Saturday, October 15, 2011

மிஸ்டர் கழுகு: கிலி... பிடித்தார் ஹெலி!

மிஸ்டர் கழுகு: கிலி... பிடித்தார் ஹெலி!


ஜெயலலிதா மதுரையில் பேசிக்கொண்டு இருப்பதை இங்கிருந்தபடியே லைவ்​வாகக் கேட்டபடியே நம் முன் ஆஜரா​னார் கழுகார். சில இடங்களில் லேசாகச் சிரித்துக் கொண்டார். 'வணக்கம்’ போட்டு ஜெ. முடித்ததும் நம்மைப் பார்த்துப் பேசத் தயாரானவரை மறித்தோம்!
''மூன்று சந்தேகங்களுக்குப் பதில் சொல்லிவிட்டு உம்முடைய விஷயத்​துக்குச் செல்லலாம்!'' என்றோம்.
''தோட்டக்கலைச் சங்கத்துக்கு ஜெயலலிதா அரசு பல கோடி மதிப்புள்ள நிலத்தைத் தாரை வார்த்துவிட்டது என்று கருணாநிதி சொல்கிறாரே! யார் பக்கம் தவறு?''
''சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழிப் பூங்கா இருக்கிறது அல்லவா? அதற்கு எதிரே 200 கோடி மதிப்பிலான இடம் இருக்கிறது. இது தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது. அதைப் பராமரித்து வருபவரது பெயரைச் சொன்னால், விவகாரத்தின் வீரியம் முழுமையாக விளங்கிப் போகும். போயஸ் கார்டனுக்குள் புகுந்து புறப்பட்டு வரும் அதிமுக்கிய மனிதர்​களில் அதிமுக்கியமானவர். அந்த இடத்தைத் தோட்டக்கலைச் சங்கத்துக்கு கொடுக்க முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா முடிவெடுத்தார். அடுத்து வந்த கருணாநிதி, இதை எதிர்த்து முடிவெடுத்தார். இது தொடர்பான ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அவர்கள், தோட்டக்கலைச் சங்கத்தை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும், அப்படிப்பட்ட விசாரணையை சென்னை கலெக்டர் நடத்தியதாகவும், உரிய ஆவணங்களைக் காட்டியதாகவும் சொல்லிக் கடந்த வாரம், பல கோடி மதிப்பிலான அந்த இடத்தை அவருக்கே கொடுத்துவிட்டார்கள்!
அ.தி.மு.க. ஆட்சியில் தோட்டக்கலைக் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாகத்தான் முடிவெடுப்​பார்கள். ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே முதலமைச்சர் அலுவலகத்துக்குள் ஆட்களை வைத்து... அந்த இடத்தில் வேறு எதுவும் உருவாகிவிடாதபடியான காரியங்களையும் கச்சிதமாகப் பார்த்தார்கள். இதெல்லாம் அன்று கருணாநிதிக்கு தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார்கள். 'ஊரெல்லாம் நில அபகரிப்பு வழக்குகளைப் போடும் முதல்வர் இப்படிப்பட்ட தாரை வார்ப்பை ரகசியமாகச் செய்ய வேண்டுமா?’ என்ற விமர்சனம் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளது!''
''பரிதி இளம்வழுதி, அ.தி.மு.க-வுக்குப் போகப் போகிறார் என்கிறார்களே?''
''பரிதி இளம்வழுதிக்கு எதிராக தி.மு.க-வில் உள்ள மாஜி அமைச்சர்கள் சிலர் றெக்கை கட்டி வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் கிளப்பும் வதந்திதான் இது. 'இது என்னுடைய தந்தையும் நானும் வளர்த்த கட்சி. நான் எதற்கு இன்னொரு கட்சிக்குப் போக வேண்டும்?’ என்று அவர் கேட்டதாகச் சொல்கிறார்கள். 'தி.மு.க-வில் இருந்து போராடுவேன்’ என்று அவர் அறிக்கையே விட்டுள்ளாரே!''
''ஜெயலலிதாவை ஆதரித்து புத்தகம் எழுதியவர்​தான் இப்படி வதந்தியைக் கிளப்புகிறார் என்று அந்த அறிக்கையில் சொல்கிறாரே பரிதி! யாரைச் சொல்கிறார்?''
''எ.வ.வேலுவைச் சொல்கிறாராம்! '96-ம் ஆண்டு தி.மு.க-வில் சேருவதற்கு முன்னதாக ஜெயலலிதா பற்றி ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் தயாரித்தார் வேலு. பிரபல கவிஞர் ஒருவரிடம் முன்னுரை வாங்கி... அந்த அம்மாவின் அழைப்புக்காகக் காத்திருந்தார். ஆனால், கார்டன் கதவு திறக்கவில்லை என்றதும்தான் வண்டியைத் திருப்பி கோபாலபுரம் போனார்’ என்று ஒரு தகவல் சொல்கிறார்கள். அதைத்தான் பரிதி சொல்கிறாராம். வேலு ஆட்களைக் கேட்டால், 'அப்படி எந்தப் புத்தகமும் தயாரிக்கவில்லை’ என்கிறார்கள். அது போகட்டும். அநேகமாக, இறுதிக் கட்ட பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களுடன் உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் பரிதியை சென்னையில் எங்காவது பார்க்கலாம்! அடுத்த சந்தேகத்தைக் கேளும்!''
''கனிமொழி ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம் என்று சி.பி.ஐ. சொன்னது உண்மையா?''
''சி.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக அப்படி எந்த வாக்குறுதியையும் யாரிடமும் தரவில்லை என்கிறார் எனது டெல்லி சோர்ஸ். 'இது தங்களுக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளின் வேலையா அல்லது நிருபர்களுக்குள் இருக்கும் நலம்விரும்பிகளின் கூத்தா எனத் தெரியவில்லை’ என்று சி.பி.ஐ. அதிகாரி​களுக்குள் பேச்சு இருக்கிறது. இந்த நியூஸ் வந்தது, கனிமொழி ஆதரவாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், நெகடிவ் ஆகிவிட்டதுதான் உண்மை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குநர் விவேக் கோயங்கா ஆகிய இருவரும் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சிங்வி மற்றும் தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த நீதிபதிகளும் அந்தச் செய்தியைப் பார்த்திருக்கிறார்கள். 'கனி​மொழி ஜாமீனை சி.பி.ஐ. எதிர்க்காது என்று செய்தி வந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்று நீதிபதிகள் காட்டமாகச் சொல்ல... 'இப்படி சி.பி.ஐ. சொல்லவில்லை. ஜாமீனை மறுக்கும்படிதான் சி.பி.ஐ. சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் பதில் அளித்துள்ளார். 'ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா?’ என்றும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்கள் நீதிபதிகள். இதில் இருந்தே, அக்டோபர் 17 அவ்வளவு நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது என்பது தெரிகிறது!'' என்ற கழுகாரிடம், ''இப்போது உம்முடைய மேட்டருக்கு வாரும்!'' என்றோம்.
''சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக அடைந்த வெற்றியை இப்போது தனியாக அடைந்தாக வேண்டும் என்று நினைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'விஜயகாந்த், கம்யூனிஸ்ட், மற்றும் பலரையும் இணைத்த கூட்டணியால்தான் ஜெயித்தோம் என்ற பெயரை மாற்ற வேண்டும்’ என்று சொல்கிறாராம் ஜெயலலிதா. உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் பட்டியலில் சில மாநகராட்சிகள் இழுபறி என்பதுமாதிரி ரிசல்ட் வருகிறதாம். அதனால்தான் திடீர் சுற்றுப்பயணத்தை அறிவித்து, ஹெலிகாப்டர் ஏறினார் முதல்வர். கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தே.மு.தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி அதிக வாக்குகளை வாங்கலாம் என்றும் ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மூன்றில் ம.தி.மு.க. கணிசமான வாக்குகளை அள்ளலாம் என்றும் தகவல். இவர்கள் வாக்குகளைப் பிரித்து, அதன் மூலமாக தி.மு.க. ஜெயித்துவிடுமோ என்று நினைத்துதான் இந்தச் சுற்றுப்பயணத்தை முடுக்கி விட்டுள்ளார்!''
''ஓஹோ!''
''அண்ணா அறிவாலய விவகாரம் தொடர்பாக தி.மு.க-வையும் கருணாநிதியையும் இந்த சுற்றுப்பயணத்தில் கடுமையாகச் சாடினார் முதல்வர். 'அண்ணா அறிவாலயம் தொடர்பாக நான் திருச்சியில் பேசியதற்கு கருணாநிதி சவால் விட்டிருக்கிறார். அதில், 'அந்த இடமே வெறும் 25 கிரவுண்ட் மட்டும்தான்’ என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அந்த இடம் நான்கரை ஏக்கர். அதாவது, 90 கிரவுண்ட். அதை அவர் மறைத்து விட்டார். அது வெறும் 25 கிரவுண்ட் மட்டும்தான் என்றால் மீதி இருக்கும் இடத்தை அரசுக்குக் கொடுப்பாரா, கருணாநிதி?’ என எதிர்சவால் விட்டதைக் கூட்டம் வெகுவாக ரசித்தது''
''மதுரையிலும் இதே பேச்சுதானா?''
''மதுரைக்குத்தான் பிரத்யேகமாக இருக்கிறதே அழகிரி அட்டாக்! இந்த தேர்தலில் அழகிரி ஏனோ பயங்கர சைலன்ட். மதுரையிலேயே இருந்தார். திங்கட்கிழமை டெல்லி போனார். வியாழக்கிழமை மீண்டும் திரும்பினார். பிரசாரம் போகவில்லை. வீட்டிலேயே அமைதியாக இருக்கிறார்!'' - சிரித்தபடி பறந்தார் கழுகார்!
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சிதம்பரம்
''காதலும் இல்லை... கத்தரிக்காயும் இல்லை!''
உள்ளாட்சித் தேர்தல் பரபரப்புகளில் அத்தனை அமைச்சர்களும் பிஸியாக இருக்க, 'உள்ளாட்சி’ (அதாங்க வீட்டு விவகாரம்) சிக்கலில் இருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர், கணவனை இழந்த பெண் ஒருவரைக் காதலித்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும், இது தெரிந்து அதிர்ந்துபோன அமைச்சரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எக்கச்சக்க பரபரப்பு. இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது, ''நான் தேர்தல் பிரசாரத்தில் இருக்கேன். என் மனைவி வீட்டில் இருக்கிறார். அமைச்சர் அந்தஸ்து கொடுத்து அம்மா என்னை மக்கள் பணிக்காக அனுப்பி இருக்கையில், காதல், கத்தரிக்காய் என்று நான் அலைவேனா? எனக்கு எதிரானவங்க கற்பனையில் கிளப்பிவிடுற கதைகள் சார் இது. எனக்கே இது சம்பந்தமா பல எஸ்.எம்.எஸ்-கள் வந்துடுச்சு!'' என்றார் பரிதாபமாக!
*********************************************************************************
கழுகார் பதில்கள்

மகேஸ்வரன், சென்னை-12.
கூடங்குளம் விஷயத்தில் தமிழக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன?

டான ஜனசக்தியில், 'கூடங்குளம் அணு மின் உலை தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்தது. புகுஷிமாவைவிட கூடங்குளம் பாதுகாப்பானதே’ என்று ஜி.ஆர்.சீனிவாசன் கட்டுரையை ஒரு பக்கம் வெளியிடு​கிறார்கள். 'கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தைப் போக்காத வரை, அணு உலைகளை இயக்கக் கூடாது. புதிய கட்டுமானங்கள் எதையும் தொடங்கக் கூடாது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சொல்கிறார். பிரதமரைச் சந்தித்து மனு கொடுக்கிறார் தேசியச் செயலாளர் டி.ராஜா. ஆனால், அவர்​களின் அதிகாரப்பூர்வ நாளே
கூடங்குளம் அணு உலையை அமைப்பது ரஷ்யா என்பதால்தான், காம்ரேட்​களுக்குத் தயக்கமும் மயக் கமும். அமெரிக்காவாக இருந்திருந்தால் வரிந்து கட்டிக்​கொண்டு எதிர்த்து இருப்பார்கள்.
காந்திலெனின், திருச்சி.
மீண்டும் மின்தடை வந்து விட்டதே?
இதற்கு முதல்வரிடம் சரியான விடை இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரைக்கும் காத்திருக்கச் சொல்லிவிட்டார். எதிர்காலத் திட்டமிடுதல்கள் இல்லாத அரசியல் தலைவர்களின் ஆளுகையின் கீழ் வாழும் மக்கள், இத்தகைய அவஸ்தை களை அனுபவித்தே ஆக வேண்டும்!
சின்ன முனுசாமி, தஞ்சாவூர்.
கழுகார் சமீபத்தில் ரசித்தது?
பத்திரிகையாளர் சோ, ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய மனமோகன துஷ்டகவசம்’ என்று அதற்கு பெயரும் சூட்டி இருக்கிறார். திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் தருகிறேன்...
ஊழல் செய்வோர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்;
பர்ஸில் பதிப்போர்க்குச் செல்வம் நிலைத்து
கதித்து ஓங்கும் - பதவியும் கைகூடும்; டெல்லி
அருள் மனமோகன கவசந்தனை.
அடியேன் ஊழலை, டர்பன் காக்க
கண்ணாடி இரண்டும் கறுப்புப் பணம் காக்க
பேசும் பொய்தனை, ப்ராண்ட் நேம் காக்க
தகவல் சட்டம் தாக்காமல் தாடியும் காக்க
ஸ்விஸ் பேங்க் கணக்கை மீசை காக்க
பொருள் அனைத்தும் பொருளாதார மேதை காக்க
பினாமி சொத்தை பிரதமர் காக்க,
காக்க காக்க கண் மூடி சாமி காக்க
நோக்க நோக்க நோ ஃபைல் நோக்க
தாக்க தாக்கத் தாடிக்காரர் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட......
விநாயகம், தூத்துக்குடி.
உள்ளாட்சித் தேர்தலுக்காக சுற்றுப் பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த ஜெயலலிதா, திடீரென எல்லா ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டாரே?
உள்ளாட்சித் தேர்தல் ஏற்படுத்திய உள்காய்ச்சல்தான் காரணம்!
திருச்சி இடைத் தேர்தலுக்கே முதலில் 6 பேர் குழு... அதன் பிறகு 12 பேர்... அடுத்து 16 பேர்கொண்ட குழு அமைத்தார். அது மாதிரித்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் அவருக்குப் பரவலான சந்தேகம் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்தி வெளியில் அனுப்பியது, சொந்தக் கட்சி வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள், ஏராளமான இடங்களில் இரட்டை இலையை எதிர்த்து அ.தி.மு.க-வினரே போட்டி இடுவது போன்று எத்தனையோ மைனஸ்கள். எனவேதான் இந்த திடீர் சுற்றுப் பயணம்!
தமிழேசன், திருப்பூர்.
இலங்கை செல்லும் முன் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாரே... இருவரும் என்ன பேசினார்கள்?
தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படை தொடர்ந்து தாக்குவதை சொல்லித்தான் முதல்வர் வருத்தப்பட்டார். அவர் ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 16 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 'தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குவதை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக நினைக்க வேண்டும். இதைத் தமிழகப் பிரச்னையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்’ என்றும் முதல்வர் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டுவிட்டு ரஞ்சன் மத்தாய், இலங்கை சென்றார். அன்றைய தினமே, மண்டபம் பகுதி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது சிங்கள கடற்படை. மகிந்த ராஜபக்ஷேவிடம் மத்தாய் என்ன சொன்னார் என்று தெரியவில்லை!
திருவேங்கடம், திண்டிவனம்.
'தி.மு.க. எங்களை வஞ்சித்துவிட்டது’ என்கிறாரே திருமாவளவன்?
அதையே எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டு இருப்பார் திருமா? இனியாவது கருணாநிதியைத் திருப்திப்படுத்த கட்சி நடத்தாமல், சிறுத்தைத் தொண் டனுக்காக அவர் கட்சி நடத்தட்டும்!
சுரேஷ்குமார், ஈரோடு.
'காங்கிரஸார் நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றார்கள். ஆனால், தி.மு.க-வினர் நில அபகரிப்பு ஊழல்களுக்காகச் சிறை சென்றுள்ளனர்’ என்று குற்றம் சாட்டுகிறாரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?
ஆதர்ஷ் ஊழலில் பதவி விலகிய மகாராஷ்டிரா முதல்வர் எந்தக் கட்சி? காமன் வெல்த் ஊழலில் கைது செய்யப்பட்ட கல்மாடி எந்தக் கட்சி? இவை எல்லாம் நாட்டுக்காக நடந்தவையா? சொந்த வீட்டுக்காக நடந்தவையா என்று இளங்கோவன்தான் விளக்க வேண்டும்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது ஆ.ராசா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் யாருடைய அமைச்சரவையில் நடந்தது இந்த ஊழல்? காங்கிரஸ் ஆளும்போதுதானே?
மு.கல்யாண்சுந்தரம், மேட்டுப்பாளையம்.
க.அன்பழகன், ஓ.பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன்... இந்த 'நம்பர் டூ’-க்களில் முதல் இடம் யாருக்கு?
இந்த மூவருமே 'நம்பர் டூ’ அல்ல என்பதுதான் முழு உண்மை!
கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், ஜெயலலிதாவை அடுத்து சசிகலா, விஜயகாந்த்தை அடுத்து பிரேமலதா... ஆகியோர்தான் அந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள். நீங்கள் சொல்பவர்களே, தாங்கள்தான் 'நம்பர் டூ’ என்பதை நம்ப மாட்டார்கள்!
முருகேஷ், திருச்சி.
கே.என்.நேருவை நினைத்தால்?
நேரு மீதான வழக்குகளின் உண்மைத் தன்மைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவரை வெளியே விடக் கூடாது என்பதில் அரசாங்கமும் போலீஸும் செய்த காரியங்கள் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள்தான்!
ரேவதிப்ரியன், ஈரோடு.
விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது என்கிறாரே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி?
பிரணாப் கவலைப்படுவதால் மட்டும், பருப்பு விலை குறைந்துவிடாது!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்... மரணத்தைத் தெரிந்தே வாழ்ந்தது அபூர்வம்தானே?
அவரது ஆப்பிள் இல்லாமல் இனி எவரும் வாழ முடியாது என்பது அதைவிட அபூர்வம்தானே!
*********************************************************************************
45 நாள் நீயும் ஜெயில்ல இரு... அப்பத் தெரியும்!

நிருபரை கலாய்த்த கே.என்.நேரு

க்டோபர் 10-ம் தேதி நள்ளிரவில் ஜாமீனில் வந்த நேரு, அடுத்த நாள் முழுவதும் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தொண் டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க... அவரோ, தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை!
ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும், நேராக சென்னைக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்த நேரு, பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் வந்து கையெ ழுத்துப் போட்டுவிட்டு, தனது சொந்த ஊரான கானக்கிளியநல்லூருக்குச் சென்றுவிட்டார். பிரசாரம் செய்ய ஒரே ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தும் அதை நேரு பயன்படுத்திக்கொள்ளாதது ஏன் என்று தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம்.
''நேரு பிரசாரக் களத்துக்கு வரும்பட்சத்தில், 'கட்சி அலுவலகத்தில் பணம் வைத்திருந்தார்... வாக் காளர்களுக்குப் பணம் விநியோகித்தார்’ என்று ஏதாவது பொய் வழக்குகளைப் போட காவல் துறைதிட்டம் தீட்டி இருந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறைக்கு நாமே வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கக் கூடாது என்பதால்தான், அவர் பிரசாரம் செய்யவில்லை.
அடுத்து, தொகுதிக்குள் நேரு வந்தால், இது நாள் வரையில் அமைதியாகத் தேர்தல் பணியாற்றிய அவரது தீவிர அபிமானிகள், அவரைப் பார்க்க வேண்டும், தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக கூடுதல் உற்சாகத்துடன் திரள்வார்கள். இதையும் ஆளும் கட்சி தனக்கு சாதக மாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதே!
மூன்றாவதுதான் மிக முக்கியமானது. இந்த இடைத்தேர்தலில் நேரு ஜெயித்தால், களத்துக்கே வராமல் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். தி.மு.க. வரலாற்றில் இது மிகவும் முக்கியம் இல்லையா! கடைசி ஒரு நாள் பிரசாரம் செய்வதன் மூலம் அந்தப் பெருமையை நாமே ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?'' என்று காரணங்களை அடுக்கினார்கள்
தேர்தல் நாளன்று காலை தினசரிகளிலும், அதற்கு முந்தைய தினம் மாலை தினசரிகளிலும் தனக்கு வாக்குகள் கேட்டு நேரு கொடுத்திருந்த விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
'நான் சிறையில் இருந்த காரணத்தால், உடல்நிலை சரியில்லாத நிலையில், உங்களை நேரில் சந்திக்க இயலவில்லை. தேர்தலுக்குப் பின் நிச்சயம் உங்க ளுக்கு நன்றி தெரிவிக்க வீடு வீடாக வருவேன்’ என்று சொல்லியிருக்கும் நேரு, 'இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் என் மீது அவதூறான பொய் பிரசாரத்தை பத்திரிகைகள் வாயிலாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பரப்புகிறார்கள். நான் கோடிக் கோடியாகப் பணம் மற்றும் ஏகப்பட்ட நிலங்கள் வைத்திருப்பதாகவும் பிரசாரம் செய்கிறார்கள். நான் 12 ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றி இருக்கிறேன். அமைச் சராக இல்லாத நேரத்திலும், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் யாருடைய சொத்தையும் அபகரித்ததும் இல்லை; யாருடைய பணத்துக்கும் ஆசைப்பட்டதும் இல்லை. என் மீது பரப்பப்படும் பொய் பிரசாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று அது உண்மையாக இருக்குமானால், நீதிமன்றம் வழங்கு கின்ற தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்!'' என்றும் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் 13-ம் தேதி காலை 8.30 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்ய வந்தார் நேரு. அவரிடம் ''என்னண்ணே? உங்க முகத்துல பழைய சிரிப்பைக் காணோம்?'' என்று நிருபர் ஒருவர் கேட்க... ''45 நாள் நீயும் ஜெயில்ல இருந்து பாரு. முகத்துல சிரிப்பு இருக்குமா... இல்லையான்னு தெரியும்!'' என்று ஜாலி யாக கமென்ட் அடித்தார். ஜாமீனில் வந்திருந்த மாநகர் மாவட்டச் செயலாளர் அன்பழகன் மெலிந்து இருந்ததைப் பார்த்துவிட்டு, ''என்னய்யா.. வயித்தை சேலம் ஜெயில்லேயே விட்டுட்டு, உடம்பை மட்டும் தூக்கிட்டு திருச்சிக்கு வந்துட்டியா?'' என்று அடுத்த கமென்ட் பாஸ் செய்தார் நேரு. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வெடித்து சிரிக்க... அந்த இடமே கலகலப்பானது.
நேருவிடம் பேசினோம். ''மொத்தம் 45 நாட்கள் ஜெயிலில் இருந்தேன். ஒரு வழக்கில் போராடி ஜாமீன் வாங்கிட்டு வந்தா... இன்னொரு வழக்குப்போட்டு வெளியில் வர முடியாமப் பண்ணிடுவாங்க. என் எதிரிக்குக்கூட இப்படி ஒரு நிலை வரக் கூடாது!'' என்று வருத்தம் காட்டியவர், ''என் மேல் போட்ட அஞ்சு வழக்குகளில், கலைஞர் அறிவாலய வழக்குப் போட்ட சீனிவாசனைத் தவிர, மத்த வழக்குகள் போட்டவங்க யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சீனிவாசன்கிட்ட இருந்தும் நிலத்தை முறைப்படித்தான் வாங்கி னோம். அவரை மிரட்டி நிலத்தை அபகரிச்சு இருந்தா... அறிவாலய அடிக்கல் நாட்டு விழா வுக்கும், திறப்பு விழாவுக்கும் சீனிவாசன் வந்து இருப்பாரா? அவரோட மகன் கல்யாணத்தைக் கூட இதே அறிவாலயத்தில்தான் நடத்தினார். நடந்த சம்பவங்களை எல்லாம் உயிலா எழுதிவைச்சிருந்ததா சொல்ற சீனிவாசன், அப்பவே நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே? ஏன் செய்யலை? ஏன்னா... எல்லாமே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஜோடிக்கப்பட்ட விஷயங் கள்தான்...'' என்று கடுகாய் வெடித்தார்.
அனுதாபம் வெற்றி தருமா என்பதையும் பார்த்துவிடலாம்!

No comments:

Post a Comment