசுகிறது. எங்கே நிலை கொள்ளும் என்பது முடிவின் போது தெரிந்துவிடும்!

No comments:

Post a Comment